சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 727 – 732
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 722 – 726 தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 727 – 732
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
727. Oxygen – உயிர்க்கால்
நெஞ்சத்தின் வலது கீழறையில் நின்று சுவாசப் பைக்குச் செல்லும் கருப்பு இரத்தமானது அங்குள்ள மயிரிழைக் குழல்களுக்குள் பாயும். அவற்றிற்கும் காற்றுத் துவாரங்களுக்கு மிடையே ஈரமான மெல்லிய தாள் மட்டுமே யிருப்பதால் அவற்றிலுள்ள இரத்தமானது காற்றிலிருந்து உயிர்க்காலை (Oxygen) வாங்கிக் கொள்ளவும் காற்றிற்குத் தன்கனுள்ள கரிப்புளிப்பை (Carbonic Acid)க் கொடுத்துவிடவும் இயலும்.
மேற்படி நூல் : உடல் நூல் (1934) பக்கங்கள் – 29, 30
★
728. Vitamins – உயிர்சத்து
உயிர்ச்சத்து : (Vitamins) வெடியுப்புச் சாரம் கலந்த உயிர்ச்சத்துக்கள் உணவுப் பொருள்களில் கலந்துள்ளன என்றும் அவை சீவாதாரமா யுள்ளவை யென்றும் அவற்றைச் சில நாட்களுக்கு முன் மேலைநாட்டு அறிஞர்கள் கண்டனர். பச்சைக் காய்கறியிலும் பழங்களிலும் பாலிலும் வெண்ணெயிலும் மூளை தவிடு போக்காத அரிசியிலும், நன்றாகப் புடைக்கப்படாத கோதுமை மாவிலும் அவை உள்ளன.
மேற்படி நூல் : உடல்நூல் (1934) பக்கம் – 38
★
729. Red corpuscles — செங்கூடுகள்
இரத்தத்திலுள்ள செங்கூடுகள் (Red corpuscles) தட்டையாயும் வட்டமாயும் பாதி வளைவுள்ள தாயுமிருப்பன. ஒரங்களைப் பார்க்கிலும் மத்தியில் மெல்லியதா யிருக்கும். அவற்றில் நடுப்புள்ளி (Nucleus)யொன்றுங் கிடையாது. இந்தச் செங்கூடுகள் நிலையான வாழ்க்கை யுடையனவல்ல.
மேற்படி நூல் : உடல்நூல் (1934) பக்கங்கள் – 22, 23
★
730. Side Curtain – நடைபடுதா
ஒரு முறை இவ்வண்ணம் நடந்தபொழுது வள்ளி வேடம் பூண்ட ஆக்டர் – அவர் கொஞ்சம் புத்திசாலி – கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுச் சரேலென்று நடைப்படுதாவுக்குள் நுழைந்து போய்விட்டார். அப்பொழுதும் வள்ளியின் வர்ணனையை நமது அயன் இராசபார்ட்ஆக்டர் விட்டபாடில்லை. பாட்டின் பல்லவியில் சங்கதிகளையும், ஸ்வரங்களையும் போட்டுப் பாடித் தீர்த்துவிட்டார். பாட வேண்டிய பாட்டுகளை யெல்லாம் பாடியான பிறகு திரும்பிப் பார்த்தார். வள்ளியை மேடை மீது காணோம். அவர் விழித்தார். சபையோர் சிரித்தனர்.
இதழ் : விநோதன் (1934)
மலர் – 2. இதழ் – 3
கட்டுரை : ஆட்டமும் பாட்டும், பக்கம் – 49
கட்டுரையாளர் : இராவ்பகதூர். ப. சம்பந்த முதலியார், (ரிடையர்ட் ஜட்ஜ்)
★
731இரேழி – இடங்கழி
அவ்வளவில் அவ்வீட்டின் இடங்கழி (இரேழி) யில் படுத்திருந்த அவரது அன்னை தன் மகனை விளித்து ‘குழந்தாய்! இத்தன்மையை பாபத்திற்கு ஒரு தரம் – ராம – வெனக் கூறினால் போதும் என்பதாய் உனது தந்தை சொல்லக் கேட்டிருக்கின்றேன்; அப்படிக்கிருக்க, நீ மும்முறை கூறுமாறு சொல்கின்றாயே!’ எனக் கேட்டனள்.
நூல் : சிரீ பகவன் நாம போதேந்திர சுவாமிகள்
திவ்விய சரிதம் (1934) பக்கம் – 27
நூலாசிரியர் : மாந்தை. சா. கிருஷ்ணய்யர்
★
732. Room – உள்ளில்
ஓர் வீட்டின் தாழ்வாரத்தில் ஓர் அடி கண்ணாடி சுவரில் இருக்க, இரண்டு சிறு பையன்கள் கண்ணாடியைப் பார்க்க அவர்கள் சாயல் நிழல் கண்ணாடியில் தெரிய, அந்நிழல் சுவருக்கு உள் கூடத்தில்
இரண்டு தப்படியில் கண்டார்கள். சிறுவர்கள் பார்த்துக் கையை ஓங்கினார். நிழலும் ஓங்கியது. காலைத் தூக்கினர்ர்கள். நிழலும் தூக்க அந்த ரூமில் (உள்ளில்) இரண்டு பயல்கள் நம் வீட்டில் இருந்து கொண்டு கையை ஓங்கி அடிக்க வருகிறான், ரூமைத் திறந்து இழுத்துப் போட்டு அடிப்போம் வாங்கடா – என்று கதவைத் திறக்க ஓடினான்.
நூல் : அநுபவ ஆத்மஞான விளக்கம் (1934) பக்கம் -12
நூலாசிரியர் : வைத்திலிங்க சுவாமிகள்
மேலணிக்குழி குடிக்காடு.
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply