(சட்டச் சொற்கள் விளக்கம் 801-810 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

811. Admiralty Jurisdiction   கடலாண்மைப் பணி வரம்பு.  

கடல்சார் உரிமை கோரல்கள் தொடர்பான பணியாட்சி வரம்பு தொடர்புடைய நீதிமன்றங்களுக்கு இருக்கும். 

கடலாண்மைப் பணிவரம்பு என்பது கடல்நீர் எல்லை வரை இருக்கும்.
812. Admissibilityஏற்புடைமை  

ஏற்புத்தன்மை  

ஏற்கத்தக்கத்தன்மை;   ஒன்றை – குறிப்பாகச் சான்றினை – நீதிமன்றத்தால் அல்லது உரிய அலுவலரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை.
813. Admissibility Of Document     ஆவண ஏற்புடைமை  

ஆவணங்கள் நீதிமன்றத்தால் ஏற்பதற்குரிய ஆவணம், சான்றுரை, தெளிவான சான்று முதலானவற்றின் தகுதித்தன்மையைக் குறிப்பது.  

எல்லா ஆதாரங்களும் நீதி மன்றத்தால் ஏற்கப்படா. நம்பகமானவையும் பொருத்தமானவையும் மட்டுமே நீதி மன்றங்களில் ஏற்கப்படும்.   நீதிமன்றத்தால் ஏற்கப்படும் அல்லது ஒப்புக்கொள்ளப்படும் தகுதியுடைமையையே இது குறிக்கிறது.  

பல்கலைக்கழகத்தில் சேரும் பொழுது பல்கலைக்கழகத்தால் ஏற்கப்படும் ஆவணத் தகுதியுடைமையயும் இது குறிக்கிறது.
814. Admissible  ஏற்றுக்கொள்ளத்தக்க,

அனுமதிக்கத்தக்க

ஏற்கத்தக்க  

முறையிடப்படும் விண்ணப்பம் அல்லது மேல்முறையீடு ஏற்கத்தக்கது.

சான்றுக்கு அளிக்கப்படும் ஆதாரம்/ஆதாரங்கள் ஏற்கத்தக்கது/ன.  

நீதிபதி குறிப்பிட்ட சான்று அல்லது ஆதாரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது; எனவே, அனுமதிக்கத் தக்கது எனல். எ.கா. நீதிபதி, அளிக்கப்பட்ட ஒலியிழை ஆதாரமாக ஏற்கத்தக்கது எனத் தீர்ப்பளித்தார்.  

முறை மன்றத்தால் வழக்காளி வழக்கிற்கான புதிய சான்றினை அளிக்கையில்   ஏற்கத்தக்கது என முடிவெடுக்கலாம்.  

admissible என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் ஏற்பதற்குத் தகுதியுடையது.
815. Admissible Evidenceஏற்கத்தக்க சான்று  

நீதிமன்றத்தில் ஏற்கப்பெறும் வழக்கு

உசாவுநருக்கு உதவுவதாகக் கருதப்படும் அல்லது வழக்கினை முடிவுகட்டுவதற்கு வாய்ப்பாக  அமையும் சான்று.
816. Admission  ஏற்கை

ஒப்புகை,

சேர்த்தல், அனுமதித்தல் முதலான வேறு சில பொருட்கள் இருப்பினும் இந்த இடத்தில் குற்றத்தை ஏற்றுக் கொள்ளுதலையே-ஏற்கையையே குறிக்கிறது.

  வழக்கு தரப்பார், அவர்/அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட  உண்மை அறிக்கையை ஒப்புக் கொண்டு ஏற்பது.

சில சூழல்களில் அமைதிகாப்பதும் அறிக்கையை ஏற்பதாகும்.  

மற்றொரு தரப்பாரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது, எதிர்ப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால் ஏற்றுக் கொள்வதாகிறது.   சான்று சட்டத்தில் ஏற்கை என்பது எதிர்த்தரப்பாரின் முன் அறிக்கையாகும்.

இது செவிவழி மறுப்பின் மீது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படலாம்.

பொதுவாக, குற்ற ஏற்கை  குற்ற வழக்கிலும் உரிமை வழக்கிலும் ஏற்கப்படுகிறது.  

வழக்காற்றுச் சட்டத்தில்(Common Law) ஏற்கை ஏற்கப்படுகிறது. ஆனால், இக்கூற்றுரை, விருப்பமற்றது, நேர்மையற்றது, கூற்றுரை பெறப்பட்ட சூழல் முறையற்றது அல்லது சட்ட முரணானது என்றால்  இது விலக்கப்படும்.

  சட்டக்கோட்பாட்டியலில் முன்தீர்ப்புகள் அடிப்படையிலான நடைமுறை விதிகளையே எழுதப் பெறாத சட்டங்கள் என்கின்றனர். எழுதப்பெறாத சட்டங்கள் என்பதை விட வழக்கத்தில் பயன்படுத்துவதால் வழக்காற்றுச் சட்டம் என்பது ஏற்றதாக இருக்கும்.
817. Admission Committee  ஏற்கைக் குழு  

சேர்க்கைக் குழு என்பது பொதுவாகக் கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட படிப்பிற்காக, நுழைவுத்தேர்வு இருப்பின் அதன் அடிப்படையில் அல்லது வேறுவகையில் தகுதியை அறிந்து தக்கவரைச் சேர்த்துக் கொள்வதற்கு ஆராய அமைக்கப்படும் சேர்க்கைக் குழுவாகும்.  

வழக்கு மன்றங்களில் பதியப்படும் வழக்குகளை ஏற்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கக் குழுக்கள் இருப்பின் அவற்றை ஏற்கைக் குழுக்கள் எனலாம்.  

கல்வித்துறையில் Admission – சேர்க்கை எனப் பயன்படுத்தப்பட்டாலும் கல்வித் துறையிலும் சட்டத்துறையிலும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏற்கை எனக் குறிக்கப்பட்டது.
818. Admission Feeஅனுமதிக் கட்டணம்

சேர்க்கைக்கட்டணம்

நுழைவுக் கட்டணம்  

வரைபடம் போன்றவற்றின் அனுமதிக்காக, கல்வி நிலையத்தில் சேருவதற்காக, காட்சியகம் போன்றவற்றில் நுழைவதற்காகச் செலுத்த வேண்டிய கட்டணம்.

அனுமதி தமிழ்ச்சொல்லே எனச் செ.சொ.பி.அகரமுதலி விளக்குகிறது.
819. Admission Formசேர்க்கைப் படிவம்

கல்வியகத்தில் அல்லது வேறு நிலையத்தில் அல்லது அமைப்பில் அல்லது குழுவில்  சேருவதற்காகக் கோரப்படும் விவரங்கள் அடங்கிய படிவம்.
820. Admission Of Guiltகுற்ற ஏற்புரை  

குற்றப்பாடு ஒப்புதல் / ஏற்பு

குற்றத்தை ஒப்புக் கொள்வது என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் சொற்களில் இருந்து , ஆம், நான் குற்றவாளி போன்ற தெளிவான சொற்கள் இடம் பெறாவிட்டாலும் குற்றச்செயலை ஏற்றுக் கொள்ளுதல்.

(தொடரும்)