நடிகர் சங்கத்தின் நடிப்பும் அறிவுக் கொள்முதலும்
நடிகர் சங்கத்தின் நடிப்பும் அறிவுக் கொள்முதலும்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றுப் புதியப் பொறுப்பாளர்கள் பதவி ஏற்றுள்ளனர். கலைக்குடும்பத்தினர் நலனுக்கும் கலைத்துறையின் மேம்பாட்டிற்கும் ஒல்லும்வகைத் தொண்டாற்றிட வேண்டி அவர்களை வாழ்த்துகிறோம். எனினும் தாங்கள் வாகை சூடியதன் காரணம் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. பெருமளவு பரபரப்பாக ஊடகங்களில் இடம் பெற்ற இத் தேர்தலில் இளைஞர்கள் வென்றதாகக் கூற இயலாது. ஏனெனில் வீழ்ந்த அணிணியிலும் இளைஞர்கள் இருக்கின்றனர். கலைக்குடும்பத்தினருக்கு உதவாமையால் முந்தைய அணி தோற்றது எனக் கூற இயலாது. ஏனெனில், வென்ற அணி, தேர்தலின் பொழுதே “அவர்கள் சொந்தப்பணத்திலா உதவினார்கள்” எனக்கேள்வி கேட்டு அவர்கள் ஆற்றிய பணிகளை ஒத்துக் கொண்டுள்ளனர். வென்றபிறகும் ‘சூ’ நடிகர், “கடமைகளை உதவிகளாகக் காடடினார்கள்” எனக் கூறியுள்ளார். நாட்டுத் தேர்தலிலேயே அரசின் பணத்தில் திட்டங்களையும்உதவிகளையும் செய்துவிட்டு வாக்கு கேட்கவில்லையா? எனவே, இவ்வாறு கூறியுள்ளதன் மூலம் வீழ்ந்த அணி கலைக்குடும்பத்தினருக்காக ஓரளவாவது உழைத்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்வாறு எதிர்க்கும் பொழுதும் தங்களை அறியாமல் அவர்களி்ன் நற்பணிகளை ஒத்துக் கொண்டுள்ளார்கள் எனில், ஒன்றும் செய்யவில்லை, தோற்றனர் எனக் கூற இயலாது. மாறாக,
“யாகாவராயினும் நாகாக்க” என்பதை முந்தைய முதன்மைப் பொறுப்பாளர்கள் மறந்ததன் விளைவே வீழ்ச்சி என்பதை உணர வேண்டும். ஆனால், வாகை சூடிப் பொறுப்பிற்கு வந்தபின்னும் புதிய பொறுப்பாளர்களில் வண்ணமயமானவர், கருணையானவர் முதலானோர்வரம்பு மீறிப்பேசுவதாகச் செய்திகள் வருகின்றன.
இகழ்ச்சியில் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து (திருவள்ளுவர், திருக்குறள் 539)
என்பதை உணர வேண்டும்.
தமிழ்நாடக நடிகர்கள் வாக்கு பெரும்பான்மை முந்தைய பொறுப்பாளர்களுக்கே சென்றுள்ளது. மண்ணின் மைந்தர்களான நாடகக் குடும்பத்தினரில் பெரும்பான்மையர் தங்கள் பக்கம் இல்லை என்பதை உணர்ந்து – சிறுபான்மையரை அழைத்து வந்து வாக்களிக்கச் செய்தததால் அனைவரும் தம் பக்கம் இருப்பதாக எண்ணாமல், எதிரணியிலும் கலைக்குடும்பத்தினர் உள்ளனர் என்பதை உணர வேண்டும். எனவே, வீண் பெருமை பேசிக்கொண்டிராமல், செயலில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இப்பொழுது நாம் சொல்ல வருவது நடிகர்களின் நலனுக்கானதுதான் இச்சங்கம் எனக்கூறிப் பொதுவான தமிழ்நாட்டின் அல்லது தமிழ் மக்களின் நலனுக்காகக் குரல் கொடுக்க மாட்டோம் எனச் சொல்வது பெரும்பிழை என்பதை அவர்கள் உணர வேண்டும். வரலாறு காணாத்துயரில் மக்கள் மூழ்கியிருக்கையில் இவ்வாறு சொன்னது மக்களை நம்பித் தாங்கள் இல்லை என்ற தலைக்கனமன்றி வேறில்லை!
அனைத்து நாடகக் குடும்பத்தினர் நலனில் கருத்து செலுத்தும் பொறுப்பு முதன்மையாக உள்ளதை யாரும் மறுக்கவில்லை. அதே நேரம், கலைஞர்கள் மீது பெரிதும் மதிப்பும் அன்பும் வைத்திருக்கும் நேயர்களின் தனிப்பட்ட உழைப்பே தங்களைப் புகழேணியில் வைத்திருக்கிறது என்பதை மறக்கக்கூடாது. அத்தகைய பொதுமக்கள் நலனுக்கு எதிராகப் பேசினாலோ செயல்பட்டாலோ இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்பதையும் உணரவேண்டும்.
இதை மக்கள் இணையத்தளப்பதிவுகள் மூலம் நன்கு உணர்த்தி விட்டனர். மக்களின் புறக்கணிப்பிற்கு ஆளாவோம் என்ற அச்சத்தைப் பொறுப்பிலுள்ள நடிகர்கள் உணர்ந்தனர். தனிப்பட்ட முறையில் இலாரன்சு, கார்த்திகேயன், சந்தானம், சிலம்பரசன், அன்சிகா முதலான சிலர் உதவியதும் இதற்கான பெருமையை நடிகர் சங்கம் தட்டிச் செல்ல வேண்டுமே என்ற உணர்வும் வந்துவிட்டது. இப்பொழுது உதவும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தொடக்கத்தில் ஒப்புக்கு உதவுவதுபோல் நடித்தாலும் இப்பொழுது உண்மையிலேயே முனைப்புடன் உதவிப்பணிகளில் ஈடுபட்டுவருவது பாராட்டிற்குரியது. ஆனால், இத்தகைய போக்கு மாறக்கூடாது. பிற துறையினர் எவ்வாறு தத்தம் துறை நலத்துடன் பொதுமக்கள் நலத்திலும் கருத்து செலுத்துகின்றார்களோ அதுபோல் நடிகர் சங்கமும் கருத்து செலுத்த வேண்டும். நடிகர் சங்க அமைப்பு விதியிலும் இதனைச் சேர்த்துவிட்டால், உதவ மறுப்போர் மக்களால் மறுக்கப்படுவர் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவர்!
இந்திய விடுதலையில், திராவிட உணர்வு எழுச்சியில், இந்தி எதிர்ப்பில், தமிழ்ஈழக்காப்பில் என மக்களோடு தொடர்புடையவற்றில் கலைஞர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன. எனவே, திரைக்கலைஞர்களே! நீங்கள் எம்மொழி பேசுநராயிருப்பினும் எவ்வினத்தவராயிருப்பினும் தமிழ்க்கலை யுலகில் இருக்க வேண்டுமானால், தமிழ்மக்கள் நலம் சார்ந்த பணிகளிலும்கருத்து செலுத்துங்கள்.
இல்லையேல், மக்கள்உங்களை ஒதுக்கி வைக்கும் முன்னர், நீங்களே, தமிழ்க்கலையுகைவிட்டு ஒதுங்கி விடுங்கள்!
வாழ்க தமிழுடன் ! வளர்க கலையுடன்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 109 கார்த்திகை 20, 2046 / திசம்பர் 06, 2015
Leave a Reply