(தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழம் – . . . . பகைத்தது இந்தியாவா? . . . . ஈழமா? – தொடர்ச்சி)

தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர் தந்து, தமிழீழத் தாயகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழுலகிலும் தமிழ் மக்களின் நினைவில் நிலைத்து விட்ட பல்லாயிரம் மாவீரர்களுக்குச் செவ்வணக்கம்!

அயல் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் போராடித் தமிழீழ மாவீரர்கள் அடைந்த போர்க்கள வெற்றிகளின் அடித்தளம் சமூக விடுதலைக்கான போராட்டத்தில் அவர்கள் காட்டிய தெளிந்த உறுதியே ஆகும். ஆணாதிக்கமும், சாதியாதிக்கமும் கோலோச்சுகின்ற ஒரு சமூகம் அயலாதிக்கத்தை எதிர்த்து ஒன்றுபடத் தகுதியற்றது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள்.

உயிராய்தம் ஏந்தித் தாய் நிலத்திலும் தாய்க் கடலிலும் தாய்க் காற்றிலும் போயடங்கி விட்ட கரும்புலிகள் எனும் அதிசய மாந்தர்கள் உட்பட நம் மாவீரர்கள் எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் விளையாத வியக்கத்தக்க வீரமும் ஈகமும் ஈழத் தமிழ் மண்ணில் விளைந்திடச் செந்நீர் பாய்ச்சினார்கள்.

மாவீரர் துயிலும் இல்லங்களையும் நினைவுச் சின்னங்களையும் சிதைத்து அழித்து விட்டதாகச் சிங்களப் பேரினவாதம் இறுமாந்திருக்கலாம். மாவீரர்கள் துயில் கொண்டுள்ள தமிழ் மண் தமிழ் மக்களுக்கே உரியது. அது அயலானுக்கு வணங்காமண்! ஆதிக்கத்துக்கு அடங்காப் பற்று!! ஒல்லாந்தரும் போர்த்துகேயரும் பிரித்தானியரும் சிங்களரும் பெருவிலை கொடுத்துக் கற்ற பாடத்தை இந்தியரும் கற்க விரும்பினர், கற்றுத் திரும்பினர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகின் முதல் விடுதலைப் போராட்டமன்று. நம் காலத்திலேயே நடந்து வெற்றிகண்ட சில போராட்டங்களைக் குறிப்பிடுவதானால், தென் ஆப்பிரிக்க மக்கள் இனவொதுக்கலுக்கு எதிராக நடத்திய நீண்ட போராட்டத்தையும், நமீபியாவிலும் சிம்பாப்வேயிலும் வெள்ளைக் குடியேற்ற ஆதிக்கத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களையும் குறிப்பிடலாம். வல்லரசியங்களின் விருப்பங்களையும் சூழ்ச்சிகளையும் மீறி ஒடுக்குண்ட மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றி காண முடியும் என்பதற்கு இவை வரலாற்றுச் சான்றுகளாக நம் முன்னுள்ளன.

இன்றளவும் அயராமல் தொடரும் பாலத்தீன மக்களின் தாயக மீட்புப் போராட்டம் உலகைக் குலுக்கும் நிகழ்வாகி நம் தோழமையைக் கோரி நிற்கிறது. தமிழர்கள் தமக்கு நேர்ந்த இனவழிப்புப் பேரவலத்துக்கு ஈடுசெய் நீதி கோரிப் போராடும் போது உலகில் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று சோர்வடையத் தேவையில்லை. மாந்தரை மாந்தர் அடிமை கொள்ளும் கொடுமைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்துக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு.

உரோமானிய ஆண்டைகளை எதிர்த்து வெள்ளை அடிமைகளைப் படைதிரட்டிப் போர்தொடுத்த இசுபார்ட்டகசைத் தூக்கிலிட்டுக் குதூகலித்த கோமான்கள் ஒழிந்து விட்டார்கள். இசுபார்ட்டகசு இன்றளவும் புரட்சிக்கும் விடுதலைக்கும் அடையாளச் சின்னமாக நம் உணர்வில் வாழ்கிறார்.

இசுபார்ட்டகசு மறைந்து சற்றொப்ப ஈராயிரம் ஆண்டு கழித்து பிரெஞ்சு ‘மாவீரன்’’ நெப்போலியனை எதிர்த்து ஐத்தியின் கருப்பு அடிமைகளைத் திரட்டிப் போர் புரிந்த (உ)டூசான் லூவர்சூர் (Toussaint L’Ouverture) புரட்சிக்கும் விடுதலைக்கும் மற்றுமோர் அடையாளச் சின்னமாவர்.

‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும்’ மாந்தரைப் போல் அல்லாமல், வாழ்வையும் சாவையும் மக்களுக்காகத் தன்னளிப்புச் செய்த நம் மாவீரர்கள் காலங்களும் வெளிகளும் கடந்து உலகின் ஒடுக்கப்பட்டோரது விடுதலை வேட்கையின் புனிதச் சின்னங்களாக மதிக்கப் பெறுவார்கள்.

வியத்துனாம், கியூபா, அல்சீரியா, தென் ஆப்பிரிக்கா என்று உலகெங்கும் கடந்த காலத்தில் வெற்றி கண்ட விடுதலைப் போராட்டங்கள் போலவே இன்றளவும் எண்ணிறந்த இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்துத் தொடர்ந்து களங்கண்டு நிற்கும் பாலத்தீனம், குர்திசு, காசுமீரம் உள்ளிட்ட மூத்த விடுதலைப் போராட்டங்களின் தொடரியில் தமிழீழப் போராட்டத்தை ஒளிரும் கண்ணியாக்கிய பெருமை நம் மாவீரர்களைச் சாரும்.

ஒவ்வொரு தேசத்தின் விடுதலைப் போராட்டமும் தனக்கான அணிவகுப்பை உருவாக்கும் போது உள்நாட்டுச் சூழலை மட்டுமல்லாமல் பன்னாட்டுச் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். அனைத்துலகச் சூழலையும் வட்டாரச் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ஏதேனும் ஓர் வல்லரசை நத்தி நிற்கும் அழுத்தங்கள் எழும். இந்த அழுத்தங்களுக்குப் பணியாமல் அடிப்படையில் சொந்த மக்களைச் சார்ந்து விடுதலைப் பயணத்தை முன்னெடுத்தால் மட்டுமே விடுதலைக் குறிக்கோளைத் தொலைத்து விடாமல் தொடர இயலும்.

சப்பானை நத்தி நிற்கும் அழுத்தம் வியத்துநாம் விடுதலைப் போராட்டத்துக்கு எழுந்த போது தெளிவாக அதனை மறுதலித்தவர் ஓ- சி-மின். பாலத்தீன விடுதலைப் போராட்டத்தை அரபு அரசுகளின் புவிசார் அரசியலோடு பிணைக்கும் முயற்சிகளை எதிர்த்து உறுதி காத்தவர் யாசிர் அராபத்து. தமிழீழ விடுதலைப் போராட்ட நலன்களை இந்திய வல்லரசிய நலன்களுக்கு உட்படுத்த மறுத்து அதற்காக ஒரு பெரும் போரையே சந்தித்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களப் படையை எதிர்த்துக் கண்ட களங்கள் போலவே இந்திய வல்லரசிய அமளிப் படையை எதிர்த்துக் கண்ட களங்களும் மாவீரர்களின் புகழைப் பேசும். அவற்றிலிருந்து பெற்ற அரசியல் படிப்பினைகள் தமிழீழ விடுதலைக்காகத் தொடரும் போராட்டத்தின் பாதையெங்கும் ஒளியூட்டும்.

போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலக்கு மாறுவதில்லை என்று முள்ளிவாய்க்காலுக்கு முன்பே தமிழீழ விடுதலைப் புலிகள் தொலைநோக்குடன் சாற்றினார்கள். இன்று விடுதலைப் போராட்டம் நீதிக்கான போராட்டமாக வடிவெடுத்துள்ளது. மறப் போரில் வீரம் விளைத்த மாவீரர்களின் நினைவுகள் இன்று அறப் போரிலும் நமக்குத் துணையாகும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பன்னாட்டுலகச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் விடுதலைப் போராட்டங்கள் “சாத்தியமற்றவை” ஆகி விட்டதாக இன்றளவும் ஒருசிலர் கதைக்கக் கேட்கிறோம். அது வெறும் மாயைதான். ஒடுக்குமுறை இருக்கும் வரை அதற்கு எதிரான விடுதலைப் போராட்டமும் நடக்கத்தான் செய்யும் என்பதே வரலாற்று நெறி. உலக நிகழ்வுகள் இதற்கான புதிய சான்றுகளைக் காட்டிய வண்ணம் உள்ளன. பாலத்தீனத்துக்கு எதிராக இசுரேல் நடத்தி வரும் காசாப் போர் மிக அண்மைய சான்றாகும். பாலத்தீன விடுதலைக்காகவும் இனவழிப்புப் போரை உடனே நிறுத்துவதற்காகவும் புவிபரப்பெங்கும் முற்போக்கு ஆற்றல்கள் குரல் கொடுத்து வருகின்றன. தமிழீழ மாவீரர்களின் பெயரால் அந்தக் குரலில் நம் தமிழ்க் குரலும் இணைகிறது. இது வரை இணைந்திருபப்து போதாது என்றால், இன்னும் விரிவாகவும் முனைப்பாகவும் பாலத்தீனத்துக்கான நம் குரல் ஒலிக்க வகைசெய்ய வேண்டும் என மாவீரர்கள் பெயரால் அழைக்கிறேன்.

நம் மாவீரர்களின் மகத்தான தனிச் சிறப்புகளில் ஒன்று அவர்கள் தமிழின உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் களம் கண்டவர்களே தவிர ஒருபோதும் இனவாதிகள் அல்ல. சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக சிங்களக் குடியாட்சிய ஆற்றல்கள் முன்னெடுக்கும் போராட்டம் மண்ணுக்குள் உறங்கிடும் மாவீரர்களால் வாழ்த்தப்பெறும்.

வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின்படி விடுமையும் இறைமையும் கொண்ட தமிழீழக் குமுகியக் குடியரசு (FREE AND SOVEREIGN REPUBLIC OF SOCIALIST TAMIL EELAM) அமைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை நம் மாவீரர்கள் மக்கள் தமக்களித்த கட்டளையாகவே கொண்டார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. உலகில் பல விடுதலை இயக்கங்கள் மதவெறிச் சார்பின் பக்கம் இழுக்கப்படுவதற்கு மாறான உலகிய (SECULAR) நிலைப்பாட்டில் நம் மாவீரர்கள் ஊன்றி நின்றார்கள்.

உறுதியான போராட்டங்களுக்கு மாற்றாக உருப்படாத 13ஆம் திருத்தம் போன்ற உலுத்துப் போன சமரசத் திட்டங்களை அரசியல் மேசையில் உருட்டும் இந்திய-சிங்களச் சூதாட்டங்கள் குறித்து நாம் எச்சரிக்கையோடு இருப்பதையே மாவீரர்களின் பெயரால் வலியுறுத்த வேண்டியுள்ளது.

இருதுருவ உலகம் ஒருதுருவ உலகமாகி, பலதுருவ உலகமாகி வருவதாகப் பன்னாட்டு அரசறிவியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். ஆளும் அரசுகளை மட்டுமே இவர்கள் கணக்கில் கொண்டுள்ளார்கள். உண்மையில் போராடும் தேசங்களே இறுதிநோக்கில் வரலாற்றுச் சக்கரங்களை உருட்டிச் செல்கின்றன. அரசுகளற்ற தேசங்கள் என்ற அணிவரிசையில் தமிழீழமும் புகழார்ந்த இடம்பெற மாவீரர்களின் வீரமும் ஈகமும் வழிசெய்தன என்பதை நெஞ்சில் நிறுத்தி அவர்களை வணங்குவோம்!