திருவள்ளுவர் எக்காலத்திற்கும் எத்துறைக்கும் பொருந்தும் வகையில் திருக்குறளை நமக்கு அளித்துள்ளார். எனவேதான் பாவேந்தர் பாரதிதாசன்

“இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே”

என்றார். சில குறட்பாக்கள் நேரடியாகவே நாம் வேண்டிய தலைப்பிற்குப் பொருந்தும் வகையில் இருக்கும். சில குறட்பாக்கள் பொதுவாக இருப்பினும் நமக்குத் தேவைப்படும் கருத்திற்கு ஏற்ற விளக்கமாக இயைந்து வரும். அந்த வகையில் நேரடியாகவும் உட்பொருளாகவும்  விளக்க வகையிலும் பதவி மேலாண்மை குறித்த குறட்கருத்துகளைப் பார்ப்போம்.

மேலாண்மை என்றால் என்ன?

மேலாண்மை (Management) என்பது ஒரு நிறுவனத்தின் அல்லது இலக்கின் நோக்கங்களை வெற்றிகரமாக அடைய, மனித வளங்கள், பிற வளங்களை சரியாகத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, வழிநடத்திக் கட்டுப்படுத்தும் செயல் முறையாகும். இதனையே, பெரும்பாலும் மனித வளங்கள், நிதி வளங்கள், தொழில்நுட்ப வளங்கள், இயற்கை வளங்களின் வரிசைப்படுத்தல், கையாளுதல் என்று விளக்குவர்.

பதவி என்றால் என்ன?

ஒரு வேலைக்கு ஊதியம் கொடுத்து அவ்வேலைக்குப் பெயரையும் குறிப்பிடுகையில் அது பதவி ஆகிறது. சான்றாக ஒருவர் ஓர் இடத்திலோ ஒரு கட்டடத்திலோ கூட்டி அதற்கு எவ்வகைப் பணப்பயனும் அல்லது பிற பயனும் பெறவில்லை என்றாலோ கூலி பெறுகிறார் என்றாலோ அது கூட்டும் வேலையாகிறது. அவ்வேலைக்கே ஊதியம் வழங்கி வரை முறைக்குள் கொண்டு வந்து கூட்டுநர் என்று பெயரும் இட்டால் அது பதவியாகிறது. 

ஓர் அலுவலகத்திலோ துறையிலோ நிறுவனத்திலோ ஒரே ஒரு பதவி மட்டும் இருக்காது. அடிப்படைப் பணியைச் செய்பவர், அப்பணியை மேற்பார்வை யிடுபவர் அல்லது கண்காணிப்பவர் அப்பதவிக்குரிய சம்பளம் முதலியவற்றை வழங்குபவர், அப்பதவிக்குரிய அமர்த்தல் ஆணை, ஊதிய ஆணை, பணி விலக்க ஆணை, பணி நீக்க ஆணை, பணி முடிவு ஆணை முதலான பணியமைப்பு தொடர்பான பணிகளுக்குப் பொறுப்பானவர் எனப் பல்வேறு பதவி நிலைகள் இருப்பதே வழக்கம்.

பதவி மேலாண்மை என்றால் என்ன?

ஓர் அமைப்பில் பல்வேறு நிலைகளில் பதவிகள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் தலைமையாக அவற்றை இயக்கும் பதவி ஒன்று இருக்கும் அல்லவா? அப்பதவியில் உள்ளவர் பணியாளர்களை எவ்வகையில் நடத்துகிறார், பணிகளை எவ்வகையில் செயற்படுத்துகிறார், பணிப் பொறுப்பகளை எவ்வகையில் திறம்படக் கையாளுகிறார் என்பனவற்றைக் குறிப்பதே பதவி மேலாண்மை ஆகிறது. தான் பணியாற்றும் துறை, நிறுவனம், அமைப்பு போன்றவற்றில் எவ்வாறு ஆதாயம் விளைவிக்கிறார், இழப்பு ஏற்பட்டால் எங்ஙனம் இழப்பைச் சமாளிக்கிறார், தன் பணித்திறமையை வளர்த்துக் கொள்வதுடன் தன் கீழ்ப் பணியாற்றுநரின் பணித்திறமைகளையும் வளர்க்கிறார் என்பனவற்றின் பணி ஆளுமையே பதவி மேலாண்மையாகிறது. பதவி நிலைகள் அல்லது பதவியின் தன்மைகள் வெவ்வேறாக இருப்பினும் பணி ஆளுமைத் திறன் என்பது பொதுவானதே. எனவே, பதவி மேலாண்மையைப் பொதுவானதாகவே கருத வேண்டும்.

திருவள்ளுவர் அரசர்க்குக் கூறும் தகுதிகள் யாவும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கானவையாகக் கருத வேண்டும். திருவள்ளுவர் அமைச்சருக்குக் கூறும் இலக்கணம் யாவும் இன்றைய அமைச்சர்களுக்கும் பொருந்தும்; ஒரு தலைமையின் கீழ்ப் பிறரை இயக்கும் நிலையில் உள்ள பதவியாளர்களுக்கும் பொருந்தும். அவ்வகையில் நாம் திருக்குறட் கருத்துகள் குறிப்பிடும் பதவி மேலாண்மை குறித்துப் பார்ப்போம். இவற்றை இன்றைய அறிஞர்களின் கருத்துகளுடன் ஒப்பிட்டுக் காண்கையில் திருக்குறளின் சிறப்பு நமக்கு ஒளிவிடும்.

“ஒரு மேலாளரின் முதல் பணி ஊக்கமளிப்பதல்ல, மாறாகத் தடைகளை அகற்றுவதே ஆகும்” என்கிறார் இசுகாத்து இரய்மாண்டு ஆடம் (Scott Raymond Adams: June 8, 1957 – January 13, 2026). பணிகளை நிறைவேற்றும் பொழுது தடைகள், குறுக்கீடுகள், இடையூறுகள் இருப்பின் ஊக்கச் சொற்களால் பயனில்லை. அத்தடைகளை உடைத்தெறியச் செய்ய வேண்டும். அதன்பின்பே பணியைத் தொடருவதற்கான ஊக்க உரைகளை வழங்க வேண்டும் என்கிறார் அவர். எனவே, அவர் தடைகளைக் கண்டு பின்வாங்காதே என்கிறார்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர். (குறள்: (௬௱௨௰௩ – 623) என்கிறார் திருவள்ளுவர்.

        துன்பம் அல்லது தடை வரும்போது மனச்சோர்வு அடையாமல் இருப்பவர்களே, அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை ஓடச் செய்துவிடுவார்கள் என்கிறார் திருவள்ளுவர். எனவே, பதவியருக்கு வேண்டிய மேலாண்மைப் பண்பைத் திருவள்ளுவர் நமக்கு உணர்த்துகிறார் எனலாம்.

பணித் தடைகளை உடைக்க  ஓயா உழைப்பு மேற்கொள்ள வேண்டும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர். (குறள்: (௬௱௨௰ – 620)

எனச் சோர்வின்றித், தொடர்ந்து முயன்று உழைப்பவர்கள், தங்களுக்குத் தடையாக வரும் விதியையும்  முதுகுகாட்டி ஓடச் செய்யும் வல்லமையாளர்களாகத் திகழ்வர் என்கிறார்.

“தான் செய்ய விரும்பும் செயல்களை ஆற்ற நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுக்கும் அறிவும், அவர்கள் அதைச் செய்யும்போது தலையிடாமல் இருக்கும் தற்கட்டுப்பாடும் கொண்டவரே சிறந்த செயன்மையர் ஆவார்.” என்கிறார் தியோடர் உரூசுவெலுட்டு( Theodore Roosevelt Jr.-October 27, 1858 – January 6, 1919)

எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர்,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.   (திருக்குறள், ௫௱௰௭ – 517)

என்கிறார்.

ஒரு செயலை ஒருவர் எப்படிச் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அதற்குத் தகுதியுடையவர் எனக் கண்டறிந்த பின்பே அச்செயலை அத் தகுதியானவரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் ஒப்படைக்கக்கூடாது என அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல்.   (திருக்குறள், ௫௱௰௮ – 518)

எனத் திருவள்ளுவர், ஒருவரிடம் அவரது தகுதிக்கேற்ற வேலையை ஒப்படைத்த பின்பு குறுக்கீடு எதுவும் செய்யாமல் அவர் முழுமையாக வேலையில் ஈடுபடும் வண்ணம் அதற்குரியவராக ஆக்க வேண்டும் என்கிறார்.

“காலத்தை நம்மால் கையாளக் கற்றுக் கொள்ளும் வரை, வேறு எதையும் நம்மால் கையாள முடியாது.” என்கிறார்  பீட்டர் திரக்கர்(Peter Ferdinand Drucker – 19 November 1909 – 11 November 2005). திருவள்ளுவர் ‘காலமறிதல்’ என்னும் அதிகாரம் மூலம் இதைத்தான் வலியுறுத்துகிறார். பதவி மேலாண்மைக்கு வேண்டிய அடிப்படைப்பண்புகளில் ஒன்று காலமறிதலாகும்.

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.   (திருக்குறள், ௪௱௮௰௪ – 484)

ஞாலத்தையும் வெல்லலாம் காலத்தை யறிந்து செயற்பட்டால் என்கிறார் அவர்.

உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நீங்கள் செய்யும் வேலையில் ஒருமுகப்படுத்துங்கள். சூரியனின் கதிர்கள் ஒருமுகப்படுத்தப்படும் வரை சுடுவதில்லை. என்று அலெக்குசாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச்சு 3, 1847 – ஆகத்து 2, 1922), வேலையை வெல்ல ஒருமுக எண்ணம் தேவை என்கிறார்.