சடுகுடு – வெற்றிச்செழியன்
சடுகுடு ஆட்டம் ஆடு – நம்
உணர்வின் உயிர்ப்பினைத் தேடு – நீ
சடுகுடு என்றே பாடு – நம்
மண்ணை மீட்டிடப் பாடு – 2 (சடு)
சடுகுடு பாடி ஆடி – நீ
சிலிர்த்திடும் வேங்கையாய்ச் சீறு
படபடவென்றே பாடு – நம்
பகையினைக் களத்தினில் வீழ்த்து – 2 (சடு)
எட்டிச்சென்றே பாடு – நீ
எதிர்ப்படும் எவரையும் தீண்டு
தொட்டுச் சென்றே விரட்டு – தன்
தோல்வியை அவரிடம் சுமத்து. (சடு)
மூச்சைப் பிடித்துப் பாடு – களம்
முழுவதும் பரவியே ஆடு
வீச்சாய் களத்தினில் ஆடு – முழு
வீறுடன் தன்னகம் திரும்பு (சடு)
நம்மிடம் நோக்கிப் பகைவர் – அட
தாவி வருவதைக் கவனி
தம்மிடம் என்றிதைக் கூறி – அவர்
பிடிக்க வருவதைக் கவனி. (சடு)
நம்முடை மண்ணிதை மிதிக்க – நாம்
நினைவிலும் விட்டிடமாட்டோம்
இம்மியும் பகைவர் நுழைய – இனி
என்றுமே இடம் தரமாட்டோம். (சடு)
நம்மவர் கைகளை இணைத்து – உடன்
நடுவினில் பகையினைத் துரத்து
விம்மிய தோள்களைக் காட்டி – அவர்
வீட்டினை நோக்கி விரட்டு. (சடு)
Leave a Reply