(சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

691. Actual Or Express Notice  நேரடியான அல்லது வெளிப்படையான புரிதல்  

நிகழ்வு, கோரிக்கை, உரிமை கோரல்,செயல்முறை குறித்த உள்ளபடியான அல்லது வெளிப்படையான புரிதல்.

notice என்றால் அறிவிப்பு எனக் கொள்வதைவிட அறிதல், புரிதல், உணர்தல் என்ற முறையில் கவனிக்கப்படுவதைக் குறிப்பதாகக் கொள்வதே சரியாகும்.

  ஓர் உண்மை உள்ளதை ஒருவர் அறிதலே அல்லது  நிகழ்வு அல்லது உண்மை பற்றிய அறிவை ஒருவர் உள்ளவாறு அறிதலே உள்ளபடியான அல்லது நேரடியான அல்லது வெளிப்படையான அறிதலாகும்  அல்லது புரிதலாகும்.
692. Actual knowledgeஉள்ளபடியாக அறிதல்  

எவ்வகை ஐயப்பாடுமின்றி, உள்ளபடியான நிகழ்வு அல்லது கூற்று குறித்துத் தெளிவாக இருத்தல்.

உண்மையான அறிதல் என்பது நிகழ்வு அல்லது சூழ்நிலையைப்பற்றி ஒருவர் அறிந்திருப்பதும், அஃது இருப்பதைப் பற்றி எந்த ஐயம் இல்லாதிருப்பதும் ஆகும். இது நோக்கத்திலிருந்து வேறுபட்டது.

உண்மையான அறிதல் நேரடியாகவும் தெளிவாகவும் இருக்கலாம் அல்லது யாராவது கூடுதல் தகவல்களை அறிந்திருக்க வேண்டும் என்றால் அதைக் குறிக்கலாம். குற்றவியல் சட்டம், நொடிப்புச்சட்டம் முதலிய சட்டத்தின் பல பகுதிகளில் இஃது இன்றியமையாதது.
693. Actual Possession  மெய்நிலை உடைமை  

உண்மையான உடைமை.      

உரிமை உடைமையைக் குறிப்பதற்குச் சுவாதீனம் என்பர். அது தமிழ்ச்சொல்லன்று.   உடைமை என்பது ஒரு பொருளை ஒருவரின் தனிப்பட்ட காவலில் வைத்திருப்பது அல்லது அந்தப் பொருளைத் தன் பேணுகையில் வைத்திருப்பது அல்லது அந்தப் பொருளின் மீது நேரடிக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகும்.  
இது கொள்நிலை உடைமையினின்று வேறுபட்டது.
694. Actual Seizure  நேரடி/ உள்ளபடியான கைப்பற்றுகை  

உள்ளபடியான கையகப்படுத்துதல்  

சட்டச் செயல்முறை மூலம் ஆள்  அல்லது உடைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரல்.  

சொத்தைக் கையகப்படுத்துதல்
695. Actual total lossஉள்ளபடி  மொத்த இழப்பு  

பொருள் அல்லது சேவை என ஏதாவதுஒன்றின் விலை  விற்பனை விலையை விட அதிகமாவதால் ஏற்படும் ஒட்டு மொத்த இழப்பே உள்ளபடி மொத்த இழப்பாகும்.  

தற்செயலாக அழிக்கப்பட்டதால் அல்லது மீட்டெடுப்பதற்கு அப்பால் சென்றதால் நேரும் இழப்பு.  

காப்பீட்டுச் சட்டத்தின் படி, காப்பீடு செய்யப்பட்ட சொத்து முற்றிலும் அழிக்கப்பட்டால், இழந்தால் அல்லது அதை மீட்டெடுக்க முடியாத அளவுக்குச் சேதமடைந்தால் ஏற்படும் இழப்பு உள்ளபடி மொத்த இழப்பாகும்.  

ஊர்திக்குச் சேதம் ஏற்படுகையில் அதனைச் சரி செய்வதற்காக ஆகும் செலவு உரிய காப்பீட்டு மதிப்பில்(IDV) 75 விழுக்காட்டிற்கும் மேலாக ஆகுமெனில், அது உள்ளபடி மொத்த இழப்பு எனப்படுகிறது.
696. Actual valueஉள்ளபடி மதிப்பு  

உள்ளபடி மதிப்பு உண்மை மதிப்பிலிருந்து ( real value) வேறுபட்டது.  

உண்மையான பண மதிப்பு, ஏதேனும் தேய்மானத்தைக் கழித்த மாற்று மதிப்புக்குச் சமம்.  

உள்ளபடியான மதிப்பு என்பது வாடிக்கையாளரின் இப்போதைய எதிர்கால வணிக மதிப்பைக் குறிப்பது. இது வருவாயையும் உள்ளடக்கியது.
697. Actually And Voluntarilyஉள்ளபடியாகவும் தன் விருப்பிலும்  

உள்ளபடியாகவும் தன்னார்வத்துடனும் மேற்கொள்ளும் செயலைக் குறிக்கிறது.
698. Actually And Voluntarily Resideஉள்ளபடியாகவும் தன் விருப்பிலும் தங்கியிருத்தல்  

ஓரிடத்தில் உள்ளபடியாகவும் தன் விருப்புடனும் வசித்தல்.
699. Actually deliveredஉண்மையான சேர்ப்பிப்பு  

உள்ளபடியான ஒப்படைப்பு  

உண்மையான சேர்ப்பிப்பு அல்லது ஒப்படைப்பு என்பது அப்பொருள் சேர்க்கப்பட வேண்டியவரின் கையில் சேர்ப்பிப்பது அல்லது ஒப்படைப்பது ஆகும்.  

சரக்கு விற்பனைச் சட்டம், 1930 இன் பிரிவு 2 (2) இன் படி, (Section 2 (2) of the Sale of Goods Act, 1930) சேர்ப்பிப்பு அல்லது ஒப்படைப்பு என்பது, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பொருட்களைத் தன்னார்வமாக மாற்றுவதாகும். எனவே, ஒருவர் பொருட்களை நியாயமற்ற முறையில் கையகப்படுத்தினால், அது சேர்ப்பிப்பு அல்லது ஒப்படைப்பு ஆகாது.  

சரக்கு என்பது மதுவகையையும் குறிக்கும். இங்கே ணிகப்பொருளைக் குறிக்கிறது.
700. Actually Due And Payable
உண்மையில் உரியதும் செலுத்தத்தக்கதும்
 
உண்மையில் உரியது என்பது செலுத்துவதற்குரிய கடன் , கடன் தவணை போன்ற பணம் செலுத்துவதற்கான காலம்(காலக்கெடு) வந்து விட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல் செலுத்துவதற்குரிய தொகையைக் குறிக்கும்.
 
 
செலுத்தத்தக்கது என்பது சட்டப்படி பணம் செலுத்துவதற்கான காலம்(காலக்கெடு) வந்து விட்டதற்குரிய செலுத்த வேண்டிய தொகையைக் குறிப்பது.