(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 176-180-தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  181-185

181. absence of injuryகாயமின்மை  

காயம் இல்லாமை என்பது வலியின்மை ஆகாது.  


காயமின்மை பாதுகாப்புச் சூழல் இருப்பதைக் குறிப்பதாகாது.  
வயது வராச் சிறுமியின்/ பெண்ணின் உடலில் வெளிக்காயமோ உட்காயமோ இல்லாதிருப்பது கற்பழிப்புக் குற்ற வழக்கை விலக்குவதற்குக்காரணமாகாது என ஒரிசா நீதிமன்றம் தெரிவித்துள்ளத.(பிரபுலா முண்டாரி /Prafulla Mundari மேல் முறையீட்டு வழக்கு, 20120)
182. Absence of motiveஉள்நோக்கம் இன்மை  

குற்றச் செயலுக்கான உள்நோக்கம் இன்மை.
 
நந்து சிங்கு எதிர் மத்தியப்பிரதேசம்(Nandu Singh v. Madhya Pradesh) முதலான பல வழக்குகளில் உச்ச நீதி மன்றம், சூழ்நிலை ஆதாரங்கள் அடிப்படையிலான வழக்கில், உள்நோக்கமின்மை, குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச்சாதகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. எனவே, நேர் சான்று இல்லாமல் சூழல்சான்று அடிப்படையில் உள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் உள்நோக்கத்தை உணர்த்த வேண்டியது குற்றந் தொடுப்புப் பக்கத்தின் இன்றியமையாக் கடமையாகிறது.
183. Absence of record of tenancyகுத்தகைப் பதிவுரு இல்லாமை  

வாடகைப் பதிவும் உடைமைப் பதிவும் இருக்கக்கூடிய வருவாய் ஆவணத்தில், உள்ளீடு இல்லாத நேர்வில், வாய்மொழிச்சான்று அடிப்படையில் மட்டும் குத்தகை இருப்பதாக உறுதி செய்ய இயலாது.   வாய்மொழிச் சான்றுகள், வருவாய்ப் பதிவுருக்களுக்கு மாறாக ஆதாரமாகச் சேர்க்கப்படலாம். ஆனால், இத்தகைய வாய்மொழிச்சான்றுகள் மட்டும் போதுமான மறுப்புரையாகவோ ஆதாரமாகவோ அமையாது.

சான்றுரைஞர்கள் பொய் சொல்லலாம். ஆனால் ஆவணங்கள் பொய் சொல்லா” என்பது பொன்விதி. -சிரீபருதாப்பு சிங்கு எதிர் சிவ்வுராம் (உரிமையியல் மேல்முறையீட்டு வழக்கு எண் 1511/2020/Civil Appeal No. 1511 of 2020),  உச்ச நீதிமன்றம் 20.02.20  (ARISING OUT OF SLP (CIVIL) NO. 725 OF 2017)  
184. Absence without leave      இசைவின்றி வராமை,  

ஏற்பிசைவு இல்லாத வருகை யின்மையாகும்.  

அனுமதி பெறாமல்‌ வராதிருத்தல்.   விடுப்பு இசைவின்றி வராமை ‌  

இசைவு எதுவும் பெறாமல் வழக்கு மன்றம், பணியிடம், படிப்பிடம் போன்ற இடத்திற்கு வராதிருத்தல்.   இது தண்டனைக்கு வழிவகுக்கலாம். அல்லது எச்சரிப்பிற்கு ஆளாகலாம்.  

உரிய இசைவோ ஒப்புதலோ இன்றி அல்லது நோய்போன்ற வராமைக்கான காரணத்தை முறையாகத் தெரிவிக்காமல் வேலைக்கு வரத் தவறினால் தண்டனைக்குரிய வராமையாகும்.   முதலாளி அல்லது உரிய மேல் அலுவலர் நடவடிக்கை எடுத்த பின்,  நோய்போன்றவற்றைக் காரணம் காட்டினாலும், இது ஏற்பிசைவில்லாத வருகையின்மையாகும்.

படைத்துறைப் பணியிலிருந்து, அல்லது பதவியிலிருந்து, கைவிட்டு ஓடும் நோக்கமின்றி இசைவு பெறாமல் வராமை.
185. Absence, by reason ofவாராமை காரணமாகப்   பணிக்கு வராதவர்,

கல்விக்கூடத்திற்கு வராதவர், வழக்கு மன்றத்திற்கு வராதவர் என வெவ்வேறு இடங்களில் வராதவர் இருப்பர்.  

பணியிடத் துன்புறுத்தல், குடும்பம் தொடர்பான சிக்கல்கள், நோய், வேறு வேலை தேடுதல் போன்ற பல காரணங்களால் பணிக்கு வராச் சூழல் ஏற்படுகிறது.


ஆசிரியர் மீதான அச்சம், உடன் பயிலுநர் மீதான அச்சம், பணம் செலுத்தாச் சூழலால் ஏற்படும் அச்சம், நல்ல உடையோ வேண்டிய புத்தகம்போன்றவையோ இல்லாத அச்சம் எனப் பல காரணங்களால் பள்ளிக்கு வராமை நிகழ்கிறது.  

வழக்கிலிருந்து தப்பிப்பதாகக் கருதிக் கொள்ளல், எதிர்பாரா இயற்கை இடையூறு, வழக்கு நாளைச் சரியாக அறியாமை, வழக்கினை இழுத்தடித்தல் போன்ற காரணங்களால் வழக்கு மன்றத்திற்கு வராச் சூழல் ஏற்படுகிறது.   இத்தகைய வராமை காரணமாக ஏற்படும் சிக்கல்கள், தொடர் நடவடிக்கையைக் குறிப்பிடுதல்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்