(தோழர் தியாகு எழுதுகிறார் 107 : ‘ஆளுநர் உரை’ – ஓர் ஊடுநோக்கு (3) – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

இசுலாமியர் தொடர்பான உரையாடல் தொடர்கிறது.

நலங்கிள்ளி ஓர் ஐயம் தெரிவித்திருந்தார் (தாழி மடல் 69):

சங் பரிவார் இசுலாமியர்களை எதிர்க்கிறார்கள், உண்மைதான். ஆனால் அந்த எதிர்ப்பில் ஓர் ஐந்து விழுக்காடு அளவுக்குக் கூட கிறித்துவர்கள் மீது காட்டுவது இல்லையே, ஏன்? மசூதிகளைக் குறிவைக்கும் கடப்பாரைகள் தேவாலயங்களைக் குறி வைப்பதில்லையே, ஏன்?

நலங்கிள்ளியின் வினாவுக்கு விடையளிக்க முற்பட்ட நான்
“எனக்குத் தோன்றும் காரணங்கள்” என்று 6 கருதுகோள்கள் முன்வைத்திருந்தேன்:

1) இசுலாமியரோடு ஒப்பிட்டால் கிறித்தவர்களின் தொகை குறைவு.

2) இசுலாத்தோடு ஒப்பிட்டால் கிறித்துவம் பார்ப்பனியத்துடனும் சாதியத்துடனும் கூடுதலாக இணக்கம் கொண்டது.

3) பிரித்தானியருக்கு முந்தைய இந்திய வரலாற்றில் இசுலாமியர் ஆளும் வகுப்பாக இருந்த காலங்கள் உண்டு. கிறித்துவர்கள் அப்படி இருந்ததாகத் தகவல் இல்லை.

4) இப்போதும் கூட கிறித்தவர் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் இந்துத்துவ வெறியர்களால் குறி வைக்கப்படுகின்றார்கள். தமிழ்நாட்டில் குமரி மாவட்டம். ஒரிசாவிலும் சார்க்கண்டிலும் பழங்குடிகள் வாழும் பகுதிகள். இசுடான் கொலை செய்யப்பட்டார். இசுடான் சுவாமிக்கு நேரிட்ட கதி தெரிந்ததே.

5) கிறித்தவர்கள் சமயம் கடந்த உலகியல் அமைப்புகளில் கூடுதலாகப் பங்கு வகிப்பதால் கூடுதலாகப் பாதுகாப்பு பெற்றுள்ளார்கள். இசுலாமியர்கள் பெரும்பாலும் சமயம்சார்ந்த அமைப்புகளில் திரள்வது போல் பொது அமைப்புகளில் திரளாமளிருப்பது குறை. இது அவர்களைத் தனிமைப்படுத்த இந்துத்துவர்களுக்கு உதவுகிறது. அண்மைக் காலத்தில்தான் இசுலாமிய அமைப்புகளிடையே ஒரு மீளாய்வும் மாற்றமும் தென்படுகின்றன.
இவை மேலாய்வுக்குரிய கருதுகோள்களே என்பதையும் தெளிவாக்கியிருந்தேன். பொதுவாக மொழிக்கும் தேசிய இனத்துக்கும் கிறித்துவர்கள் தரும் முக்கியத்துவம் இசுலாமியர்கள் தருவதில்லை. மதத்தின் பெயரால் இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தித் தாக்குவது இதனால் எளிதாகி விடுகிறது என்றும் கருத்துச் சொல்லியிருந்தேன்,

இதற்கு மறுமொழியாக நலங்கிள்ளி எழுதினார்:
சங் பரிவார் என்றில்லை. நான் நேரடியாகப் பார்த்த வரை, தமிழ்ப் பார்ப்பனர்களுக்கு இசுலாமியர் என்றால் அவ்வளவு வெறுப்பு. வீடுகளில் இசுலாமியர்களை மிகக் கேவலமாகப் பேசுவார்கள். நாம் மீசை வைத்து தாடி மழித்தால் அவன் மீசை மழித்து தாடி மழிக்கிறான் ; நாம் இடமிருந்து வலம் எழுதினால், அவன் வலமிருந்து இடம் எழுதுகிறான்; நாம் வேட்டி கட்டினால் அவன் கைலி கட்டுகிறான். இப்படி பல பல கேலிகள்.

மக்கள் தொகை எனப் பார்த்தால் வட தமிழ்நாட்டில் இசுலாமியர்களை விட கிறித்துவரக்ள் அதிகம். இசுலாமியப் படையெடுப்புகளால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுமில்லை. ஆனாலும் பார்ப்பனர்களுக்கு இசுலாமியர்களைக் கண்டால் அவ்வளவு கேலி, கிண்டல்.

பார்ப்பனர்களின் இந்த இசுலாமிய வெறுப்பு மெது மெதுவாக இப்போது பார்ப்பனரல்லாதோரிடமும் பரவி வருவது ஆபத்தான அறிகுறி.

தோழர் சமந்தா தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் (தாழி மடல் 70) “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமியர், கிறித்தவ சகோதர சகோதரிகளும் பொங்கல் திருநாள் கொண்டாடுகிறார்களா? கிறித்தவர்கள் கிறித்துமசு பண்டிகையையும், இசுலாமியர் ,ரம்சான் பண்டிகையையும் தங்களுக்கே உரிய சொந்தப் பண்டிகையாகக் கொண்டாடுவது போல் பொங்கல் திருநாளைக் கருதும் சூழல் உள்ளதா?” என்று வினாத் தொடுத்திருந்தார். “பழக்க வழக்க அடிப்படையில் பொங்கல் பண்டிகையில் காணப்படும் இந்து மத மேல்பூச்சு பண்டிகையின் பொதுமைப் பொருளையே திரித்து அதை இந்துக்களின் பண்டிகையாகக் குறுக்கும் போக்கும்” காணப்படுவதாக வருத்தப்பட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக அன்பர் இரவி (பரிவாதினி நூலகம்) எழுதுகிறார்

தாழி மடல் 72 இல் பொன்முருகு கவின்முருகு, தமிநாட்டில் உள்ள சிறுபான்மையினர் தங்களுக்கே உரித்தான பண்டிகைகளைக் கொண்டாடுவதைப் போல் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்களா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். ‘இல்லை’ என்பதுதான் இக்கேள்விக்குள்ளேயே இருக்கும் அவரின் மனக்குறை.

  • தாழி மடல் 69இல் தோழர் தியாகு அவர்கள், தோழர் நலங்கிள்ளியின் ஐயத்திற்கு பதிலளிக்கும் பகுதியில், இசுலாமியர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்த அமைப்புகளில் திரள்வது போல் பொது அமைப்புகளில் திரளாமல் இருப்பது ஒரு குறை. இது அவர்களைத் தனிமைப்படுத்த இந்துத்துவர்களுக்கு உதவுகிறது என்று பதிலளித்துள்ளார்.
    ………..
    நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் தாத்தாவின் தொழிலகத்தின் வரவுசெலவுகளை நிருவகித்தவர் ஓர் இசுலாமியப் பெரியவர்தான். ஆபுகானிலிருந்து வந்திறங்கியது போன்ற தோற்றத்தில்தான் எப்பொழும் இருப்பார். அவரை நாங்கள் சின்னையா என்றுதான் அழைப்போம். அவரை மட்டுமல்ல, அவரது மருமகன்களையும் அவ்வாறே விளிப்போம். அவர் வீட்டு பெண்களை எல்லாம் சித்தி என்று விளிப்போம். எங்கள் குடும்பப் பிரச்சனைகளில் தலையிட்டு அனைவரையும் கண்டிக்கும் நிலையில் இருந்தார். குடும்ப உறுப்பினரைப் போன்று அவரது பேச்சிற்கு எங்கள் குடும்பத்தில் மரியாதை இருந்தது. நாங்கள் குல தெய்வ வழிபாட்டிற்குச் செல்லும் போது அனைத்தையும் முன்னின்று நடந்துபவர் சின்னையாதான். எங்களுடன் அவர் உறவாடுவதிலும் அவருடன் நாங்கள் உறவாடுவதிலும் அவரது இசுலாமிய தோற்றமோ மதமோ ஒரு பொருட்டாகவே தென்பட்டதில்லை.
    ….
    தான் நோய்வாய்ப்பட்டிருந்த போது தனக்கு மருத்துவம் பார்த்து பிழைக்க வைத்த மொகைதீன் பிச்சை என்ற இசுலாமியப் பெரியவரின் நினைவாக தனது பெயரை மொகைதீன் பிச்சை என்று மாற்றிக் கொண்ட எங்களின் உறவுகாரப் பெரியப்பா ஒருவரும் இருந்தார்.
    ………
    இப்படி நிறைய சொல்லிக் கொண்டே செல்லலாம். இசுலாமியர்களை உறவு முறைகளை சொல்லித் தானே நாமும் நமக்கு முந்தைய தலைமுறையினரும் அழைத்தோம்.

இப்பொழுது இசுலாமியர்களை ‘பாய்’ என்ற ஒற்றை விளிச்சொல்லால் விளிக்கும் போக்கு உள்ளது. முன்பிருந்த உறவுப் பெயர்களின் இடத்தில் இந்த ‘பாய்’ என்ற சொல் எப்பொழுது எப்படி வந்து ஆக்கிரமித்தது? இந்தப் பொதுச் சமூகம் ‘பாய்’ என இசுலாமியர்களை விளிக்கும் போது அவர்களிடமிருந்து ஒரு விலகலைக் கடைபிடிக்கவில்லையா?
…..
கடந்த சில பத்தாண்டுகளாக இசுலாமியர்களிடமிருந்து பொதுச் சமூகம் விலக ஆரம்பித்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். இசுலாமியர்களிடம் காணப்படும் மிக ஆழமான மத நம்பிக்கையை இந்தப் பொதுசங சமூகம் அடிப்படைவாதமாக காண்கிறது. இசுலாமியர்களுக்கு நிகரான மத நம்பிக்கை ஏனைய மதப் பிரிவினரும் கடைபிடிக்கத்தான் செய்கின்றனர்.

அரசியல் முறையாக சில இசுலாமிய அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கையின் எதிரிடையான விளைவுகளுக்கு ஒட்டுமொத்த இசுலாமியச் சமூகமும் விலக்கி வைக்கப்படும் நிலையே இன்று நிலவுகிறது.
…….
இசுலாமியர்களுக்கு எதிராக ஊட்டப்படும் வெறுப்புணர்வுப் பரப்புரை இச்சமூகத்தின் கூட்டு நனவிலியில் படிந்து விட்டதாகத் தோன்றுகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு மகுடை( கொரோனா) பெருந்தொற்று.

மகுடை(கொரோனா) பெருந் தொற்றிற்கு முதல் உயிர்பலி மதுரையை சார்ந்த ஓர் இசுலாமியர். அயல்நாட்டிலிருந்து வந்த அவரது உறவினரால் தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லி பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட இசுலாமியர்களால் இந்தியா முழுவதும் தொற்று பரவியதாக செய்திகள் வெளியாயின.

அதுவரையில் தனது தெருவிலேயே இருக்கும் – பக்கத்துத் தெருவிற்குக் கூட போகாத – இசுலாமியரைக் கண்ட உடன் இந்த பொதுச் சமூகம் அதுவரையில் தாடையில் அணிந்திருந்த முகக் கவசத்தை அவசர அவசரமாக மூக்கிற்கு எற்றிக்கொண்டதை காண முடிந்தது.

மகுடை(கொரோனா) தொற்றின் போது தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. இசுலாமியர் என்பதற்காக இந்த இடைவெளி சற்று கூடுதலாகவே இருந்தது.
……..
இசுலாமியர்களோடு உறவு முறை கொண்டாடிய இச்சமூகத்தின் கூட்டு நனவிலியில் இசுலாமியர்கள் மாற்றார் என்ற கருத்து பொதிய வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தொடக்கத்தில் உள்ள பத்திகளுக்கு வருவோம். தோழர்கள் இருவரின் கருத்துகளும், இப்பொதுச் சமூகமும் இசுலாமியர்களிடமிருந்து தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதை விட்டுவிட்டு, இசுலாமிய சமூகம் பொது சமூகத்திடமிருந்து விலகி நிற்பதாக காட்டுகின்றன. இங்கும் கூட்டு நனவிலி வேலை செய்கிறதா?

  • சமரன் (18.01.2023)

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 75