தலைப்பு-தமிழ்நாடு பெருமையடையும் :thalaippu_thamizhnaadu_perumaiadaiyum

விழுமிய வீரம்

“தோன்றிற் புகழொடு தோன்றுக” என்றார் திருவள்ளுவர். அவ்வுரையின் வழிநின்று வீரப்புகழ் பெற்றது பழந் தமிழ்நாடு. பாரில் உயர்ந்த பனிவரை மேல் நின்றது பழந்தமிழர் வீரம். கங்கை நாட்டில் கதித்தெழுந்த பகைவரை அறுத்தது தமிழர் வீரம். கடல் கடந்து மாற்றாரைக் கலக்கியது தமிழர் வீரம். இது சென்ற காலத்தின் சிறப்பு.

மறவர் நிலை

அன்று நாற்றிசையும் போற்ற ஏற்றமுற்று வாழ்ந்த தமிழ்நாடு இன்று ஊக்கம் இழந்து உறங்குகின்றது. மன்னரும் மதிக்க வாழ்ந்த மறக்குலம் இடைக்காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டது. அக்குல வீரரது முறுக்கு மீசை உருக் குலைந்தது. பணைத்த தோள் பதங்குலைந்தது; மாற்றார் தலை பறித்த மறவரது நெடுங்கரம் இன்று கழனியிலே களை பறிக்கின்றது.

அணுகுண்டு

ஆயினும் தமிழர் வீரம் அறவே அழிந்துவிட வில்லை. வீறுபெற்றுத் தமிழர் தலையெடுக்கும் காலம் விரைந்து வருகின்றது. அக்காலத்தில் தமிழ் நாடு புத்துயிர் பெறும். வருங்காலம் அணுகுண்டுக் காலம் என்பர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே அணுவையும் துளைத்து ஆராய்ந்தனர் தமிழர். நுண்மையான அணுவை நூறு கூறாக்கலாம் என்று கண்டனர் தமிழர்; அணுவின் நூறிலொரு கூறுக்குக் கோண் என்ற பெயரும் கொடுத்தனர். ஆதலால் அணுகுண்டைக் கண்டு துணுக்கமுறுபவர் தமிழர் அல்லர்; அதனை வெல்லுமாறறிந்து மேலே செல்லுவர். பழமையும் பெருமையும், ஆண்மையும் அறிவும் வாய்ந்த தமிழ்நாடு ஒருமையுடன் உழைத்தால் பெருமையடையும்; வருங்காலத்தில் பாரத நாட்டின் மணிமுடியாகத் திகழும்; ஆசிய கண்டத்தின் அவிரொளியாக விளங்கும். ஒன்றுபட்டால் தமிழர்க்கு உண்டு வாழ்வு.

“வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்.”

சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை

அட்டை-தமிழர்வீரம் : attai_thamizharveeram