தமிழ் மாநாடும் தமிழக அரசும்

உலகத்தமிழாராய்ச்சி மன்றம் ஆசியவியல் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 11ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இனிதே நிகழ்ந்து முடிந்தது. போதிய காலமின்மை, போதிய பணமின்மை ஆகியவற்றால் இடர்ப்பாடுகளை எதிர்நோக்கினாலும் மாநாடு சிறப்புடன் முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைவு விழாவின்போது சட்டக்கதிர் சம்பத்து அவர்கள் “அரங்கு நிறைய ஆராய்ச்சியாளர்கள் அமைதியாக அமர்ந்திருப்பதே மாநாட்டின் வெற்றிக்கு அடையாளம்” என்றார். அஃது உண்மைதான். பொதுவாகக் கருத்தரங்கம் அல்லது மாநாட்டிற்கு வருபவர்கள் அமர்வின்பொழுது முழுமையாக இருப்பதில்லை. அல்லது எல்லா  நாள் அமர்வுகளிலும் பங்கேற்பதில்லை. ஆனால், இந்த மாநாட்டில் எல்லா அமர்வுகளும் நிறைந்திருந்தன. எனவே, கட்டுரையாளர் நோக்கில் இம்மாநாடு பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது எனலாம்.

இந்த மாநாடு நடக்கக்கூடாது எனக் கருதியவர்களுக்கு இம்மகிழ்ச்சி பொறுக்கவில்லை. தமிழ்நாடு அரசு இதனைப் புறக்கணித்து விட்டது என்று பறைசாற்றி வருகின்றனர். தமிழ்நாடு அரசு புறக்கணித்திருந்தால் வெளிநாடு வாழ் தமிழறிஞர்கள் வந்திருக்கும் இந்த மாநாடடிற்கு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கா.சு.மசுதான் அவர்களையும் நிகழ்விடத் தொகுதியான தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்க பாண்டியன் அவர்களையும் பங்கேற்க முதல்வர் அனுப்பியிருப்பாரா? மாநாடு நடக்க இருப்பதறிந்து பெரிதும் மகிழ்வதாகவும் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு சிறக்க உளமார வாழ்த்துவதாகவும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பாரா? அமைச்சரே முதல்வரின் வாழ்த்துச் செய்தியைத் தந்து உரையாற்றியிருப்பாரா? ஆனால், மாநாட்டை எப்படியும் எதிர்க்க வேண்டும் என்று கருதுபவர்கள் என்ன கூறுகின்றனர்?

தமிழ்மாநாட்டிற்குத் தமிழ் வளர்ச்சி அமைச்சர்  வரவில்லையே? தமிழ் வளரச்சிச் செயலர் வரவில்லையே? பிற அமைச்சர்களையோ பிற செயலர்களையோ, தமிழ் வளர்ச்சி இயக்குநரையோ அரங்கில் காணவில்லையே என்கின்றனர். இவர்கள் வரவில்லை என்பது உண்மைதான். சொல்லி வைத்தாற்போல் அழைத்திருந்த செயலர்களுக்கும் த.வ.இயக்குநருக்கும்  மூன்று நாள்களில் ஒரு நாள்கூட வர இயலாத அளவிற்குக் கூட்டம் இருந்தது எப்படி என்று தெரியவில்லை. இவர்கள் வருவதாகக் கூறி வராமல் இல்லை. அழைத்தபொழுதே இயலாமையைத் தெரிவித்து விட்டனர். இயலாமையைத் தெரிவித்த பின்னர் அவர்கள் வரவில்லை எனக் குற்றம் சுமத்துவது சரியில்லை.

உலகத் தமிழ் மாநாடு ஒன்று தமிழ் நாட்டில் – அதுவும் தலைநகரில் – நடக்கும் போது பங்கேற்க வேண்டியவர்கள் பங்கேற்காதது மாநாட்டினருக்குக் குறை எதுவும் இல்லை; ஆனால் அரசிற்கு இழுக்கு என்பதை எண்ணிப் பார்க்கவில்லைபோலும். அதனால் வந்திருக்க வேண்டியவர்கள் வரவில்லை. ஆனால், வராதவர்கள்பற்றிக் கவலைப்படாமல் வந்தவர்கள் குறித்து மகிழ்வதுதான் முறை. அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் பங்கேற்று அருமையாக உரையாற்றிச் சென்றிருக்கிறார்கள். அமைச்சர் ஒருவர் பங்கேற்கிறார் என்றால் அரசே பங்கேற்கிறது என்றுதான் பொருள். எனவே, குறை சொல்ல வேண்டும் என்பதற்காகக் குறைசொல்பவர்கள் குறித்து மாநாட்டினர் பொருட்படுத்தத் தேவையில்லை.

மற்றொரு குற்றச்சாட்டும்  தெரிவிக்கப்படுகிறது. எந்த நாட்டில் தமிழ் மாநாடு நடைபெற்றாலும் அந்தநாட்டின் அரசு நிதியுதவி அளித்துப் பங்கேற்கிறது.  தமிழ்நாட்டின் தலைநகரில் நடைபெற்ற இந்த மாநாடடிற்கு அரசு ஒரு காசுகூடத் தரவில்லையே! நிதிதான் வழங்கவில்லையே! அரசின் தன்னாட்சி நிறுவனங்களின் விளம்பரங்களை மாநாட்டு மலருக்கு அளித்து உதவியிருக்கலாமே என்றும் கேட்கின்றனர். சிகாக்கோவில் நடைபெற்ற பத்தாவது தமிழ்ஆராய்ச்சிமாநாட்டிற்கு உரூபாய் ஒரு கோடி நிதியுதவி அளித்திருக்கும்போது இப்போது நிதியளிப்பில் முழுமையும் புறக்கணித்திருப்பதைத்தான் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு நிதி வழங்காமைக்குக் காரணம் இரண்டு அமைப்புகளாகப் பிளவுபட்டு நடத்துவதால் அரசு நடுநிலை வகித்துள்ளது என்கின்றனர். நடுவுநிலைமை என்பது உண்மையின் பக்கம் இருப்பதேயன்றி, இரு தரப்பாரையும் ஒத்த அளவில் மதிப்பதோ புறக்கணிப்பதோ இல்லை. உண்மையான உலகத்தமிழாராய்ச்சி மன்றம் சென்னையில் மாநாடு நடத்தும் பொழுது சட்டப்படி அமையாத ஒரு குழுவினர் மலேசியாவில்  மாநாடு நடத்துவதால் அதைத்தான் புறக்கணிக்க வேண்டும். ஆனால், அவ்வமைப்பினர் தமிழ்நாட்டரசில் உள்ள சிலர் ஆதரவுடன்தான் மாநாட்டினை நடத்துவதாகக் கூறுகின்றனர். ஆனால், அமைச்சர் பங்கேற்ற மாநாட்டை எங்ஙனம் அரசு புறக்கணித்தது என்று கருத இயலும்?

இந்த இடத்தில்  ஒன்றிய அரசின் புறக்கணிப்பையும் குறிப்பிடவேண்டி உள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் பேராளர்கள்  அனைவருக்கும் மூவாயிரம் உரூபாய் மதிப்பிலான நூல்களை அளிப்பதாக அதன் இயக்குநர் தெரிவித்திருந்தார். கட்டிட்டு வைத்திருப்பதாகவும் வாங்கிச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் நூல்கள் அன்பளிப்பிற்கான இசைவை ஒன்றிய அரச சிங்கப்பூர் மாநாட்டிற்குத்தான் அளித்துள்ளது. சென்னை மாநாட்டிற்கு என்றால் புது இசைவு பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது வேடிக்கையாக இருக்கிறது. மாநாட்டில் பங்கேற்பவர்களுக்குத்தான் நூலளிப்பே தவிர மாநாடு நடைபெறும் இடத்திற்கு அல்ல. விரைந்து செயலாற்றும் இயக்குநர் புதிய இசைவைப் பெற இயலவில்லை. அப்படியானால் தமிழன்பராகக் காட்டிக்கொள்ளும் ஒன்றிய ஆள்வோரால்தான் தடை வந்திக்க வேண்டும் என்பது புரிகிறது. தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குத் தமிழ் நூல்களை வழங்குவதற்குத் தடை விதிப்பது தமிழுக்கு எதிரான போக்கு என்பதை உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

போதிய நிதி ஆதாரம் அமையாத பொழுது சிலர் ஆளுநரை அழைத்தால் விழாவைச் சிறப்பாக அமைத்திடுவார். வேண்டிய நிதியுதவியையும் அளிப்பார் என்றனர். இஃது உண்மைதான். அப்படி அவரை அழைத்திருந்தால் இது தமிழ் ஆராய்ச்சி மாநாடாக இல்லாமல் வருணாசிரம மாநாடாக மாறியிருக்கும். எனவேதான் தமிழ்நாட்டு அரசிற்கும் தமிழர் நலனுக்கும் எதிராகச் செயற்படும் ஆளுநரை அழைக்கவில்லை. “எமை நத்துவாய் என எதிரிகள், கோடி, இட்டழைத்தாலும் தொடேன்” எனப் பாவேந்தர் குறிப்பிட்ட இனமான உணர்வில்  அதற்கான முயற்சியில் இறங்கவில்லை.

எனவே, மாநாட்டின் பொழுதும் மாநாடு முடிந்த பின்பும் எதிராகக் கூறப்படும் கருத்துகள் குறித்து உ.த.ஆ.மன்றத்தினர் கவலைப்பட வேண்டா. மாநாடு நடத்துவது மட்டுமே அமைப்பின் நோக்கமல்ல. (இது குறித்து அடுத்த வாரம் எழுதுகின்றேன்.) எனவே, இனி ஆற்றவேண்டிய பணிகளில் போதிய கருத்து செலுத்தினால் போதும். அதே நேரம் தமிழ்நாட்டிரசினரும் இப்பொழுதும் உதவலாம். கட்டுரையாளர்களுக்கான பயணப்படி இன்னும் வழங்கவில்லை. நிதி ஆதாரத்தை எழுப்பி வழங்கக் காத்துள்ளனர். மாறாக அனைவருக்குமான பயணப்படிகளை அரசே வழங்குவது சிறப்பாக இருக்கும். தமிழுக்கு வழங்கத் தடையில்லை என்னும் முதல்வரும், தமிழ்ச்செயற்பாட்டாளர்களான  நிதி யமைச்சரும் நிதிச் செயலரும் இருக்கையில் அவர்கள் மனம் வைத்தால் முடியாதது எதுவும் உண்டோ?

பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி யெனல்.   (திருவள்ளுவர், திருக்குறள், 196)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை