(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  47 தொடர்ச்சி)


குறிஞ்சி மலர்
18

பரபரப்பினோடே பலபல செய்தாங்(கு)
இரவு பகல் பாழுக்(கு) இறைப்பஒருவாற்றான்
நல்லாற்றின் ஊக்கிற் பதறிக் குலைகுலைப
எவ்வாற்றான் உய்வார் இவர்.
      —
குமரகுருபரர்


மேற்கு வானத்திலிருந்து தங்க ஊசிகள் நீளம் நீளமாக இறங்குகிறாற் போல் மாலை வெயில் பொற்பூச்சுப் பூசிக் கொண்டிருந்தது. கண்களுக்கு நேரே மஞ்சள் நிறக் கண்ணாடிக் காகிதத்தைப் பிடித்துக் கொண்டுப் பார்க்கிற மாதிரி தெருக்களும், வீடுகளும், மரங்களும் மஞ்சள் கவிந்து எத்தனை எழில் மிகுந்து தோன்றுகின்றன! கோடானுகோடி நெருஞ்சிப் பூக்களை வாரிக் கொட்டிக் குவித்தாற்போல் மஞ்சள் குளித்து மயங்கிய இந்த மாலைப் போதுதான் எவ்வளவு மயக்கம் தருகிறது! தமிழில் மருள்மாலை என்று இதற்குப் பெயர் வாய்த்தது எத்தனை பொருத்தமானது? தமிழ்ச்சங்கம் வீதியில் ஞாயிற்றுக்கிழமைச் சந்தைக்கு அருகே கையில் துணிப்பையுடன் நடந்து கொண்டிருந்தான் அரவிந்தன். அன்றைக்குச் சந்தை நாள் போலிருக்கிறது. திருவிழாக் கண்டதுபோல் வீதி கொள்ளாமல் மக்கள் கூடிக் கொண்டும், சிதறிக்கொண்டும் இருந்தார்கள். இரண்டு பக்கத்து நடைபாதைகளிலும் கூடைக்காரிகளின் கும்பல் தரைமேல் வண்ண(ஓலி)ப் பண்டிகை கொண்டாடின மாதிரி தாறுமாறாகத் துப்பின வெற்றிலைச்சாறு – கால்களைப் பதித்து நடக்கக் கூசிற்று. மழை வந்து விட்டால் கைகளில் தூக்கிச் சுமக்க நேரிடுமே என்று செருப்பணியாமல் வந்திருந்தான் அரவிந்தன். பாதங்களைத் தூய்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் மிகவும் விருப்பமுள்ளவன் அவன். வாதா மரத்தின் பழுத்த இலைகளைப் போல் நல்ல பாதங்கள் அவனுக்கு. செம்பொன் நிறம். அதில் அழகாகவும் அளவாகவும் விரல்கள். நீளமும் அகலமுமான பெரிய பாதங்கள் அவை.


எப்பொழுதாவது அரவிந்தனின் பாதங்களைக் கவனிக்க நேருகிறபோது அவனோடு சம வயதுள்ள நண்பர்கள், “பெண்பிள்ளைகளின் பாதங்களைப்போல் எப்படி அப்படிக் கால்களை இவ்வளவு அழகாக வைத்துக் கொள்கிறாய்” என்று கேலியாகக் கேட்பதுண்டு. பித்த வெடிப்பும், சேற்றுப்புண்ணுமாக முரடு தட்டிப்போன முருகானந்தத்தின் பாதங்களைப் பார்க்கும் போதெல்லாம் ‘கால்களைக் கவனி தம்பி; உன்னைப் போலவே அவையும் முரடாகிக் கொண்டிருக்கின்றன’ என்பான் அரவிந்தன்.

“எனக்கு இந்த அழகுக் கவலையே உண்டாவதில்லை அரவிந்தன்! எங்கள் வீடு இருக்கிற பகுதிக்குப் பெயர்தான் பொன்னகரம் என்று பிரமாதமாக வைத்துவிட்டார்கள். உண்மையில் பொன்னரகம் தான் அது. சேறும் சகதியும், மேடும் பள்ளமுமான அந்தத் தெருக்களில் நடக்கிற கால் இப்படியில்லாமல் வேறு எப்படி இருக்கும்?” என்று முருகானந்தத்திடமிருந்து பதில் வரும்.

பூரணி கொடைக்கானலில் இருந்து படிப்பதற்காகக் கேட்டிருந்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு வருவதற்காகவே அரவிந்தன் அப்போது தமிழ்ச்சங்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஏராளமான நூல்கள் நிறைந்த பெரிய நூல் நிலையம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்தது. பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் வாழ்ந்த காலத்தில் இந்தத் தமிழ்ச் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக இருந்தார். இதன் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் முன்பாக, மூன்று தமிழ்ச்சங்கங்களும் அழிந்த குறையைத் தீர்ப்பதற்காக இராமநாதபுரம் அரச குடும்பத்தினரும் பாண்டித்துரைத் தேவர் என்ற பெயருள்ளவருமான வள்ளலும் இந்த நான்காம் சங்கத்தைத் தோற்றுவித்தார்கள். செந்தமிழ் வளர்த்த சேதுபதி அரசர்களோடு பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்துக்கு இளமையிலிருந்தே நட்புறவுண்டு. ஒவ்வொரு நவராத்திரி விடுமுறையின்போதும் இராமநாதபுரத்தில் கலைமகள் விழாக் கவியரங்கத்துக்குச் சென்று சிறந்த மரியாதைகளோடு திரும்பி வருவார் அழகிய சிற்றம்பலம். அப்பாவின் அந்த உறவும் பெருமையும் இப்போது பூரணிக்குப் பயன்பட்டன. தன் வீட்டில் இல்லாத சில அரிய நூல்களை அவள் தமிழ்ச்சங்க நூல் நிலையத்தில் எடுத்துப் படிப்பது வழக்கமாயிருந்தது.

பூரணி கொடைக்கானலிலிருந்து எழுதியிருந்த கடிதத்தையும், புத்தகங்களைப் பற்றிய குறிப்பையும் காட்டியவுடனே நூல் நிலையத்தில் சுறுசுறுப்போடும், ஆர்வத்தோடும் புத்தகங்களை எடுத்துக் கொடுத்துவிட்டார்கள். அரவிந்தன் அவற்றைப் பையில் நிரப்பிக் கொண்டு திரும்பினான். அச்சகத்தில் போய் அந்தப் புத்தகங்களை நன்றாகக் கட்டி கொடைக்கானலுக்கு மறுநாள் காலை பார்சல் செய்துவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டு விரைந்தான் அவன். சந்தை சிறிது சிறிதாகக் கலைந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை சந்தை என்று பேர்தானேயொழிய வியாழக்கிழமையிலும் சந்தை கூடும். அங்கே தேசிய இயக்கக் காலத்தின் சின்னமாகத் ‘திலகர் சதுக்கம்’ என்ற புதுப்பெயரையும் ஏற்றுக்கொண்டிருந்தது அந்த சந்தைத் திடல். சந்தைக்கு வரும் வியாபாரிகள் காய்கறிகளை விற்று முடித்தபின், மாலை ஆறரை மணிக்கு மேல் அரசியல் சந்தை கூடுகிற இடமாக மாறிவிடும் அது. அதாவது பொதுக்கூட்டங்கள் அங்கே நடைபெறும். உணர்ச்சிமயமான பேச்சாளர்கள் தங்கள் முதல் இல்லாத சரக்கை விற்கிற இடமும் அதுதான். இப்படிப் பகலில் காய்கறியும் இரவில் அரசியலும் விலை போய்க் கொண்டிருந்த அந்த இடத்தின் வாயிலில் வீதி வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முருகானந்தத்தை அங்கே சந்தித்தான் அரவிந்தன்.

“என்ன அரவிந்தன்! தமிழ்ச் சங்கத்தையே பைக்குள் வாரி அடைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாய் போலிருக்கிறதே” என்றான் முருகானந்தம்.

“ஒன்றுமில்லையப்பா, பூரணி கொடைக்கானலிலிருந்து புத்தகங்கள் வாங்கி அனுப்பி வைக்கச் சொல்லி எழுதியிருந்தாள். அவளுக்கு அனுப்புவதற்காக வாங்கிக் கொண்டு போகிறேன்.”

“எனக்குக்கூட கடிதம் வந்தது…” என்று சிரித்துக் கொண்டே களிப்போடு பேச்சைத் தொடங்கிய முருகானந்தம் மின்சாரத் தொடர்பு அற்றதும் பட்டென்று ஒலி நிற்கிற வானொலி மாதிரி உதட்டைக் கடித்துக் கொண்டு பேச்சை நிறுத்தினான். சொல்ல வேண்டாமென்று இருந்ததை வாய்தவறிச் சொல்லியது போன்ற உணர்வு அவன் முகத்தில் நிலவியது. அரவிந்தன் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். உல்லாசமும் தடுமாற்றமும் கலந்த நூதனமானதொரு குழப்பத்தோடு தோன்றினான் முருகானந்தம். அரவிந்தனின் பார்வையைத் தன் முகத்தில் தாங்கிக் கொள்ள இயலாதவன் போல் தலையைச் சாய்த்துக் கொண்டு எங்கோ பராக்குப் பார்த்தான் அவன். மலராத பூவின் மகரந்த மணம்போல் அப்போது அவனுடைய முகத்திலும் கண்களிலும் இதழ்களிலும் நாணமும் கூச்சமும் கலந்து நிற்பதை அரவிந்தன் கண்டான்.

“உனக்கு யாரிடமிருந்து கடிதம் வந்தது முருகானந்தம்? தனியாக உனக்கு வேறு கடிதம் எழுத இயலவில்லை என்றும், உன்னிடம் தன் வணக்கத்தைக் கூறும்படியும் உன்னுடைய பூரணியக்கா எனக்கு எழுதிய கடிதத்தில் எழுதியிருக்கிறாளே அப்பா?”

இந்தக் கேள்விக்குப் பின் முருகானந்தத்தின் உல்லாசத் தடுமாற்றம் இன்னும் அதிகமாயிற்று. அரவிந்தன் விடவில்லை மேலும் அவனைத் துளைத்தெடுத்தான்.

“என்னப்பா தம்பி, என்ன சங்கதி? முகம் ஒரு மாதிரிக் கோணிக் கொண்டு போகிறது. கடிதம் வந்திருக்கிறது என்கிறாய். யார் எழுதினதென்று கேட்டால் பதில் சொல்லாமல் பராக்குப் பார்க்கிறாய்?”

“ஒன்றுமில்லை அரவிந்தன் வந்து…”

“வந்தாவது, போயாவது. ஆண்பிள்ளையாய் இலட்சணமாய்க் கூச்சமில்லாமல் பேசு ஐயா.”

“அந்தப் பெண் வசந்தா கொடைக்கானல் போய்ச் சேர்ந்ததும் என் பெயருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதைத்தான் வாய் தவறி உன்னிடம்…”

“சொல்லிவிட்டாயாக்கும்! பலேடா தம்பி. காதல் கதை ஆரம்பமாகியிருக்கிறதா? எத்தனை நாட்களாக இந்தக் கடிதம் எல்லாம் வந்து போகிறதப்பா?”

“சத்தியமாகச் சொல்கிறேன் அரவிந்தன், எனக்கு ஒரு வம்பும் தெரியாது. அந்தப் பெண்ணாகத் தான்…”

“டேய்! டேய்! சத்தியம் என்கிற வார்த்தை ரொம்பவும் பெரிது. அதை இங்கே இழுக்காதே. இது சாதாரண காதல் விவகாரம்” என்று வேடிக்கை பண்ணினான் அரவிந்தன். முருகானந்தம் சிரித்துக் கொண்டே தலைகுனிந்தான்.

“ஓகோ! அப்படியா சங்கதி! பதில் எழுதி விட்டாயோ இல்லையோ!”

எழுதி விட்டேன் என்பது போல் தலையாட்டினான் முருகானந்தம். அரவிந்தன் சிரித்தவாறே மேலும் கூறினான்.

“இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது, அப்பனே! சினிமா வம்பிலிருந்து அந்தப் பெண்ணை மீட்டு வரத் திருச்சி போய் திரும்பின அன்றிலிருந்தே நீ தானப்ப முதலித் தெருவுக்கு அடிக்கடிப் போகத் தொடங்கிவிட்டாயே; ‘அந்த அம்மா ஏதோ தைப்பதற்குத் தருகிறேன் என்று வரச் சொன்னதாக’ அல்லவா போய்க் கொண்டிருந்தாய்? இதுதானா அந்தத் தையல் வேலை”.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்