வல்லமையாளர் தாலின் வெல்க!

  திமுகவின் தலைவர் பொறுப்பேற்றதும் தாலின் ஆற்றிய உரை, அருமையான உரை எனப் பல தரப்பாரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதில் பாசகவிற்கு எதிராகப் பேசியிருக்கவேண்டா எனச் சிலர் கூறுகின்றனர். கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு அக் கருத்தும்தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. எனவே, புதியதாகப் பிறந்தவரின் புதிய உரையைப் பாராட்டலாம்.

  திமுக தன் கொள்கைப் பாதையில் சறுக்கிக் கொண்டுள்ளது. எனவேதான் சிலர், திமுக தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் துணிவுடன் அறிவுரை கூறுகின்றனர். அவ்வாறு திமுக, தன்மானம், தன்மதிப்பு, மொழிப்பற்று, இனப்பற்று முதலான தன் கொள்கைகளைக் கைவிடுவதைவிடக் கட்சியைக் கலைத்துவிட்டு இதற்கு எதிரான கட்சியில் சேர்ந்து விடலாம். ஆனால் அவ்வாறு கூறும் நிலைக்குத் திமுக ஏன் வந்தது எனச் சிந்திக்க வேண்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்(திருவள்ளுவர், குறள் 466)

ஆதலின் செய்ய வேண்டிய பணிகளை ஆற்றாமலும்  செய்யக்கூடாதவற்றைச் செய்தும் திமுகவிற்கு அழிவை உண்டாக்கக் கூடாது.

  பல நேர்வுகளில் அமைதியைக் கடைப்பிடித்து வெல்லும் திறமை உடையவர் தாலின். எனவே, தேவையற்றவற்றைப் பேசுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். சான்றுக்கு ஒன்று. கலைஞர் கருணாநிதிக்கு நல்லடக்கம் செய்ய முதலில் அண்ணா சதுக்கத்தில் இடம் தரவில்லை எனச் சொல்லிக் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனத் ‘தம்பி’ விரும்பினார் எனக் கேட்பது சரியல்ல. தனக்கு அல்லது தன் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட விரும்பி அதற்கு அரசு குறுக்கே நின்றால் பாயலாம். இத்தகைய விருப்பமே “எனக்கு அறிஞர் அண்ணாவிற்கு எழுப்பியது போன்ற நினைவகம் அமைக்கப்பட வேண்டும்” என்பதாகத்தான் பொருள். செயலலிதா பதவியில் இருந்தால்  இசைவு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. திமுக ஆட்சியில் இருந்தால்  செயலலிதாவிற்கு அரசு முறையில் அடக்கம் செய்யவும் இடம் தந்திருக்காது. வழக்கு தொடுத்திருப்பவர்கள் எங்ஙனம் அதற்கு இசைந்திருப்பார்கள்?

  திராவிடக் கட்சிகளின் முதல்வர்கள் மறைவிற்கு இடம் தந்ததுபோல் ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கும் இடம்தர வேண்டும் என்பதுதான் முறை. அந்தக் கண்ணோட்டத்தில்தான்  தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யாமல் அரச இசைவு தந்துள்ளது. நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளையும் அரசு முறையில் செய்தது. மீண்டும் மீண்டும் இது குறித்துப் பேசுவது மக்களிடையே  எதிரிடையான எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. எனவே, இப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைப்பதே நன்று. இதுபோன்றவற்றில் அமைதி காப்பதே மக்களின் ஆதரவிற்கு வழி வகுக்கும்.

 பதவியில் இல்லாதபொழுது ஒன்று பேசுவதும் பதவியில் இருக்கும்பொழுது வேறொன்றைச் செயல்படுத்துவதுமே அரசியல் வாதிகளின் இலக்கணமாகி விட்டது. அதனை மாற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்தால் செய்ய இருப்பதாகக் கூறும் திட்டங்களை இயன்ற வகைகளில் இப்பொழுதே செயல்படுத்தலாம்.

 பேராயக்கட்சியாகிய காங்.ஆட்சியில் பள்ளிகளிலாவது தமிழ் வழிக்கல்வி இருந்தது. திராவிடக்கட்சி ஆட்சிகளால் இப்பொழுது மழலை நிலையிலிருந்தே தமிழ் ஒழிக்கப்பட்டுவருகிறது. ஆட்சிக்கு வந்தபின் முழுமையான தமிழ்வழிக்கல்வியைச் செயல்படுத்தப்போவதற்கு முன்னோடியாகத் திமுக கட்சியினர் நடத்தும் பள்ளிகளைத் தமிழ்வழிக் கல்வி நிலையங்களாக மாற்ற ஆவன செய்ய வேண்டும். தமிழ்வழிப்பள்ளிகள் சிறப்பாகச் செயல்பட ஒல்லும்வகையெலாம் உதவ வேண்டும்.

  இராசீவு கொலைவழக்கில் சிக்கவைக்கப்பட்ட எழுவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை வாழ்க்கையில் உள்ள இசுலாமியர், பிறர் ஆகியோர் விடுதலைக்காக எப்பொழுதாவது குரல் கொடுத்தால் போதாது. ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்வது குறித்த உறுதியை அளிக்க வேண்டும். எல்லா வகையிலும் முயன்று இவர்களின் விடுதலைக்கு வழி வகுக்க வேண்டும். அத்துடன் இவ்வாறு சிறையில் துன்புறுவோர் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் திமுக நிதியிலிருந்து உதவித் தொகை அளிக்க வேண்டும்.

  ஈழ ஏதிலியர் முகாம்களில் உள்ளவர்களுக்கான மறுவாழ்வுப்பணிகளில் கட்சி சார்பாக இப்பொழுதே ஈடுபட வேண்டும்.

  தமிழ்ஈழம் மீது நம்பிக்கை இருந்தது என்றால், பரப்புரைக் குழுக்களை அமைத்து, உலகெங்கும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.

  இவற்றை எல்லாம் கட்சி சார்பாகவே மேற்கொள்ள இயலும். அவ்வாறு செய்தால் ஆட்சி வந்தால் எளிதில் இவற்றை நிறைவேற்ற இயலும்.

  இறை நம்பிக்கை என்பதும் தமிழர் பண்பாடுதான். ஆனால், தமிழ்நெறிக்கு மாறான மூடநம்பிக்கைகளும் வேள்விகளும் சாமியார் வழிபாடுகளும் அறவே நீக்கப்பட வேண்டும். பேரறிஞர் அண்ணா வழியில், திருமூலர் கூறியவாறு “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”  என்பனவே நெறி எனில் அதனைத் தொண்டர்கள்பின்பற்றச் செய்ய வேண்டும்; மக்களிடம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.

  பதவிக்கு வேள்வி, அதற்கு வேள்வி, இதற்கு வேள்வி என அதிமுக போல் திமுகவும் செயல்படுகின்றது. வேள்வியே வாழ்விற்கான வழி என நம்பினால் தெளிவாக அறிவித்து அதைப் பின்பற்றட்டும். அதனைப் பின்பற்றுபவர்கள் திமுகவைப் பின்பற்றட்டும். பகுத்தறிவையும் தன்மானத்தையும் ஏற்காதவர்கள் விலகிக் கொள்ளட்டும்.

 எல்லாத் தேசிய மொழியினரின் வளத்தையும் உறிஞ்சி அவற்றை நசுக்கி இந்தி தலைமை நிலைக்குத் திணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தித் துதிபாடிகள், திமுக இந்திக்கு எதிராகச் செயல்பட்டதால் தமிழினமும் தமிழ்நாடும் பின் தள்ளப்பட்டதாகப் பொய்யுரை பரப்பி வருகின்றனர். இந்தி, சமற்கிருதத் திணிப்புகளால் தமிழ் முதலான மொழிகளும் மொழி பேசுநரும் ஒடுக்கப்படுகின்றனர் என்னும் உண்மையை ஏற்பதாக இருந்தால் இவற்றிற்கு எதிரான பரப்புரையைத் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும். தங்கள் குடும்பத்தினர் இம்மொழிகளுக்கு முதன்மை அளிப்பதற்கும் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் இவற்றைக் கற்றுத் தருவதற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது இக்கொள்கை உடன்பாடில்லை எனில் வெளிப்படையாக அறிவித்துவிட்டு இவற்றைப் பரப்பும் பணியில் இவர்களும் ஈடுபடலாம்.

  தமிழ்நாட்டில் தமிழ்ப்பெயர்களே காணாமல் போன சூழல்தான் நிலவுகிறது. திமுகவின் தொடக்கக்காலம் போலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கம்போல் தொல்திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டப்படுவதற்கு எடுத்த நடவடிக்கை போலும் மீண்டும் முயல வேண்டும்.

  அன்றாடப்பயன்பாட்டில் தமிழே முழுமையாய் இருக்கப்பாடுபட வேண்டும்.

  புலவர்களை மதிக்கும் அரசுகள் புகழ்பெறும். சங்கக்கால வேந்தர்கள் புலவர்களை மதித்துப்போற்றினர். அவர்கள் காட்டிய நல்வழியில் அரசை நடத்தினர். இப்போதைய அரசுகள் அறிவார்ந்த ஆன்றோர்களை எதிரிகளாக நடத்துகின்றனர். இவ்வாறில்லாமல் அறிஞர்களைப் போற்ற வேண்டும். அறிஞர்களைப் போற்றுவதாகக் கூறிக்கொண்டு புகழ்பாடிகளுக்குப் பதவிகள் வழங்கி மகிழ்ச்சி கொள்ளக் கூடாது.

  கட்சியிலும் கட்சிக்காக உழைக்கும் சொற்பொழிவாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். புறக்கணிக்கப்படுவதாகக் கவலைப்படும் அவர்கள் வருத்தத்தைப் போக்க வேண்டும்.  அதற்காக நரகல் நடைப் பேச்சாளர்களை ஊக்கப்படுத்தக் கூடாது. அதனைக் கூட்டத்தைச் சேர்க்கும் வழியாகக் கருதாமல் நல்ல கருத்துகளை விதைப்பதையே கொள்கையாகக் கொள்ள வேண்டும்.

எல்லார்க்கும் கல்வி வாய்ப்பும் வேலை வாய்ப்பும் கிடைத்தாலே ஊழல் பெருமளவு குறையும்.

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான

இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்

(பாரதிதாசன், பாண்டியன் பரிசு, இயல் : 56)

என்று முழங்கிக் கொண்டிராமல் செயலாற்றி இதன்மூலம் ஊழலை ஒழிக்க வேண்டும். செல்வம் உள்ளவர்க்கே தேர்தலில் வாய்ப்பு என்பதும் ஊழல் பெருகக் காரணமாக இருக்கிறது. வீண் செலவுகளுக்கும் வாக்குகளை வாங்குவதற்கும் வாய்ப்பு இல்லா முறையில் தேர்தல் நடைபெறச் செயலாற்ற வேண்டும்.

  சுருக்கமாகக் கூறுவதாயின், ஆட்சிக்கு வந்த பின் தமிழ் மக்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் நாட்டு முன்னேற்றத்திற்காகவும் என்னென்ன ஆற்றப்போவதாகப் பரப்புரை மேற்கொள்கிறார்களோ அவற்றையெல்லாம் கட்சிநிலையிலேயே இயன்ற அளவு மேற்கொள்ள வேண்டும்.

புதிய மனிதர் தாலின் செய்வார் என எதிர்பார்ப்போமா?

-இலக்குவனார் திருவள்ளுவன்