(நாலடி நல்கும் நன்னெறி 29: தீயன விலக நல்லோரைச் சார்க! – தொடர்ச்சி)

இறப்ப நினையுங்கால் இன்னா தெனினும்
பிறப்பினை யாரும் முனியார்; – பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.
 

நாலடியார் பாடல் 174; பொருட்பால் – நல்லினம் சேர்தல்

[ இறப்ப நினையும்கால் இன்னாது எனினும்

 பிறப்பினை யாரும் முனியார் – பிறப்பினுள்

 பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும்

நண்பு ஆற்றி நட்க பெறின்.  ]

பொருளுரை:
மிகவும் நினைத்துப்பார்த்துப் பிறவியைத் துன்பம் தருவதாகக் கருதினாலும், பண்பாளர் நட்பு பெற்றவர்கள் துன்பம் அடையார்; ஆதலின் பிறவியை வெறுக்க மாட்டார்.

பதவுரை:

பிறப்பினுள்=பிறப்புள்; பண்பு=நற்பண்புகளை; ஆற்றும்= கொண்டிருக்கும்; நெஞ்சத்தவர்களோடு = நன்மனமுள்ள நல்லோர்களுடன்; எஞ்ஞான்றும் = எக்காலமும்; நண்பு =நட்பு ; ஆற்றி = கொண்டு ; நட்க = நட்பை; பெறின் = பெற்றால்; இறப்ப = மிகவும்; நினையுங்கால் = நினைக்கும் பொழுது; இன்னாது =துன்பம் தருவது; எனினும் = என்றாலும்; பிறப்பினை = பிறவியை; யாரும் = எவரும்; முனியார் = வெறுக்க மாடடார்.

பிறவித்துன்பம் என்று சொல்லிப் பிறப்பையே துன்பமயமானதாக இறையன்பர்களும் மெய்யியல் அறிஞர்களும் கூறுகின்றனர். எனவேதான் “பிறவாமை வேண்டும்” என இறைவனை வேண்டுகின்றனர். எனினும் துன்பம் தரும் பிறவியை வெல்வது எப்படி? நற்பண்புடையோர் துணையே துன்பத்தைப் போக்கும். எனவே, பண்பாளர் நட்பு இருந்தால் பிறவியை வெறுக்க மாட்டார்கள்.  

உலகமே பண்புடையாளர்களால்தான் இயங்குவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார்.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அஃதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.   (திருக்குறள், ௯௱௯௰௬ – 996)

என்று அவர் எடுத்துரைக்கிறார்.

அத்தகு பண்புடையாளர் நட்பு இருப்பின் அவர்கள் வழிகாட்டுதலால் தீய பாதையில் சென்றிருந்தாலும் திரும்பி நல்ல பாதையில் நடைபோடுவர்; தீதில்லாச் செயல்களில் இறங்குவர்; நல்லறம் புரிவர். இவற்றால் இவ்வுலகத்தை இன்ப மயமாகமாற்றிக் கொள்வர். எனவேதான், நாலடியாரும் பண்புடையாளர் நட்பைக் கொள்ள வேண்டும் என்கிறது.

 உலகம் துன்பமயமானது என்பதை உணர்ந்து வாழ்க்கைக் கடலில் அதனை ஓட்ட நற்பண்பாளர் துடுப்பு தேவை என உணரலாம். இக்காலக் கவிஞர் கண்ணதாசனும்(திரைப்படம், சுமைதாங்கி, மயக்கமா? கலக்கமா? எனத் தொடங்கும் திரைப்படப் பாடல்)

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

என வாழ்க்கை வேதனையானது எனக் கூறுகிறார்.

நட்பின் சிறப்பைக் குறிப்பிடும் நூற்றுக்கணக்கான திரைப்பாடல்கள் உள்ளன. நட்பே சிறப்பு எனில் பண்பாளர் நட்பு மேலும் சிறப்பானதாகததானே இருக்கும்.

துன்பக்கடலில் வாழ்க்கை சிக்கியிருப்பதால் அதனை வெறுக்க வேண்டா. அதிலிருந்து மீள வழி காண வேண்டும். அதுதான் பண்புடையாளர் நட்பைப் பேணுதல். எனவே, வாழ்க்கையில் வாகை சூட நற்பண்புடையோர் நட்பைப் பெற்றால் வாழ்க்கையை வெறுக்கமாட்டோம்! நேசிப்போம்!