தலைப்பு-தமிழ்உறவுகள் எங்கே :thalaippu_thamikzhuravukal_enghe

அனைத்துலகக் காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதிகோரி காலை 10:30 மணிக்கு, அடையாறு ஐ.நா. (கஅபபஅ /யுனெசுகோ) அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.
      இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே? 

  அனைத்துலகக் காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஒவ்வோர் ஆண்டும் ஆகத்து 30 ஆம் நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது. கோசுடோரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமல் போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM)என்ற அரசு சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் கமுக்கமான முறையில் கைது செய்யப்படுவதை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. தற்பொழுது உலகின் பல நாடுகளிலும் பாதுகாப்புப் படையினராலோ காவற்துறையினராலோ பல்வேறு காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டுக் காணாமல்போகும் மக்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களை மீட்டுத் தரக்கோரியும் இந்நாள் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகின்றது.

  ஐ.நா ஆய்வு ஒன்றின் படி உலகிலேயே அதிக மக்கள் காணாமல் போனோர்நாடுகளின் பட்டியலில் இலங்கை அரசு இராண்டாவதாக இடம்பெற்றுள்ளது. ஈழத்திலும், இலங்கைத் தீவின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்களபெளத்தப் பேரினவாத அரசு திட்டமிட்ட “வெள்ளை ஊர்தி(வேன்)”  கடத்தலில் பலப் பத்தாண்டுகளாக ஈடுபட்டு வந்தது. இந்தக் கடத்தலில் காணாமல்போன ஈழத் தமிழர்களும், அரசுக்கு எதிராகச் செயல்பட்ட சிங்களச் செயற்பாட்டாளர்களும் இன்று வரை வீடு திரும்பவில்லை.

  முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போரின் இறுதி நாட்களில் சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த, குடும்பத்தினரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட போராளிகள், கிறித்துவப் பாதிரியார்கள், மருத்துவச் செயற்பாட்டாளர்கள் பலரை இன்று வரை இலங்கைஅரசு குடும்பத்தினரிடம் மீளக் கையளிக்கவில்லை.  குடும்பத்தினர் தாங்கள் கையளித்தவர்களை எதிர்பார்த்திருக்க, “காணாமல் போனவர்கள் அனைவரும் போரிலேயே கொல்லப்பட்டுவிட்டதாக” இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத் துறைச்செயலாளர் கோத்தபாய இராசபக்சே கூறியுள்ளார். தற்பொழுதைய மைத்திரி அரசுஇராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் வந்த பிறகும் சரணடைந்த போராளிகள் பலரின் நிலை குறித்துத் தெளிவுபடுத்தாமல், ‘காணாமல் போனோர்  பணியகம்’ ஒன்றைத் தொடங்கிக்காலம் கடத்த திட்டமிடுகின்றது.

 அண்மையில் அனைத்துநாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை போரினால் காணாமல் போன 16,000 தமிழர்கள் குறித்துஇலங்கை அரசு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மே 17, 18, 19 ஆகிய நாட்களில் தாங்கள் இலங்கை இராணுவத்திடம் கையளித்த தங்கள்உறவுகளை விடுதலை செய்யக் கோரி அரசு அமைத்துள்ள பல “நல்லிணக்ககுழுக்களிடமும்”, “இலங்கை அரசின் உசாவல்(விசாரணை) ஆணையங்களிடமும்” தொடர்ச்சியாக மக்கள் முறையிட்டு வருகின்றனர்.   “காணாமல் போனோர் உறவினர்” என்ற அமைப்பின் பெயரில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு  முதலான பகுதிகளில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் பெண்கள் முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை இலங்கை அரசு தன்னிடம் கையளிக்கப்பட்ட  போராளிகளை விடுவிக்கவும் இல்லை; அவர்களின் இருப்பிடத்தைத் தெளிவுபடுத்தவும் இல்லை. யாரும் விரும்பிக் காணாமல்போவதில்லை; அரசால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். குற்றத்தைச் செய்த இலங்கைஅரசோ காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழை வழங்கி அதில் “இறப்புக்குகாரணம்: காணாமல் போனவர்” எனக் குறிப்பிடும் வேலையைச் செய்து வருகின்றது.

 அது மட்டுமின்றிக் காணாமற் போனோர் தொடர்பாகச் செயல்படும்அலுவலகங்களைத்  திறப்பதற்கான சட்டமூலத்தை இலங்கை அரசு கடந்த 23 ஆம்நாள் நிறைவேற்றியுள்ளது.  அந்த அலுவலகங்களின் வாயிலாகக் காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு  துயரீட்டுத் தொகை வழங்குவதன் மூலம் நீதியின்கழுத்தை நெறித்துவிட முடியும் என்று   இலங்கைஅரசும் அதைப் பாதுகாக்க விரும்பும் மேற்குலக அரசுகளும் கருதுகின்றன. மொத்தத்தில் காணாமற் போனோர் சிக்கலில் அனைத்து நாடுகளை ஏமாற்றித் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒருமுயற்சியே சரியாக ஆகத்து மாதத்தில் இப்படியான அலுவலகம் திறப்பதாகும்.

 இவ்வுலகில் பிறந்த 99% வீத மக்களுக்கும்  பிறப்பு இறப்பு  நாள் தெரியும். இறந்தவர்களின் நாட்களைப் போற்றும்  பழக்கம் தமிழ் மக்களுக்கு உண்டு. ஆனால்,காணாமற் போனோரைப் பொறுத்தவரை உறவுகள் இறந்தனரோ இருக்கிறார்களோ என்று தெரியாத நிலை என்பது விவரிக்க முடியாத துயரம். இந்தத் துயரத்தில் கணவனை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள், பிள்ளைகளை இழந்தஆயிரக்கணக்கான தாய் தகப்பன்மார்கள் என ஈழத் தமிழ் மக்கள் நடைப்பிணமாய் வாழ்ந்துவருகின்றனர்.

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கக் குரல்கொடுப்போம்!
கவன ஈர்ப்பு ஒன்றுகூடலில் பங்கேற்போம்!

       வினோத்து

செய்தித் தொடர்பாளர்