(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 5. தொடர்ச்சி)

1882-ஆம் வருட முடிவில் என்னை என் தகப்பனார் பச்சையப்பன் கல்லூரியின் கிளைப் பள்ளிக்கூடமாகிய அப்பள்ளிக்கூடத்தின் கீழ்ப்பாகத்தில் வைக்கப்பட்டிருந்த கோவிந்த நாயுடு பிரைமெரி (Primary) பள்ளிக்கூடத்தில் சேர்ப்பித்தார். என்னை அழைத்துக்கொண்டுபோய் அதன் பிரதம உபாத்தியாயர் ஏ. நரசிம்மாச்சாரியிடம் விட்டு, “இவன் இரண்டாம் வகுப்பில் போன வருடம் படித்தான். வகுப்பில் முதலாவதாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். இவனை விசாரித்து எந்த வகுப்பில் சேர்த்துக்கொள்ள முடியுமோ அப்படியே செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். நரசிம்மாச்சாரியார் ஒன்றாவது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு சிறு பாடத்தைப் படிக்கச் சொல்லி அதற்கு அருத்தமும் சொல்லச் சொன்னார். அதன்படியே செய்தேன். பிறகு கணக்கில் பரிட்சிக்க ஒரு கணக்கு கொடுத்தார். அதைப்போடத் தெரியாது விழித்தேன் அதன் பேரில் என் தகப்பனாருக்கு ஒரு நிரூபம் எழுதினார். அதில் ‘பிள்ளையாண்டான் சரியாக இங்கிலீசு படிக்கிறான். ஆனால் கணக்கில் சரியாக இல்லை. ஆகவே என் விருப்பப்படி செய்வதனால் இவனை இந்த வருடம் இரண்டாவது வகுப்பிலேயே படிக்கச் செய்வேன். இல்லை இவனை மூன்றாவது வகுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று உங்கள் விருப்பமானால் அப்படியே செய்கிறேன்’ என்று எழுதியிருந்தரராம், இக்கடிதத்தை மத்தியானம் நான் வீட்டிற்குப் போய் என் தகப்பனாரிடம் கொடுத்தபோது, இதை எனக்கு அவர் தெரிவித்து இரண்டாம் வகுப்பிலேயே என்னைச் சேரும்படி கட்டளையிட்டார். என் மனத்தில் அப்போது ஒரு துக்கமுமில்லாமல் அப்படியே சேர்ந்தேன். பிறகு சில தினங்கள் பொறுத்து ஒரு நாள் என் பழைய் உபாத்தியாயர் முனுசாமி நாயுடு எங்கள் வகுப்புக்கு வந்து என்னைப்பார்த்து “என்னடா சம்பந்தம் உன்னுடன் படித்தவர்களெல்லாம் மூன்றாவது வகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். நீ மாத்திரம் என்ன இரண்டாம் வகுப்பில் சேர்ந்திருக்கிறாய்” என்றார். இதைக் கேட்டதும் எனக்கு வருத்தம் உண்டாகி அழுதுவிட்டேன், இதை இவ்வளவு விவரமாக எழுதுவதற்குக் காரணத்தை என் நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன், இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்து நான் அப்போது மிடில் இசுகூல் (Middle School) பரிட்சை யெனும் கவர்ன்மெண்டு பரிட்சைக்குப் போனபோது என் பழைய நண்பர்கள் எல்லாம் பெயில் (Fail) ஆனார்கள், நான் தேறினேன். இதை டம்பமாக எடுத்துக்கூறவில்லை. இரண்டாம் வகுப்பில் இரண்டு வருடம் படித்ததின் பயனாக என் படிப்பின் அத்திவாரம் நன்றாய் உறுதியாய் நான் மேலே படிப்பதற்கு அனுகூலமாய் இருந்தது. இல்லாவிட்டால் என் மூளையின் வளர்ச்சிக்குத் தக்கபடி படிக்காது. அதை தாங்க சக்தியில்லாதபடி வருடா வருடம் படிக்க நேரிட்டு பரிட்சையில் தேறியிருக்கமாட்டேன் என்று உறுதியாக நம்புகிறேன். தற்காலம் யாராவது சிறுவர்கள் தங்களுக்கு வகுப்பில் பிரமோச ஆகவில்லை யென்று என்னிடம் வந்து முறையிட்டுக்கொண்டால் எனக்கு நேரிட்ட சம்பவத்தைக் கூறி அவர்களுக்கு உண்மையில் ஆறுதல் கூறி அனுப்புகிறேன் இப்பொழுதும்!

நான் இப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கல்வியின் மீது எனக்கு உற்சாகம் உண்டாகச்செய்த இரண்டு சந்தர்ப்பங்களைக் குறிக்கிறேன். முதலாவது என் வகுப்பில் உபாத்தியாயராக இருந்த சுப்பிரமணிய ஐயர் எங்கன் வீட்டிற்கு வந்து என் தகப்பனாருடன் பேசிக்கொண்டிருந்த போது “சம்பந்தம் எம்.ஏ.இரங்கநாத முதலியாரைப்போல் படித்து முன்னுக்கு வருவான்” என்று அவர் என் தந்தையிடம் சொன்னார். இதைக் கேட்ட போது எனக்குக் கருவம் பிறக்க வில்லை. வாத்தவமாய்ப் பயம் பிறந்தது. அக்காலத்தில் எம்.ஏ.இரங்கநாத முதலியார் என்பவர் தமிழர்களுள் மிகவும் நன்றாய்ப் படித்தவர் என்று பெயர் பெற்றவர். அவரைப்போல் நாம் எங்கு படிக்கப் போகிறோமென்கிற பயம். ஆகவே எப்படியாவது கசுட்டப்பட்டு நன்றாய்ப் படிக்கவேண்டுமென்று ஊக்கம் பிறந்தது. இரண்டாவது இக்கலாசாலையின் வருடாந்திரக் கொண்டாட்டத்தில் பச்சையப்ப முதலியார் ஃகாலில் மெட்ரிக்குலேசன் பரிட்சையில் முதலாவதாக தேறிய ஒரு பிள்ளையான்டான் பொற்பதக்கம் (Gold medal) பெற்றதைப் பார்த்தேன். அச்சமயம் நாமும் இப்பொற்பதக்கம் பெறவேண்டுமென்னும் ஆசை பிறந்தது எனக்கு. (தெய்வத்தின் கருணையினால் 1889ஆம் வருசம் அந்த ஆசை நிறைவேறிப் பொற்பதக்கம் பெற்றேன்.)


இப்பள்ளியைச் சேர்ந்ததினால் பெற்ற பெரும் பலன் என்னவென்றால் நான் இப்பள்ளியைச் சேர்ந்தவுடன் தானும் இங்கு படிக்கச் சேர்ந்த சிரீமான் வி. வி. சீனிவாச ஐயங்காருடைய நட்பே.! இவர் என்னைவிடக் கொஞ்சம் மூத்தவர். ஆயினும் இங்கு இரண்டாம் வகுப்பிலும் மூன்றாம் வகுப்பிலும் என்னுடன் படித்தவர். அவர் ஓர் இடத்தில் எழுதியபடி நாங்கள் இருவரும் முதன்முறை சந்தித்தபோதே நண்பர்களானோம். (தெய்வகடாட்சத்தினால்) அன்று பிறந்த நட்பு செழித்தோங்கி இருவரும் உயிர் சினேகிதர்களானோம், இச்சம்பவம் நேரிட்டு 72 வருடங்கள் சிநேகிதர்களாய் இருந்தோம்.

1884-ஆம் வருடம் நாங்களிருவரும் இப் பள்ளிக்கூடத்திலிருந்து நான்காம் வகுப்பையுடைய செங்கல்வராய நாயக்கர் பள்ளிக்கு அனுப்பப்பட்டோம். அதிலிருந்து 1885-ஆம் வருடம் இரண்டு பெயரும் அக்காலத்து மிடில்இசுகூல் பரிட்சையில் தேறி 1886-ஆம் வருடம் பச்சையப்பன் கல்லூரியைப் போய்ச் சேர்ந்தோம். பிறகு 1887-ஆம் ஆண்டு இரண்டு பெயரும் அக்காலத்து மெட்ரிக்குலேசன் பரிட்சையில் தேறினோம். இதன் பேரில் நான் கவர்ன்மெண்டு காலேசாகிய பிரசிடென்சி காலேசைப் போய்ச் சேர்ந்தேன். எனது நண்பர் பச்சையப்பன் காலேசிலேயே படித்து வந்தார். இப்படி நான்கு வருடங்கள் நாங்கள் பிரிக்கப்பட்ட போதிலும் எங்கள் சிநேகிதம் மாறவில்லை. இரண்டு பெயரும் ஒரே வருசம் பி.ஏ. பரிட்சையில் தேறி மறுபடியும் லா (Law) காலேசில் ஒன்றாய்ப் படிக்க ஆரம்பித்தோம், பி எல். பரிட்சையில் இருவரும் ஒரே வருசம் தேறினோம். அதன் பேரில் எனது நண்பர் “சேம்சு சார்ட்டு” என்பவரிடம் அப்ரென்டிசாக (Apprentice) அமர்ந்தார், நான் சிரீமான் சுந்தரம் சாத்தியாரிடம் முதலிலும் அவர் அகாலமடைந்த போது அவர் குமாரராகிய குமாரசாமி சாத்திரியிடமும் வித்யார்த்தி (Apprentice) ஆனேன்.

(தொடரும்)

பம்மல் சம்பந்தம்

என் சுயசரிதை