வெருளி நோய்கள் 1406 -1410: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1401 -1405: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1406 -1410
- நகவெட்டல் வெருளி -Stubaphobia
நகம் வெட்டல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நகவெட்டல் வெருளி.
நகத்தைச் சரியாக வெட்ட முடியாமல் போய்விடுமோ இதனால் ஏதும் கேடுவிளையுமோ என்று பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
- நகை வெருளி – Kosmemophobia
நகை குறித்த வரம்பற்ற பேரச்சம் நகை வெருளி.
கழுத்தணி, ஆரம், காதணி என்பன போன்று குறிப்பிட்ட வகை நகைமீது சிலருக்கு வெறுப்பு இருக்கும். சிலருக்குப்பொதுவாகவே நகைகள் மீது இருக்கம். சிலருக்கு ஒரு முறை நகையால் அரிப்பு ஏற்பட்டு, நகை ஒவ்வாமை உள்ளதாக எண்ணி வெறுப்பர். சிலர் பிறரின் நடமாடும் நகைக்கடை போன்ற தோற்றத்தைப் பார்த்து நகைமீது வெறுப்பர்.சிலர் தங்களின் இயலாமையால் நகை மீது வெறுப்பும் அச்சமும் கொள்வர்.
00
- நகைச்சுவை வெருளி – Komoidaphobia
நகைச்சுவை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நகைச்சுவை வெருளி.
இருபொருள் கொண்டநகைச்சுவை, தங்களைக் கேலி செய்யும்நகைச்சுவை, மனத்தைத் துன்பப்படுத்தும் வகையிலான நகைச்சுவை, தரங் கெட்ட நகைச்சுவை முதலியவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ கேட்டு அதனால் நகைச்சுவை என்றாலே வெறுப்பவர் உள்ளனர்.
00
- நக்குதல் வெருளி – Lingophobia / Lambophobia
நக்கப்படுதல் குறித்த அளவுகடந்த பேரச்சம் நக்குதல் வெருளி.
நக்குதல், நாவினால் துழாவுதல் முதலியவற்றால் பேரச்சம் கொள்வர். நக்குதல் மூலம் தொற்று நோய் வரும் என்ற கவலையில் மூழ்குவர். நாய், பூனை, முயல் முதலிய செல்ல உயிரிகள் வளர்ப்போருக்கும் அவற்றின் அருகில் வருவோருக்கும் அச்சம் வந்து, நக்கப்பட்டால் தூய்மை செய்வதாகப் பலமுறை நக்கப்பட்ட பகுதியைக் கழுவுவோரும் உள்ளனர். இதுவும் ஒருவகை வெருளியே.
வேறு சில நக்கப்படும் சூழல் குறித்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
நாக்கு நீட்டப்படுவதைப் பார்த்தாலே அஞ்சுவோர் உள்ளனர்.
lingo, lambo ஆகிய இலத்தீன் சொற்களின் பொருள் நக்கு.
00
- நஞ்சு வெருளி – Iophobia/ Toxiphobia/ Toxophobia/ Toxicophobia
நச்சுப்பொருள் அல்லது நச்சுப்பொருளாக இருக்குமோ என்ற ஐயத்தில் எழும் அளவுகடந்த பேரச்சம் நஞ்சு வெருளி.
இத்தகையோர், குடி பானங்கள், உணவு என எதுவாயினும் நஞ்சு கலந்திருக்கலாம் அல்லது நச்சுத்தன்மை பெற்றிருக்கலாம் என எண்ணி எதையும் குடிக்கவோ உண்ணவோ மாட்டார்கள்.
io என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் நஞ்சு.
tox என்னும் கிரேக்கச்சொல்லின் பொருளும் நஞ்சு.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply