சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 751 – 755
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 740 – 750 தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்
751 – 755
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
751. Motor Cars, Buses – தற்செயலிகள்
இக்காலத்தில் தற்செல்லிகள் (Motor, Cars, Buses) பெரு வழக்காக ஓரிடமிருந்து மற்றோரிடம் போவதற்கு அமைந்துள்ளன. அவற்றில் ஆட்களை விதித்த எண்ணிற்கதிகமாக ஏற்றுவது ஒரு தீரா நோய் ஆய்விட்டது.
நூல் : மணிமாலை (1935) பக்கம் -148
நூலாசிரியர் : கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.,
★
752. Inventive Genius – கற்பனைத் திறல்
மனிதன் பெருமை பாராட்டிக் கொள்வதற்குக் காரணமாயுள்ள பல விஷயங்களுள் முக்கியமானது அவனுடைய கற்பனைத் திறல் (inventive Genius) அஃதாவது, யந்திர தத்துவங்களை (Mechanical Principles)க் கண்டுபிடித்துப் பிரயோகித்து, அவை தன் காரியங்களுக்குப் பயன்படுமாறு செய்யும் சக்தியாம்.
நூல் : விவேக சந்திரிகை மூன்றாம் புத்த்கம் (1935)
நூலாசிரியர் : தி. அ. சாமிநாத ஐயர்
(ஆரியா பத்திரிகை ஆசிரியர்)
★
753. Oriental – கீழ்ச்சீமை
ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமான வாஸ்து முறை ஏற்பட்டிருக்கின்றது. ஆதலால் கட்டிட முறைகளுள் கிரீக்கு, உரோமன், காதிக்கு, ஒரியென்டல் (கீழ்ச்சீமை) என்னும் பற்பல முறைகள் இருக்கின்றன.
நூல் : பக்கம் – 43
*
754.Playing Cards – ஆட்டக்கடுதாசிகள்
புகையிலை ஆங்கிலேயரால் நமது நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சரக்காகும். அவ்வளவு நவீனமாக நமது நாட்டுக்கு வந்ததாயினும், அஃது எல்லா ஊர்களிலும், மூலை முடுக்குகளிலும் விலக்கின்றி ஆட்டக்கடுதாசிகளை (சீட்டுகளை)ப்போல் (Playing Cards), வியாபித்திருக்கின்றது.
நூல் : விவேக சந்திரிகை மூன்றாம் புத்தகம் (1935)
நூலாசிரியர் : தி. அ. சாமிநாத ஐயர் (ஆரியா பத்திரிகை ஆசிரியர்)
★
755. Inner Meaning — உள்ளுறைப் பொருள்
திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த சிரீரங்கத்திலுள்ள சிரீ ரங்கநாதர் திருக்கோயிலை இராத்திரி காலத்தில் தேவதைகள் வந்து கட்டினார்களென்றும், பொழுது விடியும் வரையில் எவ்வளவு வேலை செய்தார்களோ, அம்மட்டோடு நிறுத்திப் பொழுது விடிந்தவுடனே அவர்கள் மறைந்து போய்விட்டார்களென்லும் சொல்வார்கள். அந்தக் காரணத்தினால், கோயிலைச் சுற்றி இன்றைக்கும் நாம் காணும் பெரிய கற்றூண்களின் மீது கட்டட மமையாமல் அறை குறையாக நின்று விட்ட தென்றும் சொல்வார்கள். இதன் உள்ளுறைப் பொருளை மேலே விவரித்த இயற்கை வியாபாரங்களைக் கொண்டு ஊகித்துணர்ந்து தெளியலாமே.
நூல் : விவேக சந்திரிகை மூன்றாம் புத்தகம் (1935)
நூலாசிரியர் : தி. அ. சாமிநாத ஐயர் (ஆரியா பத்திரிகை ஆசிரியர்)
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply