(குறிஞ்சி மலர்  84 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர், அத்தியாயம் 30

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள் நீர்பெய்து இரீஇ யற்று
.
      — திருவள்ளுவர்


மதுரைக்கே ஒரு புதிய சுறுசுறுப்புக் களை உண்டாகியிருந்தது. நகரம் முழுவதும் ஏதோ பெரிய போருக்குத் தயாராகிற மாதிரித் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. பழைய காலத்து அரசியல் வெள்ளாற்றுப் போர், தலையாலங்கானத்துப் போர் என்றெல்லாம் போர்கள் நடந்த மாதிரி அடிக்கடி போர்கள் ஏற்பட இன்றைய அரசியலில் வாய்ப்பும் இல்லை; வீரமும் இல்லை. இன்றைய அரசியலில் நாகரிகமாகவும் அழுக்குப் படாமலும் நடக்கிற மௌனமான போராட்டத்துக்குத்தான் தேர்தல் என்று பெயர். மக்களுக்காக அரசர்கள் போட்டியிட்டுப் பகைத்து அடித்துக் கொண்ட போர், பழைய காலத்துப் போர். எவரோ சிலர் தேர்தலுக்கு நிற்க அவர்களுக்காக மக்கள் போட்டியிட்டுப் போரிடும் நாள் இது. பழைய போரில் இருந்ததைக் காட்டிலும் இந்த நாகரிகப் போரில் சூழ்ச்சிகளும், சூதுகளும், வஞ்சனைகளும், புதியனவாகவும், அதிகமானவையாகவும்தான் இருக்கின்றன.

திரைப்படங்களில் சில முகங்களைப் பெரிதாக நெருங்கிய தோற்றத்தில் காட்டும் போது அதிலுள்ள வடுக்களும், பருக்களும் விவரமாகத் தெரிவதுபோல், தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் தொடர்புடையவர்களின் அந்தரங்கமான வடுக்களும், புண்களும் அரவிந்தனுக்கு ஒவ்வொன்றாகத் தெரியத் தொடங்கின. மனிதர்களின் சிறுமைகளும் அற்பத்தனமான ஆசைகளும் புரியப் புரியத் திடீரென்று உலகமும் அதிலுள்ளவர்களும் உள்ளவைகளும் கேலிக்கும் கேவலத்துக்கும் உரிய பொருட்களாக மாறிக் கொண்டு வருவது போல் அச்சம் உண்டாயிற்று அவனுக்கு. ஆனால் நல்லதில் நம்பிக்கையும் நியாயமான முயற்சியும் உள்ளவனுக்கு இந்த அச்சம் தேவையற்றது என அவன் மனச் சான்று அவனுக்கு உரைத்தது. சிறுமைகளையும் சூழ்ச்சிகளையும் கண்டு ஏளனமாகச் சிரித்துவிடுவதோடு சமாளித்துக் கொண்டு போகத் தெரியாவிட்டாலும் உலகம் பகற்பொழுதிலும் இருண்டிருப்பதாகத்தான் தோன்றும்.

முருகானந்தத்தை உதவிக்கு வைத்துக் கொண்டு தேர்தல் ஏற்பாடுகளைத் தொடங்கியபோது அரவிந்தனுக்குப் பலவிதமான அனுபவங்கள் ஏற்படலாயின. இரவு பகல் பாராமல் தேர்தலுக்கு அலைந்து உழைக்க வேண்டியிருந்தது. பருமாக்காரர் அங்கேயே தேர்தல் அலுவலகங்கள் திறந்து வெளிச்சமாகவும் ஆடம்பரமாகவும் புதுமண்டபத்து மனிதருக்காக விளம்பரங்கள் செய்து கொண்டிருந்தார். தேர்தல் அடையாளங்களாகப் பூரணிக்குத் தாமரைப்பூச் சின்னமும் புது மண்டபத்து மனிதருக்குக் கழுகுச் சின்னமும் அமைந்திருந்தன.

தேர்தல் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டுவதில்தான் முதன் முதலாகத் தகராறு ஆரம்பமாயிற்று. அரவிந்தன் மனம் கொதித்துக் குமுறும்படியான நிகழ்ச்சி அப்போதுதான் நடந்தது.

மதுரையைப் போன்ற பெரிய நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்குப் பெரும்பாலும் பகல் நேரங்களில் வசதிப்படாது. அதனால் ஒரு நாள் அதிகாலை மூன்று மணிக்கு வாடகைக்குப் பேசின குதிரை வண்டியொன்றில் சுவரொட்டிகளை நிரப்பி, பசை, ஏணி முதலிய கருவிகளோடு பூரணியின் தம்பி திருநாவுக்கரசையும் வேறு சில கூலிக்காரப் பையன்களையும் உடன் அனுப்பினான் அரவிந்தன். பொழுது நன்றாக விடிவதற்குள் முடிந்தவரை சுவரொட்டிகளை ஒட்டி விட்டுத் திரும்பிவிட வேண்டுமென்றும், எஞ்சிய இடங்களில் மறுநாள் இதே நேரத்துக்குப் போய் ஒட்ட வேண்டுமென்றும் ஏற்பாடு. கூலிக்காரப் பையன்களுக்கு முக்கியமான இடங்களைக் காட்டி ஒட்டச் செய்யவும் அவர்கள் சுவரொட்டிகளைத் திருடிக் கொண்டு போய் வீசைக் கணக்கில் விலைக்கு நிறுத்துவிடாமல் கவனித்துக் கொள்ளவுமே திருநாவுக்கரசை உடன் அனுப்பியிருந்தான் அரவிந்தன்.

அரவிந்தன் இரவில் அதிக நேரம் கண் விழிக்க நேரும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இருள் புலருமுன்பே எழுந்திருந்து நீராடிக் காலை வழக்கங்களை முடித்துக் கொண்டு தூய்மையடைந்து விடுவான். நீராடி உடை மாற்றிக் கொண்டு அச்சகத்து முன் அறையில் ஊதுவத்திகளைப் பொருத்திவிட்டு அந்த நறுமணச் சூழலில் அமர்ந்து எப்போதும் தன்னை விட்டுப் பிரியாமலிருக்கும் சின்னஞ்சிறு திருக்குறள் புத்தகத்தை எடுத்துச் சிறிது நேரம் ஆழ்ந்து படிப்பான். குறள் படித்து மனத்தில் தூய எண்ணங்களை வளர்த்துக் கொண்டபின் தன்னுடைய கவிதை நோட்டுப் புத்தகத்தையும், டைரியையும் எடுத்து அப்போதுள்ள துறுதுறுப்பான எண்ணங்களில், எழுச்சியில் எவையேனும் கவிதைகளோ, புதிய சிந்தனைகளோ தோன்றினால் அவற்றை எழுதுவான். ஒவ்வொரு நாளும் இந்த விடியல் நேரத்துக்கு அவன் வாழ்வில் தனிச்சிறப்பு உண்டு. காலை நாலரை மணியிலிருந்து ஏழு மணி வரை உள்ள நேரம் தான் மனிதனுடைய இதயத்தில் மங்கலமும் தூய்மையும், இறைமையும் கனிவிக்கின்ற நேரமாகும் என்று கருதினான் அரவிந்தன். அந்த வைகறையில் தான் பூக்கள் இதழ் விரிக்கின்றன. கோவில்களுக்குள்ளிருந்து வைகறை மேளமும், மணியும் ஒலிக்கின்றன. உலகத்துக்கு எல்லாம் அமைந்து அடங்கிய சாந்தமே தேவை என்று நினைவூட்டுவது போல் வெம்மை சிறிது மற்றதொரு பூங்குளிர் பொலியும் நேரமும் இந்த வைகறைதான். தன்னுடைய வாழ்க்கையைப் பண்படுத்தி ஒழுங்காக்கிய பழக்கங்களுள் வைகறைத் துயிலெழும் பழக்கமும் ஒன்று என்பதை அரவிந்தன் நன்கு உணர்ந்திருந்தான்.

விடிகிற நேரமாகாவிடினும் அன்று சுவரொட்டிகளை வண்டியில் ஏற்றி அனுப்பியவுடனேயே பல் விளக்கிவிட்டு நீராடச் சென்றுவிட்டான் அரவிந்தன். குறள் படித்துவிட்டு அவன் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தபோதே எதிர்புறத்து சுவரில் அட்டையில் ஒட்டித் தொங்கவிடப்பட்டிருந்த பூரணியின் தேர்தல் சின்னமான தாமரைப்பூ அவன் கண்களில் தென்பட்டது. ‘இந்த நேரத்துக்கு இலங்கையின் எந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறாளோ?’ என்று பூரணியைப் பற்றி நினைத்தான் அவன். எதிரே தெரிந்த வண்ணச் சுவரொட்டியில் இருந்த பெரிய தாமரைப் பூச்சின்னம் அப்படியே அந்தப் புலர்காலை மெல்லிருளில் சிறிது சிறிதாய் மாறி மறைந்து பூரணியின் முகமாகத் தோன்றிப் பேரின்பப் புன்னகை புரிவது போல் அரவிந்தன் கண்களுக்குக் காட்சியளித்தது. முழுமதியில் கருநாவற்கனி பதித்தாற் போன்ற அந்த முகமும் கண்களும் நினைவுக்கு வந்தபோது முன்னும் பின்னும் தொடர்பு இன்றி ஒரே ஒரு கவித்தொடர் மட்டும் அவனுடைய நாவில் சொற்களாகத் துடித்தது. ‘நீலங்குழைத்து நீட்டிப் பின் நிலவிற் பதித்த நாவற்பழம்‘ என்ற இந்த அழகிய தொடரை அவன் எழுதிக் கொண்டான். திடீரென்று கற்பனைக் கதவு திறந்து கொண்டு தானாக வந்து குதித்த இந்த ஒரு வரியை முழுக் கவிதையாக நிறைவு செய்யும் சிந்தனையில் கவிதா ஆவேசத்தை வரவழைத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான் அரவிந்தன். மனத்தில் மண்ணுலகின் பாமர நினைவுகளே இல்லாத நிலை. அப்போது “ஐயா! பாவிப்பயலுக அடிச்சுப் போட்டுட்டு ஓடிவிட்டானுங்க…” என்று அலறிக்கொண்டே உள்ளே ஓடி வந்த குதிரை வண்டிக்காரன், அவனுடைய கவிதா வேகத்தைக் கலைத்து மண்ணுலகத்து நினைவுக்குக் கொண்டு வந்தான். திகைப்போடு வாயிற்புறம் எழுந்து ஓடிப்போய் அங்கு நின்றுகொண்டிருந்த குதிரை வண்டிக்குள் எட்டிப் பார்த்தான் அரவிந்தன். அடிப்பட்டு மயங்கிய நிலையில் துவண்டு வண்டிக்குள் கிடந்தான் திருநாவுக்கரசு. கொண்டு போன சுவரொட்டிகளில் ஒன்று கூட வண்டிக்குள் இல்லை. ஏணியும் இல்லை. பசையும் இல்லை.

“ஐயா! வைகைப் பாலத்துப் பக்கம் ஓர் இடத்திலே நம்ம ஆளுங்க சுவரில் ஒட்டிக்கிட்டிருந்தப்போ தற்செயலா வருகிறாப்போலக் கழுகுப்பெட்டி ஆளுங்க நம்ம பையன்கள் ஒட்டின சுவரொட்டி மேலேயே கழுகுப்பெட்டி சுவரொட்டியை ஒட்டினாங்க. நம்ம பையன்களும் இந்தத் தம்பியும், ‘நீங்களும் ஒட்டனுமுன்னாப் பக்கத்தில் ஒட்டுங்க, மேலே ஒட்டி எங்க சுவரொட்டியை மறைக்கிறது நியாயமில்லே’ன்னு அந்த ஆளுங்களோட வாதாடினாங்க. ‘மகா நியாயத்தை கண்டவங்க தாண்டா! மரியாதையா ஓடிப்போறீங்களா? உதை வேணுமா’ன்னு கழுகுப்பெட்டி ஆளுங்க நம்ம பையன்களை மூக்கு முகம் பாராமே அடிக்கத் தொடங்கினாங்க. அடி தாங்க முடியாமல் கூலிக்கு வந்த பையன்க மூலைக்கு ஒருத்தனா பிச்சுக்கிட்டு ஓடிட்டாங்க. இந்தத் தம்பிதான் கடைசிவரை நின்று அவர்களை எதிர்த்தது. அவங்க அத்தனை பேரும் முரடங்க. செம்மையா அடிச்சுப் போட்டுட்டுப் பசை, சுவரொட்டி, ஏணி எல்லாம் பிடுங்கிக்கிட்டு ஓடிப்போயிட்டாங்க. நடுவிலே புகுந்து தடுத்ததிலே எனக்குக்கூட நாலஞ்சு அடிங்க. ஊரே கெட்டுப் போய்க் கிடக்குதுங்க. நல்லவனுக்கே காலமில்லே” என்று மூச்சுவிட இடைவெளியின்றிக் கூறி முடித்தான் குதிரை வண்டிக்காரன்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி, குறிஞ்சி மலர்