அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.2. பிணியின்மை – தொடர்ச்சி
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.1. பிணியின்மை – தொடர்ச்சி)
அறிவியல் திருவள்ளுவம்
அ.2. பிணியின்மை – தொடர்ச்சி
இம்மூன்றுதாம் உடலில் சமநிலையில் இருந்து உடலை இயங்க வைக்கின்றன. பருவத்தாலும், உணவாலும் உடலில் இம்மூன்றும் தனித்தனியே கூடியும் குறைந்தும் நோயைத் தருகின்றன. இம்மூன்றையும் வைத்தே தமிழ் மருத்துவ முறைகள் பிறந்தன; விரிந்தன. இவை மூன்றிலும் முதலிலுள்ள ‘வளி’ வல்லமை வாய்ந்தது. மற்றைய இரண்டும் அடுத்தடுத்த வல்லமை உடையவை. இதனை உருவகமாக வளியை அரசனாகவும், பித்தத்தை அமைச்சனாகவும், கோழையைப் படை மறவனாகவும் மருத்துவ நூலார் சொல்லினர்.
தேரையர் என்னும் மருத்துவத் தமிழறிஞர்,
“அரசன் வாதமொடு அமைச்சன் பொருநன்” என்றும்
“தான் (வளி), மனை (பித்தம்), சேய் (கோழை) மன்னன், அமைச்சன், மீளி”[20] என்றும் பாடினார். தேவாரம் பாடிய அப்பரும்,
“ஆனது இக்காளை (கோழை) அமைச்சை (பித்தத்தை) மேவிடின் ஆன் இறை (வளி) உறின்” [21] என்று உருவகித்துப் பாடினார்.
இத்துணை ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டவை வளி முதலிய மூன்றும், இவற்றைக் கொண்டு நோயையும் கண்டறியலாம். மருந்தையும் கொடுத்தறியலாம் . இம்முறை இக்கால மருத்துவ அறிவியலில் இல்லை என்பது கருதத்தக்கது.
இம்முறை கொண்ட தமிழ் மருத்துவம் ஒரு தனித் தன்மை உடையது. திருவள்ளுவரின் இக்குறள் இத்தனித் தன்மையை எடுத்து மொழிகிறது. மொழிவதன் மூலம் அக்கால நோய் அறிவியலை அறிமுகம் செய்கிறது.
இது நோய் தோன்றுவதன் கருநிலை கூறுவது.
வரும்முன் காத்தல்-உணவியல்
நோய் வரும்; அதனை நீக்க மருந்தும் வேண்டும். நோய் வந்தால்தானே மருந்து வேண்டும்? நோய் வரும்முன் காத்துக் கொண்டால் மருந்து எதற்கு?
“மருந்து என வேண்டாவாம்” என்று தொடங்கினார் திருவள்ளுவர். தொடங்கி மருந்து வேண்டாமைக்குக் காரணமும் கூறினார்.
“அருந்தியது
அற்றது போற்றி உணின்” (942)
மருந்து வேண்டா என்றார். இவ்வாறு உண்டால் நோயும் வராது; மருந்தும்-மருந்துகளும் வேண்டியன அல்ல. இது வரும் முன் காக்கும் முதல் கவனம்.
திருவள்ளுவர் தம் நூலில் ஒவ்வொரு சொல்லையும் அதன் உள்ளார்ந்த பொருள், அதனை அமைக்கும் இடத்தின் பொருத்தம் அறிந்தே எழுதுபவர். இக்குறளிலும் இவ்வமைப்பைக் காண்கின்றோம்.
‘மருந்து என வேண்டா’ என்றதில் ‘என’ என்றதும் வேண்டா என்றதும் பன்மை வினைகள். இவற்றால் முன்னுள்ள மருந்து என்றதற்கு மருந்துகள் என்று பொருள்.
தமிழ் மருத்துவத்தில் ஒரு நோய்க்கு ஒரு மருந்து. சில நோய்களுக்கும் ஒரே மருந்து என்பது மரபு. இதன்படி இங்கு மருந்து என்றது ஒரு நோய்க்குச் சில மருந்துச் சரக்குகள் கலந்தமை பொருள். இவ்வகையில் பன்மையாகிறது. ஆனால், இக்காலத்தில் ஒரு நோய்க்கு ஒரு மருந்து என்றில்லை. ஒரே நோய்க்குப் பலவகை மாத்திரைகள்: இவற்றுடன் நீரிய மருந்துகள், ஊசி மருந்து கொடுக்கப்படும் நிலையை நோக்கும்போது திருவள்ளுவர் மருந்துகள் என்று எதிர்காலத்தை நோக்கிப் பதிந்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது. நோயும், பல மருந்துப் பொருள்களும் பல என்றவர், மருந்து வேண்டா என்றதற்குக் காரணம் பல சொல்லவில்லை. ஒன்றுதான் சொன்னார்.
‘அருந்தியது அற்றது’ என்று இரண்டையும் தனித் தனியே ஒருமையில் சொன்னமை அவர்தம் ஆழ்ந்த கருத்தை அறிவிக்கிறது.
‘அற்றது’ என்பது வயிறு ஒரு உணவுப் பொருளும் அற்ற வெற்று அறையாக உள்ளதைக் குறிக்கும். எனவே, வரும் முன் காக்கும் முறை அறிமுகமாகிறது. இதில் “போற்றி உணின்’, என்பதில் ‘போற்றி’ என்றால் ‘பாதுகாத்து’ என்று பொருள். வெற்று வயிற்றினைப் போற்ற மறு உணவு இடவேண்டும். அந்த உணவு பாதுகாப்புக்குரிய உணவாக வேண்டும். எனவே இங்கு. சொன்ன போற்றி உணல் அடுத்தடுத்த குறட்பாக்களில் விளக்கம் பெறுகிறது.
‘அற்றது:போற்றி’யைத் தொடர்ந்து ‘அற்றல் அறிந்து’ உண்டால் உடம்பு நோயின்றி விளங்கும்.
அதனைக் கடைப்பிடித்து,
“மாறு அல்ல துய்க்க;
துவரப்பசித்துத் துய்க்க“(494)
என்றார். இதில் மாறு அல்ல என்றது போற்றுதலின் விளக்கம்.
இதனையே தொடர்ந்து
“மாறுபாடு இல்லாத உண்டி” என்றார். இவ்வுணவை அறிந்து மற்றவற்றை,
“மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லைஉயிர்க்கு” (945)
என்றார்.
“அற்றது போற்றுதல்”. “அற்றது அறிதல்”, “மாறு அல்ல துய்த்தல்”, “பசித்துக் துய்த்தல்”, “மாறுபாடு இல்லாமை”, “மறுத்து உண்ணல்”-இவற்றால் நோய் வராமை மட்டும் அன்று; “மருந்து வேண்டா” என்பது மட்டும் அன்று. இவற்றால் உடல் காக்கப்படும் என்பது மட்டும் அன்று.
“ஊறுபாடு இல்லை உயிர்க்கு”-உயிருக்கே இக்கால வடமொழிச் சொல்லின்படி ஆபத்து-ஊறுபாடு இல்லை.
இடையில் மருந்தின் தொடர்பில் இக்கால அறிவியலைக் காணவேண்டும். அறிவியலில் ஒரு துறை ‘உடலியல்’ இதனுடன் இணைந்த துறை ‘உணவியல்’. இவை இரண்டும் மருந்தியலின் தொடர்புடையவை. உணவியல் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு தனிக் கலையாகியுள்ளது, உணவில் ‘சீருணவு’ (Balanced Diet) இன்றியமையாதது. ‘காப்புணவு’ (Productive food) நோயின்றி உடலைக் காப்பது . ‘ஒழுங்கான உணவு’ (Normal Diet). உடலியக்கத்தைச் சீராக வைத்திருப்பது. இக்கால அறிவியலில் இவை மூன்றும் விரிவாகியுள்ளன. சுருக்கமாக இவற்றைத் திருவள்ளுவரின் உணவுக் கருத்துகளாகக் கூறியுள்ளவற்றில் அடக்கலாம்.
(அற்றது அறிந்து)
’போற்றி உண்ணும் உணவு’ – சீருணவு
’மாறுபாடில்லா உணவு’ – காப்புணவு
‘அளவறிந்து உண்ணல்’ – ஒழுங்குணவு
இவ்வாறு இக்கால உணவு அறிவியலை, திருவள்ளுவம் விளக்குவதைக் காண்கிறோம்.
வயிற்றுத் தீ
அருந்தியது அற்றுப்போவதை-அஃதாவது செரித்து ஊட்டமாவதை இக்கால அறிவியல் மிக விளக்கமாக ஆய்ந்துள்ளது. செரிமானம் உடம்பின் வெப்ப நிலையால் அதிலும் வயிற்று வெப்ப நிலையால் முழுமையடைகிறது.
உயிரிகளின் உடம்பின் வெப்பமும் அவை வேலை செய்வதற்கு வேண்டப்படும் வெப்பமும், செரிமான உணவு உயிர்வளி (Oxygen)யுடன் ‘உயிரணுக்’ (Cells)களில் வினைப்படும் போது வெளியாகின்றன.”
இது செரிமானத்திற்கு வெப்பம் செயற்படுவதை விளங்குகின்றது.
மேலும் விளக்கமாக,
‘கரிநீரகி (Carbohydrate), ஊட்டப்பொருள் (Protein). கொழுப்பு ஆகிய மூன்றும் எரிக்கப்பட்டு உடல் ஆற்றலைத் தருகின்றன.’
மேலும் விளக்கமாக,
‘இவை மூன்றும் வயிற்றுத்தீயால் எரிக்கப்பட்டு முறையே கிராமுக்கு 4,4,9 உடல்வெப்ப அளவுகளை-கலோரிகளைத் (Calories) தருகின்றன’
என்னும் உணவின் செரிமான விளக்கம் இக்கால உணவு அறிவியலில் காணப்படுபவை.
இதில் செரிமானத்திற்குச் செய்யப்படும் வயிற்று வெப்பம் தருதல் வயிற்றுத் தீ’ எனப்பட்டது. புறநானூற்றில் சேரமான் கணைக்கால் இரும்பொறை “வயிற்றுத் தீத்தணிய“[22] என்று பாடினார்.
“வயிற்றுத் தீயார்க்கு உணவு வழங்கினார்”[23] என்று ஏலாதியில் கணிமேதையார் குறித்தார்.
திருவள்ளுவர்,
“தீ அளவின்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோய் அளவின்றிப் படும்” (946)
என்றார். வயிற்றுத் தீயின் அளவு தெரிந்து அஃதாவது வயிற்றுத் தீயை அளவாக வைக்கும் அளவான உணவே உண்ணவேண்டும் என்பதை அறிந்து அளவான உணவை (சீருணவை) உண்ண வேண்டும். அதிகமாக உண்டால் நோய் அளவில்லாமல் உண்டாகும்-என்று செரிமானக் காரணமும் கூறினார். இஃது முன்னர் “அற்றால் அளவறிந்து உண்க’ என்றதற்கும் கழிபேரிரையான்கண் நோய்’ என்றதற்கும் காரண விளக்கமாகும்.
முன்னே கண்ட இக்கால உணவு அறிவியலின் கண்டு பிடிப்புகளான கருத்தேற்றங்களின் உள்ளீடாகத் தீ அளவின்றி” என்றும் குறள் திகழ்கிறது. “உணவே மருந்து’ என்பது தமிழ் வழக்கு.
இக்கால மருத்துவர்கள் நீரிழிவு முதலிய நோய்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டையே வலியுறுத்துவதையும் கருதிப் பார்க்கவேண்டும்.
எவ்வகையிலும் உணவுபற்றித் திருவள்ளுவர் அறிவித்துள்ளவை இக்கால உணவு அறிவியலின் முன்னோடிகள் என்று பதியத்தக்கவை.
(தொடரும்)
கோவை. இளஞ்சேரன், அறிவியல் திருவள்ளுவம்
Leave a Reply