(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

10/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

11/ 69

 

முப்பதாவது கட்டுரை இடைப்பனுவல் தன்மை.

“அமைப்பியல், பின்னை அமைப்பியல் திறனாய்வில் கையாளப்படும் தொடர்களில் இடைப்பனுவல் தன்மை(Intertextuality) குறிப்பிடத்தக்க இடம் பெற்றுள்ளதை இக்கட்டுரையில் விளக்குகிறார். ஓர் இலக்கியம் பிற இலக்கியங்களிலிருந்து பெறப்பட்ட சொற்களாலும் தொடர்களாலும் கட்டப்பெற்ற ஓர் அமைப்பு; அதில் பிற இலக்கியங்களிலிருந்து மேற்கோள்களும் எதிரொலிகளும் இலக்கிய மரபுகளும் அடுக்கடுக்காக மறைந்து கிடக்கக் காணலாம்; இதனால் ஓர் இலக்கியத்தை விளக்க முயலும் திறனாய்வாளனுக்கு அதனைப் பலவாறு விளக்க அளவுகடந்தஉரிமை கிடைக்கிறது என்பது இவ்வகைத் திறனாய்வாளர்களின் நம்பிக்கை. ஒரு கவிதைக்கு ஒரு குறிப்பிட்ட சரியான, நிரந்தரமான, பொருள் உண்டு என்பதை இவர்கள் மறுக்கிறார்கள்.” இவ்வாறு இது குறித்த அறிமுக விளக்கத்தைத் தருகிறார்.

இடைப்பனுவல் திறனாய்வின் தோற்றத்திற்குக் காரணமான பிரெஞ்சு மொழியியல் வல்லுநர் சசூர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கியக் கோட்பாட்டாளர் இரசிய நாட்டறிஞர் பத்தின் ஆகியோர் கருத்துகளைக் குறிப்பிட்டும் இத்திறனாய்வு முறையை நமக்கு விளக்குகிறார்.

குற்ற உணர்வா? மன நிறைவா? என்பது கடைசியாய் அமைந்துள்ள முப்பத்தோராவது கட்டுரை.

புளூமின் இடைப்பனுவல் முறை கொண்டு தமிழ்க் கவிதை மரபைக் காண்பார். அவர் மேலைநாட்டுக் கவிஞர்களைப்பற்றி யெடுத்துள்ள முடிவிலிருந்து சற்று மாறுபட்ட நிலையைக் காணலாம். “முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றுதல்”  என்ற தொடருக்குத் தமிழ் மரபில் சிறப்பிடம் உள்ளது. சங்கக் கவிஞர்கள் யாவரும் பல தொடர்களையும் உவமைகளையும் காட்சியுருக்களையும் கருத்துகளையும் மீண்டும் மீண்டும் தயக்கமின்றி ஒருவரிடமிருந்து எடுத்தாள்வர். இதனைத் திருட்டாக எண்ணாமல் மன நிறைவாக எண்ணுவர். “ஒரு கவிஞனிடமிருந்து கடன் பெறுவதிலோ கைக்கொள்வதிலோ தவறில்லை ஆனால், அவ்வாறு பெற்றதை மூலத்தினும் சிறப்பாக மிளிரச் செய்ய வேண்டும்” என்று பவுண்டும் எலியட்டும் குறிப்பிடுகின்றனர். சங்கக் கவிஞர்கள் கடன்பெற்றதை மூடிமறைக்க எம்முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை. பொறாமை, கவலை, அச்சம் ஆகிய உணர்வுகளுக்கு ஆட்படாமல், பிறரிடமிருந்து கொண்டதை ஓர் இம்மியளவேனும் மாறுபட, சிறப்புறச் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தோடு அவர்கள் செயல்பட்டிருப்பது தெரிகிறது. இவ்வாறு முன்னோர் மொழிகளைக் கைக்கொள்தலில் மன நிறைவு கண்டனர் எனப் பேரா.ப.ம.நா. தெரிவிக்கிறார்.

“வல்லவன் வெட்டிய வாய்க்கால் வடக்கிலும் பாயும் தெற்கிலும் பாயும்” என்னும் பழமொழியை நமக்கு முடிவுரை மூலம் நினைவூட்டுகிறார். மேலைக் கல்வியாளர்கள் பல வகையான திறனாய்வுக் கோட்பாடுகளையும் அணுகுமுறைகளையும் முன் வைத்து அவற்றின் பெருமைகளைப் பலவாறு எடுத்துரைக்கும் நூல்களையும் கட்டுரைகளையும் கணக்கின்றி எழுதி வருகின்றனர். இவற்றைக் கண்டு நாம் மருள வேண்டுவதில்லை. இவற்றுள் சில ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துடையவை பல அரைகுறை உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை புரிந்து கொள்ள் கடினமாகத் தோன்றுபவையும் கூட. 

மேலைநோக்கில் தமிழ்க் கவிதையைப் பார்க்கும் முயற்சியில் ஈடுபடும்போது நம் கவிஞர்களின் தனியாற்றலை நாம் அறிந்து கொள்கிறோம் என்கிறார். அத்துடன் நில்லாமல் பிற மொழியாளர்க்கும் பிற நாட்டார்க்கும் அவர்களை அறிமுகப்படுத்தி அவர்களுள் சிலருக்கேனும் உலக அரங்கில் உரிய இடத்தைப் பெற்றுத் தரும் பணியிலும் நம் பங்கைச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார். இத்தகைய பணியைத்தான் இந்நூல் மூலமும் பிற நூல்கள் மூலமும் பேரா.ப.ம.நா. ஆற்றி வருகிறார் என்பது பாராட்டிற்குரியதல்லவா?

இப்படைப்பு 30.08.2000 இல் புதுக்கல்லூரியில்(சென்னை) நிகழ்த்தப்பட்டட பதிப்புச்செம்மல் பேரா.மெய்யப்பன் அறக்கட்டளைச் சொற்பொழிவின் நூல் வடிவாகும்.  இதுவே சிறந்த ஆய்வுச் சொற்பொழிவிற்கும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

 

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 12/ 69)