(ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி)

 

balakumaran-nadukal02

அரசை வலியுறுத்தவேண்டியவை:

 

  1. மாவட்ட வாரியான நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் பாதுகாப்பு- பேணுகை ஆகிய பணிகள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.

 

மாவட்ட அளவில் உள்ள அனைத்து வரலாற்று நினைவுச்சின்னங்கள் அரசாங்கம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். அதற்கான தமிழ்நாட்டில் மாவட்ட தோறும் அமைந்துள்ள நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் அதில் பாழடைந்து சீரழிந்து வரும் நினைவுச்சின்னங்கள் பற்றிய பட்டியலையும் தனித்தனியே தொகுத்து அதில் மேற்கொள்ளவேண்டிய பேணுகை, பாதுகாப்பு ஆகிய பணிகள் பற்றிய குறிப்புரை தயார் செய்து தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையாளர், அரசு செயலர், தலைமைச் செயலர் ஆகியவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கக் கோரவேண்டும்.

நடுகற்கள், பிற நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க தேவைப்படும் நிதிச் செலவினங்களுக்கு அரசின் நிதி உதவி கோரவேண்டும்.

 

 2.நடுகற்கள்/மரபுச்சின்னங்களை வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறிவித்தல்:

balakumaran-nadukal01

தமிழ்நாட்டில் இதுவரை கண்டறிப்பட்ட நடுகற்களும் களஆய்வு செய்து புதியதாக கண்டறியப்படும் நடுகற்களும் மாவட்ட வாரியாக பட்டியல் இடப்பட்டு ஒவ்வொன்றுக்குமான குறிப்புரைகளை எழுதியும் நடுகற்களின் சிறப்புகளையும் அவை ஏன் வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்பது பற்றிய முன்மொழிவுகளையும் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அரசு இவ்வினத்தில் தீவிர முயற்சி மேற்கொள்ள வரலாற்று ஆர்வலர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி நடுகற்களை வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறிவிக்க உரிய முயற்சி எடுக்க வேண்டும். அரசு இம்முயற்சிக்கு ஆதரவளித்து நடுகற்கள்/மரபுச்சின்னங்களை வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசிதழில்/ நாளிதழில் வெளியிடவேண்டும். அதற்கு வரலாற்று ஆர்வலர்கள் உரிய முன்னெடுப்பு முயற்சி எடுக்கவேண்டும்.

  1. நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் பாதுகாப்பு – வருவாய்த்துறையின் பங்கு:

balakumaran-nadukal03

  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிலங்களையும் அளவீடு செய்து நிலங்களுக்குப் புல எண் கொடுத்து அவற்றைப் பேணி வருவது வருவாய்த்துறை ஆகும். அத்துறையினரே ஊரில் உள்ள அனைத்து அரசு நிலங்களுக்கும் காவலாகவும் செயல்பட்டு வருகிறது.

  தற்போதைய நடைமுறையில் பழங்கால நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாத்து வரக்கூடிய வரலாற்று நினைவுச்சின்னங்களை, குறிப்பிட்ட காலத்தில் புலத்தணிக்கை செய்து பாதுகாத்து வரவேண்டும் என ஊர் ஆட்சியலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோரின் கடமை என்று அச்சட்டம் குறிப்பிடுகிறது. இது ஏற்கெனவே அரசால் வரலாற்று நினைவுச்சின்னங்கள் என்று குறிப்பிட்ட இடத்திற்கே பொருந்தும். இது தொடர்பாக ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் வருவாய்த் தீர்வாயத்தின் போது வருவாய் தீர்வாய அலுவலரால் இப்பணி நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்யப்படுகிறது. நடுகற்களையும் அரசு வரலாற்று நினைவுச்சின்னமாக அறிவிப்பு செய்ய உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அவையும் மேற்கண்ட அலுவலர்களின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு உட்படும்.

 balakumaran-nadukal04

  வருவாய்த்துறையினரால் பேணப்படும் புலப்படச்சுவடியில் நடுகற்கள் அமைந்துள்ள இடத்தை ஒரு குறியீடு மூலம் நிலஅளவை செய்து சேர்க்க வேண்டும்.   ஊர் ஆட்சியலுவலர் பயன்படுத்தி வரும் அடங்கல் பதிவேடுகளில் நடுகற்கள் அமைந்துள்ள சர்வே எண்ணில் குறிப்புரை கலத்தில் ‘நடுகல்’ என்று எழுதி பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் அரசின் நேரடி கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் வரும். இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து நடுகற்களும்/மரபுச்சின்னங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

balakumaran-nadukal05ச.பாலமுருகன் , துணை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியகம், திருவண்ணாமலை

பேசி – 90475 78421 மின்வரி  balu_606902@yahoo.com

(தொடரும்)