(உ.வே.சா.வின் என் சரித்திரம் 68 : ஆறுமுக பூபாலர் – தொடர்ச்சி)

என் சரித்திரம் – அத்தியாயம் 41 தொடர்ச்சி
ஒரு செய்யுள் செய்

இவ்வளவு சாக்கிரதையாக ஏற்பாடு செய்து கொண்டு விழிக்கும்
ஆறுமுகத்தா பிள்ளையிடம் காலையில் நான் போய், “என் புத்தகத்தைக்
காணவில்லை” என்று சொல்லுவேனானால் அவருக்குக் கோபம் வருமென்பதை
நான் அறிவேன். ஆகையால் அவரிடம் சொல்லலாமென்று என் ஆசிரியர் கூறிய பின்பும், நான் பேசாமல் வாடிய முகத்துடன் அங்கேயே நின்றேன்.

‘ஒரு செய்யுள் செய்யட்டும்’

சிறிது நேரத்திற்குப் பின் ஆறுமுகத்தா பிள்ளை துயில் நீங்கி எழுந்து
அவ்வழியே சென்றார். செல்லும் போது நான் சும்மா நிற்பதைப் பார்த்து, “ஏன்
இவர் சும்மா நிற்கிறார்? பாடம் கேட்பதற்கு என்ன?” என்று சொன்னார். என்
ஆசிரியர் மெல்ல, “இவர் புத்தகம் வைத்த இடத்தில் அது
காணப்படவில்லையாம்” என்றார்.

“அப்படியா சமாசாரம்? படிக்கிற புத்தகத்தைக்கூட ஒழுங்காக வைத்துக்
கொள்ளாதவர் என்ன படிக்கப் போகிறார்?
இவருக்கு ஐயா பாடம் சொல்வது
வீணான காரியம். படிப்பதில் ஊக்கமிருந்தால் இவர் இவ்விதம்
கவலையில்லாமல் இருப்பாரா?” என்று அவர் சொல்லிக்கொண்டே
போய்விட்டார்.

“இப்படியே புறப்பட்டு ஊருக்குப் போய்விடலாமா?” என்று கூட
எனக்குத் தோன்றிவிட்டது. அவர் கூறிய வார்த்தைகளுக்குப் பதில் கூறும்
துணிவு எனக்கு உண்டாகவில்லை.

மறுபடியும் அநத் மனிதர் வந்தார்: “இவர் இவ்வளவு காலமாகப் படித்து
வருகிறாரே; தமிழில் இவருக்கு ஏதாவது பயிற்சி ஏற்பட்டிருக்கிறதா? நீங்கள்
வருந்தி வருந்தி ஓயாமல் பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்களே; இவர் நன்றாகச்
சிந்தனை செய்து அறிந்து கொள்ளுகிறாரா? உங்களுடன் பழகும் இவர்
ஒழுங்காகப் பாடம் கேட்டிருந்தாரானால், இப்போது தமிழில் செய்யுள் இயற்றும்
பழக்கம் இவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமே. எங்கே, இப்போது இவரை ஒரு
செய்யுள் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம்
. நான் போய் வருவதற்குள் ஒரு
செய்யுளை இயற்றி இவர் சொன்னால் இவர் புத்தகங்கள் எங்கே இருந்தாலும்
வருவித்துக் கொடுக்கிறேன்; இல்லையானால் புதிய புத்தகங்களை வாங்கித்
தருகிறேன்” என்று சொன்னார்.

தம்பியின் விசயமாகவே ஒரு செய்யுள் செய்து சொல்லும்,
பார்க்கலாம்” என்று ஆசிரியர் என்னை நோக்கிக் கட்டளையிட்டார்.

ஆறுமுகத்தா பிள்ளை நானாகச் செய்யுள் செய்கிறேனா என்பதைக்
கவனிக்கும் பொருட்டு ஒருவரைக் காவல் வைத்து, “நான் வருவதற்குள்
செய்யுளை இயற்றிச் சொல்ல வேண்டும்” என்று எச்சரிக்கையும் செய்து
சென்றார்.


‘மாறுமுகச் செம்மல்’

பிள்ளையவர்கள் என்னை அழைத்துக் கொண்டு வேறிடம் சென்றார்.
அப்போது எனக்குக் காவலாக இருந்தவரும் உடன் வந்தார். நாங்கள் செல்லும்
போதே நான் ஒரு வெண்பாவை மனத்துக்குள் இயற்றி முடித்தேன்; அதனை
ஆசிரியருக்குச் சொல்லிக் காட்ட நினைந்து, “சீர்மருவு மாறுமுகச் செம்மலே”
என்று ஆரம்பித்தேன். அதைக் கேட்டவுடன் பிள்ளையவர்கள், “இருக்கட்டும்”
என்று கூறி விட்டு எங்களுடன் வந்தவரிடம், “நீர் போய்த்
தவசிப்பிள்ளையிடம் என் பூசைக்கு இடம் பண்ணும்படி சொல்லிவாரும்” என்று
கூறி அவரை அனுப்பினார். பின்பு என்னை நோக்கி, “நீர் சொல்லிய
தொடர்களைச் சீர்மருவும் மாறுமுகச் செம்மலே என்றும் பிரிக்கலாம். தம்பி
அதைக் கேட்டால் கோபித்துக் கொள்வார்.
இவ்வித தவறான அருத்தம்
தோன்றும்படிச் செய்யுள் செய்தல் கூடாது” என்று அறிவித்ததோடு ஒரு
வெண்பாவை எனக்காக முடித்து என்னிடம் சொன்னார். நான் அதை மனனம்
செய்து கொண்டேன்.

அந்தச் செய்யுள்

ஆறுமுகத்தா பிள்ளை அப்பக்கம் வரவே நான் அவரிடம் சென்று
மிக்க பணிவோடு என் ஆசிரியர் பாடித் தந்த செய்யுளைச் சொன்னேன்.

ஆறுமுக பூபால வன்பிலார் போலென்பால்
மாறுமுகங் கொண்டால் மதிப்பவரார்-கூறுதமிழ்
வாசிக்க வந்தவென்மேல் வன்மமென்ன யாவருமே
நேசிக்கு மாதயை செய் நீ”

என்ற அந்த வெண்பாவை நான் சொல்லும்போதே அவர் முகத்தில்
சிறிது சந்தோசத்தின் குறிப்புத் தோற்றியது. அவரைப் பூபாலரென்று
சொன்னதில் அதிகமான சந்தோசம் உண்டாயிருக்க வேண்டும். அவருடைய
முகத்தைக் கவனித்துக் கொண்டே பாடலைச் சொல்லி வந்த நான். “நல்ல
வேளையாக, இப்பாட்டில் குற்றம் கண்டு கோபம் கொள்ள மாட்டார்” என்று
தெரிந்து சிறிது ஆறுதல் அடைந்தேன்.

கண்டத்தினின்று தப்பியது

“இனிமேல் நன்றாகப் பாடம் கேட்டு வாரும்; சோம்பேறித்தனத்தை
விட்டு விடும்.
செய்யுள் இயற்றிப் பழகும்” என்று அவர் எனக்கு ‘உபதேசம்’
செய்யத் தொடங்கினார். அப்போது ஒரு வேலைக்காரன் என் புத்தகக்
கட்டையும் மாயூரப் புராணத்தையும் எடுத்து வந்தான். அவனிடமிருந்து மாயூரப்
புராணத்தை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டுப் புத்தகக் கட்டை முன்
இருந்த இடத்திற் கொண்டுபோய் வைக்கும்படி கட்டளையிட்டார். நான்
அப்புராணத்தைப் பெற்று என் ஆசிரியர் இருந்த இடம் சென்றேன். “ஒரு
பெரிய கண்டத்திலிருந்து தப்பினோம்” என்ற எண்ணத்தோடு அவரை அணுகி
நிகழ்ந்தவற்றைச் சொன்னேன்.

அவர் செய்யுள் செய்யும் முறைகளைச் சிறிது நேரம் உதாரணங்களுடன்
சொல்லி விளக்கினார். பிறகு மாயூரப்புராணத்தில் விட்ட இடத்திலிருந்து பாடம்
கேட்க ஆரம்பித்தேன்.

ஆறுமுகத்தா பிள்ளையின் ஆக்ஞைப்படி நானாக இயற்றிய பாட்டு என்
மனத்தில் பிறந்தது; அது வெளிப்படாமலே நின்று விட்டது. நானும் அதை
மறந்து விட்டேன். “சீர்மருவு மாறுமுகச் செம்மலே” என்ற பகுதியை மாத்திரம்
நான் நினைவில் வைத்திருக்கிறேன். இயல்பாகவே நிமிசத்திற்கு நிமிசம்
மாறும் முகச் செம்மலாகிய ஆறுமுக பூபாலர் என் சொந்தப் பாட்டைக்
கேட்டிருந்தால் என்னை என்ன பாடுபடுத்தி வைத்திருப்பாரோ, கடவுளே
அறிவார்!

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.