(சட்டச் சொற்கள் விளக்கம் 196 – 200 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  201-205

201. absolute conveyance  முழுமை உரித்து மாற்றம்  
முற்றுரிமை மாற்றம்‌  
முழு உடைமை மாற்றம்  

உரித்து என்றால் உரிமை உடையது எனப்பொருள்.

“பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப” என்கிறார் தொல்காப்பியர்(தொல்காப்பியம் 955).  
202. absolute decreeமுழுமைத் தீர்ப்பாணை

இறுதியாக வழங்கப்பெறும் தீர்ப்பாணையே முழுமையான தீர்ப்பாணை யாகும்.  

மணவிலக்கு வழக்கில், மணவிலக்கு நடைமுறையை முடிக்கும் இறுதி ஆணையாகும். அஃதாவது திருமணத்தை முடிவிற்குக் கொணர்ந்து மணவிலக்கு அளித்து விரும்பினால் மீண்டும் திருமணம் செய்ய வாய்ப்பளிப்பது.
    
203. absolute deedமுழுமைச் சொத்தாவணம்  

வரம்போ தடையோ இன்றிச் சொத்தை மாற்றுவதற்கான ஆவணமே முழுமையான சொத்தாவணம்.  

அடைமானம் வைத்தவர் அடைமான விதிமுறைகளை நிறைவேற்றியபின் அவருக்கு உரிமை மாறும் அடைமான ஆவணத்திலிருந்து மாறுபட்டது.
204. Absolute dischargeதண்டனை முழு விலக்கு  

நிபந்தனையிலித் தண்டனை விலக்கு  

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கெதிரான குற்றச்சாட்டும் குற்றமும் எவ்வகைத்தண்டனையின்றியும் விலக்கப்படும். இது தொடர்பான எத்தகவலும் பதிவும் தண்டனை விலக்கு வழங்கப்பட்ட ஓராண்டிற்குப் பின்னர் யாருக்கும் வெளிப்படுத்தப்பட மாட்டாது.
205. absolute discretionமுழுமையான உளத்தேர்வு  

முழுமையான நிறைவான முடிவெடுக்கும் அதிகாரம்.  

முடிவெடுக்கும் இவ்வதிகாரம் வேறு எவ்வகையிலும் மட்டுப்படுத்தப் படாதது.  

முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பெற்றவர்,

எவ்வகை முடிவெடுக்கலாம் என்ற சிக்கல் வரும் பொழுது தன் மனச்சான்று சரி யென்று சொல்வதைத் தேர்ந்து முடிவு காண்பதால்  உளத்தேர்வு எனப்படுகிறது.   எந்த வகையிலும் வரையறுக்கப்படாத அல்லது மாற்றியமைக்கப்படாத முதற்பணத்தை(principal) அறக்கட்டளையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயனாளிகளின் நலனுக்காகப்பகிர்ந்தளிப்பதையும் குறிக்கும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்