சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 621-630
621. Act, nature of the | இயற்கையின் செயல் இயற்கைச் செயல் இயற்கையின் செயல் என்பது சூறாவளி, வெள்ளம், புயல், பூகம்பம், கடற்கோள் அல்லது பூச்சி தாக்குதல் போன்ற இயற்கை பேரழிவைக் குறிக்கிறது. இது மனிதரின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு செயலாகும். சான்றாக இதனால் கட்டடங்கள் சிதைந்தன எனில், இதற்குக் கட்டுமானர் பொறுப்பாக மாட்டார். ‘சட்டத்தின் தன்மை’ எனக் குறிக்கப்படுவது தவறாகும். காண்க : Act Of God |
622. Acted in concert | ஒத்திசைவாகச் செயற்பட்ட ஒன்று சேர்ந்து இணக்கத்துடன் செயற்படல். |
623. Acting | செய்தல் நடிப்புக்கலை மாற்றாள் வேலைபார்த்தல் பாசாங்கு செய்தல், (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற, இப்பொழுதைக்குப் பணியாற்றுகிற. |
624. Acting arrangement | பொறுப்பு ஏற்பாடு பணிப்பொறுப்பு ஏற்பாடு ஒருவர் தன் பணிப்பொறுப்பிலிருந்து, விடுப்பு, மாறுதல், ஓய்வு, விலகல், நீக்கம், இடை நீக்கம் போன்ற ஏதேனும் காரணத்தால் விலகியிருக்கும் பொழுது, ஒழிவாக ஆகும் பணியிடப் பொறுப்பைப் பார்ப்பதற்கு உரிய தகுதியுடைய மற்றவரை அமர்த்துவது. |
625. Acting chief justice | பொறுப்புத் தலைமை நீதிபதி தலைமை நீதிபதி விடுப்பில்/மாறுதலில்/ ஓய்வில்/விலகலில்/நீக்கத்தில் / இடை விலகலில் சென்றிருந்தால் அல்லது இதுபோன்ற சூழலில் தலைமை நீதிபதிப் பதவியில் இடைக்காலமாக அமர்த்தப்படுபவர் பொறுப்புத் தலைமை நீதிபதியாவார். ஒன்றிய அரசின் சட்டம் நீதித்துறை வெளியீடுகளில் செயலமர்(நீதிபதி) என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. செயலாற்ற அமர்ந்துள்ளவர் என்னும் பொருள் நன்றாக இருந்தாலும் முழு நேர நீதிபதிகள் (அல்லது அதிகாரிகள்) செயலாற்றுவதற்காக இல்லையா என்ற வினா எழுகிறது. ஆனால், இடைக்கால அமர்வு ஏற்பாடு என்னும் பொருளில் இடையமர்(தலைமை நீதிபதி) என்று சொல்லலாம். உச்சநீதிமன்றப் பொறுப்புத் தலைமைநீதிபதி பணியமர்த்தம் குறித்து இந்திய அரசியல் யாப்பு கூறு 126 கூறுகிறது. உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி பணியமர்த்தம் குறித்து இந்திய அரசியல் யாப்பு கூறு 223 கூறுகிறது. இப்பணியமர்த்தங்கள் குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்பட வேண்டும். |
626. Acting in any manner inconsistent with his duty | கடமைக்கு முரணாகச் செயற்படுவது எந்த விதத்திலும் தன் கடமைக்கு முரணாகச் செயற்படல் ஒருவர் தன் பணிப்பொறுப்பிற்குரிய கடமையிலிருந்து விலகுவதுடன் தன் பணியின் தன்மைகளுக்கு எதிராகவும் செயற்படல். |
627. Acting in good faith | நன்னம்பிக்கையில் செயற்படுவது காண்க : Act Done In Good Faith |
628. Acting in official capacity | அலுவற் தகுநிலையில் செயற்படுவது அலுவல் நிலையில் செயற்படுவது பணிமுறைச் செயற்பாடு தான் வகிக்கும் பதவியின் அடிப்படையில் செயல்படுவதைத் தனிப்பட்ட செயலாகக் கருத முடியாது. தன் துறை, நிறுவனம், முதலாளி, அரசின் சார்பாகச் செயற்படுவதாகத்தான் பொருள். எனவே, இதனால் செயற்பாட்டுக்குரியவருக்குத் தீங்கு நேர்ந்தால் அது குற்றமாகாது. அலுவலக ஆளுமையின் கீழ்ச் செய்யப்படும் செயல் – அலுவலகக் கடமையை நிறைவேற்றுவதற்காக ஒருவர் மேற்கொள்ளும் செயல் – மறு தரப்பாருக்குத் தீங்கு விளைவித்தாலும் குற்றமாகாது. எடுத்துக் காட்டாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணியாளர், தன் கடமையைப் புரியும் வகையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவரைத் தூக்கிலேற்றி அவர் உயிரிழக்கக் காரணமாகிறார். இது கடமையின்பாற்பட்ட பணி என்பதால் குற்றமாகாது. காண்க : Act Done Under Colour Of Office |
629. acting in ordinary course of business | இயல்பான வணிக முறையில் செயற்படல் விற்பனையாளர், இயல்பான அல்லது வழக்கமான நடைமுறைகளுடன் விற்று, அதனை ஏற்று வாங்குநர் வாங்குவது இயல்பான வணிக முறைச் செயற்பாடாகும். |
630. acting in pursuance of his duties | அவர் கடமைகளைத் தொடர்வதற்குரிய செயல் குறிப்பிட்ட சட்டத்தின்படிச் சட்டமீறலுக்கான நடவடிக்கை எடுப்பதற்குரியவர் செயல், சட்ட நிறைவேற்றத்தைத் தொடருவதாகத்தான் பொருள். எனவே, நடவடிக்கைக்குரியவர் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply