(உ.வே.சா.வின் என் சரித்திரம் 76 : இரட்டிப்பு இலாபம் – தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம்-46 – தொடர்ச்சி

“என்ன பாடம் ஆரம்பிக்கலாம்?” என்ற யோசனை எழுந்த போது

சுப்பிரமணிய தேசிகர், “எல்லோருக்கும் ஒரே பாடத்தைச் சொல்லுவதைக்

காட்டிலும் குமாரசாமித் தம்பிரான் முன்னமே சில நூல்களைப் பாடங்

கேட்டிருத்தலால் அவருக்கு ஒரு பாடமும் மற்றவர்களுக்கு ஒரு பாடமும்

நடத்தலாம். குமாரசாமித் தம்பிரானுக்குத் திருவானைக்காப் புராணத்தை

ஆரம்பிக்கலாம்; மற்றவர்கள் சீகாளத்திப் புராணம் கேட்கட்டும்” என்று

சொல்லி மேலும் பாட சம்பந்தமான சில விசயங்களைப் பேசினார்.

எனது வாட்டம்

தம்பிரான்களைப் பற்றியும் அவர்களுக்குச் சொல்ல வேண்டிய

பாடங்களைப் பற்றியும் பேச்சு நடந்த பொழுது எனக்கு ஒருவகையான மன

வருத்தம் உண்டாயிற்று. “என்னை இவர்கள் மறந்து விட்டார்களே. நான்

தம்பிரான்களோடு சேர்ந்து பாடங் கேட்கக் கூடாதோ! ஆதீன

சம்பிரதாயத்துக்கு அது விரோதமாக இருக்குமோ! பிள்ளையவர்கள் சாகையிலே

இருக்கும்போது சொல்லும் பாடத்தோடு நிற்க வேண்டுமா?

இப்படியாகுமென்றால் இவ்வூருக்கு வந்ததில் எனக்கு இலாபம் ஒன்றுமில்லையே!”

என்று எண்ணி எண்ணி என் மனம் மறுகியது. நான் முக வாட்டத்தோடு

யோசனையில் ஆழ்ந்திருந்தேன்.

என் ஆவல்

அப்போது ஆசிரியர் என்னைப் பார்த்தார். என் மனத்துள் நிகழ்ந்த

எண்ணங்களை அவர் உணர்ந்து கொண்டாரென்றே தோற்றியது. அப்படி அவர்

பார்த்தபோது சிறந்த மதியூகியாகிய சுப்பிரமணிய தேசிகர் எங்கள் இருவர்

கருத்தையும் உணர்ந்தவர் போல, “இவரை எந்த வகையில் சேர்க்கலாம்?”

என்று கேட்டார். அக் கேள்வி எனக்கு ஒருவகை எழுச்சியை உண்டாக்கிற்று.

யோசனையினின்றும் திடீரென்று விழித்துக் கொண்டேன். எனக்கிருந்த ஆவல்

தூண்டவே பிள்ளையவர்கள் விடை பகர்வதற்கு முன் நான் “இரண்டு

வகையிலும் சேர்ந்து பாடங் கேட்கிறேன்” என்று சொன்னேன்.யாவரும் தடை சொல்லவில்லை. என் ஆசிரியரும் தேசிகரும் தம்

புன்முறுவால் என் ஆவலாகிய பயிருக்கு நீர் வார்த்தனர்.

“எல்லோருக்கும் இலாபம் ஒரு பங்கு. உமக்கு இரட்டிப்பு இலாபம்” என்று

தேசிகர் கூறியபோது நான் சிறிது நேரத்துக்கு முன்பு ஆழ்ந்திருந்த துயரக்கடல்

மறைந்த இடம் தெரியவில்லை. சந்தோச உச்சியில் நின்றேன்.

“உம்மிடம் புத்தகங்கள் இருக்கின்றனவா!” என்று அந்த வள்ளல்

கேட்டார்.

அவருக்கு முன் இல்லையென்று சொல்வதற்கு நாணம் உண்டாக,

இல்லையென்றால் உண்டென்று தரும் பேருபகாரியாகிய தேசிகர் நான் அந்த

வார்த்தையைச் சொன்னவுடன் மடத்துப் புத்தகசாலையிலிருந்து

திருவானைக்காப் புராணத்தையும் சீகாளத்திப் புராணத்தையும் கொண்டு

வரச்செய்து எனக்கு வழங்கினார். “பாடம் நடக்கும்போது சாமிநாதையரே படிக்கட்டும்” என்று தேசிகர் உத்தரவிட்டார். நான் இசையுடன் படிப்பேனென்பது முன்பே தெரியுமல்லவா?

பாட ஆரம்பம்

குமாரசாமித் தம்பிரானுக்கு உரிய திருவானைக்காப் புராணம் முதலில்

ஆரம்பமாயிற்று. அப்புராணத்திலுள்ள விநாயகர் காப்புச் செய்யுளைப்

படித்தேன். ஆசிரியர் பொருள் சொன்னார். பின்பு மற்ற வகையாருக்கு உரிய

சீகாளத்திப் புராணத்தின் காப்புச் செய்யுளையும் படித்தேன். ஆசிரியர் உரை

கூறினார்.

இவ்வாறு அந்த நல்ல நாளிலே தம்பிரான்களுக்கு என் ஆசிரியர் பாடம்

சொல்லத் தொடங்கினார். சுப்பிரமணிய தேசிகருடைய விருப்பத்தின்படி

காலையில் அவருக்கு முன்பு திருவானைக்காப்புராணம் நடைபெறும். பிற்பகலில்

மற்றவர்களுக்குரிய சீகாளத்திப்புராணம் மடத்தைச் சார்ந்த வேறு இடங்களில்

நிகழும். இரண்டு வகையிலும் நானே படித்து வந்தேன்.

பாடம் நடந்த முறை

சுப்பிரமணிய தேசிகர் முன் பாடம் நடக்கும்போது இடையிடையே நான்

இசையுடன் படிக்கும் முறையைத் தேசிகர் பாராட்டுவார். திருவானைக்காப்

புராணம் கடினமான நூலாதலால் ஒரு நாளைக்கு ஐம்பது பாடல்களுக்கு மேல்

நடைபெற வில்லை. சுப்பிரமணிய தேசிகரும் தமக்குத் தோன்றிய கருத்துகளை

உரியஇடங்களிற் சொல்லுவார். தேசிகரைத் தரிசிப்பதற்குக் காலையில்

அடிக்கடி பல பிரபுக்களும் வித்துவான்களும் வருவார்கள். அப்போதும் பாடம்

நடைபெறும். வந்தவர்களும் கேட்டு இன்புறுவார்கள். அத்தகைய

சந்தர்ப்பங்களில் பாடத்தின் சுவை அதிகமாகும். வந்திருப்பவர்களும் கேட்டுப்

பயனடையும்படி பிள்ளையவர்கள் பல மேற்கோள்களை எடுத்துக் காட்டுவார்.

சைவ சித்தாந்தக் கருத்துகள் வரும் இடங்களில் தேசிகர் மெய்கண்ட

சாத்திரங்களிலிருந்து மேற்கோள் காட்டி விசயங்களை அருமையாக எடுத்து

விளக்குவார். அத்தகைய காலங்களில் பொழுது போவதே தெரியாது. தமிழ்

விருந்தென்று உபசாரத்துக்குச் சொல்லுவது வழக்கம். அங்கே நான்

அனுபவித்தது உண்மையில் விருந்தினால் உண்டாகும் இன்பமாகவே இருந்தது.

உணவின் ஞாபகம் அங்கே வருவதற்கே இடமில்லை.

பாடம் கேட்கையில் ஒவ்வொரு பாடலையும் நான் மூன்று முறை

வாசிப்பேன். பொருள் சொல்லுவதற்கு முன் ஒரு முறை பாடல் முழுவதையும்

படிப்பேன். பொருள் சொல்லும்போது சிறு சிறு பகுதியாகப் பிரித்துப்

படிப்பேன். பொருள் சொல்லி முடிந்த பிறகு மீட்டும் ஒரு முறை பாடல்

முழுவதையும் படிப்பேன். இப் பழக்கத்தால் அப்பாடல் என்மனத்தில் நன்றாகப்

பதிந்தது. பிள்ளையவர்கள் பாடம் சொல்லும் முறை இது.

திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த அன்ன சத்திரத்தில் நான்

காலையிலும் பகலிலும் இரவிலும் ஆகாரம் உண்டு வந்தேன்.

ஒவ்வொரு நாளும் தமிழ்ப் பாடத்தினாலும் சுப்பிரமணிய தேசிகருடைய

சல்லாபத்தினாலும் அயலூர்களிலிருந்து வருபவர்களுடைய பழக்கத்தினாலும்

புதிய புதிய இன்பம் எனக்கு உண்டாயிற்று. தம்பிரான்கள் என்னிடம் அதிக

அன்போடு பழகுவாராயினர். எனக்கும் அவர்களுக்கும் பலவகையில்

வேற்றுமை இருப்பினும் எங்கள் ஆசிரியராகிய கற்பகத்தின் கீழ்க் கன்றாக

இருந்த நாங்கள் அனைவரும் மனமொத்துப் பழகினோம். அவர்களுள்ளும்

குமாரசாமித் தம்பிரான் என்பால் வைத்த அன்பு தனிப்பட்ட சிறப்புடையதாக

இருந்தது. எல்லோரும் தமிழின்பத்தாற் பிணைக்கப்பட்டு உறவாடி வந்தோம்.

எங்களோடு மாயூரத்திலிருந்து வந்த சவேரிநாத பிள்ளை

திருவாவடுதுறையில் ஒரு வாரம் வரையில் இருந்து ஆசிரியரிடம் உத்தரவு

பெற்று மாயூரத்துக்குச் சென்றார். மாயூரத்தில் முன்சீப் வேதநாயகம் பிள்ளை

அவருக்குப் பழக்கமுடையவராதலால் அங்கே அவருடன் இருந்தனர்.

(தொடரும்)
என் சரித்திரம்
உ.வே.சா.