(வைகாசி 11, 2045 / 25 மே 2014 இதழின் தொடர்ச்சி)

puungothai01

‘இப்படித் தவறாமல் அசை போட்டுக் கொண்டிருக்கிறாயே, அது தானே அம்மாள் உன்னை கடிந்து கொள்கிறார்கள் என்று காளியம்மை சலித்துக் கொண்டிருந்தாள். ஒருவாறாக உணவை முடித்துக் கொண்டு பூங்கோதை தாழ்வாரத்தை அடுத்துள்ள தன் அறையை நோக்கிப் புறப்பட்டாள்.

  கூடத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஊசலில் செங்கமலம் காலைத் தொங்க விட்டு அமர்ந்திருந்தாள். காளையப்பன் எதிரே கிடந்த இருக்கையில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டிருந்தான். வண்ணக்கிளி தன் அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டிருந்தாள். இந்த இனிய காட்சிக்கிடையில் அஞ்சி ஒடுங்கி சென்ற பூங்கோதை குறுக்கிட்டது இடையூறாகத் தோன்றியது போலும்.

‘‘பூங்கோதை!’’ என்று செங்கமலம் கூவினாள்.

‘‘பூங்கோதை! வரவர உன் போக்கு சரியாக இல்லை’’.

‘‘நான் என்ன தவறு செய்தேன்! காளி ஏதாவது அப்படிக் கூறினாளா?’’

‘‘பூங்கோதை! எடுத்ததற்கெல்லாம் என்ன, எதற்கு, ஏன்? என்று வினவுகிற குழந்தைகளையே எனக்குப் பிடிக்காது. பெரியவர்களிடம் உனக்கு நடந்து கொள்ளவே தெரியவில்லை. அடக்கமாகப் பேசத் தெரிந்து கொள்கிற வரை தனியாகவே இரு.’’

  பூங்கோதையின் கண் கலங்கிற்று. ஒரு குற்றமும் செய்யாத போதும் ஒறுத்தலா என்று விம்மினாள். அடுத்த நொடியில் அவள் தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த தாழ்வார அறைக்குள் போய்விட்டாள். சொருகுபேழையில்thaazhvaram_01 அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூல்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு, சாளரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டாள். அந்த அறையின் கதவுகள் திறந்திருந்தனவேனும் பசிய புனை தொங்கல் வாயிலை மறைத்துக் கொண்டிருந்தது. தாழ்வாரத்தை ஒட்டித் தொங்கிக் கொண்டிருந்த பசிய கொடிகளினின்று நீர்த்திவலைகள் சொட்டிக் கொண்டிருந்தன. கொடிகளுக்கிடையே பூங்கோதையின் நோக்குச் சென்றது. நெடுந்தொலைவிற்குப் பசும்புல்வெளி காட்சியளித்து. அப்புல்வெளிக்குப் பின்னால் எழுந்து நின்ற காரிய மலைத் தொடரைக் கார்முகில் கவ்விக் கொண்டிருந்தது. இத்தகைய தண்ணிய காட்சி பொதுவாக இன்பமூட்டுவதாகத் தானிருக்கும். ஆயினும், அதே காட்சியோடு ஒன்றி நின்ற இருள் பூங்கோதையின் உள்ளத்தில் ஒரு சுமையை உண்டாக்குவதாயிருந்தது. உலகமே இருண்டு கொண்டு வருவது போலிருந்தது.

 பூங்கோதை இயற்கைக் காட்சியில் ஈடுபட்டிருந்த தன் உள்ளத்தை நூற்பொருளினிடத்து ஒருமிக்க முயன்றாள். அந்நூல் அவளுடைய தந்தையார் செந்திலப்பரால் எழுதப்பட்டது. தந்தையார் எழுதியது என்பதனால் மட்டும் அவள் அதை விரும்பவில்லை. அதில் சிறந்த தலைவனாகக் காட்சியளிக்கும் கும்பக ருணனின் அன்புடைமையும், ஒருபாற்கோடாத நேரிய பண்பும், அசையாத உள்ளமும் ஆண்மையும், அவளுடைய உள்ளத்தில் புதுமையோடு கூடிய ஆர்வத்தை எழுப்பின. அந்நூல் எளிய, முறையில் சிறுவர்களுக்காக எழுதப்பட்டிருந்ததோடு, கும்பக ருணன் தன் அண்ணன் இராவணன் முன்பு கண்ணீர் வடித்து நின்று விடைபெறும் காட்சி ஓவியமாக முன் அட்டையில் தீட்டப்பட்டிருந்தது. ‘‘அரக்கர் என்று இகழப்படும் இனத்திலும் இத்தகைய சிறப்பு மிக்கவர் தோன்றியுள்ளனரே! உயர்ந்த பண்பாடுடைய மேற்குடியில் பிறந்தவர் என்று மார்தட்டிக்கொள்ளும் சிலரிடத்தில் எத்துணை இழி பண்புகள் உள்ளன’’ என்று ஏங்கினாள். தன் அண்ணனை விடுத்து மாற்றானிடம் மண்டியிட்டவன் அவன் தம்பிதானே’’என்று திகைத்தாள் பூங்கோதையென்ன கம்பராமாயணத்தையே கரைத்துக் குடித்த புலமை பெற்றவளா? இளமை உள்ளத்தில் நேரிய எண்ணங்கள் தோன்றுதல்தானே இயல்பு. ‘‘மாற்றான் மனைவியைக் கவர்ந்தவன் என்பதற்காக அண்ணனை வெறுத்துப் பகைவனிடம் சேர்ந்தானோ அவ்விளையான்?’’ என்ற வினா அவளைத் தேற்றியது என்றாலும் அவனும் கும்பகருணனைப் போல் அண்ணனுக்கு முன் உயிர் துறந்திருக்க வேண்டும்; அதுவே சிறந்தது. அவன் உற்றார் உறவினர் என்ற பாசம் இல்லாதவன் போலும்! என் அத்தை செங்கமலத்திற்குத்தான் என்ன பாசமிருக்கிறது? ஆம், அவளுக்கும் எனக்கும் என்ன? என் மாமாவைக் கட்டிக் கொண்டவள்; அவ்வளவுதானே? அவள் போகட்டும்; என் மாமாவின் மக்கள் என்னோடு குருதித் தொடர்புடையவர்களாயிற்றே; அவர்களாவது என்னிடம் பரிவு காட்டக்கூடாதா’’ என்ற எண்ண அலைகள் அவளைப் படிக்க விடாமல் மயக்கத்தில் ஆழ்த்தின. அம்மயக்க உணர்வில் அவளுடைய இன்ப அலைகள் ஒடுங்கிக் கிடந்தன. இந்த அமைதியும் எத்துணை நேரம்?

  கூடத்தின் கதவுகள் திடீரென உதைத்துத் தள்ளப்பட்டன. அடுத்த நொடியில் காளையப்பன் பூங்கோதை இரு அறையின் வாயிலண்டையில் நின்று உள்ளே நோக்கினான். அவள் சாளரத்தருகே ஒட்டிக் கொண்டிருந்ததால், அவளை அவன் காணக்கூடவில்லை.

‘‘எங்கே அந்த மடக்கழுதையைக் காணவில்லை? வண்ணக்கிளி! இந்த மழையில் எங்கோ ஓடிவிட்டாள். அம்மாளிடம் சொல்லு’ என்று காளையப்பன் கத்தினான்.

பூங்கோதை திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள்.

  ஒருக்கணித்து வைத்திருந்த கதவிற்கிடையில் உற்று நோக்கிய வண்ணக்கிளி, ‘அண்ணா! அவள் சாளரத்தண்டை ஒளிந்து கொண்டிருக்கிறாள்’ என்று அண்ணனிடம் தெரிவித்தாள்.

  காளையப்பன் உள்ளே நுழைந்து அவளைப் பரபரவென்று இழுத்துக் கொண்டு வெளியே வந்திருப்பான். அதைத் தவிர்க்க எண்ணிய பூங்கோதை வேண்டா வெறுப்போடு வெளியே வந்து, ‘ஏன்?’ என்ன வேண்டும்? என்று வினவினாள்.

  ‘என்ன வேண்டும்? என்று என்னையே மிரட்டுகிறாயா? கூப்பிட்டால் நாய்போல ஓடிவரவேண்டும்’ என்று கூறிக்கொண்டே, நடப்பை அடுத்திருந்த வரவேற்பறையில் கிடந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்த காளையப்பன், அவளைத் தன் முன் வந்து நிற்குமாறு ஆணையிட்டான்.

  காளையப்பன் பூங்கோதைக்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு மூத்தவன். அவன் தன் வயதுக்கு மீறிய பருமனும் உயரமும் உடையவனாக இருந்தான். அவனுடைய தந்தையார் இறந்த மறு ஆண்டிலிருந்தே அவன் குயிற்பொதும் பருக்குப் பத்துக் கல் தொலைவிலிருந்த நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியிலிருந்து விடுதியில் சேர்ந்து படித்து வந்தான். கூதிர்கால விடுமுறையின்போது வீட்டிற்கு வந்திருந்தவன் உடல்நலமில்லை என்று பள்ளிக்குத் திரும்பவில்லை. அவனுடைய பள்ளியின் மாணவர் விடுதிக் காப்பாளர் காரிய பெருமாள், வீட்டிலிருந்து பலகாரங்கள் அனுப்புவதை நிறுத்திவிட்டால் அவனுடைய உடம்பு சரிப்பட்டுவிடும்’ என்று பன்முறை செங்கமலத்தம்மையாரிடம் கூறியுள்ளார். பள்ளி மருத்துவர் கருத்துப்படி, ‘மீதூண்’ தான் அவனுடைய நோய். ஆனால் செங்கமலத்தம்மையார், ‘யாருடைய கொள்ளிக் கண்ணோ’ பட்டு நாளுக்கு நாள் தன் அருமருந்தன்ன ஆண்பிள்ளை மெலிந்து வருவதாக வருந்தினாள். ஏதோ சில நாட்களுக்கு வைத்திருந்து உடம்பைத் தேற்றி அனுப்பவே அவனை வீட்டில் வைத்திருந்தாள்.

(தொடரும்)

– குறள்நெறி: மாசி 3, 1995 /15.02.64