(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -14 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 2 : தொடர்ச்சி)

மொழிப்போர் என்னும் பொழுது இந்தித்திணிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் மட்டும் பார்த்தால் போதாது. இதற்குக் காரணமான இந்தித் திணிப்புச் சூழல்களையும் நாம் பார்க்க வேண்டும். எனவே, முந்தைய கட்டுரை தொடர்பில் சில செய்திகளைப் பார்ப்போம். இவை முந்தைய கட்டுரையிலேயே இடம் பெற வேண்டியவைதாம். எனினும் இடம் இன்மை கருதி , அதன் தொடர்ச்சியாக இப்போது பார்ப்போம்.

இந்திய அரசமைப்பு அவையில், கட்சிக் கட்டுப்பாட்டினைக் கடந்து நின்ற ஒரு சிக்கல், ஆட்சி மொழிச் சிக்கலாகும்.  பேராயக் கட்சி சார்ந்த இந்தி வெறியர்களுக்கும் தென்னகத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையில், ஆட்சி மொழியைப் பற்றி தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தன.

இந்தித் தீவிரவாதிகளில் இரு பிரிவினர் இருந்தனர். பெரும்பான்மையர் இந்திதான் வேண்டுமென்றனர். சிறுபான்மையர் இந்துத்தானிதான் வேண்டுமென்றனர். இந்தியாவின் ஆட்சிமொழி இந்தியா? இந்துத்தானியா என்ற கருத்து மோதல்கள் இருந்தன.

அரசமைப்பு அவையில், தொடக்கத்திலிருந்து இறுதி வரை இந்தி பற்றி தருக்கம் வரும் போதெல்லாம் உறுப்பினர்கள் உணர்ச்சிப் பிழம்பாகிக் கொதித்து எழுந்தனர்.  எனவே, அரசியலமைப்பு அவை எவ்வகையில் நடைபெற வேண்டும் என்பது பற்றிய “அவை நடைமுறை விதிகளைத்”( Rules of Procedure) தொகுப்பதற்காக ஒரு தனிக் குழு நியமிக்கப்பட்டது.

இவ்வவையின் உறுப்பினர் இந்தி வெறியர் இர.வி.துலேகர்(இரகுநாத் விநாயக்கு துலேகர்-Raghunath Vinayak Dhulekar:1891-1980), “அந்தக் குழு, இந்துத்தானியாலேயே அவை விதிகளை எழுத வேண்டும்.’’ என்ற ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார். அரசியல் அமைப்பவைத் தலைவர், துலேகரை இந்தியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுமாறு பணித்தார். அதற்குத் துலேகர் மறுமொழியாக,“இந்துத்தானியைத் தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள்; அவர்கள் அரசமைப்பு அவை உறுப்பினராக இருக்கவும் தகுதியற்றவர்கள்” என வாதாடினர்.

“திருத்தம் முறையற்றது” எனத் தீர்ப்பைக் கூறி, மேற்கொண்டு அதைப் பொறுத்த விவாதங்களை நடத்தக்கூடாது என்றும் தலைவர் ஆணை யிட்டார். பின்னர் அரசியலமைப்பவையில் “நடைமுறை விதிகளைப் பற்றிய அறிக்கை” விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. அப்போது மறுபடியும் இந்திச் சிக்கல்  தலை நீட்டியது.

“அரசமைப்பவையின் நடவடிக்கைகள் இந்துத்தானியிலோ ஆங்கிலத்திலோ இருக்கலாம்; அந்த இருமொழிகளும் தெரியாதவர்கள் அவர்தம் தாய்மொழியிலேயே பேசுவதற்குத் தலைவர் அனுமதிக்கலாம். அரசமைப்பு அவையின் அதிகாரப்பூர்வமான ஏடுகள், குறிப்புகள், ஆணைகள் முழுவதும் இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இருக்கலாம்.” என நடைமுறை விதிக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்திருந்தது.

மற்றோர் இந்தி  வெறியரான சேத்து கோவிந்ததாசு, (Seth Govind Das:16.10.1896 –  18.06.1974) அரசமைப்பு அவையின் நடவடிக்கைகள் இந்துத்தானியில்தான் இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்திலோ உருது மொழியிலோ நடைபெறலாகாது எனவும், இந்தி தெரியாதவர்கள் மட்டும் ஆங்கிலத்திலேயோ தாய்மொழியிலேயோ பேசலாம் எனவும் கோரும் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

 அந்தத் திருத்தத்தை முன்மொழிந்து அவர் உரையாற்றும் போது, “காந்தியினுடைய 25 ஆண்டுகால முயற்சிக்குப் பின்னரும் கூடத் தென்னகத்தைச் சார்ந்தவர்கள் இந்துத்தானியைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தால், அஃது அவர்கள் குற்றம்தான் என்பதை நான் தென்னகத்தைச் சார்ந்தவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

சென்னையைச் சார்ந்த சிலருக்கு இந்துத்தானி தெரியாத காரணத்தினால், விடுதலை பெற்ற இந்தியாவிற்குரிய ஓர் அரசமைப்பை உருவாக்குவதற்குக் கூடியிருக்கும் இறைமை பொருந்திய அரசமைப்பு அவையில் ஆங்கிலம்தான் கோலாச்சுவது என்று சொன்னால், அது எங்கள் பொறுமையைச் சோதிக்கிறது.” எனக் குறிப்பிட்டு,  இந்தி பேசா மக்களைக் குற்றவாளிகள்போல் இடித்துரைத்தார். மேலும் அவர் இந்துத்தானி குறித்து உரையாற்றினாலும் தனி இந்திக்காகவே வாதுரைத்தார்.

வரைவு அரசமைப்புச் சட்டத்தின் (Draft Constitution) மீது பொது விவாதம் நடைபெறும் போது , இந்திச் சிக்கல் முழுத் தீவிரத்துடன் மீண்டும் தலையெடுத்தது. உணர்ச்சி கொப்பளிக்கும் பல விவாதங்கள் நடைபெற்றன. சேத்து கோவிந்த தாசும், அவர் குழுவைச் சார்ந்த சில இந்தி ஆதரவாளர்களும், “ தேவநாகிரி எழுத்தைக் கொண்ட இந்திதான், நாட்டினுடைய ஆட்சி மொழியாக அரசியல் அமைப்பில் இடம் பெற வேண்டும்; ஆனால் இடைக்கால ஏற்பாடாக ஆங்கிலமும் தொடரலாம்“ என்றார்கள்.

 இன்னொரு சாரார், “தேவநாகிரி, உருது எழுத்து வடிவத்தில் உள்ள இந்துத்தானியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்’’ என்றார்கள். அப்போது இந்திமொழி பேசாத பகுதியைச் சார்ந்தவர்கள், தாங்கள் இந்திக்கு எதிரிகள் அல்லர் என்றும், இந்திமொழி தெரியாத பல கோடி மக்களின் மேல் ஆட்சி மொழி என்ற பெயரால் ஒரே ஒரு மொழியைத் திணிப்பது நாட்டிற்குக் கேடு விளைவிக்கும் என்றும்  அடக்கத்தோடும் பணிவு முறையிலும் எடுத்தியம்பினர்.

தமிழகத்தைச் சேர்ந்த, சந்தானம் அவர்களும் தென்னகத்தின் பல உறுப்பினர்களுமாக 43 பேர்கள் எதிர்த் திருத்தத்தில் கையொப்பமிட்டு அரசமைப்பு அவையில் கொண்டு வந்தனர்.   இந்தி ஆட்சிமொழி என்பதை ஏற்றுக் கொண்டவர்களில் ஒரு சாரார், ஆட்சி மொழித் தகுதியுடன் ஆங்கிலம்  பயன்படுத்தப்பட வேண்டும் என்றனர். ஆங்கிலத்தை எத்தனைக் காலம் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் சிக்கல் எழுந்தது. முன்னாள் உள்துறையமைச்சர். கோவிந்த வல்லபபந்து (Govind Ballabh Pant)(30.08.1887-07.03.1961)  ஆங்கிலத்தை அகற்றுவதற்கு உண்டான கால அளவை வரையறுக்கும்  உரிமையை இந்தி மொழி பேசாத மக்களுக்கே விட்டுவிடலாம் எனக் கூறினார்.