உ.வே.சா. வின் என் சரித்திரம் 87 : அத்தியாயம்-53 : அம்மை வடு
(உ.வே.சா. வின் என் சரித்திரம் 86 : விடை பெறுதல்-தொடர்ச்சி)
என் சரித்திரம்
அம்மை வடு
நான் பல்லக்கில் சூரிய மூலையை அடைந்தபோது பகல் 11 மணி
இருக்கும் அம்மையென்ற காரணத்தால் என்னை நேரே அம்மானுடைய
வீட்டிற்குள் செல்ல அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை
வெளியூர்களிலிருந்து சிலர் வந்திருந்தனர். நான் இருந்த பல்லக்கு வீட்டுக்கு
எதிரே உள்ள தென்னந்தோப்பில் இறக்கி வைக்கப்பட்டது.
எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. அங்கே அவ்வளவு
பேர்கள் கூடியிருந்ததற்குக் காரணம் இன்னதென்று தெரிந்த போது நான் இடி
விழுந்தவன் போலானேன். நான் அங்கே சென்ற தினத்திற்கு முதல் நாள் என்
அருமை மாதாமகரும், சிவ பக்தியை எனக்கு இளமையிலேயே புகட்டியவரும்
ஆன கிருட்டிண சாத்திரிகள் சிவசாயுச்சிய பதவியை அடைந்தனர். அவருடைய
இனிய வார்த்தைகளையும் சிவபூசா விசேடத்தையும் வேறு எங்கே
காண்போமென்று இரங்கினேன்.
குழப்பமான நிலை
இந்நிலையில் தோப்பிலே நான் பல்லக்கிற் கிடந்தபடியே வருந்துகையில்
சஞ்சயனத்தை நடத்தி விட்டு என் அம்மானாகிய சிவராமையருடன் என்
தந்தையாரும் பிறரும் வந்தனர். என்னை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல்
இருந்தவர்களைக் கண்டு அம்மான் கோபித்துக் கொண்டார். “நம்முடைய
குழந்தை; அவன் இன்னல்படும்போது அவனுக்கு உதவாக வீடு வேறு எதற்கு?
நன்றாய்ப் பிச்சைக்காரன் மாதிரி தோப்பில் நிறுத்தி வைத்தீர்கள்? உங்கள் மனம்
கல்லோ!” என்று சொல்லிப் பக்கத்தில் ஒருவரும் குடியில்லாமல் தனியேயிருந்த
அவருடைய வேறொரு வீட்டைத் திறந்து விரைவில் என்னை அங்கே
கொணர்ந்து வைக்கச் செய்தார்.
பிறகு என் தந்தையாரும் தாயாரும் வந்து என்னைக் கண்டு மிகவும்
வருந்தினார்கள். வேண்டிய பரிகாரங்களைப் பிறர் செய்ய நான் அவ்வீட்டிலே
இருந்து வந்தேன். எனக்குக் கண்டிருப்பது பெரியம்மையின் வகையாகிய
பனையேறியம்மையென்று அங்குள்ளோர் சொன்னார்கள். நான் சௌக்கியமாக
வந்து சேர்ந்ததை ஆசிரியரிடம் தெரிவிக்கும்படி எனக்குத் துணையாக வந்த
அரிகரபுத்திர பிள்ளையிடம் சொல்லி அனுப்பினேன்.
அம்மையின் வேகம்
ஒரு நாள் எனக்கு அம்மையின் வேகம் அதிகமாயிற்று. நான் என்
நினைவை இழந்தேன். அப்போது எல்லாரும் பயந்து போயினர். என்
தாயாரும் தந்தையாரும் கண்ணீர் விட்டனர்.
எனக்கு நினைவு சிறிது வந்தபோது, “நாம் மிகவும் அபாயமான
நிலையில் இருக்கிறோம்” என்ற உணர்வு உண்டாயிற்று. அருகில் கண்ணும்
கண்ணீருமாய் இருந்த என் தாயாரை நோக்கி, “நான் பிறந்து உங்களுக்கு
ஒன்றும் செய்யாமற் போகிறேனே!” என்று பலகீனமான குரலில் சொன்னேன்.
அதைக் கேட்டு அவர் கோவென்று கதறினார். என் தந்தையாரும் துக்க
சாகரத்தில் ஆழ்ந்தார். ஒன்றும் அறியாத குழந்தையாகிய என் தம்பி அருகில்
இருந்து மருள மருள விழித்தான்.
ஆண்டவன் திருவருளால் அக்கண்டத்தினின்றும் நான் தப்பினேன்.
அம்மை கடுமையாக இருந்தாலும் அக்கடுமை என் உடம்பில் தழும்பை
உண்டாக்கியதோடு நின்றது. என் பாட்டனார் இறந்த துக்கத்தின் நடுவிலே
வளர்ந்து வந்து அத்துன்ப நிலையை நினைவுறுத்தும் அடையாளமாக இன்றும்
சில அம்மை வடுக்கள் என் உடலில் இருக்கின்றன.
மார்கழி மாதம் முழுவதும் நான் மிக்க துன்பத்தை அடைந்தேன்.
தைமாதம் பிறந்தது. எனக்குச் சிறிது சௌக்கியம் உண்டாயிற்று; தலைக்குச் சலம்
விட்டார்கள். திருவாவடுதுறையில் அசுவதி நட்சத்திரத்திலே குருபூசை
நடைபெற்றது. அன்று இரவு சூரியமூலையில் என் அம்மான் வீட்டுத்
திண்ணையில் இருந்தபடியே பார்த்த போது திருவாவடுதுறையில் ஆகாச
வாணங்கள் தெரிந்தன. முந்தின வருடத்தில் நான் திருவாவடுதுறையிலே கண்ட
காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக என் ஞாபகத்துக்கு வந்தன. என் ஆசிரியர்
பலருக்குச் செய்யுள் இயற்றி அளித்ததை நினைத்த போது, “இவ்வருடமும்
அத்தகைய ஆச்சரிய நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே!”
என்று வருந்தினேன்.
“நாம் இல்லாத காலத்தில் மாணக்கர்களுக்கு என்ன என்ன பாடங்கள்
நடந்தனவோ! நாம் என்ன என்ன அரிய விசயங்களைக் கேளாமல்
இருக்கிறோமோ!” என்ற சிந்தனையும் எனக்கு இருந்தது. பிள்ளையவர்கள்
மார்கழி மாதத்தில் புறப்பட்டுச் சில ஊர்களுக்குச் சென்று தை மாதம்
குருபூசைக்கு வந்தார்கள் என்ற செய்தி எனக்குப் பிறகு தெரிய வந்தது.
அப்பொழுதுதான், “நமக்கு அதிகமான நட்டம் நேரவில்லை” என்று எண்ணி
ஆறுதல் உற்றேன். பிள்ளையவர்கள் விருப்பப்படி அடிக்கடி
திருவாவடுதுறையிலிருந்து சிலர் வந்து என்னைப் பார்த்துச் செல்வார்கள்.
மகாமகம்
அந்த வருடம் (1873) மகாமக வருடம். மகாமக காலத்தில்
கும்பகோணத்திற் பெருங்கூட்டம் கூடுமென்றும் பல வித்துவத்துசபைகள்
நடைபெறும் என்றும் கேள்வியுற்றிருந்தேன். சிரீ சுப்பிரமணிய தேசிகர் தம்
பரிவாரங்களுடன் சென்று தங்குவாரென்றும், பல வித்துவான்கள் அவர் முன்
கூடுவார்களென்றும், பிள்ளையவர்களும் அவருடன் போய்த் தங்குவாரென்றும்
அறிந்தேன். “நம்முடைய துரதிர்ட்டம் எவ்வளவு கொடியது! பன்னிரண்டு
வருடங்களுக்கு ஒருமுறை வரும் இவ்விசேடத்துக்குப் போய் வர நமக்கு
முடியவில்லையே! பிள்ளையவர்களைச் சார்ந்தும் அவர்களோடு சேர்ந்து
இப்புண்ணிய காலத்தில் நடக்கும் விசேடங்களைக் கண்டு களிக்க முடியாமல்
அசௌக்கியம் நேர்ந்து விட்டதே!” என்றெல்லாம் நினைந்து நினைந்து
வாடினேன்.
சூரிய மூலையிலிருந்து சிலர் மகா மகத்துக்குப் போய் வந்தனர். அங்கே
சுப்பிரமணிய தேசிகரும் பிள்ளையவர்களும் வந்திருந்தார்களென்றும் பல பல
விசேடங்கள் நடைபெற்றனவென்றும் அவர்கள் வந்து சொல்ல எனக்கும்
இயல்பாகவே இருந்த வருத்தம் பின்னும் அதிகமாயிற்று.
ஆசிரியரை அடைதல்
என் தேக நிலை வர வரக் குணமடைந்து வந்தமையால், “இனி
விரைவில் பிள்ளையவர்களிடம் போக வேண்டும்” என்று அடிக்கடி
சொல்லிக்கொண்டே இருந்தேன். என் தந்தையார் என் வேகத்தை
உணர்ந்து மாசி மாதம் 17-ஆம் தேதி (29-2-1873) புதன்கிழமை மாலை
என்னை அழைத்துக்கொண்டு திருவாவடுதுறைக்கு வந்தார்.
அப்பொழுது மடம் என்றும் இல்லாத கலகலப்போடு இருந்தது. மகா
மகத்திற்குப் போயிருந்த வித்துவான்களும் பிரபுக்களும் சுப்பிரமணிய
தேசிகரோடு திருவாவடுதுறைக்கு வந்திருந்தனர். எல்லாரும் அவரவர்களுக்கு
அமைக்கப் பெற்ற இடங்களில் தங்கியிருந்தனர்.
மடத்தில் கீழைச் சவுகண்டியில் பிள்ளையவர்கள் பலருக்கிடையே
இருந்து சம்பாசணை செய்திருந்தனர். அவ்விடத்தை அணுகி ஆசிரியரைக்
கண்டேன். அப்போது என் உடம்பில் உள்ள அம்மை வடுக்களைக் கண்டால்
அவர் வருத்தமடைவாரென்று எண்ணி அவர் கண்களுக்குத் தெரியாதபடி
அதிகமாக விபூதியை உடம்பு முழுவதும் பூசியிருந்தேன். ஆசிரியர் என்னைக்
கண்டவுடன் மிக்க அன்போடு, “சாமிநாதையரா? இப்போது உடம்பு
சௌக்கியமாயிருக்கிறதா? உடம்பு முழுவதும் வடுத் தெரியாமல் விபூதி கவசம்
தரித்திருக்கிறது போல் தோற்றுகிறது. உம்முடைய ஞாபகமாகவே இருக்கிறேன்.
கண்ணப்ப நாயனார் புராணத்தோடே பெரிய புராணம் நின்றிருக்கிறது. மகாமக
காலத்தில் நீர் இருந்திருந்தால் எவ்வளவோ சந்தோசமாக இருந்திருக்கும்”
என்று கூறினார். அப்பால் என் தந்தையாரைப் பார்த்து சேம சமாசாரங்களை
விசாரித்தார்.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா
Leave a Reply