(வெருளி நோய்கள் 1556-1560 : தொடர்ச்சி)

படப் பொறி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படப் பொறி வெருளி.
சிலருக்கு ஒளிப்படம் எடுத்தால் வாழ்நாள் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒளிப்படம் பார்ப்பதவர்கள் அழகற்று இருப்பதாகவும் முதுமை தெரிவதாகவும் உணர்வார்கள் என்றெல்லாம் எண்ணியும் ஒளிப்படம் குறித்த பேரச்சம் சிலருக்கு இருக்கும். இத்தகையோர் ஒளிப்படம் எடுக்கும் படப்பொறி மீது தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர். படம் எடுக்கப் பயன்படும் ஒளிவீச்சாலும் படப்பொறி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00

படர்வு ஆட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படர்வாட்ட வெருளி.
Cubranophobia/Minecraftphobia என்றும் சொல்வர்.
00

படிகளில் ஏறுவது தொடர்பான தேவையற்ற அளவற்ற பேரச்சம் படிகள் வெருளி.
படி என்னும் பொழுது வாசற்படிகள், மாடிப்படிகளாகவும் இருக்கலாம் ஏணிப்படிகளாகவும் இருக்கலாம்.
படி என்பது ஏறி இறங்க உதவும். இங்கு இந்தப் பொருளிலேயே வருகிறது. உயரமான இடத்தில் ஏறுவதும் படி வெருளி. மலை போன்ற உயர இடங்களில் ஏறுவதை நாம் உயர்பு வெருளி(Acrophobia) எனத் தனியாகக் குறித்துள்ளதால், படி ஏறுவது தொடர்பில் படி வெருளியாக Climacophobia என்பதைச் சேர்த்துள்ளோம்.
பொதுவாகச் சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கும் மிகுதியாக இது வருகிறது. சிறு அகவையில் படியில் தவறி விழுந்தமை அல்லது பிறர் படிகளில் இருந்து உருண்டு விழுந்ததைப் பார்த்தமை அல்லது இதுபோன்று கதைகளில் படித்தமை, திரைப்படங்களில் அல்லது தொலைக்காட்சிகளில் பார்த்தமை போன்றவற்றால் படி வெருளி வருகிறது. படிவெருளி என்றால் படிப்பு வெருளி என எண்ணக்கூடாது என்பதற்காகப் படிகள் வெருளி என்று குறிக்கப்பெறுகிறது.
படிகளில் ஏறும் பொழுது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் ஏறுவெருளி(Climacophobia). (படி)ஏறு வெருளி, படிகள் வெருளி(Bathmophobia)யில் இருந்து மாறுபட்டது என்கின்றனர். படிகளைக் கண்டு அஞ்சுவதும் படிகளில் ஏறுவதற்கு அஞ்சுவதும் ஒன்றுதானே எனவே, இரண்டையும் ஒன்றாகக் குறித்துள்ளேன்.
படி வெருளி என ஒருமையில் குறித்தால் படிப்பதை எண்ணித் தவறாகப் பொருள் கொள்ளலாம் என்பதால் படிகள் எனப் பன்மை கையாளப்பட்டுள்ளது.
bathmளs என்னும் பழங்கிரேக்கச்சொல்லின் பொருள் படிக்கட்டு. இச்சொல்லில் bath என்பது குளியலைக் குறிக்கவில்லை. ஆழமான என்னும் பொருளைத் தருகிறது.
வீழ்பு வெருளி(basophobia / basiphobia) யுடன் தொடர்புடையது.
klîmax, என்னும் பழங்கிரேக்கச்சொல்லின் பொருள் ஏணிப்படி, படிக்கட்டு.
00

படிகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படிக வெருளி
மணிக்கல், பளிங்கு, படிகம் , கண்ணாடிப்பொருள்கள் மீதான தேவையற்ற வெறுப்பும் அளவு கடந்து பேரச்சமும் உடையவர்களாக இத்தகையோர் இருப்பர்.
தங்களிடம் இவை இருக்கும்போது பாதுகாப்பு குறித்த அச்சமும் பிறரிடம் இருக்கும்போது ஆடம்பரமாகக் கருதி எரிச்சலும் கொள்வோர் உள்ளனர்.
crystallo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பளிங்கு.
00

படித்தல் குறித்த வரம்பற்ற பேரச்சம் படித்தல் வெருளி.
படிப்பதற்குப் பள்ளிக்கூடம் போகவும் புத்தகங்கள் படிக்கவும் காரணமின்றிப் பேரச்சம கொள்வோர் உள்ளனர். புத்தகங்கள் படிப்பது குறித்த வெருளியை நூல் வெருளி(Bibliophobia) என்று வகைப்படுத்தி உள்ளதால், படிப்புக்கூடம் செல்வது தொடர்பான பேரச்சத்தை மட்டும் இதில் வகைப்படுத்தலாம்.
மழலைப்பள்ளி வெருளி, தொடக்கப்பள்ளி வெருளி, நடுநிலைப்பள்ளி வெருளி, உயர்நிலைப்பள்ளி வெருளி, மேனிலைக்கல்வி வெருளி, கல்லூரிக் கல்வி வெருளி எனப் பலவகையாக இதனைக் குறிக்கலாம்.
நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகள்
ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்!
என்னும் பாரதிதாசன் பாடல் வரிகளை மழலைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு உணர்த்திப் பாடக்கூடங்கள் செல்வதில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
பெண்கல்வியை வலியுறுத்தும் பாவேந்தர் பாரதிதாசன் பாடிய பின்வரும் பாடல் இருபாலருக்கும் கல்வியை உணர்த்துவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? – நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!
00