கலைச்சொற்கள், துறைச்சொற்கள், தொழில் நுட்பச்சொற்கள், சிறப்புச் சொற்கள் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால், கலைச்சொல் என்று எந்த ஓர் சொல்லும் இல்லை. ஒரு சொல் பயன்படும் இடத்திற்கேற்பக் கலைச்சொல்லாகவோ துறைச்சொல்லாகவோ சிறப்புச் சொல்லாகவோ திகழ்ந்து அதற்கேற்ற பொருளைத் தருகிறது. எனவேதான், கலைச்சொல் என்று குறிப்பிடவில்லை.

உவமைக் கவிஞர் சுரதாவின் ‘தமிழ்ச் சொல்லாக்கம்’ நூலில் இதழகள், நூல்கள் பலவற்றில் இடம் பெற்றுள்ள அயற்சொற்களுக்கு மாற்றான தமிழ்ச்சொற்களைத்தொகுத்துத் தந்துள்ளா். இந்நூலின் பதிப்புரையில், வெள்ளையாம்பட்டு சுந்தரம், “சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் அரிய தொகுப்பு” எனக் குறிப்பிட்டிருப்பார். இவற்றின் அடிப்படையில்  இயல்பான சொல் ஒன்று  குறிப்பிட்ட இடத்தில் அல்லது துறையில் வேறு பொருளில் பயன்படுத்தப்படுவதைக் கலைச்சொல் எனக் குறிப்பதைவிடப் பொருள் மாற்றச் சொற்கள் எனலாம். இவற்றையே மாற்றுப் பொருள் சொற்கள் என இங்கே குறித்துள் ளோம்.

ஒரு சொல்லின் பல்வேறு பொருள்களையும் துறைச்சொல்லாகப் பயன்படும்  இடத்தில் உள்ள மாற்றுப் பொருளையும் விளக்குவதே இக்கட்டுரை. இதற்குச் சான்றாகச் சட்டத்துறையில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் எடுத்தாளப்படுகின்றன.

  1. Instrument – காவணம்

instrument என்றால் பொதுவாகக் கருவி என்றே நாம் கருதுகிறோம். அதற்கு வேறு பொருள்களும் உள்ளன. ஆட்சியியல், வேதியியல், பொறியியல், வங்கியியல், மனையியல், இயற்பியல், கால்நடை அறிவியல், முதலிய துறைகளில் கருவி என்றே குறிக்கின்றனர். மனையியலில் அளவுக்கருவி என்கின்றனர். கால்நடை அறிவியலில் ஆயுதம் என்கின்றனர். ஆட்சித்துறையில் செயற்கருவி என்று குறிக்கின்றனர். வங்கியியலிலும், சட்டத்துறையிலும் முறையாவணம் என்கின்றனர்.

சட்டத்துறையில் சிலர் தவறுதலாகக் கருவி என்றே குறிக்கின்றனர். இணைய வழி மொழிபெயர்ப்பிலும் அவ்வாறே வருகிறது. 

எழுதப்பட்ட சட்டமுறைப் பதிவே ஆவணமாகும். இது சட்டப்பூர்வமாக செயல்படுத்தக்கூடிய செயல்கள் அல்லது ஒப்பந்தங்களின் முறையான நிறைவேற்றத்தைப் பதிவு செய்கிறது. மேலும் அவற்றுடன் தொடர்புடைய சட்ட உரிமைகள், கடமைகள், சட்டப்பிணைப்புகளைப் பாதுகாக்கிறது. ஒப்பந்தங்கள், விருப்பமுறிகள், உறுதிமொழிப் பத்திரங்கள், ஆவணங்கள், பத்திரங்கள், தகுதிவாய்ந்த சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஆகியவை சட்ட ஆவணங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

Deed – ஆவணம் என்கிறோம். எனவே instrument- ஆவணம் என்பதில் குழப்பம் ஏற்படும். இதனை முறையாவணம் என்கின்றர் சிலர். அதுபோல் முறைமையம் எனலாம்; அஃதாவது சட்டமுறைமைப்படியான ஆவணம் என்பதால் முறைமையாவணம் எனலாமா எனக் கருதிப் பார்த்தேன். நீளமாகவும் இரு சொல்லாகவும் உள்ளது. சுருக்கமாக முறைமையம் எனலாமா என்றும் கருதிப் பார்தேன். முறையாக இருக்க வேண்டிய பிறவற்றையும் இச்சொல் குறிக்கும்.

 கடைத்தெரு, பந்தல், புனர்பூச நட்சத்திரம் முதலிய பொருள்களையுடைய ஆவணம் என்னும் சொல் காவணம் என்னும் சொல்லில் இருந்துதான் வந்தது. காத்தற்குரிய ஆவணம் காவணம் என்றும் சொல்லலாம். அப்படியானால் பிற காத்தற்குரியன அல்லவா என எண்ணக்கூடாது. பொதுவான பொருள் சில இடங்களில் சிறப்பாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம். அப்படிக் கருதலாம். எவ்வாறிருப்பினும் ஆவணம்  என்பதிலிருந்து வேறுபடுத்த  காவணம் எனலாம்.

  • Action – வழக்குப்பாடு

  செயல்(ஆட்சித்துறை, வேளாண்மை, மனையியல், கணக்கு, குமுகவியல், கால்நடை அறிவியல்),  வினை(பொறியியல், மனையியல், கணக்கு, குமுகவியல், கால்நடை அறிவியல்),  வழக்கு(மனையியல்), நடவடிக்கை(மனையியல்),  விசை (கணக்கு), தாக்கம்(கால்நடை அறிவியல்).  செயல்வினை எனத் துறை வாரியாகப் பொருள்கள் கூறப்படுகின்றன.

வழக்கு நடைமுறை, செயற்படுமுறை, வழக்கு மூலம், செயல்,  வினையாற்றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்கு நடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு, நடிப்பு செயலாய்வு, கருமம், தொழில், அமைதி, புரிவு, தொழிற்பண்பு, செய்தொழில், சேட்டை, வண்ணம், புணர்ப்பு, ஆட்டம், வினையம், செய், செயற்கை, நடவடிக்கை, வினை, கூத்து, கிரியை, வழக்கு, விசை, தாக்கம், செயல்வினை, செய்கை, அதிரடி எனவும் கூறுகின்றனர். .

Action Committee – நடவடிக்கைக் குழு, Action Plan – செயற் திட்டம் எனவும் இடத்திற்கேற்பப் பொருள்கள் வழங்கப்பெறுகின்றன.

வீரதீரச் சண்டைப்படங்களை அதிரடிப்படம் (Action film) என்பர். அதிரடிப்பட நாயக, நாயகியரை முறையே அதிரடி நாயகர்(Action hero), அதிரடி நாயகி(Action heroine) என்பர்.

நீதித்துறையில் இச்சொல், ஒருவர் அல்லது ஒரு தரப்பு தன் அல்லது தம் உரிமையை நிலைநாட்ட அல்லது பிறரால் ஏற்படும் தீங்கிழைப்பைத் தடுக்க நீதி மன்றத்தின் முன் கொண்டு வரும் நடவடிக்கையைக் குறிக்கிறது. அஃதாவது, உரிமையியல் குற்றவியல் வழக்கின் சட்ட நடவடிக்கையைக் குறிக்கிறது.

வழக்கு என்னும் பொழுது case- வழக்கு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, செயற்பாடு, வினைப்பாடு என்பதுபோல் Action -வழக்குப்பாடு எனலாம்.

  • Achromatic – எழுதா ஆவணம்

பயிரியலில் நிறமிலா; பொறியியலில் நிறநீக்கு, நிறமற்ற; மனையியலில் நிறம்சேரா, நிறம்பிரியா; கால்நடை அறிவியலில் நிறமற்ற எனப் பொருள்கள் வழங்குகின்றன. சாயல் மற்றும் செறிவு இல்லா என்றும் கூறுகின்றனர்.

இப்பொருள்கள் சட்டத்துறையில் பொருந்தி வராது. இச்சொல் சட்டத்தில் எழுத்தாவணமற்ற வாய்மொழிக் கூற்றைக் குறிக்கிறது. எனவே, எழுதப்பெறா ஆவணம் > எழுதா ஆவணம் எனலாம்.