தமிழ் நாட்டில் தமிழர் திருநாளே!

திராவிடப் பகுதிகளில் திராவிடர் திருநாளாகக் கொண்டாடுக!

பொங்கற் புதுநாளைத் தமிழர் திருநாள் என நாம் வழங்கி வருகிறோம். உலகின் பிற பகுதிகளில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டின்  அறுவடைத் திருநாளே பொங்கல் விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுத் தமிழர் திருநாளாக உலகெங்கும் போற்றப்படுகிறது.

தமிழர் திருநாளாகக் கொண்டாடி வந்த தமிழன்பர்கள் சிலர் கடந்த சில ஆண்டுகளாகத் திராவிடர் திருநாள் என்று கொண்டாடுகின்றனர்.

ஆரியத்திற்கு எதிரான குறியீடு திராவிடம் என்று கூறி அதனால் அவ்வாறு அழைப்பதாகக் கூறுகின்றனர்.

நமது மொழியும் இனமும் தமிழே! தமிழே! தமிழே! தமிழ் மொழியையும் அதன் சேய் மொழிகளையும் சேர்த்துத் தமிழ்க்குடும்பமொழிகள் என அழைக்க வேண்டும் என்கிறார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். தமிழ்க்குடும்ப மொழிகள் என அழைக்கப்பட வேண்டியனவே திராவிட மொழிகள் என அழைக்கலாயிற்று.

மன்பதை நிலையில் தன்மானம், தன்மதிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு முதலானவற்றிற்குத் திராவிட இயக்கங்கள் பெரும்பங்கு ஆற்றியதையும் ஆற்றி வருவதையும் யாரும் மறுக்க முடியாது. இப்பணிகளின் குறியீடாகத் திராவிடத்தைக் குறிப்பதில் தவறில்லை. ஆனால், தமிழ் இருக்கக்கூடிய இடங்களில் – தமிழ் இருக்க வேண்டிய இடங்களில் – அதனை அகற்றிவிட்டுத் திராவிடம் எனக் குறிப்பது வரலாற்றுப்பிழையாகும். ஒரு வகையில் இன அழிப்புமாகும். எனவே, திராவிடம் என்னும் சொல்லை அதற்குரிய இடங்களில் பயன்படுத்த வேண்டுமே தவிரத் தமிழுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடாது.

எனவே, பொங்கல் திருவிழாவைத் தமிழ் நாட்டிலும் தமிழர் வாழும் பகுதிகளிலும் தமிழர் திருநாள் என்றுதான் குறிக்க வேண்டும். திராவிடப் பகுதிகளில் திராவிடர் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும. அதன்மூலம் மூட நம்பிக்கைகள் ஒழியவும் தமிழ் தழைக்கவும் வழி காண வேண்டும்.

பொங்கல் விழாவைக் கொண்டாடுவதன் மூலம் தன்மானத் தனித் தமிழனாக விளங்க வேண்டும் என்றே தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி கூறியுள்ளார். (விடுதலை : 19.01.1969). திராவிடன் எனத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி கூறவில்லை. வெறும் தமிழன் என்று மட்டும் குறிப்பிடவில்லை. ‘தனித்தமிழன்’ என்று குறிப்பிடுகிறார். தனித்தமிழர்களின் விழா தமிழர் விழாவாகத்தானே அழைக்கப்பட வேண்டும். எனவே, கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலுங்கானா, பிற திராவிடப்பகுதிகளில் திராவிடர் திருநாளாகத் திராவிட இயக்கங்கள் கொண்டாடட்டும்!

ஆரியர்போல் சங்கராந்தி என்று கூறக்கூடாது என்பதுபோல் தமிழர்களிடையே திராவிடர் திருநாள் என்றும் கூறக்கூடாது. தமிழ் நாட்டில் தமிழர் திருநாளைக் கொண்டாடுவோம்!

தமிழருக்குத் தமிழர்திருநாள் வாழ்த்துகள்!

திராவிடர்களுக்குத் திராவிடர் திருநாள் வாழ்த்துகள்!

பிறக்கப் போகும் 2050 ஆம் ஆண்டினை முன்னிட்டுத் திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு வாழ்த்துகள்!

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

  இதழுரை -அகரமுதல

++++

காண்க : தமிழர்திருநாளா? மகர சங்கராந்தியா? திராவிடர் திருநாளா?