இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 22
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 21 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’
6. பழந்தமிழ் இலக்கியம்
மொழி என்பது நேருக்கு நேர் கருத்தினை அறிவிக்கும் கருவியாகப் பயன்பட உருவாக்கப்பட்டது; என்றாலும், எழுத்துகள் உண்டான பின்னர் அது கால இடையிட்டும் நாடு இடையிட்டும் கருத்தினை அறிவிக்கும் கருவியாகவும் பயன்படும் நிலையை அடைந்துள்ளது. உயர்ந்த கருத்துகளைத் தன்னுள் கொண்டிருப்பதே இலக்கியம் எனப்படும். மொழியின் முதிர்ந்த பயன் இலக்கியம் எனலாம். இலக்கியமே மக்கள் வாழ்வினைச் சிறப்பிக்கும்; பண்படுத்தும்; இன்பமாக்கும்; உயர்நிலைக்குக் கொண்டு செல்லும். இலக்கியம் என்பது தூய தமிழ்ச்சொல். குறிக்கோளை இயம்புவது என்பதே அதன் பொருளாகும்.
இலட்சியம் எனும் வடசொல்லே இலக்கியம் ஆயிற்று என்பர் சிலர். இலட்சியம் எனும் சொல்லுக்குக் குறிக்கோள் எனும் பொருள் உண்டேயன்றிக் குறிக்கோளை இயம்புவது எனும் பொருள் இல்லை. வடமொழி லட்சியம் வேறு தமிழ் இலக்கியம் வேறு. வடமொழியில் கூட இலட்சியம் என்ற சொல்லால் இலக்கியத்தை அழைத்திடக் கண்டிலோம். அவ்வாறு இருக்க அச் சொல் தமிழில் இலக்கியம் ஆயிற்று எனல் எங்ஙனம் பொருந்தும்?
லட்சணம் என்ற சொல்லே இலக்கணம் ஆயிற்று என்று கருதியோர் லட்சியம் என்ற சொல்லே, இலக்கியம் ஆயிற்று என்று கருதிவிட்டனர். அக் கருத்து என்றும் கொள்ளத் தக்கதன்று; தவறுடைத்து எனத் தள்ளத்தக்கது. இலக்கணம், இலக்கியம் எனும் இரு சொற்களும் தூய தமிழ்ச்சொற்களே. இலக்கியம் தோன்றிய பின்னர் இலக்கணம் தோன்றியது. எனினும் இலக்கியத்தால் இலக்கணமும், இலக்கணத்தால் இலக்கியமும் உருப்பெறுவது இயல்பாகிவிட்டது. இவை இரண்டுமே மொழியை மாற்றமுற்று அழிவுறாமல் காப்பன; வளம்படுத்துவன. ஒரு மொழியின் பழைய நிலையையும் வரலாற்றையும் அறிவதற்குத் துணைபுரிவனவும் இவை இரண்டுமே யாகும். மொழிக்குரிய மக்களின் வரலாற்றை அறியத் துணைபுரிவனவும் இவையே.
இலக்கியத்தின் சிறப்பையும் இன்றியமையாமையையும் அறிந்த தமிழ் முன்னோர் மொழிக் கூறுபாடுகளுள் ஒன்றாக இலக்கியத்தையும் இணைத்தனர்.
எழுத்து, சொல், பொருள் என்பனவற்றுள் எழுத்தும் சொல்லும் மொழியைப் பற்றியன; பொருள் இலக்கியத்தைப் பற்றியது. வாழ்வையே பொருளாகக்கொண்டு வாழ்விற்குரிய பொருளாக இலக்கியம் இயற்றப்படல் வேண்டும் என்று எண்ணினமையின்ன இலக்கியத்தைப் பொருள் என்றே அழைத்தனர்.
தமிழில் இலக்கியமும் இலக்கணமும் உண்டான காலம் யாது என வரையறுத்துக் கூறல் இயலாது. வரலாற்றுக் காலத்துக்கு முன்பே தமிழில் இலக்கியங்களும் இலக்கணங்களும் தோன்றிவிட்டன. நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் தொல்காப்பியம், திருக்குறள், பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்பன தொன்மை சான்றன. ஆனால் இவையெல்லாம் ஆரியர் கூட்டுறவு கொண்ட பின்னரே இயற்றப்பட்டன என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலம் ஆரியர் தென்னாட்டில் குடிபுகுந்த காலமாகும். அக்காலம் கி.மு. ஏழாம் நுற்றாண்டு என்பர். (விரிவு தொல்காப்பிய ஆராய்ச்சி எனும் எமது நூலிற் காண்க.) திருக்குறள் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டது என்பதில் ஐயமின்று. பத்துப்பாட்டுள் மலைபடுகடாம் என்பது தொல்காப்பியத்திற்கு முற்பட்டது என்று இந் நூலின் முற்பகுதிகளில் நிலைநாட்டப்பட்டுள்ளது. இனி எட்டுத்தொகையுள்ளும் ஆரியர் தொடர்பு கொள்வதற்கு முன்னர் இயற்றப்பட்டன உளவா என்று ஆராய்தல் வேண்டும்.
ஆரியர் தொடர்பு தமிழர்க்கு உண்டான பின்னர் ஆரிய மொழிச் சொற்களும் கருத்துகளும் தமிழிலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. நூற்றாண்டு தோறும் அவ்வாறு இடம் பெறுதல் மிகுந்துகொண்டே வந்துள்ளது. ஆதலின் அவை இடம் பெறாத காலம் ஆரியர் வருகைக்கு முன்புள்ள காலமாகும் என முடிவு கட்டியுள்ளோம். எட்டுத் தொகையினுள் ஆரியர் வருகைக்கு முன்னர் இயற்றப்பட்டன யாவை என ஆராய்வோம்.
எட்டுத்தொகை என்பன நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆம். இவற்றின் பாடல் தொகை இரண்டாயிரத்து முந்நூற்று எழுபத்தொன்றாகும் (2371). இவற்றுள் எழுநூற்றுத் தொண் ணூற்று ஆறு பாடல்கள் இருநூற்று எழுபத்தாறு புலவர்களால் பாடப்பெற்றுள்ளன. இவற்றுள் ஆரிய மொழிச் சொற்களோ கருத்துகளோ பயின்றிடக் கண்டிலோம்.
ஒன்பது புலவர்களின் இயற்பெயர்கள் மறைந்து விட்டன. அவர்கள் பாடியுள்ள பாடல்களுள் பயின்றுள்ள தொடர்களே அவர்களின் பெயர்களாக அமைந்துள்ளன. அப் பெயர்களாவன: 1. செம்புலப் பெயல் நீரார், 2. தேய்புரிப் பழங்கயிற்றினார், 3. அணிலாடு முன்றிலார், 4. கல்பொரு சிறு நுரையார், 5. குப்பைக் கோழியார், 6. தொடித்தலை விழுத் தண்டினார், 7. நெடுவெண்ணிலவினார், 8. மீனெறி தூண்டிலார், 9. விட்ட குதிரையார்.
ஒருவரே பல பாடல்களை இயற்றி இவ்வாறு பெயரிட்டுள்ளனர் என்று கூறுவாரும் உளர். அவர் கூற்றுப் பொருத்தமற்றது; உண்மைக்குப் புறம்பானது. இனிய பாடல்களை இயற்றியோர் தம் இயற்பெயரை மறைத்துக் கூறவேண்டிய இன்றியமையாமை எற்றுக்கு? கண்கவர் வனப்பும், கலைபயில் அறிவும் உடைய மக்களைப் பெற்றுள்ளோர், அம் மக்களின் பெற்றோர் தாமே எனக் கூறிக்கொள்ள நாணுவரா? ஒருகாலும் நாணார். அங்ஙனமே உளங்கவர் இனிய பாடல்களை இயற்றியோரும், அவற்றை இயற்றியோர் தாமே எனக் கூறிக்கொள்வதில் பின்னிடார். காலத்தொடு பொருந்தாக் கருத்துகளையும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் வெளிப்படுத்த விரும்புவோர் இக்காலத்தில் புனைபெயர் சூட்டிக்கொள்ளுதல் இயல்பே யாயினும் அக்காலத்தில் அங்ஙனம் புனைபெயர் பூண்டு பொல்லாங்கைத் தவிர்க்க வேண்டிய நிலைமை இருந்திலது.
பாடல்கள் சொற்சுவையும் பொருட் சுவையும் பொருந்திக் கற்போர் உள்ளதைக் கவருமியல்பினவாய் உள்ளன. அவற்றுள் பயின்றுள்ள உவமைகளும் தொடர்களும் கற்போர் உள்ளங்களில் நிலைத்திருக்கும் தன்மையன. ஆதலின் அவ் வுவமைகளாலும் தொடர்களாலும் அப் பாடல்களை இயற்றியோரைக் குறிப்பிட்டனர். அங்ஙனம் குறிப்பிட்டழைக்கவே அப் பாடல்களுக்குரியோர் இயற்பெயர்கள் தாமே மக்கள் நினைவினின்றும் மறைந்துவிட்டன. பாடல் இயற்றியோரின் இயற்பெயர் மறைந்தாலும் பாடல்கள் மறையவில்லை; கற்போர் உள்ளங்களில் நிலைத்தவாறு கவினுறு இலக்கியத் தொகுப்பிலும் நிலைத்துவிட்டன. இந்நிலையும் இப் பாடல்களின் பழைமையை உணர்த்துவதாகும்.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply