சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 681-690
681. acts justified by law | சட்டத்தால் நியாயப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் ஞாயப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் நயன்மைப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் முறைமைப்படுத்தப்பட்ட செயல்கள் நிகழ்வுகளின் உண்மை நிலை குற்றம் நடந்துள்ளது என்பதைக் காட்டினாலும் குற்றம் செய்ததாகத் தவறாகக் கருதப்படுபவர், தான் இதில் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் எனப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். |
682. Acts regarded as trivial | அற்பமாகக் கருதப்படும் செயல்கள் அற்பமானவை எனக் கருதப்படும் செயல்கள் அற்பச் செயல்கள் என்பது மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் சிறியது, மிகச் சிறிய அளவிலானது, அல்லது முதன்மையற்றது. அவை அதிகக் கவனத்திற்கோ கருதுகைக்கோ பெறுமானம் உடையதல்ல. 1860 இன் இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) அற்பமான செயல்களைதத் தீவிரத்தன்மை அல்லது முதன்மைத்துவம் இல்லாதது என்று வரையறுக்கிறது. மேலும் சட்டம் அவற்றைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்று கூறுகிறது. அற்பச் செயல்கள் என்பன மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் சிறியது, மிகச் சிறிய அளவிலானது, அல்லது முதன்மையற்றது. அவை அதிகக் கவனத்திற்கோ கருதுகைக்கோ பெறுமானம் உடையதல்ல. இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) 1860, அற்பமான செயல்களைதத் தீவிரத்தன்மை அல்லது முதன்மைத்துவம் இல்லாதது என்று வரையறுக்கிறது. மேலும் சட்டம் அவற்றைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்று கூறுகிறது. அற்பச்செய்திகளைப் பாதுகாப்பது என்பது “சட்டம் அற்பச்செய்திகளைப் பொருட்படுத்தாது”(De minimis non curat lex) என்னும் கொள்கையின் அடிப்படையிலானது.இது குமுக(சமூக) நல்லிணக்கத்தையும் சரிசெய்தலையும் உறுதிப்படுத்துவதற்காகச் செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இ.த.ச. பிரிவு 95, யாராவது வேண்டுமென்றே அல்லது தெரிந்தே தீங்கு விளைவித்தால், இயல்பான உணர்வு, சினம் கொண்ட ஒருவர் அதைப் பற்றி புகார் செய்யாத அளவுக்குத் தீங்கு சிறியதாக இருந்தால், அது குற்றமாகக் கருதப்படாது என்கிறது. அற்பச் செயல்களின் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: • எழுத்துப் பிழை • ஒரு வீட்டின் விலையுடன் ஒப்பிடும்போது ஒரு கோப்பை பானத்தின் விலை |
683. Actual | உள்ளபடி உள்ளபடியாக, உள்ள, உள்ளவாறு, நடைமுறை, உண்மை, உண்மையான, உண்மையாக உள்ள, நடைமுறையில் உள்ள, இருக்கின்றபடி, மெய்நிலையான, பட்டாங்கு, உள்ள, உரிமை, சரியான, நிகழ்நிலை, உலகியல் வழக்கு, உலகவழக்கம்; நேரடி; நேர்(ந்த); உள்ளவாறெனக் குரைசெய்ம்மின் (தேவாரம், 385.2) உற்றதுசொன்னால் அற்றது பொருந்தும் உள்வழக்கு உள்ளதை உண்டு என்பது மெய்ம் மை பட்டாங்காதலின் இயல்பாம் (தொல். எழுத். 156, உரை). பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36). பட்டாங்கி லுள்ளபடி (மூதுரை) என இலக்கியங்களிலேயே இடம் பெற்றுள்ளன. சொல் பயன்படுமிடம்: உண்மையான உடற் தீங்கு அல்லது உடலூறு கொடும்உடற்காயத்தை விடக் குறைவாக ஆனால் வன்மையாக மற்றொருவரைக் காயப்படுத்துவது |
684. Actual balance | உண்மையான இருப்பு உண்மை இருப்பு பதிவேட்டின்படியான இருப்பிலிருந்து பதிவிற்குப் பின் மேற்கொள்ளப்பட்டுப் பதியாமல் உள்ள செலவையும் கழித்த பின் வருவது. இதேபோல் பதியப்படாத வரவையும் சேர்த்தது உண்மையான இருப்பு. எடுத்துக்காட்டாகச் சொல்வதாயின் இணைய வழியில் வங்கிக் கணக்கைக் கையாள்கையில் பயணச்சீட்டு வாங்குவதற்கான செலவு கழிக்கப்பட்டு இருப்பு காட்டப்பட்டிருக்கும். ஆனால், உண்மையில் இணையப் பிழையாலோ எதனாலோ பயணச்சீட்டு வாங்கப்பெறாமல் (தரப்பெறாமல் ) பிடிக்கப்பட்ட அத்தொகை திரும்பச் செலுத்துப்படுவதாகக் காட்டும். ஆனால், மீள் வரவு வைக்கப்பட்டிருக்காது. எனவே, பதிவேட்டு இருப்புடன் மீள்வரவையும் கணக்கிட்டால் வருவதே உண்மை இருப்பாகிறது. |
685. Actual cause | உண்மையான காரணம் இது மற்ற தரப்பாரின் தீங்கு, சேதங்கள் அல்லது இழப்புகளை ஏற்படுத்துவதில் ஒரு தரப்பினரின் தவறு என்பதை மெய்ப்பிக்கும் உண்மையான ஆதாரம் அல்லது வழக்கின் உண்மைகள். உரிமை வழக்கிலும் குற்ற வழக்கிலும் உண்மைக் காரணம் என்பது அடிப்படைக் கூறாகிறது. |
686. Actual cost | உண்மைச் செலவு ஒரு பொருளை வாங்குவதற்காக அல்லது குடியிருத்தல் போன்ற ஒன்றின் பயன்பாட்டிற்காக, வாடகையாகக் கொடுக்கப்படும் பணமே செலவாகிறது. பொருளின் விலையுடன் சரிபார்ப்பதற்குப் பணம் கொடுத்தால் அதையும் வீடு, அலுவலகம் போன்ற நமக்குத் தேவைப்படும் இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான வண்டிக்கட்டணம், கடனில் அல்லது தவணையில் வாங்கினால் நாம் கொடுக்கும் வட்டித் தொகை ஆகியனவும் சேர்ந்தே உண்மைச் செலவு அல்லது உள்ளபடியான செலவு ஆகிறது. அஃதாவது பொருளின் விலை அல்லது சொத்தின் விலையுடன் அதைப் பெறுவதற்கு நாம் மேற்கொள்ளும் செலவினமும் சேர்ந்ததே உண்மைச் செலவாகிறது. |
687. Actual Damages | உள்ளபடியான சேதங்கள் புயல், மழை, வெள்ளம், நில நடுக்கம், கடற்கோள் போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் உண்மையான இழப்புகளைக் கணக்கிடுவது. உண்மையான சேதங்கள் என்றும் சட்டபூர்வமான இழப்பீட்டுக்குரிய சேதங்கள் என்றும் இரு வகையாகக் கூறுவர். மற்றவரின் புறக்கணிப்பால் அல்லது தவறுகளால் ஏற்படும் சேதங்களையும் கணக்கில் கொள்வர். நேர்ந்த இழப்பின் அளவிற்கு அல்லது தீங்கிற்கு ஏற்ப அளிக்கப்படும் ஈடு என்பதால், சட்டத்தால் வரையறுக்கப்படும் அல்லது தண்டமாக அளிக்கப்படும் இழப்பீட்டினின்றும் வேறு பட்டது. கேடு, குற்றம் எனக் குறிக்கும் ஏதம் என்னும் சொல்லில் இருந்து உருவான சேதம் தமிழ்ச்சொல்லே. |
688. Actual Delivery | உண்மையான வழங்கல் ஒரு பொருள் ஒரு தரப்பாரிடமிருந்து மற்றொரு தரப்பாருக்குப் பருப்பொருளாக மாற்றப்படுவது உண்மையான வழங்கல் ஆகும். பொருளை வாங்குநருக்கு அல்லது அவரால் ஏற்கப்பட்ட முகவருக்கு விற்பவரால் பொருள் அனுப்பப்பட்டால் அஃது உண்மையான வழங்கல் எனப்படும். |
689. Actual Eviction | மெய்ந்நிலை வெளியேற்றம் உண்மையாக வெளியேற்றுதல் வாடகையர்/வாடகைக்குக் குடியிருப்பவர் அல்லது குத்தகையர் தன் பயன் உரிமை நிலம்,வீடு,கட்டடம், சொத்து போன்றவற்றில் இருந்து அகற்றப்படுதற்கு அல்லது வெளியேற்றப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் சட்ட முறையான செயற்பாடாகும். வாடகையைச் செலுத்தாத அல்லது குத்தகை ஒப்பந்தத்தை மீறும் வாடகையரை அல்லது குத்தகையரை அவர் கைக்கொண்டுள்ள(ஆக்கிரமித்துள்ள) பகுதியில் இருந்து வெளியேற்ற வீட்டு அல்லது இட உரிமையாளர் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொழுது இது நேரலாம். எடுத்துக்காட்டாக நில உரிமையாளர் வாடகையரை அல்லது குத்தகையரை உள்ளபடியாகவே தூக்கி எறிவதன் மூலம் அல்லது சொத்திலிருந்து அகற்றி வைப்பதன் மூலம் அல்லது பயன்படுத்தாதபடி அந்தச் சொத்தைப் பூட்டி வைப்பதன் மூலம் வெளியேற்றலாம். நில உரிமையாளரிடமிருந்து குத்தகையரை வெளியேற்றுவதற்கான சட்டமுறை உரிமையை மூன்றாம் தரப்பினர் பெறும்போதும், குத்தகையரை வெளியேற்றும்போதும் உண்மையான வெளியேற்றம் நிகழலாம். ஒரு குத்தகையர் வெளியேற்றப்பட்டால், வாடகை செலுத்த வேண்டிய கூடுதல் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். குடியிருப்பின் எந்தப் பகுதியிலிருந்தும் குத்தகையர் வெளியேற்றப்பட்டால், அவர் முழுச் சொத்தையும் திரும்பப் பெறும் வரை அவரின் வாடகைப் பொறுப்பு முற்றிலும் நின்றுவிடும். |
690. Actual Expenditure | உண்மையான செலவு உண்மையாக நேரிட்ட செலவு உண்மையான செலவு என்பது பல பொருள்கள் உடையது. பொது நிதிநிலை யறிக்கை கணக்கியலில் நிகர நிதி சொத்துக்களை மாற்றும் செலவு ; ஒரு நிதியாண்டு தொடர்பில் அந்த ஆண்டில் ஒரு செயல்பாட்டிற்காகச் செலவிடப்பட்ட தகுதியான செலவினங்களின் மொத்தத் தொகை; நல்கைகளின்(மானியங்களின்) சூழலில் நல்கைக் காலத்தின் போது தகுதியான செயல்பாடுகளில் ஏற்படும் மொத்தச் செலவுகள்; மொத்தச் செலவினங்களின் பின்னணியில் விற்கப்படும் மொத்தத் தொகைக்கு மாறான உண்மையில் விற்கப்படும் முடிக்கப்பட்ட பொருட்களின்/ சேவைகளின் மதிப்பு; நிதிப் பகுப்பாய்வுச் சூழலில் ஒரு நிறுவனத்தின் நிலையான வரவு செலவுத் திட்டத்திற்கும் அதன் வருமானம் – செலவினங்களுக்கான உண்மையான புள்ளிவிவரங்களுக்கும் உள்ள வேறுபாடு. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply