(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.3. வந்தபின் தீர்த்தல்-மருத்துவ இயல்-தொடர்ச்சி)

பொதுவாக மருத்துவத்தில் நோயாளியின் நிலை அறிவதே முதன்மையானது. நோயாளி நிலை என்பது நோயுள்ள உடல்நிலை மட்டுமன்று; நோயாளியின் மன நிலையுமாகும்.

உடல் நோய் நோயாளிக்குத் தரும் இடையூறு, இடுக்கண் உள்ளத்தைச் சோர்வடையச் செய்யும்; வருத்த வைக்கும்; அச்சத்தை ஏற்படுத்தும்; கலக்கத்தைக் கிள்ளிவிடும். தீர்ப்பான் இம்மனநிலையை உணரவேண்டும்.

முதலில் நோயாளியோ, இயல்பானமாந்தனோ இம் மனத் தாக்கத்தைப் பெறாது அமையும் முறையைக் கையாளவேண்டும் என்பதை எண்ணிய திருவள்ளுவர்.

“மருந்தை எண்ணி அஞ்சாதே! கசக்குமே,

குமட்டுமே என்று கலங்காதே!

மருந்தே வேண்டாம்”

என்று தொடங்கினார். மருந்து வேண்டாம் என்பதைக் கேட்ட நோயாளி முதலில் மன அமைதியைப் பெறுவான். இதனால் நோயாளி மருந்துவத்திற்கு பாங்குபடுத்தப் பட்டவனாவான்.

தொடர்ந்த திருவள்ளுவர் பையப் பைய அவனை நோய் கொள்ளாதிருக்கும் உணர்வில் வைத்து விளக்கி நலத்திற்கு அரண் கோலினார்; நோய் தாக்காதிருக்க வழிகோலினார். வயிற்றுத் தீயெல்லாம் கூறிக் குறிப்பைக் காட்டினார். ‘மிகு உணவு மிகு நோய்’ என்று அறிவுறுத்தினார். இவ்வாறெல்லாம் மாந்தனைப் பாங்குக்குக் கொணர்ந்தார். பின்னர்தான் ‘தீர்ப்பான்’ என்று மன அமைதியை ஊட்டினார். உனக்கு அணுக்கமாக இருந்து துணைநிற்போர் உள்ளனர் என்று ஆறுதல் காட்டினார்; மருந்து கூறினார். அதனையும் மருந்து ஒன்றைக் கூறி விடாமல் நான்கு கூறாகக் கூறி அவற்றில் ஒன்றாகக் கூறினார்.

இவ்வாறு உள்ளத்தைப் பாங்குபடுத்தி உடலின் மருத்திற்கு வருவது இக்கால மருத்துவ அறிவியலாக முன்னர் குறித்த ‘உடலிய உளவிய’லை நாம் நினைவு படுத்திக் கொள்ளவைக்கிறது.

இந்த ‘உடலிய உளவியல்’ தொடர்பில் மேலும் ஒரு திருவள்ளுவரின் மருத்துவ அறிவியலைக் காண இடம் உள்ளது.

அதிர்வு நோய்

நோய், நோய் முற்றிய பிணி, பிணி இடையறாது தொடர்ந்தால் ஒவாப் பிணி என நோய், பிறந்து முதிர்கின்றது. ஒவாப் பிணிக்கு மேலும் பல பிணிகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதிர்ச்சியால் வரும் நோய். அது நெஞ்சகத் தாக்க நோய். நெஞ்சகத்தில் (இதயத்தில்) குருதி பாயும் குழலில் உள்ளே கொழுப்பு படிந்து படிந்து குருதி பாயும் துளையினை சிறிதாக்கிவிடும். மேலும் கொழுப்பு அடைத்தால் குருதி பாய வழியின்றி முட்டும். திடீரென்று ஒர் அதிர்ச்சி நேரும். குருதிக் குழாய் வெடிக் கும். அதிர்ச்சி நோய் உயிரைப் பிடுங்கிக்கொண்டு போகும். இந்நோயைத் திருவள்ளுவர்,

அதிர வருவது ஓர் நோய்”

என்றார். இந்நோயை நாம் ‘மாரடைப்பு’’ என்கின்றோம்.

நெஞ்சகத்தாக்க நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கூறும் அடிப்படை அறிவுரை இவை : ‘அதிகம் உணர்ச்சி வயப்படக் கூடாது: சினம் கொள்ளக்கூடாது; உள்ளத்தைச் சீண்டும், அதிர்ச்சிக்குள்ளாக்கும் நிகழ்ச்சிகளில் ஈடுபடக் கூடாது’ என உள்ளம் அமைதியாக இருக்க வேண்டிய அறிவுரை கூறுவர்.

ஆம், உள்ளத்திற்கும் உடலுக்கும் நீங்கா உறவு உண்டு. இந்த உறவு ஒன்றுடன் ஒன்று அரவணைத்துப் போவதாக இருக்கவேண்டும். வேறுபட்டால் உடலுக்கு நோய் வரும். “உடம்பார் அழியின் உயிரார் அழிவார்”. இவ்வாறு உள்ளம் உடல் தொடர்பில் உண்டாகும் நோய்க்கு ‘உளவிய உடலுறுப்புத் தாக்கம்’ (Psycho Somatic) என்று பெயர். விளக்கமாகச் சொன்னால் உள்ளத்தில் நேரும் கவலை, உளைச்சலானால் உடலுறுப்பைத் தாக்கி இளைப்பு, வயிற்றுப்புண் முதலிய நோய்களை உண்டாக்கும் என்பதாகும்.

எனவே, உடல் நோய்க்கு உள்ளமும் காரணமாகிறது. அதே தொடர்பில் நோய்த் தணிப்பிற்கும் அந்த உள்ளமே துணையாகும். என்னுடன் பணியாற்றிய ஆசிரியர்களுள் இங்கு இருவரைக் குறிக்க வேண்டும். இருவரும் நோயாளியர். ஒருவருக்கு ‘இளைப்பு இறுமல்’ (Asthma). நோய். மற்றவருக்கு வயிற்றுப்புண். ஒருநாள் பள்ளிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் ஆய்விற்கு வந்தார். இளைப்பு நோய்க்காரர் வகுப்பிற்குப் போனார். நலமாக இருந்த ஆசிரியர்க்குத் திடீரென்று ‘இளைப்பு’ வந்துவிட்டது. பையப் பைய முடுகியது. அவ்வலுவலர் வயிற்றுப்புண் ஆசிரியர் இருந்த அறைக்குப் போனார். முறைப்படி ஆய்வு நிகழ்ந்தது. ஆசிரியர் திறமையாகவே செய்தார். வயிற்றுப் புண் தலைகாட்டவில்லை. ஏன்? இருவரும் நோய்கள் கொண்டோர். ஆனால்,

                முன்னவர் உள்ளத்தால் கோழை;

                பின்னவர் உள்ளத்தில் உரம் கொண்டவர்.

நோயின் எழுச்சிக்கு உள்ளம் காரணம் என்பதற்கு இவ்: விருவரும் கண்கண்ட சான்றாகின்றனர்; ‘உளவிய உடல் நோய்’ என்னும் மருத்துவ அறிவியல் திருவள்ளுவத்தில். வெளிப்பட்டுள்ளது.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்‘ (429)

இக்குறளில் அதிர வருவதோர் நோய்’ என்று உடலைப் பற்றிய தோய் உள்ளது. “எதிரதாக் காக்கும் அறிவினார்” என்று அறிவு சான்ற உள்ள உறுதியாம் உளவியலும் உள்ளது.

நெஞ்சகத்தாக்க நோய் பெற்றவர் எதிர்காலத்தில் எந்நேரமும் இந்நோய் தலைதுாக்கும் என்று அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு தலைதுாக்கும்போது எப்படி நடந்து கொள்வது (?) எவ்வாறு காத்துக்கொள்வது (?) என்பவற்றை நினைந்து பார்த்து அறிவால் உணர்ந்திருக்க வேண்டும். நோயைக் கருதிக் கலங்கக் கூடாது; அஞ்சக் கூடாது. நெஞ்சுரம் கொள்ளவேண்டும். நெஞ்சுரம் அடித்தள மருந்தாகும்.

இந்த அடித்தளத்தைக் கொண்டதுடன் நோய்வரின் அதற்கு ஆட்படாமல் அந்நோய் மேலும் முடுகாமல் தன்னைக் காத்துக்கொள்ளும் வழிவகைகளை அறிவில் கொள்ளவேண்டும்.

கொண்டவர் நோய்க் குறிகள் தெரிவதை உணர்வார்.

‘முதுகுப் பக்கம் தோள்பட்டை வலிக்கிறது. மூச்சு இறுக்கம் தோன்றுகிறது; நெஞ்சம் முணு முனு’ என்று வலிக்கிறது. தலை வலிக்கிறது. உடல் வியர்க்கிறது. தலையிலும் வியர்வை தோன்றுகிறது’ என்பவற்றை உணர்வார்; அறிவார். உடனே அஞ்சக்கூடாது; அஞ்சாத கலங்காத உள்ளம் உடையவர் எந்நேரமும் இது வரும் என்று எதிர்பார்த்தவர் ஆவார். மாறாக ‘அய்யோ வலி வருமே மார்பை அடைக்குமே! இறந்து போவோமே” என்று அஞ்சிக் கலங்கினால் உள்ளம் சோர்வடையும்; அதனால் உடலும் சோர்வடையும்; நோய் முடுகும்.

உள்ள உறுதியும்; அறிவுத் தெளிவும் உடையவர் குறிகள் தெரிவிக்கின்றன என்று உரிய மாத்திரைகளைப் போட்டுக்கொள்வார். குளிர்ந்த நீரைத் தலையில் ஊற்றிக் கொள்வார். வலியை திணைக்காமல் வேறு விருப்பமான கருத்தில் மனம் ஊன்றுவார். விரைந்து மருத்துவரிடம் அழைத்துச் செல்லத் தூண்டுவார். இவற்றால் இவர் “எதிரதாக் காக்கும் அறிவினார்” இவரால் அதிரவரும் மாரடைப்பு கட்டுப்படுத்தப்படும். உள்ளம் தளராததால் நோய் தளர்ந்து தோற்கும்.

‘நோயின் வல்லமை நோயாளியின் எதிர்ப்புத் திறமையைப் பொறுத்தது’- என்று இப்போக்கிரேட்டசு அறிவித்தார். இஃது இங்கு நினைவுகூரத் தக்கது.

இவ்வகையில் இக்குறளைக் கொண்டு திருவள்ளுவரை நோக்கினால், இக்கால ‘உளவிய உடல்நோய்’ பற்றிய அறிவியல் கருத்தை அவர் பதிந்துள்ளமை புலனாகும்.

இத்துடன் இணைந்துள்ள ஒரு கருத்தையும் இக்குறள் காட்டுகிறது. அது ‘அதிரவரும் மாரடைப்பு நோயே வராது’ என்பதாகும். இஃதும் மாந்தரின் உளவியல் தொடர்பானது.

எந்த உணர்விலும், செயலிலும் நெஞ்சத்தை அமைதியில் நிறுத்தி எண்ணி ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். “எண்ணித் துணிக கருமம்” (467) என்றார். ஆழ்ந்து ஆராய்ந்து எண்ணுவது சூழ்ச்சி எனப்படும்.

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்” (671) என்றார் திருவள்ளுவர். எண்ணித் துணிதலும், ஆழ்ந்து முடி வெடுத்துத் துணிதலும் எடுத்த செயலை முடித்து வைக்கும் . எதிர்த்து வருபவற்றையும் முறியடிக்கும். இது “எதிரதாக் காக்கும் அறிவு.”

மாந்தன் தன் வாழ்வில் நோய்க்குரியவன்; நோய் வராமல் தடுத்தலுக்கும் உரியவன்; வந்தால் பாதுகாத்த தற்கும் உரியவன். இவற்றிற்கு எதிர்வருபவற்றை முன்னரே எண்ணிப்பார்த்து “எதிரதாக் காக்கும் அறி”வைப் பெறவேண்டும்.

நெஞ்சக நோய். மிகு கொழுப்பினால் வரும். அதனால் மாறுபாடில்லாத உணவு கொள்ளவேண்டும். மாறு பாடுள்ளதை மறுத்து அளவறிந்து உண்ணவேண்டும். வேண்டாத விரைவும் படபடப்பும் கொண்டு உள்ளத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கக் கூடாது. இவையாவும் “எதிரதாக் கொள்ளும் அறி”வின் விளைவுகள். இவ்வறிவு “அதிர வருவதோர் நோய்”க்குத் தடை, வராமலே காக்கும் உளவியல் அறிவு இது.

எனவே,

எதிர தாக் காக்கும் அறிவினார்க்கு” மாரடைப்பாம் அதிரவருவதோர் நோய் வராது; இக்கருத்தையும் இக்குறள் பொதிய வைத்துள்ளது. இவ்வகையிலும் திருவள்ளுவர் மருத்துவ அறிவியலின் முன்னோடியாகிறார்.

பிணியின்மை விளக்கி விரிவாக எழுதப்பட்டுள்ளது. காரணம், ‘மருந்து’ என்னும் அதிகாரத்திலுள்ள பத்துக் குறட்பாக்களும் அறிவியல் பாங்கு கொண்டவையாக அமைந்துள்ளன. ஒவ்வொரு சொல்லும் அதற்குச் சான்றாக அமைந்துள்ளது. இதுபோன்று திருவள்ளுவத்தில் பரவலாக அறிவியல் கருத்துகள் பொதிந்திருப்பினும் மருந்து போல முழு அதிகாரம் பெறவில்லை மாந்தர் வாழ்வில் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.’

(தொடரும்)