(திருக்குறள் அறுசொல் உரை – 098. பெருமை தொடர்ச்சி)
attai-kuralarusolurai

திருக்குறள்

02. பொருள் பால்
13. குடி இயல்
99. சான்றாண்மை

       அறவழியில்  நிறையும்  பண்புகளைத்

       தவறாமல்   ஆளும் பெருந்தன்மை.

 

  1. கடன்என்ப நல்லவை எல்லாம், கடன்அறிந்து,

     சான்(று)ஆண்மை மேற்கொள் பவர்க்கு.

கடமைகள் உணரும் பண்பர்க்கு,

        நல்லவை எல்லாம் கடமைகளே.

 

  1. குணநலம், சான்றோர் நலனே; பிறநலம்,

     எந்நலத்(து) உள்ளதூஉம் அன்று.

சான்றோர்க்கு, உயர்பண்பே சிறப்பு;

        மற்றவை, சிறப்புக்களே அல்ல.

 

  1. அன்பு,நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு,

     ஐந்துசால்(பு) ஊன்றிய தூண்.

         பண்புக்குத் தூண்கள்: அன்பு, நாணம்,

        பொதுக்கொடை, இரக்கம், உண்மை.

 

  1. கொல்லா நலத்தது, நோன்மை, பிறர்தீமை

     சொல்லா நலத்தது, சால்பு.

         கொல்லாமை, நலநோன்பு: பிறர்தீமை

        சொல்லாமை, நிறைந்த பண்பு.

 

  1. ஆற்றுவார் ஆற்றல் பணிதல்,அது, சான்றோர்

     மாற்றாரை மாற்றும் படை.

செயல்திறனார் பணிவு, பகைவர்

        மனத்தை மாற்றும் கருவி.

 

  1. சால்பிற்குக் கட்டளை யா(து)?எனின், தோல்வி,

     துலைஅல்லார் கண்ணும் கொளல். 

         உயர்பண்புக்கு உரைகல், தாழ்ந்தாரிடமும்

        தோல்வியை ஒத்துக் கொள்ளல்    

 

  1. இன்னாசெய் தார்க்கும், இனியவே செய்யாக்கால்,

     என்ன பயத்ததோ சால்பு?

         வெறுப்பன செய்தார்க்கும், விரும்புவன

        செய்யாவிடின், பண்பால் பயன்என்?    

 

  1. இன்மை, ஒருவற்(கு) இளி(வு)அன்று, சால்(பு)என்னும்

    திண்மை உண்டாகப் பெறின்.

         பண்புஉறுதியைப் பெற்றால், வறுமை

        ஒருவர்க்கு இழிவே அன்று.

 

  1. ஊழி பெயரினும், தாம்பெயரார், சான்(று)ஆண்மைக்(கு)

     ஆழி எனப்படு வார்.

இயற்கையே மாறினாலும், பண்பில்

பெருங்கடல் போன்றார் மாறார்.

 

  1. சான்றவர் சான்(று)ஆண்மை குன்றின், இருநிலம்தான்,

     தாங்காது மன்னோ பொறை.

நிறைபண்பர், பண்பில் குறைந்தால்,

        பெருநிலமும் தன்சுமை தாங்காது.

பேரா.வெ.அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 100. பண்பு உடைமை)