(முன்னிதழ்த் தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 7

 

அத்தியாயம்  3. கவிதை தொடர்ச்சி

 

2



இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை பற்றிப் பேசுகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளைத் தனியாகக் குறிப்பிடுவது பொருத்தமாகும். பல்வேறு மொழிகளில் இருந்து ஏராளமான கவிதைகள் இக்காலப் பகுதியில் இலங்கைக் கவிஞர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கலைநோக்கில் இருந்து சமூகநோக்குவரை ஈழத்துத் தமிழ்க்கவிதை பரிணமித்ததை மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் நாம் காணலாம்.

1940 ஆம் 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சமூக நோக்குபற்றிய பிரக்ஞையின்றி இலக்கியச் சுவையின் அடிப்படையில் பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. 1960 ஆம் ஆண்டுகளிலும் ஓரளவு இப்போக்கு நீடித்தது எனலாம். இத்தகைய முயற்சிகளில் சுவாமி விபுலானந்தர் ஒரு முன்னோடியாக அமைகின்றார். சேசுபியரின்(சேக்குசுபியரின்) நாடகப் பகுதிகள் பலவற்றை கம்பீரமான, செந்நெறிப் பாங்கான மொழிநடையில் (Classical Style) அவர் பெயர்த்துள்ளார். காளிதாசனின் ‘மேகதூதம்’ என்ற நூலும், சிங்களப்பிரபந்தமான ‘செலஃகினி சந்தேசய’ என்பது ‘பூவைவிடுதூது’ என்ற பெயரிலும் திரு.சோ. நடராசாவினால் மொழி பெயர்க்கப்பட்டு நூல் உருப்பெற்றுள்ளன. கவிஞர் அப்துல்காதர் (இ)லெவ்வை ‘இக்குபாலின் கவிதைகள்’ சிலவற்றை மொழிபெயர்த்து ‘இக்குபால் இதயம்’ என்ற பெயரில் தொகுப்பாக வௌியிட்டார். அவரே பின்னர் உமர்கையாமின் (உ)’ருபாய்யாத்’ தையும் மொழி பெயர்த்தார். இதே நூல் சி. கதிரவேலுப்பிள்ளையாலும் இலங்கையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாரசீகக் கவிஞரான மௌலானா (உ)றூமியின் சில  கவிதைப் பகுதிகளை ‘மசுனவி மலர்கள்’ என்ற தலைப்பில் எம்.ஏ. நுஃமான் தமிழ்ப்படுத்தினார். ‘மௌலானா (உ)றூமியின் சிந்தனைகள்’ என்ற பெயரில் ஏ.இக்குபால் ஒரு கவிதை நூலை வௌியிட்டார். ‘வேட்சுவேர்த்து, சோன்டன், கீட்சு போன்ற ஆங்கில மனோரதியக் கவிஞர்களின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை ‘ஒருவரம்’ என்ற பெயரில் முருகையன் வௌியிட்டார். ‘தேன்மொழி’ ‘நோக்கு’ ஆகிய கவிதைப் பத்திரிகைகளிலும் இலக்கியச்சுவையின் அடிப்படையில் பல பிறமொழிக்கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. நோக்கின் ஓர் இதழ் முழுவதும் சேசுபியரின் மொழிபெயர்ப்புகளுக்காக ஒதுக்கப்பட்டது. ஆன்மீக நோக்கின் அடிப்படையில் பரமகம்சதாசன், கவி தாகூரின் ‘கனிகொய்தல்’ என்ற நூலைத் ‘தீங்கனிச்சோலை’ என்ற பெயரில் மொழிபெயர்த்து வௌியிட்டார்.

1965 ஆம் ஆண்டின் பின்னர் மொழிபெயர்ப்புக் கவிதைகளிலும் இலக்கியச் சுவைக்குப் பதிலாக அரசியல் நோக்கு முதன்மை பெறத் தொடங்கியதைக் காணலாம். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, சமூக, தேசிய விடுதலைப் போராட்டக் கவிதைகள் பல இக் காலப்பகுதியில் மொழி பெயர்க்கப்பட்டன. நமது தேசிய அபிலாசைகளுடன் அவை ஒத்தியங்குவதே இதற்குக் காரணம் எனலாம். இவ்வகையில், வியத்துநாமிய, சீன, இரசிய, இந்திய, பாலத்தீன, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்கக் கவிதைகள் பல மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றுட் பெரும்பாலானவை பத்திரிகைகளிலேயே பிரசுரிக்கப்பட்டன. ஆயினும் கே. கணேசு மொழிபெயர்த்த ஓசிமின் கவிதைகளும் சிவசேகரம் மொழிபெயர்த்த மாஓவின் கவிதைகளும் நூல் உருவில் வௌிவந்துள்ளன. பண்ணாமத்துக் கவிராயர் நசுருல் இசுலாமின் கவிதைகள் சிலவற்றையும் பலத்தீனக்கவிதைகள் சிலவற்றையும் மொழிபெயர்த்துள்ளார். பலத்தீன, வியத்துநாமிய, சீனக் கவிதைகள் சில எம்.ஏ.நுஃமானால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ரஷ்ஷிய, சீன, அமெரிக்கக் கவிதைகள் சிலவற்றை சண்முகம் சிவலிங்கம் மொழி பெயர்த்துள்ளார். அக்னி சஞ்சிகையின் ஒரு இதழ் முழுவதும் அமெரிக்க கறுப்புக்கவிதைகளுக்காக ஒதுக்கப்பட்டது. பாப்புலோ நெருடாவின் கவிதைகள் சிலவும் சிங்கள மொழிக் கவிதைகள் பலவும் தமிழாகி உள்ளன.

3


சிறுவர்களுக்கான கவிதை முயற்சி பற்றியும் இங்கு சிறிது குறிப்பிட வேண்டும். சோமசுந்தரப் புலவரே இங்கு முதன்முதல் சிறுவர்க்கான பாடல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவரது பாடல்கள் பல சிறுவர் பாட நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவருடன் மு. நல்லதம்பி, யாழ்ப்பாணன் ஆகியோரும் இத்துறையில் குறிப்பிடற்குரியர். ஆயினும் 60 ஆம் ஆண்டுகள் வரை சிறுவர்க்கான கவிதை முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியடையவில்லை.

60 ஆம் ஆண்டுகளில் இத்துறையில் பலர் முயன்றார்கள். வித்துவான் வேந்தனாரின் பல பாடல்கள் சிறுவர் பாடநூல்களில் இடம் பெற்றன. மகாகவி பிஞ்சுப்பாடல்கள் என்ற பெயரில் சில சிறுவர் பாடல்களை எழுதினார். அம்பி, அம்பிப் பாடல்கள் என்ற பெயரில் ஒரு நூலை வௌியிட்டுள்ளார். எம்.சி.எம். சுபைரின் மலரும் உள்ளம், பா.சத்தியசீலனின் பாட்டு, மழலைத் தமிழ் அமுதம், புத்தியால் வென்ற நத்தையார் ஆகிய நூல்களும் வௌிவந்துள்ளன. சாரணாகையூம், சி. மௌனகுரு ஆகியோரும் இத்துறையில் முயன்றுள்ளனர். ஆயினும் சிறுவர்களின் வயது, மனோவளர்ச்சி, மொழியாற்றல் ஆகியவற்றுக்கேற்ப படிமுறையாக சிறுவர் பாடல்கள் எழுதப்படுகின்றன என்று சொல்வதற்கில்லை. அம்பி, சத்தியசீலன் ஆகியோரிடம் இப்பிரக்ஞை இருப்பதாகத் தெரிகின்றது. எமது சிறுவர் கவிதை இன்னும் அதிக தூரம் வளர்ச்சியடைய வேண்டியுள்ளது.

4


கவிதை வளர்ச்சிப் போக்கின் ஓர் அம்சமாக கவிதைக்காக மட்டும் நடத்தப்பட்ட சிறு சஞ்சிகைகளும் இங்குத் தோன்றின. அதுபற்றியும் இங்குக் குறிப்பிடுவது பொருந்தும். 1955 ஆம் ஆண்டு ‘தேன்மொழி’ என்னும் ஈழத்தின் முதலாவது கவிதைச் சஞ்சிகையை மகாகவியும் வரதரும் சேர்ந்து வௌியிட்டார்கள். தேன்மொழி பதினாறு பக்கங்கள் கொண்ட சிறு சஞ்சிகையாக மாதம் தோறும் வௌிவந்தது. ஆறு இதழ்களே வௌிவந்தன எனினும் இருபது வருடங்களுக்கு முந்திய இலங்கைத் தமிழ்க் கவிதைப் போக்குகளை இனம் காட்டும் ஒரு சிறந்த பிரதிநிதியாக அது அமைந்தது.

தேன்மொழியை அடுத்து எட்டு ஆண்டுகளின் பின் 1964 முதல் ‘நோக்கு’ என்ற சஞ்சிகையை முருகையன், இ.இரத்தினம் ஆகிய இருவரும் சேர்ந்து காலாண்டுக்கு ஒருமுறை வௌியிட்டடனர். தாய்மொழிக் கவிதை, கவிதை மொழிபெயர்ப்பு, கவிதைத் திறனாய்வு ஆகிய மூன்றையும் வளர்ப்பது நோக்கின் நோக்கமாக இருந்தது. மொழி பெயர்ப்புக்கு நோக்கில் அதிக இடம் கொடுக்கப்பட்டது. புதுமைக்கும் பழமைக்கும் ஒரே காலத்தில் அது தளமாக அமைந்தது. நோக்கும் மொத்தம் ஆறு இதழ்களே வௌிவந்தன.

1969 முதல் எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்து ‘கவிஞன்’ காலாண்டு இதழை வௌியிட்டனர். கவிதையின் சமூகப் பெறுமானம், கலைத்தரம் ஆகிய இரண்டு அம்சங்களைக் கவிஞன் முதன்மையாக வலியுறுத்தியது. முன்னைய இரு கவிதை இதழ்களையும் போலவே கவிதை மொழிபெயர்ப்பின் அவசியத்தைக் கவிஞனும் உணர்ந்திருந்தது. கவிதை விமர்சனத்துக்கும் முதன்மை இடம் கொடுத்தது. கவிஞன் மொத்தம் நான்கு இதழ்களே வௌிவந்தன.

70க்குப் பின்னர் தோன்றிய புதுக் கவிதைப் போக்கின் வௌியீட்டுக் களமாக இக்காலப் பகுதியில் சில புதுக்கவிதை இதழ்களும் தோன்றின. 1973 ஆம் ஆண்டில் நீள்கரைநம்பி, அத்துல் சத்தார் ஆகிய இருவரும் க-வி-தை என்ற புதுக் கவிதை ஏடு ஒன்றை வௌியிட்டனர். அது தொடர்ந்து வௌிவரவில்லை. 1975இல் கவிஞர் ஈழவாணன் ‘அக்னி‘ என்ற புதுக் கவிதை ஏட்டை வௌியிட்டார். ஐந்து இதழ்களுடன் அதுவும் நின்றுவிட்டது. முன்னைய கவிதை இதழ்களைப் போல் சுய ஆக்கம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு ஆகியன அக்னியிலும் இடம் பெற்றன. இவை தவிர புதுக் கவிதைக்கு முதன்மை கொடுத்து பொன்மடல், நவயுகம் ஆகிய இரு சஞ்சிகைகள் வௌிவந்தன. அவையும் இரண்டொரு இதழ்களுடன் நின்றுவிட்டன. அச்சகச் செலவு அதிகரிப்பும் – வாசகர் குறைவும் கவிதை இதழ்களின் அற்ப ஆயுளுக்குக் காரணமாக அமைந்தன.

5


கவிதை ஏடுகளைப் போல் கவிதையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் சாதனமாகக் கவிதை அரங்குகள் அமைந்தன. 60ஆம் ஆண்டுகள் கவிதை அரங்கின் எழுச்சிக் காலம் எனலாம். எல்லாக் கூட்டங்களிலும் விழாக்களிலும் கவிதை  அரங்கும் ஒரு முதன்மை அம்சமாக அமைந்தது. முக்கிய விழாக்களின் போதெல்லாம் வானொலியிலும் கவிதை அரங்குகள் இடம்பெற்றன. கவியரங்குகள் மூலம் கவிஞர்கள் மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டார்கள். கவிதையை வாசிக்கும் பழக்கம் அற்றவர்களுக்கும் அதை அறிமுகப் படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம். மகாகவி, முருகையன், நீலாவணன், சில்லையூர் செல்வராசன். எம்.ஏ.நுஃமான், பா. சத்தியசீலன், கந்தவனம், காரை சுந்தரம்பிள்ளை, சி. மௌனகுரு முதலியோர் 60 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பல பகுதிகளிலும் கவிதை அரங்குகளில் அடிக்கடி பங்குபற்றினர். இவர்கள் அலாதியாகக் கவிதையைச் சொல்லும் முறை கவிதை மீது மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமைந்தது. மேடையில் கவிதையைச் சொல்வதற்குப் பதிலாகப் பாடும் முறையையும் சிலர் கையாண்டனர். மண்டூர் சோமசுந்தரம்பிள்ளை, அரியாலையூர் ஐயாத்துரை ஆகியோர் தங்கள் குரல் வளத்தினால் சபையினரைக் கவர்ந்தனர். முருகையன், செல்வராசன், பசீசு காரியப்பர் முதலியோரும் சிலவேளைகளில் இவ்வுத்தியைப் பயன்படுத்தினர். ஆயினும் கவிதையை எடுத்துரைக்கும் முறையே கவியரங்குகளில் பாதிப்பு உடையதாக அமைந்தது.

கவியரங்குகளில் கவிதை நேரடியாகக் கேட்பதற்காகவே எழுதப்படுவதால் அது கவிதையின் அமைப்பையும் பாதித்தது. இவ்வகையில் கவியரங்கக் கவிதையில் மூன்று வகையான போக்குகள் காணப்பட்டன. முதலாவது காத்திரமான எளிதில் பொருள் விளங்கக்கூடிய அதேவேளை கலையம்சம் ஊறுபடாத கவிதைகள். இரண்டாவது மேடைப் பிரசங்கம்போல் செய்யுட் சொற்பொழிவாக எழுதப்பட்ட கலையம்சம் அற்றவை. மூன்றாவது உடனடியான கைதட்டல்களையும் ஆரவாரங்களையும் பெறக்கூடிய மலிவான பகடிகள் நிறைந்தவை. இரண்டாம் மூன்றாம் போக்குடையவையே கவியரங்குகளில் அதிகம் இடம்பெற்றதால் காலப்போக்கில் கவிதையரங்கு தனது முதன்மைத்துவத்தை இழக்கத் தொடங்கிற்று.

 

(தொடரும்)


சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். . நுஃமான்