kanniyam-kulothungan02

தமிழகம் மறக்கக்கூடாதவர்களுள் ஒருவர்!

 தமிழக மக்கள், அரசியல் துறையில், இலக்கிய உலகில், கலைப்பணியில், என வெவ்வேறு வகைப்பாடுகளில் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய தகைமையாளர்கள் பலர் உள்ளனர். அத்தகையோருள் குறிப்பிடத்தக்க ஆன்றோர் கண்ணியம் ஆ.கோ.குலோத்துங்கன் ஐயா அவர்கள்.

 “அன்று குலோத்துங்கனுக்காகக் கலிங்கத்துப்பரணி பாடினார் செயங்கொண்டார். இன்று செயங்கொண்டத்தில் குலோத்துங்கன் தமிழ்ப்பரணி பாடுகிறார். எழுத்துத் துறையில் நாளை ஒரு வேந்தனாகத் திகழ்வார்” என்று பேரறிஞர் அண்ணா இவரின் எழுத்துப்பணியைப் பாராட்டி உள்ளதே இவரின் சிறப்பினை அடையாளப்படுத்தும்.

  தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர் தொழிலாளர்களின் உற்ற தோழனாக, உறுதுயர் போக்கும் காவலனாக, எழுச்சி யூட்டும் தலைவனாகத் திகழ்ந்தார். நிருவாகத்தினரின் இடையூறுகளால் இன்னலுற்றபோதும் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுப்பதை இவர் என்றுமே நிறுத்திய தில்லை.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வாக்கிற்கு எடுத்துக்காட்டாக இவர் ஆற்றிய பணிகள் ஏராளம்! ஏராளம்! தொழிற்சங்கத் தலைவராக இருந்து, தொழிலாளர்களின் பணிச்சிக்கல்களைத் தீர்த்தல், நிலையான பணியமர்த்தம் வாங்கித் தரல், தகுதிக்காலப் பணி ஆண்டுகளைக் குறைக்கச் செய்தல் முதலான எண்ணற்ற பயன்கள் இவர் முயற்சியால் தொழிலாளர்களுக்குக் கிட்டின. சிம்சன் குழுமத்தில் பொறிஏர் நிறுவனத்தில் பணியைத் தொடங்கிய இவர், தொழிலாளர்களுக்காகவே தன் வாழ்க்கையை ஒப்படைத்தார். இவரது தி.மு.க. ஈடுபாடு, தொழிலாளர்களிடையே தி.மு.க.வை வளர்க்கவும் தி.மு.க.வினரிடம் இவர் செல்வாக்கு உயரவும் காரணமாக இருந்தது. எனவேதான், தி.மு.க.வேட்பாளராக நிறுத்தப்பட்டு, 1987இல் தொழிற்சங்கப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போக்குவரத்துக்கழகம், மின்வாரியம், தொழிற்சாலைகள் எனப் பல்வேறு துறைகள், நிறுவனங்கள், தொழிலகங்கள், உணவகங்கள் ஆகியவற்றின் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் நலச்சங்கம், தொழிலாளர் நல முன்னேற்றச் சங்கம், ஆகியவற்றின் துணைச்செயலர், துணைத்தலைவர், தலைவர் முதலான பொறுப்புகளில் இவர் ஆற்றிய பணிகள், தொழிலாளர் இல்லங்களில் விளக்கேற்றின. மறுமலர்ச்சிக்கழகத்திலும் தொழிலாளர் முன்னணியின் தலைவர் முதலான பல்வேறு பொறுப்புகளில் இருந்து திறம்படப் பணியாற்றியுள்ளார். இவர் தொழிலாளர் நல அமைச்சராக இருந்திருந்தால் தொழிலாளர்களுக்குச் சிக்கலின்றி நாடு நலன் பெற்றிருக்கும். ஆனால், உண்மையான உழைப்பாளிகளுக்கும் நேர்மைக்கும் இடமில்லாத இடத்தில் இவருக்கு மட்டும் எப்படி இடம் கிடைக்கும்? ஆனால், இதனால் இழப்பு அவருக்கல்ல, நாட்டிற்குத்தானே!

  தொழிலாளர்கள் அமைப்பில் மட்டுமல்லாமல், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், குடியிருப்போர் ஆகியவர்களின் அமைப்புகளிலும் தலைவர், செயலர் முதலான பொறுப்புகளில் இருந்து அவர்களின் நலன்களைக் காத்துள்ளார். தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் 1968 இல் நிறுவிய செந்தமிழ்க்கவிஞர் எழுத்தாளர் பேரவையின் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியதைப் பெரும் பேறாகக் கருதுகிறார்; இவ்வாறு இவர் கருதுவது, இவரின் தமிழ் உணர்விற்கும் பேராசிரியர் மேல் கொண்டுள்ள உயர் மதிப்பிற்கும் எடுத்துக்காட்டாகும்.

  தந்தை பெரியாருடன் இவர் கொண்டிருந்த தொடர்பு, இதழுலகில் தன் மதிப்பும் இலக்கியப் பணியும் ஆற்றும் திறனை இவருக்கு அளித்தது. ஆசிரியர்களை ஏணியாகவும் தோணியாகவும் கூறுவார்கள் அல்லவா? அதுபோல் இளம் படைப்பாளிகளின் ஏணியாகவும் தோணியாகவும் இருந்து அவர்களை ஊக்கப்படுத்தியும் மேம்படுத்தியும் படைப்பாளர்களின் வழிகாட்டியாகத் திகழ்கிறார். ‘சங்கநாதம்’, ‘உழைப்பாளி’, ‘எரிஈட்டி’ முதலான இதழ்களில் பொறுப்பு வகித்தும் கட்டுரைகள் அளித்தும் இதழுலகில் முத்திரை பதித்தார். தானே நிறுவன ஆசிரியராக இருந்து1965 இல் ‘மல்லிகை’ இதழ் நடத்தி இதழுலகில் தன்மதிப்பு மணம் பரப்பிய இவர், 1970களிலும் 1987 முதலும் ‘கண்ணியம்’ நடத்திக் கண்ணியக் காவலராகத் தமிழ் உள்ளங்களில் வீற்றிருக்கிறார். கண்ணியம் உருவாக்கும் கவிஞர்கள் பலர்; எழுத்தாளர்கள் பலர். அறிஞர்கள், ஆன்றோர்கள் பெயரிலும், மாவட்டங்கள் பெயரிலும் சிறப்பு மலர்கள் வெளியிட்டுத் தமிழ்ப் பண்பாட்டின் நாகரிக, பண்பாட்டு, வரலாற்றுத் தூதராகத் திகழ்கிறார். ‘நான் ஏன் எழுதுகிறேன்’ என்பது போன்ற தொடர்கள் மூலம், அறியாதவர்களை அறியச் செய்யவும் அறிந்தவர்களின் அறியாப் பணிகளைத் தெரியச் செய்யவும் வாயிலாக அமைகிறார்.

  “தமிழ் வளர்ச்சியில் கண்ணியம் இதழின் பங்களிப்பு”, “கண்ணியம் இதழின் சமூகவியல் சிந்தனைகள்”, “கண்ணியம் இதழின் நோக்கும் போக்கும்” ஆகிய தலைப்புகளில் முறையே ஆய்வுப்பணி மேற்கொண்டு ஆ.மேரி சூலி, க.விசயலட்சுமி, நா.யான்சிஇராணி ஆகியோர் இளமுனைவர் எனப்பெறும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளனர். கண்ணியம் இதழின் மூலம் பெருந்தகையாளர் குலோத்துங்கன் ஐயா ஆற்றிவரும் பணிகளுக்கு இவையே சான்றாகும். ‘அண்ணா பொள் மொழிகள்’, ‘உழைப்போம் உயர்வோம்’, ‘கட்டுரைக் களஞ்சியம்’, ‘கண்ணியப்பெருமக்கள்’ – 3 தொகுதிகள், ‘தகவல் களஞ்சியம்’ – 6 தொகுதிகள், ‘நான் ஏன் எழுதுகிறேன்’ – 20 தொகுதிகள், ‘பரிசுச்சீட்டு’, ‘பாட்டாளிகள் பற்றி அண்ணா’, ‘பொதுஅறிவுக் களஞ்சியம்’ முதலான 70 நூல்கள் இவர் எழுத்தாக்கத்திலும் தொகுப்பாக்கத்திலும் வெளிவந்து   இலக்கிய வரலாற்றில் இவரையும் இடம் பெறச் செய்துள்ளன.

  1965 இல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு முதல் சிறை வாழ்க்கையை ஏற்றவர், அதன் பின்னரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு கட்சி அரசியல் போராட்டங்களுக்காகவும் ஈழத் தமிழர் நலன்களுக்காகவும் இதுவரை 18 முறை சிறை சென்றுள்ளார். பொதுமக்களின் நல்வாழ்விற்காகப் பல்வேறு அறப்போராட்டங்களிலும் ஈடுபட்ட செம்மல் இவர்.

  இவரது பணிச்சிறப்பு இவருக்கு நாற்பதுக்கு மேற்பட்ட விருதுகளை அள்ளித்தந்துள்ளது. ‘கொள்கை மணி’, ‘எழுத்தாளர் திலகம்’, ‘தமிழ்ப்பணிச்சான்றோர்’, ‘இதழ்மாமணி விருது’, ‘ழகர விருது’, ‘ சான்றோர் விருது’ முதலானவை குறிப்பிடத்தக்கனவாகும். பல்வேறு விருதுகள் பெற்ற விருதாளரான இவர், தம் பிறந்தநாளிலும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளிலும் தொடர்ந்து தமிழ்நல இதழாளர்களுக்கும் ஆன்றோர்களுக்கும் தொண்டார்வம் மிக்க இளைஞர்களுக்கும் விருதுகள் அளித்துச் சிறப்பித்து வருகிறார். இளம் படைப்பாளிகளுக்கும் தமி்ழ்த் தொண்டர்களுக்கும் பிறருக்கும் இவை உற்சாகமாகவும் ஊக்கமாகவும் அமைகின்றன என்பதில் ஐயமில்லை.

  கொடை உள்ளம் கொண்ட இப்பெருமகனார், அந்தமான் நூலகம், உட்கோட்டை பெரியார் நூலகம், தாராபாரதி நூலகம், பதிப்புச் செம்மல் மெய்யப்பனார் நூலகம், பெங்களூர் தமிழ்ச்சங்க நூலகம்,   பெரியார் ஆய்வு நூலகம், அண்ணா ஆய்வு நூலகம், முதலான பல்வேறு நூலகங்களுக்குப் பன்னூறாயிரம் மதிப்புள்ள நூல்களை அன்பளிப்பாக வழங்கி உள்ளார்.

“குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு”

என்னும் தெய்வப்புலவரின் திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் பெரிதும் போற்றப்படும் கண்ணியம் குலோத்துங்கன் ஐயா அவர்கள், பல ஆயிரம் பிறைகளைக் கண்டு நலமும் வளமும் நிறைந்து வாழ வாழ்த்தி வணங்குவோம்!

  கடமை வீரராய் – கட்டுப்பாட்டுத் தீரராய் – கண்ணியக் காவலராக வாழும் குலோத்துங்கனார் பணிகளால் குவலயம் சிறந்திடுவதாக!

-இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல 98, புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015: இதழுரை

AkaramuthalaHeader