(சட்டச் சொற்கள் விளக்கம் 306-310 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

311. Acceptableஏற்கத்தக்கது  

ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதியோ திறனோ உடையது.

ஏற்கத்தக்க ஒலி அளவு.

மன்பதையில் ஏற்கத் தக்க நடத்தை.  

இரு தரப்பும் ஏற்கத் தக்க இணக்கத் தீர்வு.

நடைமுறை, செயல்முறை, அல்லது கொள்கையை மதிப்பாய்வு செய்து ஏற்றல்.
312. Acceptable reliability levelஏற்பு நம்பக அளவு  
ஒரு பொருளின் நம்பகத் தன்மை குறித்த அளவு.
313. Acceptabilityஏற்புத்திறன்  

ஒப்புக்கொள்ளத்தக்க அல்லது ஏற்கத்தக்க மனநிறைவான தரம்.
314. Acceptanceஏற்பு  

ஒருவர் ஒன்றைக் கொடுக்க முற்படும்போது அதனை இசைந்து ஏற்றுக்கொள்ளுதலாகிய செயல் அல்லது உண்மை விவரம் ;

வாக்குறுதி ஏற்பு (பி.9, இ.ஒ.ச.)

  தருகைகளின்(offer)வரம்பு முறைகளை ஏற்றுக்கொள்ளுதல்.  

ஒப்பந்தச் சட்டத்தில் ஏற்பு என்பது, மற்றவரால் வழங்கப்படும் தருகைகளை ஏற்றுக் கொள்ளுதல்.

offer – விருப்பறிவிப்பு, இசைவு தெரிவி, வாய்ப்பு என வழங்கக் காணலாம். இதனை வாய்ப்பு நலன் என முதலில் குறித்தேன். இரு சொல்லாக உள்ளது. ஒற்றைச்சொல்லே ஏற்றது. கொடுக்கப்படுவது கொடுவை தரப்படுவது தருவை எனலாமா என எண்ணினேன். ஆனால் தருவை என்பது உவர்மண் விளையுமிடத்தைக் குறிப்பது. எனவே, பணியில் சேருவதற்கோ ஒப்பந்தத்தை நிறைவேற்றுதற்கோ  தரப்படும்  நலப்பாடுகளைக் குறிப்பதால் தருகை எனக் குறித்துள்ளேன்.
315. Acceptance by conductசெயற்பாங்கு மூலம் ஏற்றல்  

ஒப்பந்தச் சட்டத்திற்கிணங்க,

ஒப்பந்தம் கையொப்பமிடாச் சூழலில் அவன் அல்லது அவளின் செயல்பாடுகள் மூலம் தரப்பினைக் கண்டறிய இயலும்.  

Conduct என்றால் நடத்தை என்னும் பொருளில் பிறர் குறித்துள்ளனர். இஃது ஒழுக்கம் சார்ந்த செயலைக் குறிப்பதாகத் தவறாகப் பொருள்கொள்ளப்படுகிறது. இங்கே இச்சொல் செயல்படும் முறையைத்தான் குறிக்கிறது. எனவே, செயற்பாங்கு எனலாம்.
316. Acceptance certificateஏற்புச் சான்றிதழ்  
ஏற்புத் தேர்வு முடிந்ததும் இரு தரப்பாராலும் ஒப்பமிடப்படும் ஆவணம்.

இது முதனிலை ஏற்புச் சான்றிதழ் (Preliminary Acceptance Certificate /PAC) என்றும் இறுதி ஏற்புச் சான்றிதழ் (Final Acceptance Certificate /FAC) என்றும் இருவகைப்படும்.
317. acceptance of a billவரைவத்தை ஏற்றல்  

உண்டியலை ஏற்றல்  

சட்ட மன்றம், நாடாளுமன்றம் முதலான மக்கள் மன்றங்களில் அறிமுகப்படுத்தும் வரைவத்தை வாதங்கள் இன்றியோ வாதங்களுக்குப் பின்னரோ ஏற்றல்.  

வரைவம் என்பது சட்ட முன் வடிவு.  
உண்டியல் ஏற்பு: அளிக்கப்படும் மாற்றுச் சீட்டை வாங்கி ஏற்றுக் கொள்ளுதல்.

பெயரவர், எடுநருக்கு அளிக்கும் பொறுப்புறுதியே உண்டியல் ஏற்பு ஆகும்.  

எவர்மீது பணமாற்றுச்சீட்டு அல்லது பணம் வழங்கு ஆணை எழுதப்பெறுகிறதோ அவர் பெயரவர் (drawee) எனப் பெறுகிறார்.  

காசோலை அல்லது உண்டியலைத் தர வேண்டியவருக்குத் தரும் வகையில் எழுதும் தருநர்/  வரையுநர், பெயரவர் ஆவார். பணம் எடுப்பவரையும் இச்சொல் குறிக்கும். அவரே எடுநர்(drawer).
318. acceptance of bailபிணை ஏற்பு  

குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரைச் சிறையிலிருந்து வெளிக்கொணர நீதிமன்றம்  ஆணை பிறப்பிப்பதற்குப் பொறுப்புறுதியாக அளிக்கப்படும் சொத்து அல்லது வைப்புத்தொகையைப் பிணையாக ஏற்றல்.  

பிணை அளிப்பிற்கானவற்றைக் குறிப்பிடும் பிணைப்பத்திரத்தை நீதி மன்றம் ஏற்காவிடில் தனியர் பிணைப்பொறுப்பையும் கோரலாம். எவ்வாறிருப்பினும் பிணையை ஏற்பது நீதிமன்றத்தின்  முடிவுரிமை. எனவே ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.
319. acceptance of complete specificationமுழு வரைமானம் ஏற்பு  

முழுமை விவரக்குறிப்பை ஏற்றல்  

ஒரு திட்டத்தையோ ஒப்பந்தத்தையோ கட்டுமானத்தையோ ஏற்கும் முன்னர் அதன் வழிமுறை குறித்த நுணுக்க விவரங்களுடன் கூடிய தகவலை முழுமையாக ஏற்றல்.  

ஒன்றின் விவரங்களை வரையறுத்துக் கூறுவதால் குறிப்பீடு என்று சொல்வதை விட வரைமானம் எனலாம்.
320. acceptance of counter proposalஎதிர் முன்மொழிவை ஏற்றல்  

மூல முன்மொழிவை ஏற்காமல் அதற்கு எதிராக அளிக்கப்படும் கருத்துரு அல்லது முன்மொழிவு அல்லது செயற்குறிப்பு.

(தொடரும்)