சான்றோர் பெருந்தகை மு.வ. – 3/3 : – முனைவர் சி.பாலசுப்பிரமணியன் 
(சான்றோர் பெருந்தகை மு.வ. – 2/3 – தொடர்ச்சி)
10. சான்றோர் பெருந்தகை மு.வ. 3/3
“பறவைகள் அன்பாக வாழ்கின்றன. அவற்றுக்கு வாய் இல்லை; பேச்சு இல்லை. பிணக்கும் இல்லை. மக்கள் வாழ்க்கையில் வாய்தான் வன்பும் துன்பும் செய்கின்றது. பேச்சு வள்ர்கின்றது. பிணக்கும் முற்று கின்றது; அன்பான வாழ்க்கையிலும் திடீரென்று அன்பு முறிகின்றது.”
“மக்களுக்குள் சாதி இரண்டு, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சாதி. எப்படியாவது வாழ வேண்டும் என்ற சாதி, இந்தச் சாதிகளுக்குள் கலப்பு மணம் கூடாது.”
“வேப்பமரம் அத்தி ஆவதில்லை. மூங்கில் கரும்பு ஆவதில்லை. பனை தென்னை ஆவதில்லை; புலி பசு ஆவதில்லை. நாய் நரி ஆவதும் இல்லை. காரணம், அவற்றின் பண்பை மாற்றி அமைக்கும் மன வளர்ச்சி இல்லை; மனித மனம் வேம்பாக இருந்து கரும்பாக மாறலாம்; புலியாக இருந்து பசுவாக மாறலாம்; மனிதர்க்கு மன வளர்ச்சி உண்டு.”
“எண்ணம் திருந்தினால் எல்லாம் திருந்தும். அது தான் பெரிய அடிப்படை.”
“அறம் என்பது ஆற்றல் மிக்கது. அதை எதிர்த்து வாழ முடியாது.”
“உடல் நோயற்றிருப்பது முதல் இன்பம், மனம் கவலையற்றிருப்பது இரண்டாம் இன்பம். உயிர் பிறர்க்கு உதவியாக வாழ்வது மூன்றாம் இன்பம்.!”
“குறை இல்லாதவர்கள் உலகத்தில் இல்லை. குறைகளுக்கு இடையே குணத்தைக் கண்டு வாழ வேண்டும். முள்ளுக்கு இடையே முரட்டு இலைகளுக்கு இடையே மெல்லிய மலரைக் கண்டு தேனைத் தேடுகிறது தேனி. அதுதான் வாழத் தெரிந்தவர்களின் வழி.”
“விரும்பியது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை விரும்ப வேண்டும்.”
“இன்பத்திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்கவல்லவரைத் தேடு உறவானாலும், நட்பானாலும், காதலானாலும் இப்படித் தான் தேட வேண்டும்.” (அல்லி)
“நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவனாகவும் இருக்கவேண்டும் அல்லவா? நன்மை வன்மை இரண்டும் இருந்தால்தான் இந்த உலகில் வாழ்க்கை உண்டு.” (தம்பிக்கு)
“அன்புக்காக விட்டுக் கொடுத்து இணங்கி நட. உரிமைக்காகப் போராடிக் காலம் கழிக்காதே.” (தங்கைக்கு)
“‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்னும் நாலடியாரின் பொன்மொழி இல்வாழ்க்கையின் மந்திரமாக விளங்க வேண்டும்.” (தங்கைக்கு)
புதினம் சிலவற்றின் முடிவு வரிகள்
அவர் எழுதிய புதினங்களின் முடிவு வரிகளில் சில படிப் போரைச் சிந்திக்க வைக்கும் திறத்தன என்பதனைக் கீழ்க் காணும் பகுதிகள் கொண்டு அறியலாம்.
“அந்தக் குடும்ப விளக்கு அணைவதற்கு முன்னே ஒரு முறை அழகாக ஒளிவீசியது.” (கள்ளோ? காவியமோ?)
“அந்தக் காட்டு வாகை மரத்தின் நிழலில் ஒவ்வொரு கரித்துண்டமாகப் பொறுக்கி ஆர்வத்துடன் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த அவளுடைய அன்பான கையை என் மனம் நினைத்தது.” (கரித்துண்டு)
“சாவித்திரியின் கண்கள் மலர்விழியின் கண்களை நோக்கியபடியே கண்ணிர் உதிர்த்துக் கொண்டிருந்தன.” (மலர்விழி)
“பரமேசுவரி என் தோளை இறுகப் பற்றிக்கொண்டு தழுதழுத்த குரலில் அல்லி! என்றாள்.” (அல்லி)
முனைவர் அவர்கள் மாணவர் மனப்புண்களுக்கு மருந்திட்டுக் கட்டும் மருத்துவராக விளங்கினார், படிக்க வரும் மாணவர்களுக்குத் தந்தையாய், வழிகாட்டியாய். உடல்நல மருத்துவராய். உளநல வித்தகராய் விளங்கினார். உடனாசிரியப் பெருமக்களுக்கு உற்ற துணையாய் விளங்கினார். சமுதாயத்திற்குச் சிறந்த சீர்திருத்த வழிகாட்டியாகத் துலங்கினார். மொழிக்கு அரணாகவும், இலக்கியத்திற்கு விளக்கமாகவும், நாட்டிற்கு நல்ல தொண்டராகவும் இவர்கள் நாளும் விளங்கி வந்தார்கள்.
பல்கலைக்கழகப் பணி
1961ஆம் ஆண்டு பச்சையப்பனின் தமிழ்ப் பணியினின்றும் விலகிப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைமையினை ஏற்றார். ஆயினும் பச்சையப்பனின் நினைவு என்றும் இவர்கள் மனத்தில் பசுமையாக இருந்தது. இவர்களுடைய வளர்ச்சிக்குப் பச்சையப்பனும், பச்சையப்பன் வளர்ச்சிக்கு இவர்களும் பெரிதும் உதவியுள்ளனர். முனைவர் அவர்களின் சுருத்துகளை ஏற்றுப் பின்பற்றி நடக்கும் மாணவர் குடும்பம் ஒன்று உண்டு. அக்குடும்பத்திற்கு அறத்திலே பெருநம்பிக்கை; மனச்சான்றிலே மதிப்பு; கொள்கையிலே உறுதி; ஆரவாரத்திற்கு எதிரான அமைதியிலே பற்று,
தமிழ்ப் பெரியார் திரு. வி.க. அவர்கள் வழங்கிய தகுதிச் சான்று
“வரதராசனார் பேச்சிலும் எழுத்திலும் பருனாட்சாவின் கருத்துகள் ஆங்காங்கே பொருந்தும். அவர் பருனாட்சா நூல்களைப் படித்துப் படித்து ஒரு தமிழ் ‘பருனாட்சா’ ஆனார் என்று கூறுதல் மிகையாகாது. பருனாட்சாவைப் பார்க்கிலும் வரதராசனார் ஒரு துறையில் சிறந்து விளங்குகிறார் என்பது எனது ஊகம். பருனாட்சா பல பல நூல்களை எழுதி எழுதி முதுமை எய்தியவர், இம் முதுமையில் அவருக்கு வழங்கும் இக்கால அரக்கப் போர்க் காட்சி “வாழ்க்கைக்கு கிறித்து வேண்டும், பைபிள் வேண்டும்” என்னும் எண்ணத்தை அவரிடம் அரும்பச் செய்து வருகிறது. வரதராசனார்க்கோ அக்கருத்து இளமையிலேயே முகிழ்த்தது. “வாழ்க்கைக்குச் சமயம் தேவை, கடவுள் தேவை” என்று இளமை வரதராசனார் பேசினார், எழுதினார். கீழ்நாட்டு இளமை மேல்நாட்டு முதுமையை விஞ்சி நிற்கிறது.”
துணைவேந்தர் பணியும் இறுதியும்
பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பத்து ஆண்டுகள் பயனுறப் பணிகள் ஆற்றிய பெருந்தகை மு.வ. அவர்கள் 1971ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் முதல் நாளிலிருந்து மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியினை ஏற்றுச் சிறக்கச் செய்தார், கட்டடங்கள் பல அவர் காலத்தில் கட்டப் பெற்றன. அஞ்சல்வழிக் கல்வித்துறை பிறர் வியக்கும் அளவிற்கு வளர்ந்தது. பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவராலும் ஒருங்கே பெருமதிப்பைப் பெற்றார். ஓயாத நிருவாகப் பணிகளும் சிந்தனைப் போக்குகளும் எழுத்துத் தொழிலும் சான்றோர் மு.வ. அவர்கள் உடல் நலனுக்கு ஊறு செய்து வந்தன. 25-1-1974 அன்று மதுரையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாநாளன்று மு.வ. அவர்களுக்கு இருதய நோய் கண்டது. மதுரையிலிருந்து சென்னை வந்த அவர்கள் 10-10-1974 அன்று 5-30 மணிக்கு அரசினர் பொது மருத்துவமனையில் காலமானார்கள். தமிழர் நெஞ்சிருக்கும் வரை தமிழ்கூறு நல்லுலகிற்குத் தமிழ் நெஞ்சம் தந்த சான்றோர் பெருந்தகை மு.வ. அவர்களை நினைவிற் கொள்வர்.
சான்றோர் தமிழ்
சி. பாலசுப்பிரமணியன்
——————
சி. பா. ( நூல் ஆசிரியர்)
தேசிங்கு ஆண்ட செஞ்சியில் பிறந்தவர் (3-5-1935) இந்தச் செந்தமிழ்ச் செல்வர். கண்டாச்சிபுரமும் திருவண்ணாமலையும் இந்த இலக்கியப் பொழில், கற்ற இடங்கள். பைந்தமிழ் வளர்க்கும் பச்சையப்பன் கல்லூரிப்பாசறை மறவருள் ஒருவர். அன்னைத் தமிழில் பி.ஏ. ஆனர்சு. அங்கு! முதல் வகுப்பில் தேறிய முதல்வர். ‘குறுந்தொகை’பற்றிய ஆய்வுரைக்கு 1968இல் எம்.லிட்., பட்டமும், ‘சேரநாட்டுத் தமிழ் இலக்கியங்கள்’ பற்றிய ஆய்வுரைக்கு 1970ல் முனைவர்(பிஎச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள். நல்ல நடை கொண்ட இந்த நாகரிகர் பேர் சொல்ல நாளும் மாணவர் படை உண்டு காட்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர் பேராசிரியராகத் துறைத்தலைவராகச் சிறந்திருக்கிறார். முன்னாள் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர், இந்த முற்றிய புலமையாளர்!
பத்து நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருந் திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், ‘தமிழ் இலக்கிய வரலாறு’ ஒன்றே சான்று அண்மையில் வந்துள்ள அணிகலன், ‘பெருந்தகை மு.வ. ‘ஆங்கிலத்தில் ஒரு நூல்’ சங்ககால மகளிர் நிலை’ பற்றிய ஆராய்ச்சி. ‘இலக்கிய அணிகள்’ என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் உரூபா முதல் பரிசைப் பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்த்ப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத் துள்ள புகழ் மகுடங்கள்: புலவரேறு (குன்றக்குடி ஆதீனம்) செஞ்சொற் புலவர் (தமிழ் நாட்டு கல்வழி நிலையம்), சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல ஆதீனம்).
பெருந்தகை மு. வ. வின் செல்லப்பிள்ளை சி. பா. அவர் புகழ்பாடும் அந்தமிழ்த் தும்பி அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி ! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி ! எழுத்தில் கல்ல இலக்கியப் பிறவி !
சி. பா.
இந்த ஈரெழுத்து ஒரு மொழி, இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடு படு! —மா. செ.
Leave a Reply