(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

வள்ளுவர் வகுத்த அரசியல்

ஆ. அரண்

 சென்ற பகுதியில் “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு’’ என்று நாட்டின் சிறப்புக்கு அரணும் இன்றியமையாதது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இப் பகுதியில் ‘அரண்’ என்பதுபற்றி ஆராய்வோம்.

 நாடுகள் தனித்தனியாக இருக்கும் வரையில், தனது அரசே பேரரசாக விளங்கவேண்டும் என்ற எண்ணம் நீங்கும் வரையில், நாடு நல்ல அரண் பெற்றிருக்க வேண்டியதுதான். ‘அரண்’ என்பது பாதுகாவல் என்னும் பொருளைத்தரும். பாதுகாவலைக் கொடுக்கக் கூடியன ‘அரண்’ எனப்படுகின்றன. திருக்குறள் இயற்றப்பட்ட காலத்தில் அரணாய் இருந்தவை இக்காலத்திற்கு ஏலா. அக்காலத்தில் மதிற்சுவரும், அகழியும், காடும் அரணாக இருந்தன. வான ஊர்திப்படை மிக்கு வரும் இந்நாளில், இவை பயன்தரா. அணுக்குண்டும் நீர்க்குண்டும் பெருகிவரும் இந் நாளில் எவைதாம் பயன்படும்? நன்னெறி ஒன்றைத் தவிர நற்காவல் ஏது? யாவரும் குறள் நெறியில் வாழ்ந்து இன்பம் நுகர முயல்வரேல் அவா, வெகுளி, போர் ஒழியும். இவை ஒழிந்தால் அரண் எதற்கு? ஆயினும் திருக்குறளில் அரண் எவ்வாறு இருந்தால் நன்மை பயக்கும் என்று கூறியிருப்பதைக் காண்போம்.

1.       ஆற்று பவர்க்கும் அரண்பொருள்; அஞ்சித்தன்

போற்று பவர்க்கும் பொருள்.

(குறள் 741)

 ஆற்றுபவர்க்கும் – (பகைவரை வெல்லும் ஆற்றல் உடையவர்க்கும்) பிறர்மேல் படையெடுத்துச் செல்லுவார்க்கும், அரண் பொருள்-அரண் வேண்டிய பொருளாகும், அஞ்சி-தம்மீது படையெடுத்து வருவோர்க்கு அஞ்சி(பயந்து), தன் போற்றுபவர்க்கும் – தன்னையடைந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுபவர்க்கும், (அரண்) பொருள்-அரண் பொருளாக வேண்டற்பாலது.

 பகைவரை வெல்லும் ஆற்றல் உடையோராய்ப் பிறர்மேல் படையெடுத்துச் செல்வார் தமது நாட்டைப் பாதுகாவலான நிலையில் வைத்துவிட்டுச் செல்ல வேண்டுமாதலால், அவர்க்கும் அரண் வேண்டும். பிறர் படையெடுத்து வருங்கால் எதிர்நின்று போரிட்டு வெல்லமுடியாதவர்க்கும் தற்காப்புக்காக அரண் வேண்டும். அஃதாவது எல்லா வலிகளும் (தன் வலி, வினை வலி, துணை வலி) உடையவர்க்கும், வலிகள் அற்றவர்க்கும் அரண் வேண்டப்படும் பொருளாகும் என்பதாம்.

 ‘பொருள்’ பெயர்ச் சொல்லாயினும் பயனிலையாக வந்துள்ளது. ‘அரண் பொருள்’ – அரண் போற்றவேண்டிய பொருளாகும் என்று விரித்துச் சொல்லலாம். ‘பொருள்’ என்பதற்குப் பரிமேலழகர் சிறந்தது என்று பொருள் கூறியுள்ளார்.

2.      மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அரண்.

(குறள் 742)

 மணிநீரும் – மணிபோலும் நிறத்தினையுடைய நீரும், மண்ணும் – பரந்த வெளியிடமும், மலையும்-உயர்ந்த மலையும், அணிநிழல் காடும்-குளிர்ந்த நிழல் தரும் காடும், உடையது-பெற்றிருப்பது, அரண்-அரணாகும்.

 பகைவர்கள் நாட்டை முற்றுகையிடில், எளிதில் கொள்ள முடியாததாய் இருத்தல் வேண்டும். அரணும் சிறப்புடையதாய், பகைவரும் வலியராய் இருப்பின் முற்றுகை நீட்டிக்குமல்லவா? அப்பொழுது நாட்டு மக்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் போது

மானவையாய் இருந்தால்தான், மக்கள் வருத்தமின்றி யிருப்பர். இல்லையேல், உணவின்றி வருந்தும் மக்கள் முற்றுகையால் படும் தொல்லையைப் போக்கப் பகைவர்க்குச் சரண் அடைய வேண்டிவரும்.

 மணிநீர் – கடல்நீர், மணி-கருமை, ஆழம் மிகமிக நீரின் தோற்றம் கருமையாகக் காணப்படும். ஆதலின் ஆழ்ந்த கடல்நீரை மணிநீர் என்றார். நாட்டுக்கு அரண் கடலாக அமையின் பகைவரால் முற்றுகை இடப்படுதல் எளிதன்று. கப்பல் தொழில் சிறப்புறாத  அந் நாளில் நீர் அரணே மிகப் பாதுகாப்புடையது. நமது நாட்டிற்குப் படையெடுப்புகளெல்லாம் கடல் சூழப்படாத வடக்கிலிருந்துதான் என்பதை நாம் அறிவோமன்றோ. நகர்க்குரிய பாதுகாப்பு எனின் ‘மணி நீர்’ என்பதற்கு ஆழ்ந்த அகழிநீர் எனலாம். அக்காலத்தில் தலைநகரும் நல்ல பாதுகாப்புக்குரியதாக இருந்தது. பாதுகாவல்களுள் ஒன்று அகழியுமாகும்.

 நாட்டைச் சுற்றிப் பரந்த வெளியிடம் இருக்குமாயின் பகைவர்கள் வருவதையறிந்து எதிர்சென்று வென்றுவிடலாம். ‘மண்’ என்பதனால், அவ் வெளியிடம் மண் நிறைந்த பாலைவனம் போன்றிருத்தல் இன்னும் சிறப்புடைத்து என்று அறியலாம்.

 ‘மலை’ அரண் இயற்கையாக அமைந்தால் ஏற்றது தான். இந்திய நாட்டின் வடவெல்லை மலையரண் உடையது அன்றோ! தமிழ்நாட்டின் வடவெல்லையும் மலையரண் பெற்றிருந்தாலும் தொடர்ச்சியாகச் சுவர்வைத்ததுபோல் இல்லாமல் போய்விட்டது. பிரஞ்சு நாட்டிலும், சீனநாட்டிலும் சுவர்கள் எழுப்பியதுபோல் மலையின் இடைவெளிகளில் தமிழர்கள் சுவர் எழுப்பவில்லை. நெருங்கிய காடும் இயற்கையாக அரணாக அமைதல் நல்லதுதான். திராவிட நாட்டிற்கு வடவெல்லையாகக் காட்டரணும் (தண்டகாரணியம்) இருந்தது. ஆயினும் பயனற்றுவிட்டது. காட்டரண் ஏனைய வரண்களிலும் விரைவில் அழியக்கூடியது.

 3.     உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின்

அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல்.

(குறள் 743)

 உயர்வு – கடக்கமுடியாத உயரமும், அகலம் – பரப்பும், திண்மை – வலிமையும், அருமை – நெருங்குதற்குஅருமையும், இந் நான்கின்-இங்குக் கூறப்பட்டுள்ள நான்கு வகைத்தன்மைகளையும், அமைவு-பொருந்தியுள்ள தன்மையை, நூல் -அரசியல் நூல், அரண் என்று உரைக்கும்-பாதுகாவல் என்று சொல்லும்.

 அரண் என்பது, மிக உயரமாய் இருத்தல் வேண்டும்; பரந்ததாய் இருத்தல் வேண்டும்; எளிதில் கடக்கவோ அழிக்கவோ முடியாத திண்மை உடையதாய்  இருத்தல் வேண்டும்; பகைவரைக் கொல்லும் பொறிகள் அமைக்கப்பெற்று, படைகள் நிறுத்தப்பெற்றிருப்பதால் கிட்ட நெருங்கமுடியாத நிலையும் இருத்தல் வேண்டும்.மலை, கடல், காடு, வெற்றிடம் என்பனவற்றுள் எதுவாய்இருப்பினும் இந் நான்கு தன்மைகளும் பெற்றிருத்தல் வேண்டும்.

 பரிமேலழகர் இந் நான்கு தன்மைகளுமுடைய மதில் என்று கூறியுள்ளார். ‘மதில்’ என்று கூறுவதற்குக் குறளில் சொல்லில்லை. ஆயினும், இந் நான்கு இயல்புகளும் மதிலுக்குத்தான் உரியன என்று கருதி, ‘அமைவு’ என்பதை ஆகுபெயராய்க் கொண்டு, மதில் என்று கூறிவிட்டார்.

 உயர்வை மலைக்கும், அகலத்தை ‘மண்’ காடு ஆகியவற்றிற்கும், திண்மையை மலை காடுகட்கும், அருமையை நான்கிற்கும் கொள்ளலாம்.

4.     சிறுகாப்பின் பேர்இடத்தது ஆகி உறுபகை

ஊக்கம் அழிப்பது அரண்.

(குறள் 744)

 சிறுகாப்பின் – சிறிய காவலையும், பேர்இடத்தது ஆகி – பெரிய (அகன்ற)இடத்தினை உடையதாகி, உறுபகை – வரும் பகைவர்களுடைய, ஊக்கம் – மனவெழுச்சியை, அழிப்பது – கெடுப்பது, அரண் – அரணாகும்,

 அரணாய் அமைந்துள்ளவை பெரிதாய் இருத்தல் வேண்டும். ஆனால், வீரர்கள் நின்று காக்குமிடம் மிகச்சிறிதாய் இருத்தல் வேண்டும். மலையரணாக இருப்பின் கணவாய்களில் மட்டும் நின்றால் போதும். காட்டரணாய் இருப்பின் வழிகளில் மட்டும் காத்திருந்தால் போதும்.

கடலரணாயிருப்பின் துறைமுகங்களில் மட்டும் காவலிருந்தால் போதுமானதாய் இருத்தல் வேண்டும்.

பகைவர்கள் நெருங்கியவுடன்  அரணின் வலிமையை அறிந்து தம்மால் கடக்கமுடியாது என்று கண்டு மனவெழுச்சி குன்ற வேண்டும்.

 5.     கொளற்குஅரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்

நிலைக்குஎளிதாம் நீரது அரண்.

(குறள் 745)

 அரண் -அரணாவது, கொளற்கு -பகைவரால் கொள்ளுதற்கு, அரிதாய் – அரியதாய் (முடியாததாய்), கொண்டபெற்றுள்ள, கூழ்த்து ஆகி உணவுப்பொருள்களை உடையது ஆகி, அகத்தார் – நாட்டில் உள்ளோர், நிலைக்கு – வாழ்க்கை  நிலைக்கும், போர் நிலைக்கும், எளிதாம்-எளிதாம், நீரது- தன்மையை உடையது.

 பகைவர்களால் கொள்ளமுடியாத நிலை என்பது, காடு, அகழி, சுற்றுச்சுவர் முதலிய அரண்களை நன்கு பெற்றிருப்பது; பகைவரைக் கொல்லும் பல்வகைப் பொறிகள் (இயந்திரங்கள்) அமைக்கப் பெற்றிருப்பது; உள்ளேயிருப்பவர் விட்ட அம்பு முதலியன வெளியிலிருப்பார் (முற்றுகையிடுபவர்) மீது எளிதில் சென்று தாக்கும்படியாகவும், வெளியிலிருப்பார் விடுத்த கருவிகள் உள்ளிருப்பார்மீது படாது ஒழியும்படியாகவும் சுவர் அரண் அமைந்திருக்க வேண்டும். உள்ளே இருப்பார் பலநாள் முற்றுகைக்கு ஆட்பட்டிருப்பினும் உணவு முதலியன முட்டின்றிப் பெறும் நிலையில் இருத்தல் வேண்டும். இல்லையேல் முற்றுகை பலநாள் நீட்டித்த காலத்து உள்ளே யிருந்து வருந்தும்  மக்கள் துன்பம் பொறுக்க முடியாமல் பகைவர்க்குச் சரண் அடைய வேண்டிவரும். துன்பம் பொறுக்க முடியாதவர் பகைவர்க்கு உதவி புரிந்து முற்றுகையைத் தவிர்க்க முயல்வர்.

அகத்தார் = முற்றுகையிடப்பட்டு நகரின்

உள்ளேயிருப்பவர்.

புறத்தார் = முற்றுகையிட்டு நகரின் வெளியேயிருப்பவர்.

6.   எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்

நல்ஆள் உடையது அரண்.

(குறள் 746)

எல்லாப் பொருளும் – மக்களுக்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும், உடைத்தாய் -பெற்றதாய், இடத்து உதவும் – பகைவரால் அழிவு வந்த இடத்துத் தளராது உதவும், நல் ஆள் – நல்ல வீரர்களை, உடையது – பெற்றிருப்பது, அரண்-அரணாகும்.

ஐந்தாம் குறளில் உணவுப்பொருள் பெற்றிருக்க வேண்டும் என்று கூறி இக் குறட்பாவில் எல்லாப் பொருளும் பெற்றிருக்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றார். மக்களுக்கு வேண்டிய பொருள்கள் இல்லையேல் முற்றுகைக்குட்பட்ட மக்களே தம் துன்ப மிகுதியால் பகைவர்க்கு உதவ முன் வந்தாலும் வரலாம். போர்க்கருவிகள் முன்னேற்றம் அடைந்துள்ள இந்த நூற்Ùண்டில்கூடப் பகைவர் நாட்டுக்கு வேண்டும் பொருள்கள் செல்லவிடாது/தடுத்து வருந்த வைத்துத் தோல்வியுறச் செய்யும் முறையை மேற்கொள்கின்றனர். இரண்டாம் உலகப் பெரும்போர் நிகழ்ந்தகாலை, செருமன் தலைவர் இட்லர், இங்கிலாந்துக்கு வெளியிடங்களிலிருந்து பொருள்கள் செல்லாது தடுத்து ஆங்கிலேயரைச் சரண் அடையச் செய்ய முயன்றதும், அவ்வாறே ஆங்கிலேயரும், செருமன் நாட்டுக்குப் பொருள் செல்லாது தடுத்து நிறுத்த முயன்றதும் நாம் அறிந்ததே.

 நல் ஆள்=நல்ல வீரன். அரசனிடமும் நாட்டினிடமும் பேரன்பும், மான உணர்ச்சியும், மற (வீர)ப் பண்பும், சோர்வின்மையும் உடையவனே நல்லவீரனாவான்.

7.     முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற்கு அரியது அரண்.

(குறள் 747)

 முற்றியும் – நகரினுள் செல்லவும் நகரிலிருந்து வெளியில் வரவும் முடியாதவாறு முற்றுகையிட்டும், முற்றாது எறிந்தும் – அங்ஙனம் சூழ்ந்து முற்றுகையிடாது, உள்ளிருப்போரின் சோர்வு பார்த்துத் திடீரென்று நகரினுள் நுழைந்து போரிட்டும், அறைப்படுத்தும் – நகரில் உள்ள மக்களில் சிலரை எவ்வகையானும் வயப்படுத்தி நாட்டைக் காட்டிக் கொடுக்குமாறு செய்தும், பற்றற்கு -பகைவரால் பிடிப்பதற்கு (கொள்வதற்கு) அரியது-முடியாததே, அரண் – அரணாகும்.

 பலநாள் முற்றுகையிட்டுப் பணியச் செய்தல், திடீரென்று நகரினுள் நுழைந்து தாக்கி வெல்லுதல், நகரில் உள்ளோரை வயப்படுத்திக் கதவைத் திறக்கச் செய்து உள்ளே புகுதல் என்ற மூன்று வழிகளால் ஒரு நகரைக் கைப்பற்றலாம். நகரினும் எல்லாப் பொருளும் இருக்குமேல் பலநாள் முற்றுகை பயன்தராது; எந்த நேரத்திலும் போரிடும் வீரர்களிருப்பரேல், திடீர்த்தாக்குதல் வீணாகும்; நகரமக்க ளெல்லோரும் நாட்டுப்பற்று மிக்கோராய் இருப்பரேல், வஞ்சனை தோல்வியுறும்.

 8.    முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிப்

பற்றியார் வெல்வது அரண்.

(குறள் 748)

 பற்றியார்-தன்னைத் துணையாகக் கொண்டுள்ள அகத்தோர்(உள்ளிருப்போர்), முற்று-பகைவர் முற்றுகையை, ஆற்றி-ஏற்றுப் பொரும் வல்லமையை அடைந்தும், முற்றியவரையும்-முற்றுகையிட்டோரையும், பற்றுஆற்றி-தப்பிச் செல்லவிடாது அகப்படுத்தி, வெல்வது அரண்-வெல்வதற்குரிய வாய்ப்பினை யுடையதே அரtகும்.

 பகைவர் முற்றுகையிட்டால் அம் முற்றுகையைக் கண்டு அஞ்சிச் சரண் அடையாது எவ்வளவு நாளாயினும் தாங்கிக்கொண்டு இருத்தலினால், வந்த பகைவர் தம்மால் ஆகாது என்று அறிந்து திரும்பிச் சென்றுவிடுவர். முற்றுகைக்கு ஆள்பட்டோர் துன்பம் தொலைந்தது என்று மகிழ்ந்து வாளா இருப்பது ஒருநிலை. அங்ஙனமன்றி, முற்றுகையிட்டோர் தோல்வியுற்று விலகுங்கால் விடாது பின்பற்றிப் பொருது வெற்றி காணுதல் பிறிதொரு நிலை. அரண் மிகச் சிறப்புடையதாய் இருப்பின் அரணுக்குரியோர் முற்றுகையினால் வாட்டம் உறாது முற்றுகையிட்டோரையும் வெல்வர்.

 9.    முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

வீறுஎய்தி மாண்டது அரண்.

(குறள் 749)

 முனைமுகத்து-போர்முனையின்கண், மாற்றலர்-பகைவர், சாய-தோல்வியுற்று அழிய, வினைமுகத்து-போர்வினையின்கண், வீறு எய்தி-உயர்வு அடைந்து, மாண்டது அரண்-மாட்சிமையுடையது அரணாகும்.

 பகைவர் முற்றுகையிட்டபொழுது, அவர்களை அழிப்பதற்குரிய போர்த்தொழில்களைப் புரிவதற்கு வாய்ப்புடையதாக அரண் இருத்தல் வேண்டும். தொடங்கும் போதே பகைவர்களை நகரின் உள்ளிருப்போர் அழிக்கும் செயல்களைச் செய்வதற்கு அரண் ஏற்றதாய் இருத்தல் வேண்டும். அம்புகளை எய்தல், வேல்களை எறிதல், நெருப்புக் குண்டுகளையும் கவண்களையும் வீசுதல், ஈட்டிகளால் குத்துதல் முதலியன உள்ளிருப்பார் செய்யுங்கால், வெளியிலிருக்கும் பகைவர்க்குத் தெரியாத விடங்களில் இருந்துகொண்டு செய்தல் வேண்டும். வெளியிலிருப்பார் அரணைக் கடக்க முடியாது ஆற்றல் அழிந்து திரும்பிவிடுவர்.

 முனைமுகம், வினைமுகம் என்னுமிடங்களில் ‘முகம்’ என்னும் சொல் ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்துள்ளது. வேற்றுமையுருபாகப் பயின்றுள்ள இச் சொல்லை ஆரிய மொழியினின்றும் வந்ததாகக் கூறுவது தவறு. ‘முகம்’ என்பது தனித்தமிழ்ச் சொல்லே.

10.   எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண்.

(குறள் 750)

 அரண் – (நாட்டைக் காப்பதற்குரிய)  அரண், எனைமாட்சித்து ஆகியக்கண்ணும் – என்ன பெருமைகளை உடையதாக இருந்த விடத்தும், வினைமாட்சி-போர்த் தொழிலின்கண் மேம்பாடு, இல்லார்கண்-இல்லாதார் மாட்டு, இல்லது – பயன் இலது.

 அரண் பல சிறப்புகளைப் பெற்றிருந்தாலும், காக்கும் வீரர்கள் திறமையற்றவராய் இருப்பின் அரணின் சிறப்புகள் பயன்படா. வீரர்கள், செய்ய வேண்டியன செய்யாமலிருத்தல், அளவறியாது செய்தல் பொருந்தாதன செய்தல், முதலியவற்றால் போர்த்தொழில் மாட்சி அற்றவராய் இருப்பின் அரண் என்ன பயனைத் தரும்? ஆகவே, அரணின் சிறப்பிற்கு ஏற்ப, காக்கும் வீரர்களும் போர்த்தொழில் மாட்சியராய் இருத்தல் வேண்டும். காவல் சிறப்புமிக்க வீரர்படை எவ்வாறிருத்தல் வேண்டும் என்பதை இனிக் கூறுவோம்.

 

 (தொடரும்)