(ஏ, தாழ்ந்ததமிழகமே! 2/8 தொடர்ச்சி)

ஏ, தாழ்ந்த தமிழகமே! – 3/8

[1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.]


புலவர்களுக்கே பழக்கம் ஒருவர் எழுதின புத்தகத்திற்கு மறுப்போ அதில் ஏதாவது குறையோ காணாவிட்டால், சில புலவர்களுக்குத் தூக்கமே வராது. திருவிளையாடல் புராணத்திற்கு விளக்கவுரை என்று திரு.வி.கலியாணசுந்தரனாரால் ஒரு புத்தகம் பிரசுரிக்கப்படும். அந்தப் புத்தகம் அச்சில் இருக்கின்ற அதே நேரத்தில், அதே அச்சுக்கூடத்திலேயே திரு.வி.க.வுக்குச் சில கேள்விகள் என்ற ஒரு துண்டுப் பிரசுரம் வெளியாகும். ஒருவர் போட்ட புத்தகத்திற்கு இன்னொருவர் மறுப்பு எழுதாவிட்டால் அவருக்கு நிம்மதி ஏற்படாது. காரணம் அவர்களிடம் மூலதனம் குறைவு. ஒருவர் எடுத்து ஆளவேண்டுமென்றிருந்த அணியை, இன்னொருவர் கையாண்டிருப்பார். ஆகவே, எழுதியதில் குற்றங்கள் கண்டுபிடித்து அவரது பிழைப்பையும் கெடுத்து விடவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் மீதும் குற்றமில்லை. அவர்களிடம் எண்ணற்ற கருத்துகள் ஊறுவதில்லை. கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாக நானும் பார்க்கிறேன்; பாரதியார், சுந்தரம் பிள்ளையைத் தவிர மேல் நாடுகளில் உள்ளது போலக் கலையைக் காலத்தின் கண்ணாடியாக்குகிறார்களா? அல்லது கலையைக் கடை வீதியில் கொண்டு வந்து நிறுத்துகிறார்களா? அவர்களது பாக்களிலே எழுச்சி இருக்கிறதா? அதனால் நாடு உயர்வடைய ஏதாவது மார்க்கமுண்டா? என்றால் இல்லை. காரணம், புலவர்களின் பிற்போக்கான நோக்கமே.

நான் ஒரு புலவரைப் பார்த்து, ‘தோழரே! அணு குண்டு கண்டுபிடித்தது எவ்வளவு ஆச்சரியம்! அதன் அழிவு சக்தியைக் கேட்டீரா?’ என்றால்,

“அது என்னப்பா பெரிது? ஆங்கிலேயனோ அமெரிக்கனோ தான் அழிவு சக்தியை ஏற்படுத்த, இந்த ஆயுதத்தைக் கையிலேந்த வேண்டும். நம் பரமசிவம் நெற்றிக்
கண்ணைத் திறந்தால் போதும்; கண்ணிலிருந்து நெருப்பு சுவாலைகள் பறக்கும்; எதிரிலே உள்ள அத்தனைப் பொருள்களும் சாம்பலாகி விடும் என்று பதில் சொல்லுவார். அது இருக்க இது ஏன் என்ற பிற்போக்கான நோக்கமும், சோம்பேறித்தனமும்தான் காரணம்.

அது இருக்க இது ஏன்?

‘அது இருக்க இது ஏன்’ என்று மேல் நாடுகளிலே கருதி இருப்பார்களானால், ஆளில்லா விமானத்திற்குப் பிறகு அணுகுண்டு கண்டுபிடித்திருக்க முடியுமா? தொல்காப்பியம் நமக்கு இருக்கும்போது, நமக்கு வேறேன்ன வேண்டும் என்றிருந்தால், அகமும் சிலப்பதிகாரமும் கிடைத்திருக்க வழியுண்டா? சிலப்பதிகாரமே போதும் என்றிருந்தால், கலிங்கத்துப்பரணி கிடைத்திருக்குமா? கலிங்கத்துப்பரணியே போதுமென்றிருந்தால் மனோன்மணீயம் தோன்றியிருக்க முடியுமா? மனோன்மணீயம் போதுமென் றிருந்தால், பாரதியாரின் தேசீய கீதங்களைக் கேட்டிருக்க முடியுமா? பாரதியாரின் தேசியகீதங்களே போதுமென்றிருந்தால், தேசிய விநாயகம் பிள்ளையின் தாயினுமினிய அன்பு குழைத்தூட்டும் பாக்களைப் பார்த்திருக்க முடியாது. தேசியவிநாயகம் பிள்ளையே போது மென்றிருந்தால், நாமக்கல்லாரின் “கத்தியின்றி இரத்த மின்றி” என்ற புது மாதிரியான சண்டைத் தத்துவப் பாடலைக் கண்டிருக்க முடியுமா? அதுபோலத்தான் நாமக்கல்லாரே போதுமென்றிருந்தால் ‘கொலைவாளினை எடடா! மிகு கொடியோர் செயலறவே’ என்னும் பாரதிதாசனின் உணர்ச்சிமிக்க புரட்சிகரமான பாடலைக் கேட்டிருக்க முடியாது.

காலத்தின் சிருசுட்டி கர்த்தா


பாரதிதாசன், மேல்நாட்டுக் கவிகளைப் போலக் கலையைக் காலத்தின் கண்ணாடி-யாக்குகிறார். காலத்தையே சிருசுட்டிக்கிறார். காலத்தையே சிருசுட்டிக்கிறார் என்பது மாத்திரமல்ல, காலத்தை மாற்றுகிறார்.

காலத்தை மாற்றுகிறார் என்பது மட்டுமல்ல. மாறிய காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்; அது மாத்திரமல்ல; சமயம் கிடைத்தால் முன்னேயும் பிடித்துத் தள்ளுகிறார். தென்றல் வளரும்; நிலவு வளரும்; செல்வம் வளரும். அவை போல அவரது கவிதைகளும் வளர வேண்டும்.


பத்துப் பேர்


ஆனால், அவை வளரக்கூடாது என்று ஒரு பத்துப் பேர்! அந்தப் பத்துப் பேருடைய பெயரையும் இது அரசியல் மேடையாயிருந்தால் குறிப்பிட்டிருப்பேன். இது அறிவு மேடையானதால் குறிப்பிடாமல் விடுகிறேன். கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லோரும், தங்களைத் தவிர வேறு யாரும் சங்க இலக்கியங்களை அறிய முடியாது; அப்படியே அறிந்தாலும் பொது மக்களின் ஆதரவிற்குத் தங்களைத் தவிர வேறு யாரும் அருகதை அற்றவர்கள் என்று கருதுகிறார்கள்.

கையில் ஊமையர்


ஒரு மாதத்திற்கு முன் சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில், ஓர் உவமையைப் படித்தேன். இந்தக் காலத்தில் கற்பனை நிலை எவ்வளவு தூரம் கயமைத்தனத்திற்குப் போயிருக்கிறது என்பதை ஊகித்தேன். வித்தியாசத்தைப் பாருங்கள்! இந்தக் காலத்துப் புலவர்கள் எந்தக் கருத்தை ஓர் அந்தாதி மூலமாகவோ, வெண்பா மூலமாகவோ விளக்குவார்களோ, அதைக் குறுந்தொகை ஆசிரியர் ஒரே அடியில் கூறி விட்டார். அந்த அடிதான் ‘கையில் ஊமன்’ என்பதாகும்.

ஒரு தோழன் காதலிலே ஈடுபடுகிறான். உவமையின் நேர்த்தியைப் பாருங்கள்! கட்டுங்கடங்காத காளை; இருந்தாலும் கட்டுப்படுகிறான் இரு கண்களுக்கு. மனத்தில் ஏதோ நினைக்கிறான், அதை எதிரேயுள்ள கட்டழகியிடம் சொல்ல முடியவில்லை; எதைப்போல் என்றால் – காலை நேரம் காட்டிலே ஒரு பாறையிலே வெண்ணெய் இருக்கிறது; கையில் ஊமையன் இதற்குக் காவல். காலைக் கதிரவன் காலையில் எழுந்து தனது இளங்கதிர்களைப் பாய்ச்சுகிறான்.

வெண்ணெய் உருகிறது. வெண்ணெய் உருகுவதைப் பார்க்கிறான். பார்த்ததும் ‘ஐயோ! வெண்ணெய் உருகுகிறதே’ என்று கூறலாம். ஆனால் வாயில்லை. நேரே ஓடிப்போய் எல்லாம் உருகுவதற்குள் எடுக்கலாம்; ஆனால் கையில்லை. கதிரவன் இந்தக் கையில் ஊமையனின் கதியற்ற நிலையை அறியான். அவன் அவனது வேலையைச் செய்கிறான். அவன் பிரபஞ்சத்திற்கும் சொந்தம். காவலாளிக்குக் கையில்லை; வாய் ஊமையே தவிரக் கண் மாத்திரமிருக்கிறது. இந்தக் கோரக் காட்சியைக் காண. அதைப்போலவே கண்மாத்திரம் இருக்கிறது. கட்டழகியைக் காண. ஆனால் சுயமரியாதை இல்லாததாலோ, சுதந்திர உணர்ச்சி இல்லாததாலோ கையில்லை. (கையில் துணிவில்லை) அவளது கரத்தைப்பிடிக்க. அந்த வடிவழகியைக் கண்டு ஏதோ பேச வேண்டுமென்று நினைக்கிறான். ஆனால் சமுதாயக் கட்டுப்பாடுகள் அவனது வாயை மூடி விட்டன; எவ்வளவு அருமையாக ஒருவன் ஒருத்தியைச் சமுதாயக் கட்டுப்பாடுகளால் தொடமுடியாமல் இன்னலடைகிறான் என்பதை ஒரு சிறு அடியில் விளக்குகிறார். “கையிலூமன் வெண்ணெய் உருகாது கண்ணால் பாதுகாத்தாற் போன்று” என்று.

மறக்கலாம், ஆனால் மறைக்க முடியாது


சங்க இலக்கியங்களின் இன்பங்களைச் சொல்லிக் கொண்டிருந்தால், இன்று முழுவதுஞ் சொல்லிக் கொண்டிருக்கலாம். சங்க இலக்கிய நுட்பத்தை அனுபவிக்க வேண்டிய இடங்களை நமக்கு ஏற்ற எளிய முறையில் அளிப்பது என்றால் அந்தத் துறையில் பாரதிதாசன் நாட்டுக்கும் நமக்கும் செய்துள்ள தொண்டினை மறந்தாலும் மறக்கலாம்; ஆனால் மறைக்க முடியாது. பாரதிதாசன் தரும் இலக்கியச் சுவையை அனுபவிக்க இலக்கணம் கற்றிருக்கவேண்டியதில்லை. பாரதிதாசன் பாக்களைப் படித்தவுடன் அவை நமது இரத்தத்தோடு இரத்தமாகக் கலக்கின்றன; உணர்ச்சி, நரம்புகளிலே ஊறுகிறது; சுவைத்தால் (உ)ருசிக்கிறது. படிக்கிறோம்; பாரதிதாசன் ஆகிறோம். படிக்கிறோம்; நாமும் பாடலாமா என்று நினைக்கிறோம். படிக்கிறோம்; ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்‘ என்கிறோம். ஆனால், சில புலவர்கள் அதிலே இலக்கண அமைப்பு இல்லை எனலாம். அஃது அவர்களது ஓய்வுநேர வேலையாக இருக்கட்டும்.

காரியத்திலே ஈடுபடுகிற நாம், ஓட்டைச் சட்டியாயிருந்தாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி என்று கருதுகிறோம். கவைக்குதவுமா, கற்க நிகண்டு தேவையில்லையே! பாட்டிலே ஏதாவது எளிமையுடன் இனிமை மாத்திரம் கலந்து விடாமல் எழுச்சியும் கலந்திருக்கிறதா, புரிகிறதா, புரிந்து பயனடையலாமா என்று பார்க்கிறோம். நாம்தான் பெரும்பான்மை, அவர்கள் குறைந்த எண்ணிக்கை என்று சொல்லி ஓரிடத்தில் கூறுவதுபோலப் பாட்டைப் படித்தவுடன் புரிந்து கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என்பவரின் எண்ணிக்கை தான் அதிகம். கடின நடைக் கவிதைகளை விரும்புபவர் எண்ணிக்கை கொஞ்சந்தான், அவர்கள் பாரதிதாசனின் பாக்கள் எந்தச் சின்னங்கள் மட்டமானவை என்று தேடித் திரிபவர்கள். நாம்தான் சுவையை அப்படியே அனுபவிப்பவர்கள். பயனடைகிறோம்; காரணம் எளிய இனிய நடை. இதுவரை அவரது நடையைப் பற்றிச் சொன்னேன். அவர் எடுத்துக் கொள்ளும் பொருள் என்றால், அவர் கொடுக்கும் தலையங்கங்களென்றால், அவை புரட்சிகரமாயிருக்கும்; புதுமையாயிருக்கும்.

இரண்டு நாக்குகள்


ஒரு காலத்திலே, தமிழகத்திலே சாலைகளையும், சோலைகளையும் கண்டுகளித்துச் சந்தனக் காடுகளிலே, சந்தம் அமைத்துப் பண் பாடினார்கள். பிற்காலத்திலே, அதாவது இடைக்காலத்திலே, வாழ்வு இந்த உலகம் அந்த உலகமாகப் பிரிந்தது, பேரம்பலம் சிற்றம்பலம் என்பதுபோல. மாயவாழ்வு மனித வாழ்வு என்று ஏற்பட்டது. இடைக்காலப் புலவர்களின் உள்ளங்களிலே ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட காட்சிகள் தோன்றி மறைந்தன. ஒரே உதட்டில் இரண்டு நாக்குகள் புரண்டன. குன்றைப் பற்றிப் பாடுகின்ற நேரத்திலே அந்த உலகம், அந்த வாழ்வு என்ற எண்ணங்கள் தோன்ற, அந்தக் குன்று முருகனுடைய தோளாகவும், அதுவும் வள்ளியிடம் கொஞ்சிய தோளாகவும் காட்சியளித்ததே தவிர, மலைச்சாரலிலே வளைந்து ஓடும் ஆறு; கரடுமுரடான பாதை; அவற்றைத் தாண்டி மலை மீதிருந்து கீழே பார்த்தால் காடு தெரியும் காட்சி; காடுகளில் சிறுத்தையும், புலியும் உலவும் காட்சி; அங்கு வேடுவரும் வில்லியரும் ஆடுகிற வேட்டை, ஆகிய இயற்கை எழில், அந்த விநாடி தோன்றவில்லை.

(தொடரும்)

ஏ, தாழ்ந்த தமிழகமே!

  • பேரறிஞர் அண்ணா