(இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்! – தொடர்ச்சி)

திருவள்ளுவர் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் அனைவரும் உணர முதலில் இந்திய நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திருவள்ளுவர் திருநாள் தேசியப் பெருநாளாகக் கொண்டாடப்பட வேண்டும்; திருவள்ளுவர் பிறந்த நாளுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என வலியுறுத்தினார் பேரா. இலக்குவனார்.

மகாவீரர் போன்றவர்களுக்கு ஒன்றிய அரசு  இந்தியா முழுமையும் விடுமுறை விட்டுள்ளதால் இதனையும் நடைமுறைப்படுத்தலாம்.

இதன் மூலம் அனைத்து மக்களும்  திருக்குறளின் அருமை பெருமைகளை அறியச் செய்ய வேண்டும்.

பேரா.இலக்குவனார் தமிழ் உரிமைக்கு எனத் தாம் திட்டமிட்ட தமிழ் உரிமைப் பெருநடை அணிக் குறிக்கோள்களில் ஒன்றாகத் திருக்குறளின் பெருமையை எடுத்துரைப்பதைக் குறிப்பிட்டிருந்தார் (குறள்நெறி: மலர் 2 இதழ் 8: சித்திரை 1996 : 1.5.65).

இதனால் சிறைப்பட்ட பொழுதும் இதன் நோக்கம் பற்றி, “நாட்டு மக்கள் கூட்டுறவுடன் நல்வாழ்வு வாழ நற்றமிழ் மறையாம் காவலர் குறள்நெறியை நாளும் போற்றுமின் என நவிலப் புறப்பட்டேன்” எனக் குறிப்பிட்டார் (குறள்நெறி : மலர்  2 இதழ் 12 ஆனி 17, 1996 : 1.7.65).

மீண்டும் குறள்நெறி இதழைத் தொடங்கும் பொழுது “தமிழ் நாட்டுச் சூழ்நிலை குறள்நெறியின் தொண்டை வேண்டி நிற்கின்றது என்ற உணர்வு என் உள்ளத்தில் மேலோங்கி எழுந்துள்ளது.

ஆதலின் மீண்டும் குறள் நெறித் தொண்டு தொடர்வதாகக் குறிப்பிட்டார். (குறள்நெறி: மலர் 4 இதழ் 1 : புரட்டாசி 25, 1995 : 11.10.70).

கி.பி.1969 சனவரித் திங்கள் பதினான்காம்நாள் முதல் (தை முதல் நாள்) திருவள்ளுவர் தோன்றி இரண்டாயிரம் ஆண்டு நிறைவுறும் 1969 முழுவதும் திருவள்ளுவர் நினைவு ஆண்டாகவே கருதப்பட வேண்டும் என்றார்.

உலகப் பொதுமறை அருளிய திருவள்ளுவர் நினைவாகப் பின்வரும் செயல்களை மேற்கொள்ளுதல் வேண்டும் என்றும் அறிவித்தார்.

  1. ஆண் குழந்தைகட்குத் திருவள்ளுவர் என்றும் பெண் குழந்தைகட்குத் தமிழ் மறைச் செல்வி என்றும் பெயர் இடுதல் வேண்டும்.
  2. திருவள்ளுவர் நினைவாக ஆங்காங்கு நினைவுச் சொற்பொழிவுகளும் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்த வேண்டும்.
  3. ஒவ்வொரு நாளும் அவரவர் கடமைகளைத் தொடங்குவதற்கு முன்பு திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரங்களைப் படித்துவிட்டே தொடங்கல்  வேண்டும்.
  4. நாம் எழுதும் கடிதங்களில் ஏதேனும் ஒரு திருக்குறளை எழுதிவிட்டே கடிதங்களைத் தொடங்க வேண்டும்.
  5. நாம் பிறரைச் சந்தித்து வணக்கம் தெரிவிக்கும் போது வள்ளுவர் வணக்கம் என்று கூற வேண்டும்.
  6. திருக்குறளில் கூறியுள்ளவாறே வாழ்வோம் என்று நாள்தோறும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு வள்ளுவர் நெறியில் வாழ்தல் வேண்டும்.
  7. எந்த நிகழ்ச்சியைத் தொடங்கினாலும் கல்வி நிலையங்களிலும் பொதுவிடங்களிலும் வள்ளுவருக்கு வணக்கம் கூறி வள்ளுவர் நெறியில் வாழ்வோம் என்று உறுதி கூறித் தொடங்குதல் வேண்டும்.
  8. திருவள்ளுவர் பெயரால் அறப்பணிக் குழு ஒன்றை அமைத்து வையகமெங்கும் தமிழர் நெறியைப் பரப்ப தமிழக அரசு ஆவன செய்தல் வேண்டும்.
  9. திருக்குறளில் புலமை பெற்றுள்ள அறிஞர்கட்குப் பட்டங்களும் பரிசுகளும் வழங்குதல் வேண்டும்.
  10. தமிழ்க் கலை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றை ஆய்வதற்கும் பரப்புவதற்கும் திருவள்ளுவர் பெயரால் பல்கலைக் கழகம் ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும்.
  11. வள்ளுவர் நெறியை வையகமெங்கும் பரப்பத்தக்க, தமிழக அறிஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் திருவள்ளுவர் பெயரால் தமிழ் ஆராய்ச்சித் துறைகள் அமைக்க வேண்டும்.
  12. திரைப்படங்கள் தொடக்கத்தில் திருவள்ளுவர் படத்தையும், சில குறட்பாக்களையும் காண்பித்தல் வேண்டும். கதை நிகழ்ச்சிகளில் ஆங்காங்கு திருக்குறள் கருத்துகளை மிகுதியாகப் பரப்புதல் வேண்டும்.

இவ்வாறு திருவள்ளுவர் விழாவைக் கொண்டாடி மக்கள் வாழ்வைச் செம்மைப்படுத்த பசி, பிணி, பகை நீங்கி எல்லோரும்  இன்புற்றிருக்கும் நிலையைத் தோற்றுவிப்போமாக. (குறள்நெறி: மலர் 4 இதழ் 4,5: புரட்டாசி 29, 1999: 15.10.68)

தாமும் குறள்நெறியைப் பின்பற்றிப் பிறரையும் பின்பற்றச் செய்தார் பேரா. இலக்குவனார்.

வாழ்வின்‌ எல்லா நிலைகளிலும்‌ வள்ளுவர்‌ வகுத்த குறள்நெறியையே பின்பற்றுவேன்‌” எனக் குறள் நெறி அன்பர்களை உறுதியேற்கச் செய்தார்.

உலகில் எந்தமொழிப் பேராசிரியரும் செய்யாத அளவிற்கு இதழ்கள் வழித் திருக்குறளைப் பரப்பினார்.

சங்க இலக்கியம், இலக்கியம், திராவிடக் கூட்டரசு ஆகிய தம் இதழ்கள் வாயிலாகத் திருக்குறள் சிறப்பை மக்களிடையே பரப்பினார்.

குறள்நெறி திங்கள் இதழ், திங்கள் இருமுறை இதழ், குறள்நெறி (Kuralneri) ஆங்கில இதழ், குறள் நெறி நாளிதழ் என இதழ்களை நடத்தித் திருக்குறள் அருமை பெருமைகளை அனைவரும் அறியச்செய்தார்.

திருவள்ளுவர் திருவிழாவை நடத்தி, யானையின் மீது திருவள்ளுவர் படத்தை ஏற்றி மக்களிடையே மாபெரும் ஊர்வலம் நடத்தினார்.

கல்லூரியில் தான் ஏற்க வேண்டிய அணிவகுப்பு மதிப்பைத் திருவள்ளுவர் படத்தை வைத்து அணிவகுப்பு மதிப்பை வழங்கச் செய்தார்.

தமிழ்நெறி தழைப்பதைத் தாங்கிக்கொள்ளாத சிலர் குறள்நெறியை மக்களிடையே பரப்புவதைத் தடுக்கும் வழியில் பேசி வந்தனர். அதற்குக் கண்டனங்கள் எழுந்தன.

பேராசிரியரை ஆற்றுப்படுத்தும் வகையில் பழித்தோருக்கும் அறிவுரை வழங்கினார்; பழித்தோரைப் பழித்தோருக்கும் அறவுரை வழங்கினார்.

குறள்நெறியைப் பரப்புவதற்குக் குறள்வழியையே பின்பற்ற வேண்டும் எனவும் பேராசிரியர் விளக்கினார்.

குறளைப் பழிப்பவர்களைப் பழி! அழிப்பவர்களை அழி! ஒழிப்பவர்களை ஒழி!

இது கடைவழியாகும்.

குறள்வழியில் வாழ்பவர்களை வாழ்த்து! வணங்கு!

இது நல்வழியாகும்.

குறளைப் பழிப்போருக்கும் நல்லதே செய்!

இது பெருவழியாகும்.

இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்ய வேண்டும் என்ற குறள்வழியைக் குறளைப் பழிப்போரிடமும் பின்பற்ற இலக்குவனார் அறிவுரை கூறினார்.

இலக்குவனாரின் குறட்பணிகளை விரிப்பின் பெருகும். எனினும் பக்க அளவு கருதிச் சுருக்கமாக நாம் கண்டுள்ளோம்.

குறள்நெறி அறிஞர் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார் வழியில் நாமும்  திருக்குறளைப் பயில்வோம்! பாரெங்கும் பரப்புவோம்!

கட்டுரையின் முந்தையப் பகுதியின் இணைப்பு –https://thaaii.com/2026/09/05/ilakkuvanars-efforts-to-realize-the-thirukkural-way-of-life/