இலக்குவனார் குறிப்பிடும் மாமூலனார் புலப்படுத்தும்

வரலாற்றுச் செய்திகள்

பழந்தமிழர்களுக்கு வரலாற்றை எழுதி வைக்கும் உணர்வும் அறிவும் இல்லை என்று பரப்பி வருகின்றனர். சங்க இலக்கியப் பாடல்களிலேயே வரலாற்றுக் குறிப்புகள் பலவற்றைக் காணலாம். அகப்பாடல்களிலேயே உவமையாகவும் அடை மொழியாகவும் பல வரலாற்றுச் செய்திகளைப் புலவர்கள் தெரிவிக்கின்றனர். நடுகல், கல்வெட்டு, பட்டயம் முதலியனவும் வரலற்றுச் செய்திகள்தாமே! (தன்வரலாறு எழுதுவதைத் தற்புகழ்ச்சியாகக் கருதி எழுதவில்லை. அதுபோல் வாழ்க்கை வராற்றுச் செய்திகளையும் எழுதி வைக்க விரும்பவில்லை.) இவையெல்லாம் வரலாற்றுஅறிவு மிக்கவர்கள்தாம் பழந்தமிழர்கள் என்பதை மெய்ப்பிக்கின்றன. பெரும்பாலான பழந்தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டனவும் அழிந்தனவும் போல், வராற்று நூல்களும் அழிந்துள்ளன.

நாம் இங்கு மாமூலனார் பாடல்களில் இடம் பெறும் வரலாற்றுச் செய்திகளைப் பார்ப்போம்.   மாமூலனார் முப்பது பாடல்களை எழுதியுள்ளார். முப்பதும் அகப்பாடல்களே. இவற்றுள் 27 அகநானூற்றிலும் 2 நற்றிணையிலும் 1 குறுந்தொகையிலும் உள்ளன. இப்பாடல்களுக்கான விளக்கங்களைச் சங்கத்தமிழ்ப் பேரறிஞர் முனைவர் சி. இலக்குவனார் தாம்  1945-47   ஆண்டுகள் நடத்திய வார இதழான ‘சங்க இலக்கியம்’ என்னும் இதழில் தொடராக எழுதியுள்ளார். இது ‘சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்’ என்னும் பெயரில் திருமகள் நிலையப் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது. “மாமூலனார் இயற்கை நலனை இனிமையுறத் தீட்டும் செஞ்சொல் புலவர் மட்டுமல்லர். வரலாறு கூறும் வண்தமிழ்ப்புலவராகவும் காணப்படுகிறார்” என்னும் சங்கத்தமிழறிஞர் இலக்குவனார் அதற்கேற்ப மாமூலனார் கூறும் வரலாற்றுச் செய்திகளை நமக்குப் புலப்படுத்துகிறார். 

மாமூலனார் பாடல்கள் மூலம் அறிய வருவன

கோசர்கள்,   வரலாற்றுக்கு முற்பட்ட நன்னன்,  கரிகால் வளவன், சேரலாதன், புல்லி என்ற சிற்றரசன்,  உதியன் சேரலாதன், குட்டுவன்,  எவ்வி, விறல் போர்ப் பாண்டியன், எழினி, நந்தன், மோரியர், வடுகர், திதியன், அள்ளன், அதியன் முதலிய மன்னர்களைப் பற்றி மாமூலனார் குறிப்பிடுகிறார். யாழ்ப்பாணர், நல்வேல்பாணர், கள்வர்(களமர்), பரதவர் முதலியவர்கள் பற்றிய குறிப்புகளையும் தருகிறார். துளு நாடு, முதுகுன்றம் ,பாழி நகர், வேங்கடம், பொதினி, எருமை(குட நாடு), வெளியம், மாந்தை  முதலிய நாடுகள், நகரங்கள் பற்றிய விளக்கங்களை எடுத்துரைக்கிறார். நந்தர் செல்வம் முதலிய வரலாற்றுச் செய்திகளை மாமூலனார் கூறுவதை விளக்குகிறார். வெண்ணிப்போர் முதலிய போர்ச்செய்திகளைக் குறிப்பிடுகிறார். வடக்கிருத்தல், சுவர்களில் கோடு கிழித்தல், பூந்தொடை விழா, பெருஞ்சோறு படைத்தல், யானை வேட்டை, அரம் போழ் வளை யணிதல்,தோப்பி(நெல்லிலிருந்து எடுக்கப்படும் கள்) குடித்தல், நாளின் தொடக்கம், காவல் மரம், ஆம்பல் முதலிய எண்களின் பயன்பாடு முதலியபற்றிய ஆராய்ச்சி உரைகளை அறியலாம். தமிழர்களின் மொழியின் பெயர் தமிழே என்னும் வரலாற்றுக் குறிப்பு முதலிய பிறவற்றையும் மாமூலனார் பாடல்கள் மூலம் , பேரா.சி.இலக்குவனார் நமக்கு விளக்குகிறார். அவற்றுள் ஒரு பகுதியைமட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

1.கரிகால் வளவன்

2. சேரலாதன்

3. வெண்ணிப்போர்.

4. வடக்கிருத்தல்

மாமூலனார் அகநானூற்றில் 55 ஆம் பாடலில் மூன்று வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிடுகிறார்.

கரிகால்வளவன் வரலாற்றைப் பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை, பழமொழி முதலியவற்றாலும் அறியலாம். சேரலாதன் வாழ்க்கை, 

மயிர்நீர்ப்பின் வாழாக்கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்

என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாகும். “இவன் உண்ணா நோன்பு கொண்டு உயிர்விட்டகாலத்து, இவன் நாடு பொலிவற்றிருந்தது என்பதனாலும், சான்றோர் பலர் உயிர்விட்டனர் என்பதனாலும் யாவராலும் விரும்பப்பட்ட பேரரசன் என்று அறியலாம்.”

கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்

பொருது புண் நாணிய சேரலாதன்

அழிகள மருங்கின் வாள் வடக்கிருந்தென

இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்

அகநானூறு 55.9-12

என இவர்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். ஒளிபொருந்திய போர்க்கருவிகள் மிகுந்த கரிகால்வளவனோடு வெண்ணி என்ற ஊரில் நடந்த போர்க்களத்தில் சண்டையிட்டு, மார்பில் அம்பு பட்டு ஊடுருவிச் சென்றதால், முதுகில் புண் உண்டானது. இதனால் முதுகிலேயே புண்பட்டதாக வெட்கமுற்று சேர வேந்தன் பெருஞ்சேரலாதன், தான் பெருமை இழந்த போர்க்களத்தில் வாளுடன் வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்தான்.

“வடக்கிருத்தல்: மானம்கெட வருமிடத்து உயிர் வாழ விரும்பாத தமிழர்கள் தூய்மையான ஓரிடத்தில் வடக்கு நோக்கி உட்கார்ந்து எவ்வுணவும் கொள்ளாது உயிர்விட்டனர். வடக்கு நோக்கி உட்கார்ந்தமையில் “வடக்கிருத்தல்” என்று அழைக்கப்பட்டது.” எனப் பேராசிரியர் இலக்குவனார் விளக்கம் அளிக்கிறார்.

வெண்ணி’ ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இங்கு நடைபெற்ற போரே வெண்ணிப்போர். இவ்வரலாற்றுச் செய்தியை இப்பாடல் கூறுகிறது.

5. நந்தர் நிதியம்,  நந்தன் வெறுக்கை

நந்தர் செல்வம் குறித்த வரலாற்றுச்செய்தியை அகநானூற்று 265 ஆம் பாடலில் மாமூலனார் கூறுகிறார்.

பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

 சீர் மிகு பாடலிக் குழீஇக் கங்கை

 நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ?

அகநானூறு 265 .4-6

நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண்

 தங்கலர்;

அகநானூறு 251.5-6

மாமூலனார்,  நந்தன் செல்வம் கிடைத்தாலும் தங்காமல் தலைவர் வந்துவிடுவார் எனத் தோழி தலைவியிடம் கூறுவதாகக் குறிப்பிடுகிறார். “தனநந்தன் என்பவன் செல்வத்தைத் தேடுவதிலேயே காலத்தைக் கழித்து, நாட்டில், தோல், பிசின், மரம், கல் முதலியவற்றின் மீதும் வரிவிதித்து எண்பது கோடிக்குமேல் சேர்த்து கங்கை நடுவில் உள்ள ஒரு மலைப்பாறையின் குகையில் ஒளித்து வைத்தான்” என்று சொல்லப்படுவதாகப் பேரா.இலக்குவனார் விளக்குகிறார்.

வடநாட்டு வரலாற்றுச் செய்திகளையும் தமிழ்ப்புலவர்கள் அறிந்திருந்தனர். அதுபோல்தான் மாமூலனார் நந்தன் குறித்த வரலாற்றுச் செய்தியை இங்கே குறிப்பிடுகிறார்.

6. எழினி

7. மத்தி

8. வெண்மணியின் கோட்டை வாயிலில் பல்லைப் பதித்தமை

பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக்

 கடுஞ்சின் வேந்தன்  ஏவலின் எய்தி

 நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப்பட்ட

 கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய

 வன்கண் கதவின் வெண்மணி வாயில்

 மத்தி நாட்டிய கல்கெழு பனித்துறை

அகநானூறு  211. 9-15

இப்பாடல் குறிப்பிடும் வரலாற்றுச் செய்தியைப் பேரா.இலக்குவனார் பின்வருமாறு விளக்குகிறார்.  “எழினி சிற்றரசன். சோழன் ஆணைக்கு உட்பட்டவன். (சோழன் இன்னான் என்று தெரியவில்லை) சோழன் ஆணைக்குக் கீழ்ப்படிந்து வராமல் யானை வேட்டையில் பொழுது போக்கிக்கொண்டு இருந்துள்ளான். சோழன் சீற்றமுற்றான். தனது படைத் தலைவனாம் மத்தி என்பவனை ஏவினான். மத்தி சென்று எழினியை வென்றான். அவன் பல்லைப் பிடுங்கினான். அப்பல்லை வெண்மணி  என்னும் ஊரின் கோட்டைவாயில் கதவில் பதித்துக்கொள்ளுதல் அக்காலவழக்கம் போலும். வெற்றியைக்குறித்த கல்லும் நாட்டியுள்ளான். இவ்வரலாறெல்லாம் அறியமுடியாத புதை பொருளாகவே இருக்கின்றது.”

9. பெருஞ்சோறு படைத்தல்

 போர்க்களத்தில் மடிந்த வீரர்கள் புதைத்த இடங்களில் நடுகற்கள் இடுவது தமிழர் வழக்கம். இறந்தவர்கள் நினைவு நாளில் வீரர்களைக் கொண்டாடுவது வழக்கம். உதியன் சேரலாதன் வீரர்களின் நினைவுநாளைப் பெருஞ்சோறு படைத்துக் கொண்டாடினான் எனப் பின்வரும் பாடலில் மாமூலனார் குறிப்பிடுகிறார். பாரதப்போரில் இரு தரப்பாருக்கும் சோறு வழங்கிய பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் குறித்து ப் புறநானூறு,

ஈரைம்பதின் மரும்பொருது களத்து ஒழிய

 பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

எனக் குறிப்பிடுகிறது. இவ்வரலாற்றுச் செய்தியைத்தான் மாமூலனார் குறிப்பிடுவதாகக் கூறுகின்றனர். பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் உணவு வழங்கியது பாரதப் போரில் அல்ல என்பதும் பெருஞ்சோறு வழங்கல் தமிழ் மன்னர்களின் பொதுவான பண்பாடு என்பதும் சொல்லப்படுகின்றன.(சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா? – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி). அவ்வாறாயின் பெருஞ்சோறு வழங்கும் பண்பாட்டுச்செய்தியை வரலாற்றுக் குறிப்பாக மாமூலனார் தந்துள்ளார் எனலாம்.

10. விறல் போர்ப்பாண்டியன்

வினை நவில் யானை விறல் போர்ப்பாண்டியன்

 புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை

அகநானூறு  201.3-4

தொழில் பயிற்சியுள்ள,  யானைப் படையால் சிறந்த வலிமை மிகுந்த போர் செய்வதில் சிறந்த பாண்டிய வேந்தனின் புகழ் நிறையும் கொற்கைத் துறைமுகம் குறித்து மாமூலனார் குறிப்பிடுகிறார். கொற்கையைப் பற்றி மேலைநாட்டு வரலாற்று ஆசிரியர்களும்  சிறப்பித்துக் கூறுகின்றனர்.

11. எவ்வி

வாய்வாள்

எவ்வி வீழ்ந்த  செருவில் பாணர்

கைதொழு மரபின் முன் பரித்து இடுஉப் பழிச்சிய

வள்ளயிர் வணர்மருப்பு அன்ன

அகநானூறு 115.7-10

வீசினால் பகைவரைக் கொல்லதத் தப்பாத வாட்படையினையுடைய எவ்வி என்னும் சிற்றரசன் போர்க்களத்தில் மடிந்தான். இதனால், பாணர்கள்,  தாங்கள் தொழுது வணங்கும்  யாழை ஒடித்துப் போட்டனர். எவ்வி மறைந்தபின், யாழிசைக்க விரும்பவில்லை அவர்கள். இசைவாணர்களால் போற்றப்படும் புகழ் மிக்க எவ்வி என்னும் அரசன் குறித்து இவ்வாறு மாமூலனார் கூறுகிறார்.

12. குடநாடு

குடநாட்டை ஒத்த அழகு என்றும் குடநாடு பெற்றாலும் தங்கியிராமல் திரும்புவார் என்றும் சொல்வதன்மூலம் குடநாட்டின் அழகையும் சிறப்பையும் கூறும் மாமூலனார் இப்பாடலில் வரலாற்று உண்மையைக் குறிப்பிடுகிறார்.

நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என்

ஆய்நலம்

அகநானூறு 115.5-6

எருமை குடநாட்டை ஒத்த அழகு என்கிறார். இதன்மூலம் இன்றைய மைசூரான அன்றைய எருமையூர் சேர நாடான குடநாட்டுடன் இணைந்து தமிழ்நாட்டின் பகுதியாக இருந்த வரலாற்றுச் செய்தியை உணரலாம்.

13. நன்னன்

வேவ்வேறு நன்னன்கள் அரசாட்சி செய்துள்ளனர். நன்னன் வேண்மா, பெண்கொலை புரிந்த நன்னன், நன்னன், சேய் நன்னன் என்றெல்லாம் சங்க இலக்கியப்பாக்களில் குறிப்பிடப்படுகின்றவர்கள் இவனின் வேறாவர் என்று கருத வேண்டியுள்ளது. இதில் குறிப்பிடப்படும் நன்னன் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய நன்னனாக இருக்க வேண்டும் என்கிறார் பேரா.சி.இலக்குவனார்.

நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறைமகளிரொடு

அகவுநர்ப் புரந்த அன்பின் கழல் தொடி

நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்;

வயலை வேலி வியலூர் அன்ன

அகநானூறு 97.10-13?

இப்பாடலில் நன்னன் வேண்மான் பரந்து அமைந்துள்ள வியலூர் போன்ற பரந்த மார்பு எனக் குறிப்பிட்டு நன்னனின் ஊர்ச்சிறப்பு குறிக்கப் பெறுகிறது.

சூழியானைச் சுடர்ப்பூண் நன்னன்

 பாழி அன்ன கடியுடை வியன் நகர்ச்

 செறிந்த காப்பு இகந்து

அகநானூறு 15.10-13

இப்பாடலில்  பாதுகாப்பு மிகுந்த நன்னனின் தலைநகராகிய பாழி என்னும் ஊரைப்போன்று நம் வீடும் பாதுகாப்பு மிக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நன்னன்  தம் தலைநகரை மிகவும் பாதுகாப்பாகப் பேணி வந்த சிறப்பு அறிய முடிகிறது.

14.திதியன்

15. திதியன்-வேளிர் போர்

 நாளவையிருந்த நனைமகிழ் திதியன்

வேளிரொடு பொரீஇய கழித்த

வாள்வாய் அன்ன வறுஞ்சுரம் இறந்தே

அகநானூறு  331.12-14

அன்றன்று அலுவல் பார்ப்பதற்கு நாளவை என்னும் மன்றத்தில் வீற்றிருக்கும் திதியன் என்பதன் மூலம் மன்னர்கள் அன்றாடம் அலுவல் பார்ப்பதை அறிய முடிகிறது. ஆள் இல்லாத வழியைக் குறிப்பிடுகையில் திதியன் குறுநில மன்னர்களோடு போர் புரிவதற்காகக் கையில் எடுத்த வாள் நீங்கிய வெற்றுறை போன்று இருந்தது எனக் குறிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் போர்ச்செய்தி இடம் பெற்றுள்ளது. இவனும் மேலும் 6 சிற்றரசர்களும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் வெல்லப்பட்டமை, மதுரைக் காஞ்சியினும் அகநானூற்றுப் பாடல்களிலும் கூறப்படுகின்றது.

16. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

வலம்படு முரசின் சேரலாதன்

முந்நீர் ஒட்டிக் கடம்பு அறுத்து இமயத்து

முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து

நல்நகர் மாந்தை

அகநானூறு 127.3-6

வெற்றி முரசையுடைய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடலில் பகைவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து அப்பகைவர்களின் காவல்மரமாகிய கடம்ப மரத்தை வெட்டிய செய்தி தெரிவிக்கப்படுகிறது. இவன் முன்னோர் இமயமலையில் விற்கொடி பொறித்த அருவினையும் தெரிவிக்கப்படுகிறது. அத்தகையவனின் நல்ல நகராமாகிய மாந்தை எனக் கூறப்படுகிறது.

17. மோரியர் வருகை

முரண் மிகு வடுகர் முன்னுற மோரியர்

 தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு

அகநானூறு 281.8-9

வடுகர் துணையுடன் மோரியர் தென்பகுதிக்கு வந்த வரலாற்றுச்செய்தி குறிக்கப்பெறுகிறது.

18. சேரலாதன் கடற்போர்

சால்பெரும் தானைச் சேரலாதன்,

மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து

அகநானூறு     347 . 3-4

பெருகி வரும் பெரும்படையுடைய சேரலாதன் கடலில் பகைவர்களை ஓடச்செய்து அவர்களின் காவல்மரமாகிய கடம்ப மரத்தை வெட்டியெறிந்த செய்தி குறிக்கப்பெறுகிறது.

19. குட்டுவனும் செம்பியனும்

குட்டுவன்

அகப்பா அழிய நூறிச் செம்பியன்

பகல்தீ வேட்ட ஞாட்பினும் மிகப்பெரிது

அலர் எழச் சென்றனர் ஆயினும்,

நற்றிணை 14 : 3-6

சேர அரசனுக்கும் சோழஅரசனுக்கும் இடையே நடந்த போர் குறிக்கப்பெறுகிறது. வெற்றி பெற்ற பின்பே உண்பேன் என உறுதி மொழி எடுத்து அவ்வாறு உண்பதைப் பகல் தீ வேட்டல் என்பர். அது இங்கே குறிக்கப்பெறுகிறது. குட்டுவன் சேரர் மார்பில் முதற்குட்டுவனாய் இருப்பின் வரலாற்றுக் காலத்துக்கு அப்பாற்பட்டவனாதல் வேண்டும் என்கிறார் பேரா.சி.இலக்குவனார். அப்படியாயின்இதில் குறிக்கப்பெறும் செம்பியனாகிய சோழனும் வரலாற்றுக்காலத்துக்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும். இதில் குறிப்பிடப்படும் போர ்நடந்த இடம் கழுமலம் எனப் பின்னத்தூர் நாராயணசாமி, நற்றிணைக்கான பொழிப்புரையில் குறிப்பிடுகிறார்.

20. அள்ளனும் அதியனும்

ஆடுநடைப் பொலிந்த புக ற்சியின் நாடுகோள்

அள்ளனைப் பணித்த அதியன்

அகநானூறு 325 . 8

வெற்றிச் செயலால் புகழடைந்த மகிழ்ச்சியால் தன் நாட்டைக் கொள்ள வந்த அள்ளன் என்னும் மன்னனைப் பணியச் செய்த அதியன் என்பதால் இருவரிடையே  நடைபெற்ற போர்ச்செய்தி குறிக்கப் பெறுகிறது.

நிறைவுரை

இவ்வாறு மாமூலனார் பாடல்கள் மூலம் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளை அறியலாம். எஞ்சியவற்றை ‘மாமூலனார் பாடல்கள்’ அல்லது ‘சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்’ வழி அறிந்து கொள்க.

இலக்குவனார் திருவள்ளுவன், thiru2050@gmail.com