நலிவிலும் உழைத்த கண்ணியம் குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு!
நலிவிலும் உழைத்த கண்ணியம்
குலோத்துங்கன் நிலைத்த ஓய்வு
கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டான கண்ணியம் குலோத்துங்கன் ஐயா அவர்கள், நெஞ்சாங்குலை பாதிப்பால் இடருற்றார்; நேற்று (ஆவணி 19,2049-04.09.2018) இரவு குடும்பத்தினரும் தமிழன்பர்களும் தொழிலாளத் தோழர்களும் வருந்தும் வகையில் இவ்வுலக வாழ்வு நீத்தார். அவரது இறுதி வணக்க ஊர்வலம் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும்.
நிகழ்விடம்:
2068, கோபுரம் 2 ஆ, மதிப்பு எழில் தோற்றம்
(Tower 2 B, Prestige Bella Vista)
ஐயப்பன்தாங்கல், சென்னை 600056
(ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையம் எதிரில்)
தொடர்பிற்கு:
மகன் குகன் : 9677277113
மருமகன் பார்த்திபன் : 9488514067
மருமகன் சிவா: 9840098618
உழைப்பாளி, எளியவர், தமிழன்பர், இதழாசிரியர், படைப்பாளி, தொழிலாளர் தோழன், கண்ணியம் மிகுந்தவர் எனப் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர் கண்ணியம் குலோத்துங்கன். அவர் பணிகளை நினைவுகூரும் வகையில் ‘கண்ணியக் காவலர் குலோத்துங்கன்’ எனச் செட்டம்பர் 2015 இல் எழுதிய கட்டுரையைக் காண வேண்டுகிறேன்.
தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். அதனால் அவர்களின் மக்கள் மீதும் அளவற்ற அன்பு கொண்டு பழகினார். எனவே, மதிப்பிற்குரிய அப்பெருந்தகை என் மீதும் அன்பு கொண்டிருந்ததில் வியப்பில்லை.
“தமிழறிஞர்கள் கணிணியிலிருந்து விலகி உள்ளனர். அவர்கள் அறிவதற்காகக்கணிணி குறித்துத் தொடர் ஒன்று எழுதித் தாருங்கள்” என வேண்டினார். ‘கணிணியும் கைப்பழக்கம்’ என்னும் தொடர் அதனால் வந்தது. ஆனால், எதிர்பாராமல் ஏற்பட்ட மின்னஞ்சல் சிக்கல், கணிணிப்பாழ் முதலியவற்றால் அனுப்பிய கட்டுரைகள் அவரிடமும் சென்று சேரவில்லை. என்னிடமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. புதியதாக மீண்டும் எழுத நேரமின்றி அத் தொடரை முடிக்காதது உறுத்தலாகவே உள்ளது.
அவர் நலமாக இருந்த பொழுது திங்கள் இருமுறையேனும் நாங்கள் அலைபேசி வாயிலாகப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் உழைப்பிற்கேற் மதிப்பைத் தி.மு.க.வும் அரசும் தரவில்லை என்பது என்னைப்போன்ற பலரின் வருத்தம். தன் உழைப்பிற்கேற்ற மதிப்பை வழங்கவில்லை என்ற வருத்தம் அவருக்கிருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் “தன் கடன் உழைப்பதே” என வாழ்ந்தார்.
மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவையும் பிற ஆண்டுவிழாவையும் சிறப்பாக நடத்தினார். கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழறிஞர்கள் குவிய வேண்டும் எனத் தணியா ஆர்வம் கொண்டவர். அவ்வாறு தம் சொந்தச் செலவில் மிகச் சிறப்பாகத் தமிழறிஞர்கள் கூடும் விழா நடத்தியும் அமைதி கொள்ளவில்லை. அங்கு வராதவர் யாருமில்லை என்னும் அளவிற்கு அனைவரையும் அழைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுவந்தார். அவருக்கு ஏற்பட்ட நலக்குறைவு அதனை நிறைவேற்ற இயலவில்லை.
தமிழறிஞர்களைப்பற்றி அட்டைப்படத்தில் படம் வெளியிட்டுக் கட்டுரை எழுதி வந்த அவர், என்னைப்பற்றியும் எழுதிப் பெருமைப்படுத்தினார். மேலும் ‘அண்ணா வளர்த்த கண்ணியக் காவலர் விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.
யாரையும் ஊக்கப்படுத்திச்சிறப்பிப்பது அவர் பண்பாடு. எனவே, எங்கள் மகன் பொறி.தி.ஈழக்கதிர் அவரது இதழ்த் தொடர்பான பணிகளில் உதவியதாலும் இதுபோல் பிறருக்கும் உதவுவது அறிந்ததாலும் நட்பு, அகரமுதல இதழ்கள் சிறப்பாக வருவதற்குத் தொண்டாற்றியமையாலும் ‘கண்ணிய இதழியல் செம்மல் விருது’ அளித்து ஊக்கப்படுத்தினார். ‘செந்தமிழ்ச்செம்மல் இலக்குவனார்’ என்னும் நூலை மணிவாசகர் பதிப்பகம் மூலம் வெளியிட்டுப் பேராசிரியர் இலக்குவனார் மீதுள்ள தம் மதிப்பை வெளிப்படுத்தினார். இத்தகைய ஆன்றோர் மறைவு தனிப்பட்டமுறையிலும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
அகரமுதல இதழ், தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவார் இலக்கிய இணையம் ஆகியவற்றின் சார்பில் அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
Leave a Reply