(தோழர் தியாகு எழுதுகிறார் 103 : இரவியா? மு.க. தாலினா?தொடர்ச்சி)

நலக்கேடு நல்காப் போக்கி

இனிய அன்பர்களே!

பொங்கலுக்கு முன்வரும் போகிப் பண்டிகை. அழுக்கையும் குப்பைகளையும் போக்கும் போக்கி நாள் என விளக்குவர் பெரியோர். ஆனால் குப்பைகளைத் தெருவில் போட்டு எரித்தல் என்பதுதான் போகிப் பண்டிகையின் அடையாளம் என்றாகி விட்டது. குழந்தைகள் தப்படித்து ஓசை எழுப்புவது மற்றோர் அடையாளம் எனலாம்.

காலையில் நடக்கப் போனால் தெருவெல்லாம் குப்பை எரிந்து புகையும் துர்நாற்றமும் காற்றில் கலந்து மூச்சுத் திணறுகிறது. நகரமெங்கும் புகைமூட்டம். கிராமப் புறங்களில் இஃது இவ்வளவு பெரிய சிக்கலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் போகியால் காற்று மாசடைவது உண்மை. போகியை இப்படித்தான் கொண்டாட வேண்டுமா? பழையன போக்க வேறு வழி இல்லையா? குறிப்பாக அறிவியலர், சூழலியலர் இதற்கு மாற்றுச் சொல்ல வேண்டும்.

தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு, ஒலி மாசு எல்லாம் ஏற்படுகின்றன. காசைக் கரியாக்குவதால் ‘பொருளியல் மாசும்’ தாக்குகிறது. ‘சத்தம் இல்லாத தீபாவளி’ பற்றிப் பாட்டுக்காரர்களும் எழுதுகிறார்கள். ஆனால் இந்தக் கேடு தொடர்கிறது. தீபாவளிப் பண்டிகையால் சூழலுக்கும் கேடு, வயிற்றுக்கும் கேடு, காசுக்கும் கேடு! தீபாவளிக்குச் சொல்லப்படும் புராணக் கதையால் அறிவுக்கும் கேடு! ஆனால் பொங்கல் அப்படியில்லை என்கிறோம்! பொங்கல், கரும்பு, வெல்லம், வாழை, மஞ்சள் எல்லாமே நலந்தரும் ஊட்டக் கூறுகள்! ஆனால் இந்தப் போகிப் பண்டிகை கொண்டாடப்படும் முறை (குப்பையை எரித்து மாசுண்டாக்கல்) பொங்கலுக்குக் கெட்ட பெயருண்டாக்குவதாக உள்ளது. போகி கொண்டாடுவோம்! ஆனால் காற்றை மாசுபடுத்தாமல் கொண்டாடுவோம்! அதற்கு என்ன வழி என்று நம் சூழலியலர்கள் அரசுக்கும் மக்களுக்கும் சொல்ல வேண்டும். பூவுலகின் நண்பர்கள் சொல்ல வேண்டும். சுந்தரராசன், வெற்றிச்செல்வன், பிரபாகரன் எல்லாருமே தாழி அன்பர்கள்தாம். அவர்களில் ஒருவர் சொல்லட்டும்., அவர்கள் சொல்லியிருந்து, நான் கவனிக்கத் தவறியிருந்தால் கவனப்படுத்துங்கள். தொடர்ந்து நமக்கு சூழலியல் வகுப்புகள் நடத்திய  தோழர் சமந்தா நமக்கு வழிகாட்டலாம். உங்களில் யார் வேண்டுமானாலும் சொல்லுங்கள், கேட்டுக் கொள்கிறோம்.

இருக்கட்டும். போக்கி நாள் வாழ்த்து! போக்க வேண்டிய பழையனவற்றில் அறியாமை, அச்சம், கொள்கையற்ற அரசியல், நானென்னும் அகந்தை, தன்னல வேட்கை, தனிமனித வழிபாடு,   அடிமையுள்ளம், சோம்பல், தான்தோன்றித்தனம், இரசிக மனப்பான்மை. பதவிப் பித்து, கட்டுப்பாடுகளை எதிர்க்கும் அனாட்சியம் [அராசகம்]… இவையும் இன்ன பிறவும் இடம்பெறட்டும். இவற்றைப் போட்டுக் கொளுத்துங்கள்! மாசு ஏதும் விளையாது. உங்களுக்கும் நம் தமிழ்க் குமுகத்துக்கும் நன்மையே விளையும்.

பொங்கல்! நமக்குத் தமிழ்ப் புத்தாண்டு! புத்தாண்டில் புதிய தமிழராய், புதிய மாந்தராய் எழுவோம்!

தாழியின் பொங்கல் வாழ்த்து:

பொங்குக பொங்கல்!

அன்பும் அறிவும் அறமும் பொங்குக!

ஆற்றல் மிகுந்து ஆளுமை பொங்குக!

இனவெறி ஒழிந்து இனநலம் பொங்குக!

ஈகையின்பம் ஈகப்பேரின்பம் பொங்குக!

உயிரினுமினிய  உரிமைகள் பொங்குக!

ஊருக்குழைக்கும் ஊக்கம் பொங்குக!

எல்லார்க்கும் கல்வி உரிமை பொங்குக!

ஏன் எனும் கேள்வி எழுந்து பொங்குக!

ஐங்குணமேவிய அரசியல் பொங்குக!

ஒற்றுமையுறுதிப் போர்க்குணப் பண்புகள் பொங்குக!   

ஓர்மை மீட்கத் தமிழினம் பொங்குக!

ஔவியம் பேசா உறவுகள் பொங்குக! பொங்குக!

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 69

ஆசிரியர் குறிப்பு; போக்கி குறித்து போக்கியின்பொழுதுதான் எண்ண வேண்டுமா?