இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 49 : பழந்தமிழும் தமிழரும் 9
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 48 : பழந்தமிழும் தமிழரும் 8 – தொடர்ச்சி)
பழந்தமிழும் தமிழரும் 9
ஈ யென இரத்தலை இழிவாகக் கருதிய பழந்தமிழ் நாட்டில் பிச்சை என்ற சொல் தோன்றியிருத்தல் கூடுமா என்று சிலர் ஐயுறக்கூடும். ஈ என இரத்தல் இழிந்ததுதான். ஆனால், ஈயேன் என்றல் அதனினும் இழிந்தது. பழந்தமிழர் வாழ்வு ஈதலும் துய்த்தலும் அடிப்படையாகக் கொண்டது என்பதை முன்பே சுட்டிக் காட்டினோம். ஆதலின், ஈதல் நிகழக், கொள்வோர் இருந்துதானே ஆக வேண்டும். கொள்வோரின்றிக் கொடுப்போர் யாது செய இயலும்?
பழந்தமிழ் நாட்டில் பிறர்க்கென வாழும் அறவரும் அறிவரும் இருந்தனர். அவர்களைப் போற்ற வேண்டியது இல்லறத்தார் கடனெனக் கருதப்பட்டது. அவர்களை நாடி அளிப்பது அவர்கள் நாடிப் பெறுவது, அன்று பிச்சை என்று கூறப்பட்டது. பின்னர்க் காலப்போக்கில் ஈகை, கொடை முதலிய சொற்கள் ஆட்சிக்கு வந்தன. அவை வந்த பின்னர் பிச்சை என்பது இரந்து வருவோர்க்குக் கொடுப்பது என ஆகிவிட்டது. அஃதும், இகழ்ச்சி தரும் பொருளில் பயின்று வருகின்றது தமிழில். ஆனால், வடமொழியில் என்ன பொருளோடு அங்குச் சென்றதோ அதே பொருளில் பயின்றுவருகிறது.
வறியவர் யார்? பொருளற்றோர் மட்டுமல்லர். பொருளுடை யோராய் இருப்பதனிலும் தம்மை விரும்பி வாழ்பவர்க்கும் தாம் விரும்பி வாழ்பவர்க்கும் அன்பு பொருந்த ஒழுகி நகை புரிந்து மகிழ்ச்சியாக வாழ்தல்வேண்டும். அதுதான் செல்வ வாழ்க்கை. அஃது அற்றோர்தாம் வறியோர். இவ்வாறு எண்ணினர் பழந் தமிழர்.
தம் நயந்து உறைவோர்த் தாங்கித் தாம்நயந்து
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் (அகம் 151)
உலகம் துன்பம் நிறைந்ததுதான். ஒரு பக்கத்தில் திருமணம் நடைபெறுகின்றது. இன்னொரு பக்கத்தில் சாவும் நிகழ்கின்றது. இன்பமும் துன்பமும் இரவு பகல் போல் மாறி வருகின்றன. இவ் வுலகியலைப் பழந்தமிழர் நன்கு அறிந்திருந்தனர். உலக நிகழ்ச்சிகளில் துன்பமும் கலந்து இருக்கின்றது என்பதற்காக உலகத்தையே துன்பம் என்று கருதி வெறுத்துவிடக் கூறவில்லை. துன்பத்திலும் இன்பம் காண்க என்றனர். அதுதான் வாழ்வின் நுட்பம். துன்பத்தினிடையே இன்பம் காணாதார் உலகமே துன்பம். ஆகவே, அதை வெறுத்துவிடு என்று சொல்வர்.
ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்குஇதன் இயல்புஉணர்ந் தோரே.
(புறம்194).
என்று பக்குடுக்கை நன்கணியார் பகருகின்றார். ஆகவே, பழந்தமிழர் ஆடலும் பாடலும் விழாவும் விருந்தும் கொண்டு இன்பவாழ்வு நடத்தினர். வாழ்வே இன்பத்திற்குரிய என்று எண்ணி வாழ்ந்தனர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்த் துறைகளும் சிறந்து விளங்கின. முத் துறையாலும் இன்பம் எய்தினர்.
இசைக்கருவி நரம்பு எனவே அழைக்கப்பட்டுள்ளது.
வல்லோன் தைவரும் வல்லுயிர்ப் பாலை
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும் (அகம்355)
நரம்புஆர்த்து அன்ன தீம்கிளவியளே
(ஐங்குறுநூறு185)
நரம்பினால் ஆக்கப்பட்ட இசைக் கருவியை நரம்பு என்று அழைத்தனர் போலும். பின்னர்த் தொல்காப்பியரும் இசைபற்றிய இலக்கண நூலை நரம்பின் மறை என்றே குறிப்பிட்டுள்ளார்.
நரம்புக் கருவி, தோல் கருவி, துளைக் கருவி, மிடற்றுக் கருவி என்று நால்வகைப்படும் இசைக் கருவிகளுள் முதலில் தோன்றியது நரம்புக் கருவியாகவே இருக்கலாம். அது பின்னர் யாழ் எனவும் வீணை எனவும் பெயர் பெற்றது. யாழில் பல வகைகள். முதலில் உண்டானது வில்யாழ் என்பர்.
மகளிர் இவற்றில் சிறந்து விளங்கினர். மகளிர்க்கெனத் தனி விளையாடல்களும் இருந்தன. தொல்காப்பியர் கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு என்பார். அவை என்ன விளையாடல்களோ நாம் அறியோம். கழங்கு, பந்து, அம்மானை முதலியன அவர்கட்கே உரிய விளையாடல்கள்.
ஓரை என்ற சொல்லும் அவர் விளையாட்டையே குறித்துள்ளது.
சீர்கெழு வியன்நகர்ச் சிலம்புநக இயலி
ஓரை ஆயமொடு பந்துசிறிது எறியினும்
(அகம்219)
கோதை ஆயமொடு வண்டல் தைஇ
ஓரை ஆடினும் உயங்கும் நின்ஒளி (அகம்60)
இவ்வாறு ஓரை என்பது ஒருவகை விளையாட்டையே குறிக்கின்ற முறையில் பழந்தமிழில் ஆளப்பட்டுள்ளது. ஆசிரியர் தொல்காப்பியரும் தம் நூலில்,
மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவோர்க் கில்லை
(தொல்பொருள்135)
என்று கூறியுள்ளார்.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply