(ஊரும் பேரும் 62 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – விண்ணகரம் – தொடர்ச்சி)

சமணமும் சாக்கியமும்
எட்டு மலைகள்


முன்னாளில் சமண சமயம் தமிழ் நாட்டில் பல பாகங்களிற் பரவியிருந்ததாகத் தெரிகின்றது. சமண முனிவர்கள் பெரும்பாலும் தலைமை நகரங்களின் அருகே தம் தவச் சாலைகளை அமைத்துச் சமயப்பணியாற்றுவாராயினர். பாண்டி நாட்டில், நெடுமாறன் அரசு புரிந்த ஏழாம் நூற்றாண்டில் சமண மதம் எங்கும் ஆதிக்க முற்றிருந்த பான்மையைப் பெரிய புராணம் குறிப்பிடுகின்றது.1 அக்காலத்தில் மதுரையின் அருகேயுள்ள குன்றுகளைச் சமண முனிவர்கள் தம் உறையுளாகக் கொண்டிருந்தார்கள் என்பது திருஞான சம்பந்தர் தேவாரத்தால் தெரிகின்றது. ஆனை மாமலை ஆதியாய இடங்களில் சமணர் வாழ்ந்தனர் என்று அவர் குறித்தவாறே மற்றொரு பழம் பாட்டும் எட்டு மலைகளை எடுத்துரைக் கின்றது.


“பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி அருங்குன்றம் பேராந்தை ஆனை

-இருங்குன்றம் என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச் சென்றெட்டு மோபிறவித் தீங்கு”
என்ற பாட்டிலுள்ள பரங்குன்றம் என்பது மதுரைக்குத் தென் மேற்கிலுள்ள திருப்பரங் குன்றமாகும். ஆனையென்பது வடகிழக்கிலுள்ள ஆனை மலை; இருங்குன்றம் என்பது அழகர் மலை. இவ்வெட்டு .இருந்த சமண முனிவர் எண்ணாயிரவர் என்பர்.3 சிராப்பள்ளி
சோழநாட்டின் தலைநகரமாக விளங்கிய உறையூரின் அருகேயமைந்த சிராப்பள்ளிக் குன்றத் திலும் சமண முனிவர்கள் இருந்ததாகத் தெரிகின்றது. அக்குன்றின் மீதுள்ள குகைக் கோயிலில் சிவபெருமானது திருவுருவத்தை நிறுவிய மன்னன் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திர வர்மன் என்பது சாசனத்தால் விளங்கும்.4

திருமலை


வட ஆர்க்காட்டில் திருமலை என்னும் குன்றம் ஒன்றுண்டு. அது வைகானுரை அடுத்திருத்தலால் வைகைத் திருமலை எனவும் வழங்கும். மன்னரால் மதிக்கப் பெற்ற சமண முனிவர்கள் அம்மலையில் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. இராசராச சோழன் காலத்தில், “கொலை புரியும் படையரசர் கொண்டாடும் குண வீரமா முனிவன்” என்று புகழப்படுகின்ற ஒரு முனிவர் திருமலை யேரிக்குக் கலிங்கு கட்டி, வைகை மலையின் இரு மருங்கும் நெல் விளையக் கண்டு களித்தார் என்று அம்மலைக் கல்வெட்டொன்று கூறுகின்றது.5
இராசராசன் தமக்கையாராகிய குந்தவைப் பிராட்டியார் வைகைத் திருமலையில் ஒரு சினாலயம் அமைத்தார். அது குந்தவை சினாலயம் என்று பெயர் பெற்றது.6 பொன்னுரைச் சேர்ந்த ஒரு நங்கை அம்மலையில் அருகன் திருவுருவை நிறுவினாள். “பொன்னெயில் நாதனை வைகைத் திருமலைக்கு ஏறியருளப் பண்ணினாள் அந் நல்லாள்” என்று சாசனம் கூறுகின்றது.7 இங்ஙனம் சிறப்புற்று விளங்கிய வைகைத் திருமலையை அருகதேவனுக்குரிய மலையாகச் சமணர் கருதுவாராயினர். தமிழ் நாட்டின் வடக்கெல்லையிலுள்ள வேங்கடமலை நெடியோன் குன்றம் என்று கூறப்படுதல் போலவும், பொதிய மலை அகத்தியர்மலை என்று குறிக்கப்படுதல் போலவும், அருகதேவன் வீற்றிருந்த திருமலை “எண் இறை திருமலை” என்று கல்வெட்டிற் கொண்டாடப்படுகின்றது. எண்குணன் என்பது அருகனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. எனவே, அருகதேவனுக் குரிய மலைகளுள் மிகச் சிறந்ததாக இத்திருமலை கொள்ளப்பட்டதென்பது இனிது விளங்கும்.8

திருவோத்தூர்
ஆர்க்காட்டு நாட்டில் செய்யாற்றின் வடகரையிலுள்ள திருவத்தூர் என்னும் திருவோத்தூர் சமண சமயத்தார் சிறந்து வாழ்ந்த தலங்களுள் ஒன்றென்று தெரிகின்றது. அவ்வூரில் சைவத்திற்கும் சமணத்திற்கும் நிகழ்ந்த புனல் வாதத்தில் தோல்வியுற்ற சமணர்கள் பலவகையான கொடுமைகளுக்கு உள்ளாயினர் என்று புராணம் கூறும். இதற்குச்சான்றாக அங்குள்ள சிவாலயச் சுற்றுச் சுவரில் சில சிற்பங்களும் உள்ளன. அழிந்து போன சமணக் கோயிலின் அடிப்படை இன்றும் காணப்படும். ஒத்து என்பது சமண சமயத்தில் வேதத்தைக் குறிப்பதற்குப் பெரிதும் வழங்குகின்ற சொல்லாதலால், வேதப் பெயரைச் சமணர் அவ்வூருக்கு இட்டிருந்தார்கள் என்று தோற்றுகின்றது.

திரக்கோல்
வந்தவாசிக்கு எட்டு கல் தூரத்தில் திரக்கோல் என்னும் ஊர் உள்ளது. அங்குள்ள குன்றின் மீது மூன்று குகைகளும், மூன்று சினாலயங்களும் காணப்படுகின்றன. அக்கோயில்களின் அடியாகத் திருக்கோயில் என்னும் பெயர் அவ்விடத்திற்கு அமைந்த தென்றும், அதுவே திரக்கோல் ஆயிற்றென்றும் தெரிகின்றன.10


திருநாதர் குன்றம்
வட ஆர்க்காட்டுச் செஞ்சி மலையில் திருநாதர் குன்றம் என்னும் பெயருடைய பெரும் பாறை யொன்று உண்டு.அங்கு இருபத்து நான்கு சைன வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இன்றும் அக் குன்றில் திருநாதர் வழிபாடு நடைபெறுகின்றது. அவரைப் போற்றிப் பாடிய பதிகமும் உண்டு.11

திருப்பருத்திக் குன்றம்
தொண்டை நாட்டில் வேகவதியாற்றின் கரையிலுள்ள திருப்பருத்திக் குன்றம் முன்னாளில் காஞ்சிமாநகரின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. செம்பொற் குன்று என்ற பெயரும் அக்குன்றுக்கு உண்டு என்பது அங்குள்ள கல்வெட்டுகளால் அறியப்படுவதாகும். சாசனங்களில் சின காஞ்சி (சமண காஞ்சி) யென்று அப்பகுதி குறிக்கப் படுகின்றது. பொற்குன்றம் என்ற பெயரே பருத்திக் குன்றம் என மருவிற் றென்று கூறுவர் சிலர். அருணகிரி யென்னும் வடமொழிப் பெயரும் அதற்கு வழங்கியதாகத் தெரிகின்றது. அருணன் என்பதும், பரிதி யென்பதும் சூரியனைக் குறிக்கும் சொற்களாதலால் பரிதிக்குன்றம் என்று அம் மலை பெயர் பெற்றுப் பின்பு பருத்திக் குன்றமாயிற் றென்று கருதலும் ஆகும்.14 திருப்பருத்திக் குன்றத்தில் சிறந்து விளங்குவது வர்த்தமான திருக்கோயில்.
அப்பதியில் சீலமும் புலமையும் வாய்ந்த முனிவர் பலர் முன்னாளில் வாழ்ந்தார்கள். அன்னவருள் ஒருவர் வாமன முனிவர். மேரு மந்தர புராணம் என்னும் தமிழ் நூலின் ஆசிரியர் இவரே. “தூயதவன் ராசராசன்” என்று வாமனர் போற்றப்பட்டிருத்தலால், தவ நெறியிலே தலை நின்றவர் இவர் என்பது விளங்கும். வட மொழியும் தென் மொழியும் நிலைகண்டுணர்ந்த இம் முனிவர்க்கு மல்லிசேணர் என்ற பெயரும் உண்டென்று சாசனம் கூறும்.
இவருடைய மாணாக்கராகிய புட்பபசேன முனிவர், சீலமும் புகழும் வாய்ந்து விளங்கினார். முனி புங்கவன் என்றும், பரவாதி மல்லன் என்றும் சாசனங்கள் கூறுமாற்றால் இவருடைய தவப்பெருமையும் வாதத் திறமையும் இனிது அறியப்படும். அக் காலத்தில் விசய நகர அரசாங்கத்தில் படைத் தலைவராகவும், மந்திரத் தலைவராகவும் அமர்ந்து, ஆன்ற சிறப்புடன் வாழ்ந்த இருகப்பர் என்பவர் இம் முனிவரிடம் மிகவும் ஈடுபட்டிருந்தார். இவர் ஆணையைச் சிரமேற் கொண்டு ஒழுகினார்; திருப்பருத்திக் குன்றத்தில் இருகப்பர் கட்டிய சங்கீத மண்டபம் இன்றும் காணப்படுகின்றது. விசய நகர மன்னரது ஆன்ம நலத்தின் பொருட்டு மகேந்திர மங்கலம் என்னும் ஊரைத் திருப்பருத்திக் குன்றத்து நாயனார்க்கு இவர் வழங்கினார்.15 திருக்கோயிலின் மருங்கே பழமையான குராமர மொன்று உள்ளது. “தென் பருத்திக் குன்றமர்ந்த கொங்கார் தருமக்குரா” என்று புகழப்படுகின்ற அத்தருவின் அடியில் முனிவர் மூவர் அமர்ந்து நெடுந்தவம் முயன்றனர் என்று சாசனம் கூறும்.16 அம் மரம் இன்றும் தெய்வத் தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
முன்னாளில் காஞ்சியில் வாழ்ந்தவரும், பெளத்தரை வாதில் வென்று ஈழநாட்டிற்கு ஓட்டியவருமாகிய அகளங்கன் என்னும் சமண முனிவர் பெருமை, திருப்பருத்திக் குன்றத்தில் கருண பரம்பரையாக வழங்குகின்றது. அவருக்குப் பின்பு வந்த முனிவர்கள் பலரெனினும் சிலரைப் பற்றிய செய்தியே இப்பொழுது கிடைத்திருக்கின்றது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில், சந்திர கீர்த்தி யென்ற முனிவரும், அவர் மாணாக்கராகிய அனந்த வீரியரும் திருப்பருத்திக் குன்றத்தில் விளங்கினர். எனவே, கல்வியே கரையிலாத காஞ்சிமா நகரம் என்ற புகழுரைக்குச் சான்றாக நின்ற சமண காஞ்சியில் ஆன்றோர் பலர் வாழ்ந்தனர் என்பது நன்கு அறியப்படும்.

திருப்பறம்பூர்
காஞ்சிபுரத்திற்குப் பத்து கல் அளவிலுள்ள திருப்பறம்பூரில் பாடல் பெற்ற ஒரு சினாலயம் உள்ளது. பெளத்தரை வாதில் வென்று பெரும் புகழ் பெற்ற அகளங்கன் என்னும் முனிவர் அங்குள்ள முனி கிரியில் தவம் புரிந்து மேம்பட்டார் என்று வரலாறு கூறுகின்றது. இன்றும் அவ்வூரில் சமணர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

அருங்குளம்
திருத்தணிகை மலைக்குக் கிழக்கே எட்டு கல் தூரத்தில் அருங்குளம் என்னும் சிற்றூா் ஒன்று உள்ளது. அவ்வூரில் சமண சமயத்தார்க்குரிய கோயில் இன்றும் காணப்படுகின்றது. தருமசாகரர் என்னும் தீர்த்தங்கரர் அங்கு அமர்ந்துள்ளார். ஆதியில் அருகன் குளம் என்று பெயர் பெற்ற ஊர் இப்போது அருங்குளம் என வழங்குகின்றது.17

(தொடரும்)
ஊரும் பேரும், இரா.பி.சேது(ப்பிள்ளை)

அடிக் குறிப்பு

1.“கன்னிநா டமனர் தம்மால் கட்டழிந் திழிந்து தங்கள்
மன்னனும் அவர்கள் மாயத் தழுந்த”
-திருஞான சம்பந்தர் புராணம், 613

2. பெருந்தொகை, 183.

3. பெருந்தொகை, 1560, 2020. அழகர் மலையில் இப்பொழுது பஞ்ச பாண்டவர் படுக்கை என வழங்குவது சமண முனிவர்கள் வதிந்த இடம் போலும்.

4. தெ.இ.க. தொகுதி 1(S. I. I., Vol. I, pp.)பக். 28, 30,

5. தெ.இ.க. தொகுதி ப.95.
6. மேற்படி பக். 97.

7. திருநாதர் குன்றப் பதிகம்.

8. மேற்படி பக். 102.

9. மேற்படி பக்.106.

10. வடஆர்க்காட்டு ஏடு தொகுதி 2, பக்.308.

11. செவெல்லின் பழம் பொருள்கள்(Sewell’s Antiquities. p.) பக். 170.

12. திருப்பருத்திக் குன்றமும் இதன் கோயில்களும், டி.என்.இராமச்சந்திரன் பக். 2.

13.திருப்பருத்திக் குன்றத்தில் சமய முனிவர்கள் சமாதி கொண்ட இடம் இன்றும் அருணகிரி மேடு என்று வழங்கும்.

14. பரிதி நியமம் என்னும் பாடல் பெற்ற தலம் இப்போது பருத்தியப்பர் கோயில் என வழங்குதல் காண்க.

15. திருப்பருத்திக் குன்றமும் இதன் கோயில்களும் ப.57.

16. மேற்படி பக். 59.

17. வடஆர்க்காட்டு ஏடு தொகுதி 2, 387.