(என் சரித்திரம் 43 : காரிகைப்பாடம் தொடர்ச்சி)

அத்தியாயம் 25
செங்கணத்தில் வாசம்

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் சகோதரர்களாகிய வேலையர், கருணைப் பிரகாசர் இவர்களுடைய பரம்பரையினரும் உறவினரும் அப்பக்கங்களில் பல கிராமங்களில் பள்ளிக்கூடம் வைத்திருந்தார்கள். அவர்கள் யாவரும் ஓரளவு தமிழ்ப் பயிற்சி உடையவர்கள். நல்ல பாடல்களை மனனம்செய்து அவற்றை உரிய சந்தர்ப்பங்களிற்சொல்லி எல்லோரையும் மகிழ்வித்துப் பயன்பெறுவார்கள். அவர்களும் வேறு சில வித்துவான்களும் அடிக்கடி செங்கணத்திற்கு வந்து விருத்தாசல இரெட்டியாரிடம் சம்பாசணைசெய்து சில நாட்கள் தங்கியிருந்து தங்களுக்குள்ள சந்தேகங்களை நீக்கிக்கொண்டும் பொருளுதவி பெற்றும் செல்வார்கள். சில வித்துவான்கள் இரெட்டியாருடைய சந்தேகங்களையும் தீர்ப்பதுண்டு.

தனிப்பாடல் திரட்டு

இவ்வாறு வருபவர்களுடைய சம்பாசணையால் எனக்குத் தமிழ் இலாபம் இருந்தது. அவர்கள் கூறும் தனிப்பாடல்கள் மிக்க சுவையுள்ளனவாக இருக்கும். அவற்றைக் கேட்டு நான் பாடம் செய்துகொள்வேன். தனியே எழுதிவைத்துக் கொள்வேன். இப்படி ஒவ்வொரு பாடலாக நான் கேட்டுத் தெரிந்துகொள்வதை அறிந்த இரெட்டியார் ஒரு நாள், “என்னிடம் தனிப்பாடல் திரட்டு இருக்கிறது. அதில் பல பாடல்கள் உள்ளன. நான் உமக்குத் தருகிறேன்” என்று கூறித் தம்மிடமிருந்த அப்புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அது துந்துபி வருடம் (1862) சந்திரசேகர கவிராச பண்டிதரென்பவரால் முதன் முறையாகப் பதிப்பிக்கப்பெற்றது. அப்பொழுது அதன் விலை உரூபா ஐந்து.

அதைப் பார்த்தபோது எனக்கு ஏதோ ஒரு பெரிய புதையல் கிடைத்துவிட்டதுபோல இருந்தது. பலவகையான கருத்துக்களும் பலவகையான சாதுரியங்களும் அமைந்த தனிப்பாடல்கள் என் மனத்தைக் கவர்ந்தன. காளமேகப்புலவர் சமயத்துக்கேற்றபடி சாதுரியமாகப் பாடிய பாடல்களைப் படித்துப் படித்து உவப்பேன்; அவர் பாடிய சிலேடைகளைச் சொல்லிச் சொல்லி மகிழ்வேன்; பலபட்டடைச் சொக்கநாதப்புலவர் செய்யுட்களிலுள்ள பக்தியையும் எளிய நடையையும் கண்டு ஈடுபடுவேன்; ஒளவையார் முதலியவர்களுடைய பாடல்களின் போக்கிலே என் மனம் இலயித்துவிடும். பலவகையான சுவைகள் உள்ள அப்பாடல்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இரத்தினமாகவே தோன்றியது; ஓய்ந்த நேரங்களிலெல்லாம் அவற்றையே படித்துக் காலம் கழிப்பேன். பிறரிடம் சொல்லிச் சொல்லிப் பாராட்டுவேன்; மிக விரைவில் பல பாடல்கள் மனனமாயின; எனது தமிழன்பு அப்பாடல்களால் எவ்வளவோ உயர்ந்துவிட்டது.

இரெட்டியார் எனக்கு யாப்பருங்கலக்காரிகை அச்சுப் பிரதியையும் வேறு சில புத்தகங்களையும் பின்பு அளித்தார். அச்சுப் புத்தகங்கள் அருமையாக வழங்கிய அக்காலத்தில் அப்புத்தகங்கள் எனக்குப் பெருந்தனமாக இருந்தன.

படித்த நூல்கள்


விருத்தாசல இரெட்டியாரிடம் பல தமிழ் நூல்கள் இருந்தன. அவற்றிற் பல ஏட்டுச் சுவடிகள்; சில அச்சுப் புத்தகங்கள். ஏட்டுப் பிரதிகளிற் பல அவர் தம் கையாலேயே எழுதியவை. செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதத்தில் அவருக்கு நல்ல பழக்கம் உண்டு. தம் கையாலேயே அந்நூல் முழுவதையும் ஏட்டில் எழுதி வைத்திருந்தார். ஓய்ந்த நேரங்களில் நான் அப்புத்தகங்களை எடுத்துப் பார்ப்பேன்; படிப்பேன். அவற்றிலுள்ள விசயங்களை ரெட்டியாரிடம் கேட்பேன். அவர் சொல்லுவார். இத்தகைய பழக்கத்தால் தமிழ்க்கடலின் ஆழமும் பரப்பும் பல நூற்பகுதிகளும் சில வித்துவான்களுடைய சரித்திரங்களும் விளங்கின. தண்டியலங்காரம், திருக்குறள், திருக்கோவையார் என்னும் நூல்களை நானே படித்தேன். கம்பராமாயணத்திலும் பல பகுதிகளைப் படித்து உணர்ந்தேன்.

பாட்டியல்கள்

காரிகைக்குப் பிறகு ரெட்டியார் எனக்குப் பொருத்த இலக்கணங்களையும் பிரபந்த இலக்கணங்களையும் கற்பித்தார். அவற்றை அவர் நன்றாக ஆராய்ந்து வரையறை செய்து வைத்திருந்தார். அவருடைய வீட்டுத் திண்ணைச் சுவர்களில் பல இடங்களில் இரட்டை நாகபந்தம், அட்ட நாகபந்தம் முதலிய சித்திரகவிகள் எழுதப்பெற்றிருக்கும். நான் முன்பே சில பாட்டியல் நூல்களைப் படித்திருந்தமையால் அவர் கற்பித்தபோது எனக்கு அவை தெளிவாக விளங்கின. இரெட்டியாருடைய விருப்பத்தின்படி ஒவ்வொரு பாட்டியலிலும் ஒரே விசய சம்பந்தமாகக் காணப்படும் இலக்கணங்களைத் தொகுத்து வரிசைப்படுத்தி ஏட்டிற் பிரதி செய்துகொண்டேன். மங்கலப் பொருத்தம் என்பதன் இலக்கணத்தைப் பற்றி எல்லாப் பாட்டியல்களிலுமுள்ளவற்றை ஒருங்கே எழுதினேன். இம்முறையில் மற்றவற்றையும் எழுதினேன். இவ்வாறு தொகுத்து எழுதிய அச்சுவடி விசய வரிசையால் அமைந்த பாட்டியற் கொத்தாக இருந்தது. அப்பிரதி பிற்காலத்தில் என்னிடமிருந்து நழுவிவிட்டது. அவரிடம் தத்தாத்திரேயப் பாட்டியல் என்னும் பிரபந்த இலக்கண நூல் இருந்தது அதனையும் படித்தேன். பிரதி செய்துகொள்ளவில்லை. இப்போது அந்நூல் தமிழ்நாட்டில் அகப்படவில்லை. சித்திரகவிகளின் இலக்கணத்தையும் அவற்றை இயற்றும் பழக்கத்தையும் ரெட்டியார் உதவியால் அறிந்துகொண்டேன்.

பெருமாளையர்

இரெட்டியாருடைய நண்பராகிய பெருமாளையர் என்னும் காணியாளப் பிராமணர் ஒருவர் பெரும்பாலும் இரெட்டியாருடனே இருப்பார். அவருக்கும் யாப்பிலக்கணத்திலும் பொருத்த இலக்கணங்களிலும் சித்திரகவிகளிலும் நல்ல பழக்கம் இருந்தது. நன்றாக அவர் சித்திரம் எழுதுவார். இரத பந்தம், நாகபந்தம், கமல பந்தம், சக்கர பந்தங்கள் முதலியவற்றை அவர் போட்டுத் தருவார். நான் அவற்றுள் செய்யுளை அடைப்பேன். நானும் அச்சித்திரங்களை வரைவேன்.

நான் ஒருநாள் அறுசீரடி ஆசிரிய விருத்தம் ஒன்று எழுதிப் பெருமாளையரிடம் காட்டினேன். அச்செய்யுளில் நான்கு அடிகள் இருந்தன; ஆறு சீர்கள் இருந்தன; எதுகை மோனை எல்லாம் இருந்தன. ஆனால் ஓசை சரியாக இல்லை. பெருமாளையர் அதைப் பார்த்துச் சிரித்தார். “ஏன்? இதில் என்ன பிழை?” என்று கேட்டேன் “நீரே படித்துப் பாரும்; ஓசை சரியாக இருக்கிறதா என்று கவனியும்” என்றார். நான் சிலமுறை படித்தேன்; ஓசை சரியாக இல்லை என்பது எனக்கு ஓரளவு தெரிந்தும் அதை நான் ஒப்புக் கொள்ளவில்லை; “ஆறு சீர்கள் இல்லையா?” என்றேன். “ஆறு சீர்கள் இருக்கின்றன என்பது வாத்தவந்தான். ஆனால் எந்தச் சீர் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. அதனால்தான் ஓசை பிறழ்கிறது” என்று கூறிப் பிரபுலிங்க (இ)லீலை என்றும் தமிழ் நூலை எடுத்துச் சில பாடல்களைப் படித்துக் காட்டினார்.

(தொடரும்)

என் சரித்திரம், உ.வே.சா.