மலேசிய மாநாடு:  அரசின் நிலைப்பாடு சரியே!

தனிநாயகம் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் 11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் இத்திங்கள் 7,8,9ஆம் நாள்கள் நடைபெற்றதை அனைவரும் அறிவோம். அதற்கடுத்த இரு வாரத்தில் மலேசியாவிலும் சட்டமுறைப்படி இல்லா அமைப்பால் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதையும் 11ஆவது மாநாடு என்றே அறிவித்துக் கொண்டனர். இம்மாநாடு குறித்துச் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பாசக ஆதரவாளரான தலைவர் ஒருவரால் நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்று வந்துள்ளது. துடிப்புடன் செயலாற்றும் மேனாள் அமைச்சர் ஒருவரும் இந்த மாநாட்டைத் தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தாராம். வாரம் இரு முறை இதழ் ஒன்று இம்மாநாட்டின் சிறப்பிதழ் போன்று வெளியிட்டது. அதில் பலரின் பேச்சுகளும் இடம் பெற்றிருந்தன. அத்துடன் “தமிழ் மணந்த மலேசியா! தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!” என அட்டைப்படக் கட்டுரை ஒன்றும் வெளிவந்துள்ளது. கட்டுரையாளர் எதையும் நன்கு ஆராய்ந்து சரி பார்த்துத் தன் மனத்தில் சரி என்றுபட்டால்தான் எழுதும் இயல்புடையவர். அத்தகையவரே தடம் புரண்டிருந்தார். ஏதேனும் அழுத்தமா எனத் தெரியவில்லை.

ஒருவேளை அவரது ஆசிரியர் பங்கேற்றதால் அம்மாநாடுதான் சரியெனக் கருதி எழுதிவிட்டாரோ என்ற ஐயத்தையும் அவரிடம் கேட்டேன். “மன்றத்தின் தலைவர் பொன்னவைக்கோ போட்டி மாநாட்டுத் தலைவரிடம் நீங்களே மாநாட்டை நடத்துங்கள்; எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கப்படவும் 200 கட்டுரையாளர்கள் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யுங்கள் என்று எழுதியுள்ளாரே. அப்படியானால் அதுதானே உண்மையான அமைப்பு” என மலேசிய மாநாட்டினர் தெரிவித்தனராம்.

தமிழால் ஒன்றுபட வேண்டுமே தவிரப் பிளவு படக்கூடாது என்பதன் அடிப்படையில் இணைந்து நடத்த இசைவு தெரிவித்ததற்கு இசையாமல் இவ்வாறான தவறான விளக்கம் தரப்படுகிறது என்றேன்.

கட்டுரையில் இடம் பெற்ற தகவல்கள் தவறு என்பதையும் சரியான தகவலையும் காண்போம்.

கட்டுரையின் தொடக்கத்தில் “மலேசியாவில் நடந்து முடிந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைக் கண்டு கொள்ளாததில் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் தமிழறிஞர்கள். அந்த மாநாட்டைச் சீர்குலைக்கப் போட்டி மாநாடு ஒன்றை நடத்தி  சர்ச்சையைச் சிலர் உருவாக்கியதாகத் தமிழறிஞர்கள் மத்தியில் குற்றச்சாடடுகளும் எழுந்துள்ளன.” எனத் தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு மாநாட்டிற்குப் போட்டி மாநாடுதான் மலேசிய மாநாடு எனப் பங்கேற்றவர்களுக்கே தெரியும். அவ்வாறிருக்க நேர்மாறாகக் கூறுவது ஏன்?

ஒன்பதாவது மாநாடு இருபது ஆண்டுகள் கழித்து 2015 ஆம் ஆண்டுசனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. ஒன்பதாவது மாநாடு முடிந்ததும் அதன் தலைவராக இருந்த சப்பானைச் சேர்ந்த நொபுரு கரோசிமா பதவி விலகினார். (கட்டுரைப்பகுதி)

நொபுரு கரோசிமா பொறுப்பாளர்களைக் கலந்து பேசாமல் உலகத்தமிழ் மாநாட்டை அறிவித்ததற்காக 2010 இலேயே பதவி விலகினார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியலறிஞர் குழந்தைத்தனமாக ‘மாிமுத்துவிடம் தலைவராக அறிவித்துக் கொண்டு மன்றத்தை நடத்துமாறு தெரிவித்தார். கேட்பாரற்றுக் கிடந்த மன்றத்தைத் தானே தலைவராக அறிவித்து ஏற்றுக் கொண்டு பிற பொறுப்பாளர்களையும் மாரிமுத்து அறிவித்துக் கொண்டார்.

“இந்த உயரிய மாநாட்டைத் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம்தான் தமிழறிஞர்களிடம் இப்போதும் மனக்கசப்பாக வெடித்துக் கொண்டிருக்கிறது.” (கட்டுரைப்பகுதி)

போட்டி அமைப்பாகத் தொடங்காமல் மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு சட்டப்படிப் புதிய அமைப்பாகப் பதிவு செய்து தமிழ்நாட்டரசிடம் பணம் கேட்டிருந்தால் அரசு தந்திருக்குமே என்றுதான் பேசிக் கொண்டார்களாம்.

மாநாட்டுக்கு எதிராக முனைவர் பொன்னவைக்கோ தலைமையிலான ஓர் அமைப்பு, உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவராக இருக்கும் பொன்னவைக்கோ தலைமையிலான அமைப்புதான் உலகத் தமிழராய்ச்சி மாநாடு நடத்தும் அதிகாரம் கொண்டது. வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை” எனத் தமிழக அரசுக்குப் புகார் தெரிவித்தது. (கட்டுரைப்பகுதி)

இவ்வாறு அரசிற்கு எதுவும் புகார் அனுப்பவில்லை. ஆனால், தொடக்கத்தில் அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு? (அகரமுதல, இதழுரை, 23.04.23) என்னும் கட்டுரையில், ஒரே அமைப்பின் பெயரில் ஏட்டிக்குப் போட்டியாக மாநாடுகள் நடத்துவது  இந்த அமைப்பைத் தோற்றுவித்த தனிநாயக அடிகளாருக்கும் அமைப்பில் முன்நின்ற அறிஞர்களுக்கும் இழுக்கு தேடுவதாகும். எனக் குறிப்பிட்டிருந்தோம்

 அதற்கும் முன்னதாகப் “பத்தாவது மாநாட்டுப் பொதுக்குழு தேர்ந்தெடுத்த முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையிலான குழுவினர்தான் உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் உண்மைப் பொறுப்பாளர்கள். எனவே, இவர்கள் எடுக்கும் முடிவே சரி. மாற்றுக் கருத்து இருந்தால் இக்குழுவில் தெரிவிக்க வேண்டுமேயன்றிப் போட்டிக் குழுவை உருவாக்கக் கூடாது. “ என அகரமுதல இதழில் (06.11.2022) “திருவள்ளுவரை இழிவு படுத்தும் சார்சா தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம்!” என்னும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

மேலும் மலேசியா மாநாட்டிற்கு எதிரானதல்ல தமிழ்நாட்டுமாநாடு. தமிழ்நாட்டு மாநாட்டிற்கு எதிரானதுதான் மலேசிய மாநாடு.

“அதேபோல, மலேசிய அரசுக்கும் உலகத்தமிழராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மாரிமுத்துவுக்கும் இதே புகாரை அனுப்பிய நிலையில் மலேசிய அரசும் மாரிமுத்து உள்ளிட்ட தமிழறிஞர்களும் இதனைப் புறந்தள்ளினர்.”

புறந்தள்ளியவர்கள் என்றால் பெயரை மாற்றிக் கொண்டது ஏன்? குருவிகள் போன்றவர்களிடமும் வெவ்வேறு வங்கிக்கணக்கிலும் பணம் பெறுவது சட்டப்படியான அமைப்பாக இருக்க முடியாது என்பதை மலேசிய அரசே உணர்ந்து கடிந்ததால், உலகத்தமிழாராய்ச்சி மன்றம் என்ற பெயரைக் கைவிட்டு உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் எனச் சூட்டிக்கொண்டனர். இதுவே மலேசிய அமைப்பு முறையற்றது என்பதை உணர்த்தி விட்டது. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் என்பதுகூடத் தமிழ்நாட்டிலுள்ள அரசு நிறுவனத்தின் பெயர். இதுவும் தவறுதான்.

ஆனால், தமிழக அரசோ, எது அசல் அமைப்பு? யாருக்கு அதிகாரம் இருக்கிறது எனத் தமிழ்வளர்ச்சித்துறை அதிகாரிகள் மூலம் விசாரிக்கச் சொன்னது. விசாரித்தனர். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக ஆதாரங்களின் அடிப்படையில் தெரிய வந்தது. (கட்டுரைப்பகுதி)

அரசு விசாரித்ததில் மலேசியாவில் சட்ட முறையான அமைப்பு இல்லை; மலேசிய அமைப்பால் அமைப்பின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்க இயலவில்லை. எனவே, கலைஞன் பதிப்பகம், இராசசராசன் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் கணக்கிலும் தனிப்பட்டவர்களின் அலைபேசிக் கணக்கிலும் பணம் பெற்றுள்ளார்கள். முறையற்ற பணப் பரிமாற்றம் செய்யும் அமைப்பிற்கு அரசு எப்படி ஊக்கம் கொடுக்கும்? தமிழ் என்ற பெயரைப்பயன்படுத்தி விளம்பரம் தேடும் வேடதாரிகளையும் கபடதாரிகளையும் அரசு ஊக்குவித்தது ஆகாதா? அரசு அதற்கு எவ்வாறு ஒத்துழைப்பு தரும்? என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

இதனையடுத்து, மலேசியா மாநாட்டை அங்கீகரிக்கும் வகையில் 1 கோடி உரூபாய் நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான காசோலை வழங்கத் தமிழ் வளர்ச்சித்துறையைக் கவனிக்கும் முதல்வரின் மூன்றாவது செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எசு. ஒப்புதலும் அளித்துள்ளார். மேலும் உதயநிதி, மற்றும் மூத்த அமைச்சர்கள் இரண்டு பேரை அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. (கட்டுரைப்பகுதி)

“மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது. இவர்களாகவே கடந்த மாநாட்டில் ஒரு கோடி உரூபாய் நன்கொடை தந்ததால் இப்போதும் பணம் தருவார்கள் என எண்ணிவிட்டார்களா? அல்லது துண்டு அணிவித்துப் படம் எடுத்துக்கொண்டதால் தங்களை ஏற்றுக் கொண்டார்கள் என எண்ணி விட்டார்களா? முறையற்ற அமைப்பிற்குப் பணம் அளித்தால் ஆளாளுக்கு அமைப்பைத் தொடங்கிவிட்டுத் தமிழ் என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொண்டு பணம் கேட்க மாட்டார்களா?” என்று சிரிக்கிறார்கள் செயலக அதிகாரிகள்.

ஆனால், நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரனோ நிதி உதவிக்கான ஒப்புதலைத் தரவில்லை. முதல்வரிடமுள்ள தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மாநாட்டிற்கு அமைச்சர்களை அனுப்பி வைக்கும் முடிவையும் தடுத்து விட்டார். மாநாட்டுக்கு எதிரான அமைப்பினரின் தூண்டுதல்தான் இதற்குக் காரணம்” எனக் கொதிக்கிறார்கள் தமிழறிஞர்கள். (கட்டுரைப்பகுதி)

நிதி ஒப்பளிப்பு என்ற பேச்சே எழாத போது தர வாய்ப்பில்லாத பணத்தை உதயசந்திரன் எப்படித் தடுக்க முடியும்? தொடர்பில்லாத சூழலில் அவர் மீது ஏன் வீண்பழி போடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை தமிழ்நாட்டிலிருந்து திரும்பிச் சென்று அமைச்சர் பட்டாளமே மாநாட்டிற்கு வரும், ஒரு கோடி உரூபாய் நன்கொடை தரும் என்று அளந்துவிட்டதால், அதைச் சமாளிக்கக் கதை கட்டுகிறார்களோ?

இதற்கிடையே, பொன்னவைக்கோ தலைமையிலான அமைப்பு, மலேசிய மாநாட்டிற்கு முன்னதாக அதே மாநாட்டை நடத்த திட்டமிட்டு சூலை 17,18, 19 தேதிகளில் சென்னையில் நடத்தியிருக்கிறது. (கட்டுரைப்பகுதி)

சூலை 7-9 இல் நடைபெற்றதைக்கூடத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நடத்துவதை அறிந்த பின்னரே மலேசியா மாநாட்டு நாள்களைக் குறிப்பிட்டனர் என்கின்றனர்.

மேலும், 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்ற பேரில் நடத்தக் கூடாது என்றும் மீறி நடத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாரிமுத்துவுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.  இந்தக் கடிதம் தமிழறிஞர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியது. (கட்டுரைப்பகுதி)

பொதுநல வழக்காக வழக்குரைஞர் தமிழ் இராசேந்திரன் புதிய அமைப்பின் தலைவருக்குச் சட்ட அறிவிக்கையை அனுப்பியிருந்தார். சட்டப்படியான அமைப்பான தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்ற பெயரில் மாநாடு நடத்தக்கூடாது என அனுப்பியிருந்தார். காவல் துறைத் தலைவருக்கும் தெரிவித்திருந்தார். முன்னதாக மலேசியத் தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. முறைகேடு நடக்கும் போது வாய்மூடி அமைதியாக இருக்க முடியுமா? பின் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்க மாட்டார்களா?

“அப்படி ஒரு கடிதம் எதற்காக எழுதப்பட்டது எனப் பொன்னவைக்கோ ஆதரவு தமிழறிஞர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, ” பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிகாகோ நகரில் நடந்து முடிந்தபோது, புதிய தலைவராகப் பொன்னவைக்கோ தேர்வு செய்யப்பட்டார். மாரிமுத்துவின் பதவிக்காலம்  முடிந்து விட்டது. அந்த வகையில் பொன்னவைக்கோ தலைமையிலான உலகத்தமிழராய்ச்சி மன்றத்திற்கு மட்டும்தான் 11ஆவது மாநாட்டை நடத்தஅதிகாரம் உண்டு. மாரிமுத்துவுக்கு அதிகாரம் இல்லை. அதனால்தான் எச்சரிக்கை கடிதம் அனுப்பி யிருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.” (கட்டுரைப்பகுதி)

உண்மைதானே! புதிய தலைவரும் பிற பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட  அக்குழுவினர்தானே மாநாட்டை நடத்த இயலும்?

மாநாடு முடிந்ததும் ஒரு கூட்டத்தைக் கூட்டினார் பொன்னவைக்கோ. கூட்டத்தின் முடிவில் திடீரென்று பொன்னவைக்கோ புதிய தலைவராக முன் மொழியப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்கள் சிலர் இதனைச் செய்தனர். ஆனால், புதிய தலைவர் குறித்த எந்த நிகழ்ச்சிக் குறிப்பும் (அசெண்டாவும்) இல்லாமலும் சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும இப்படி அறிவிக்கப்பட்டதைக் கூட்டத்தின் தலைவர் மாரிமுத்துவும் நிருவாகிகளும் ஏற்க மறுத்தனர். நிகழ்ச்சிப் பதிவேட்டிலும்(மினிட் புத்தகத்திலும்) கையெழுத்துப் போடவில்லை மாரிமுத்து. அதனால் பொன்னவைக்கோ தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது நீர்த்துப் போனது. தலைவராக முடியவில்லையே என்ற விரக்தியில் ‘வேர்ல்ட் தமிழ் ரிசர்ச்ச அசோசியேசன் என்ற அமைப்பைத் தனிப்பட்ட முறையில் தொடங்கி அதனைக் கம்பெனிச் சட்டவிதிகளின் கீழ்ப் பதிவு செய்துள்ளார் பொன்னவைக்கோ. அதனால் அவரது அமைப்பிற்கும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கும் சம்பந்தமில்லை..(கட்டுரைப்பகுதி)

நீங்களே சொல்லுங்கள்! 9ஆவதுமாநாட்டைச் சிறப்பாக நடத்தாமல் ஏகப்பட்ட குளறுபடி செய்த மாரிமுத்துவை மன்றத்தினர் நம்பவில்லை. எனவே, துணைத்தலைவர் பொன்னவைக்கோவை முன்னின்று நடத்தச் சொன்னார்கள். எனவேதான் அவர், சிகாகோ மாநாட்டில்  அங்குள்ள அமைப்பினர் ஆதரவைப் பெற்றார். இவரையே அடுத்த தலைவராகக் கொண்டுவரவேண்டும் என்று அமைப்பினரும் முடிவெடுத்தனர். இதை அறிந்த மாரிமுத்து தான் வெளியேற்றப்பட்டால் தனக்கு அவமானம் எனக் கருதித் தன் பதவி ஆசையை மறைத்துக் கொண்டு புதிய தலைவரை வரவேற்றார்.

தலைவர் முதலானவர்கள் தேர்தல் முறைப்படியே நடந்தது. உ.த.ம.தளத்தில் ‘செயற்குழு கூட்டங்களும் குறிப்புகளும்’ என்னும் தலைப்பில் “வரிசை எண் 11: சூலை மாதம் 5-ஆம் தேதி மாலை சிக்காகோவில் 10-ஆவது ஆராய்ச்சி மாநாட்டின் போது நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பொதுக்குழுக்குழுக் கூட்டப்பொருள்” என உள்ளது. இதைச் சொடுக்கிப் பார்த்தால் வரிசை எண் 5இல் அடுத்த இரண்டாண்டுகளுக்கான மையக்குழு உறுப்பினர் தேர்வு என இருக்கும். தலைவர் மாரிமுத்து, பொறுப்புகளுக்குப் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு உறுப்பினர்களைக் கேட்டார்.  முனைவர் பிரான்சிசு முத்து பொன்னவைக்கோ முதலானவர்களைத் தலைவர் முதலான பதவிகளுக்குப் பரிந்துரைத்தார். அவையும் ஏற்றுக் கொண்டு அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்விவரமும் பதிவில் இருக்கும்.

தேர்தலை நடத்தும் பொழுது தலைவராக இருந்த மாரிமுத்து புதிய தலைவருக்குக் கைகுலுக்கி வாழ்த்தைத் தெரிவித்தார்.  அப்போதைய அமைச்சர் மாஃபா.பாண்டிய ராசன் தமிழ்நாட்டு அரசின் நிதிக்கொடையான உரூ1 கோடிக்கான காசோலையைப் புதிய தலைவரான பொன்னவைக்கோவிடமே அளித்தார்.

எனவே, கூட்டத்தின் தலைவர் மாரிமுத்துவும் நிருவாகிகளும் ஏற்க மறுத்தனர் என்பது அப்பட்டமான பொய். வாதத்திற்காக அதை உண்மை என எடுத்துக் கொண்டாலோ முறைப்படி தேர்தல் முடிந்த பின் மறுத்ததாகப் புலம்புவதால் பயனில்லை.

தன் தலைமையில் புதிய பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டுத் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்னும் பொய்யரை அரசு எப்படி நம்பும் என்கின்றனர் அவர் அருகில் உள்ளோரே!

ஒரு மாநாட்டு முடிவில் அடுத்த பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் மரபைப் பின்வற்றி முறைப்படி அறிவித்து, முறைப்படித் தேர்தல் நடத்தி முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை முறையற்ற முறையில் பதவி ஆசையால் சாெந்தம் கொண்டாடும் ஒருவர் முறையற்றதாகப் புலம்புவது பொருந்துமா? என்பதே தமிழறிஞர்களின் கேள்வி.

வழக்குரைஞர் தமிழ் இராசேந்திரன் உண்மையான அமைப்பின் பெயரில் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என மாநாட்டை நடத்தக்கூடாது என அறிவிக்கை மடல் அனுப்பினார். மலேசியக் காவல்துறையும் கிடுக்கிப் போட்டது. எனவேதான் பெயரை மாற்றிக் கொண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் நடத்துவதாகத் தெரிவித்தார். அவர் அமைப்புதான் உண்மையான அமைப்பு என்றால் ஏன் பெயரை மாற்ற வேண்டும். தாங்கள்தான் உண்மையான அமைப்பு என்று பெயரை மாற்றாமல் இருந்திருக்கலாமே என மலேசிய நண்பர்களே கேட்கின்றனராம்.

மேலும், வழக்குரைஞர், தடையாணை பெற்று மாநாட்டைத் தடுத்து விடலாம் என்றிருக்கிறார். திடீர்ப் பொறுப்பாளர்கள் தோன்றித் தவறு செய்வதால் அதை நம்பி வர ஏற்பாடு செய்வோர் அல்லல் படுவா்கள். மாநாட்டை நிறுத்த வேண்டா. சட்டஅமைப்பின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தால் போதும் என்றுதான் தமிழ்நாட்டு அமைப்பினர் சொல்லியிருக்கிறார்கள்.

முறையற்ற அமைப்பு நடத்தும் மாநாடு எனக் கேள்விப்பட்ட பலர் மாநாட்டிற்குச் செல்லவில்லை. பணம் கட்டிவிட்டோமே என்று பலர் சென்றனர். சென்றவர்கள் அரசியல் மாநாடுபோல் நடத்துகிறார்களே என வருத்தப்பட்டனர். கனடாவிலிருந்து ஒருவர் நீண்ட நேரம், தமிழ்ப்பற்று மிக்க கனடா வாழ் தமிழர்கள் மலேசியா மாநாடு அறிவுப்புலமாக இல்லாமல் அரசியல் சந்தையாக இருந்ததற்கு வெட்கப்படுவதாகக் கூறியுள்ளார். ஈழப் பெண்மணி ஒருவர், “ஆராய்ச்சிக்கான மாநாட்டை அரசியலுக்கானதாக மாற்றிவிட்டார்களே! அதற்கு இனி இடம் கொடுக்காதீர்கள்” என்று சொல்லியுள்ளார். சென்னையில் ஆராய்ச்சி அறிஞர்களை அழைத்துப் பேச வைத்துள்ளீர்கள். உங்களால் அரசியல் வாதிகளை அழைக்க முடியாதா என்ன? ஆனால் ஆராய்ச்சி மாநாடு ஆராய்ச்சியாளர்களைக் கொண்டுதான்நடத்த வேண்டும் எனக் கடைப்பிடித்துள்ளீர்கள். கூட்டம் மிகுதியாக இருந்தாலும் மலேசியா மாநாடு ஏமாற்றமே.

தமிழைப் போர்வையாகக் கொண்டு செயற்படும் பாசகவின் ஆதரவாளர்கள் மாநாடுதான் இது. எனவேதான் பாசக பிரமுகர் பேசியுள்ளார். மதத் தலைவர்களைப் பேச வைத்துள்ளார்கள். “திராவிட அரசியல் குப்பை” என்று பேசியுள்ளனர். தமிழ் நாட்டில் அரசியல் கலப்பு இன்றி மாநாடு நடத்தியுள்ளீர்கள். என்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு தமிழை மதிப்பதால்தான் அயலகத் தமிழறிஞர்கள் பங்கேற்கும் மாநாட்டிற்கு வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மசுதான் தமிழ்நாட்டு அரசின் சார்பில் பங்கேற்றார். நிகழ்விடத் தொகுதி தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பின் பேரா.தமிழச்சி தங்க பாண்டியனும கலந்து கொண்டார். சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் திரு பீட்டர் அல்போன்சும் பங்கேற்று வாழ்த்தினார். முதல்வரும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார். இது அரசு தமிழை மதிப்பதற்கு எடுத்துக்காட்டு. ஒரு வேளை இவர்கள் நிதியுதவி கேட்டு முறையாக விண்ணப்பித்திருந்தால் நிதியுதவியும் அளித்திருக்கும். இவ்வாறிருக்க  முறையற்ற அமைப்பைப் பொருட்படுத்தாமையைப் பாராட்டாமல் குறை சொல்வது எங்ஙனம் முறையாகும்?

சென்னையிலும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அழைத்திருந்தால் அனைவரும் வந்திருப்பர். ஆனால், மலேசியா மாநாடு போல் அரசியல் மாநாடுபோல் மாறியிருந்திருக்கும்.

செய்தியாளருக்கு, மாநாடுகள் தொடர்பான குழப்பம் இருந்தால், அப்போதைய தலைவர் முனைவர் மு.பொன்னைக்கோ, செயலர் முனைவர் உலகநாயகி, மாநாட்டு ஏற்பாட்டாளர் முனைவர் சான் சாமுவேல் ஆகியோரிடம் வினவி உண்மையைத் தெரிந்து எழுதியிருக்கலாம் அல்லவா? தவறுகள் நிறைந்த செய்திக்கட்டுரையை வெளியிடலாமா?

பொன்னவைக்கோ மறுப்பு மடல் கொடுத்தால் வெளியிடுவதாகச் சொன்னதற்கு இதழுக்கு நன்றி. எனினும் இதழ் முழக்கங்களில் ஒன்றான உண்மையை மறந்து உண்மைக்கு மாறானவற்றை நிரப்பியே கட்டுரை வெளியிட்டு இருப்பதும் முறைதானா? நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே எனத் துள்ளி எழுந்து தவறான கட்டுரைக்கான வருத்தத்தைத் தெரிவித்து உண்மையை வெளியிடுமா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல-இதழுரை: ஆடி 15, 2054 / 31.07.2023